Advertisement

சாருமதி.
அத்தியாயம் 15.
எங்கிருந்தோ, எதிலிருந்தோ தப்பிப்பவன் போல வேகமாக நடந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.
பூப்பூவாக தூவிய சாரல் மழையாலும், அடித்த வாடைக் காற்றாலும் கூட அவனது மனதின் வெக்கையை தணிக்கமுடியவில்லை.
‘அப்படியென்றால் என் தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாதா?’ மனம் ஓயாமல் புலம்பிக்கொண்டிருந்தது.
‘இன்னும் என்ன தான் வேண்டுமாம் அவளுக்கு? தவறுதான்… நான் செய்தது தவறுதான்… இல்லையென்று நான் சொல்லவில்லையே?’ 
‘அந்த தவறுக்குத் தான், நான் மன்னிப்பும் கேட்டாயிற்றே! மட்டுமல்லாமல் முற்றுமாக மாறி நிற்கிறேனே! இங்கேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்’
‘அதன் பிறகுமா என் மீது ஒரு நல்லெண்ணம் தோன்றவில்லை?’
நேற்று நடந்தவற்றை நினைக்கும் போது இதயம் ஒரு முறை ஆற்றாமையால் விம்மித் தணிந்தது கிருஷ்ணாவுக்கு.
நடையை நிறுத்தி அருகிலிருந்த நெல்லிமரத்தின் அடியில் உட்கார்ந்து அதன் தண்டில் சாய்ந்து அண்ணார்ந்து பார்த்தான். 
இலையே தெரியாத அளவிற்கு பிடித்திருந்த காய்களின் கனம் தாளாமல், மரத்தின் கிளைகள் குடையாய் விரிந்து கீழ்நோக்கி கவிழ்ந்து கிடந்தது.
‘இயற்கையாகவே கோர்த்து வைத்த சீரியல் பல்ப் போல பாக்குறதுக்கு எவ்ளோ அழகாக இருக்கு இந்த காய்கள்!’ 
அந்த சூழ்நிலையிலும் அந்த மரத்தை ரசித்தவனைப் பார்த்து சிரித்தது அவன் மனது.
 ‘நான் பாத்துப் பாத்து உண்டாக்குன என் தோட்டம். நான் ரசிக்காமல் வேறயாரு ரசிப்பா? இவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டா, நான் எதையும் பாக்கக்கூடாதா? ரசிக்க கூடாதா என்ன?’ தன் மனதோடு  மல்லுக்கு நின்றான். 
‘நீ என்னை வேண்டாம்னு என்ன சொல்லுறது? நான் சொல்லுறேன், எனக்கும் நீ வேண்டாம் போடி…’ 
அந்த நொடி மட்டும் தான் அந்த எண்ணம். அடுத்த நொடியே மனம் அவளையே சுற்றி வந்து நேற்று நடந்த நிகழ்விலேயே வந்து நின்றது.
ம்ம்… அன்று தந்தையிடம் பேசிவிடவேண்டுமென்று முடிவெடுத்தப் பின் தாமதிக்கவில்லை கிருஷ்ணா.
மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் அம்மாவிடம் சொல்லியவன்,”அந்த பூபாலன் இன்னும் சாருக்கிட்ட ஏதாவது பிரச்சினை பண்ணுவானோன்னு தோணுது ம்மா… அதனால எங்க கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடலாமா?”
“நீ என்ன ம்மா சொல்லுற? அப்பாகிட்ட இதைப்பற்றி பேசிடலாமா?” என்றவன், 
 சிறிது நாட்களுக்கு பிறகு இப்போது தந்தையிடம் தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக  அன்னையை முன்னிறுத்தி அவள் பின்னால் நிற்கிறான். 
வேதவல்லியும் மகனின் வேண்டுகோளை ஏற்று  விஷயத்தை கணவரின் காதுகளுக்கு கொண்டு செல்ல, அமைதியாக கேட்டிருந்தவர், உடனே ஒன்றும் கிளம்பிவிடவில்லை பெண்கேட்க,
மகனிடம் தெள்ளத்தெளிவாக அவனின் மனநிலையை பற்றிபேசி உறுதி  செய்துகொண்ட பின்னர் தான், பெண் கேட்டு சாருமதி வீட்டுக்கு வரவே சம்மதித்தார். 
மறுநாள் சாயங்காலம் மூவரும் தங்கள் காரில்  சாருமதியின் வீட்டிற்கு முன்னால் வந்து இறங்க, அவர்களை அங்கு எதிர்பாராத கல்யாணி கடையிலிருந்து வெளியே வந்து பரபரப்பாக வரவேற்றார். 
மனமோ வேதவல்லியின் கைகளில் பூ, பழம் அடங்கியிருந்த தாம்பூலத்தட்டைப் பார்த்து,’என்னவாக இருக்கும்?’ என்று எண்ணியது.
தன் எண்ணம் எதையும் வெளிக்காட்டாதவராய் அவர்களை வீட்டுக்குள் அழைத்து வர, அங்கே காயத்ரி சுவரில் சாய்ந்து உட்கார்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்தாள்.
சாருமதியோ ஒரு கறுப்பு லாங் ஸ்கர்ட், பிங் கலர் டாப் அணிந்து, தரையில் உட்கார்ந்து இரவு சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருந்தாள். 
அன்னையின் வரவேற்பு குரலில் சாருமதி நிமிர்ந்து பார்க்க, பண்ணையாரை குடும்பத்தோடு அங்கே காணவும் சற்றே திகைத்து, அதை அழகாக மறைத்து,  வரவேற்று அவர்களை அமர வைத்தவள்,
 நறுக்கிய காய்கறியை உள்ளே கொண்டு வைத்துவிட்டு  வந்து அன்னையின் பக்கத்தில்  நின்றுகொள்ள,
‘இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட வராத ஐயா, இன்று ஏன் திடீரென்று குடும்பத்தோடு வந்திருக்கிறார்?’
என்ற யோசனை அவள் தலையினுள் சடுகுடு ஆடியது.
தங்களின் எளிய வீட்டுக்கு வந்த அந்த மேட்டுக்குடி மக்களை எப்படி வரவேற்பது என்று கூடத் தெரியாமல் தடுமாறி நின்ற அன்னைக்கு கை கொடுக்க முடிவு செய்த சாருமதி
“ஐயா! கொஞ்சம் டீ குடிக்கலாமா?” என்று கேட்க
“டீ , காஃபி எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே தான் மா. கொஞ்சம் சுகர் மட்டும் கம்மியா போட்டுக் குடு” எந்த வித பந்தாவுமின்றி பளீரென்று பதில் வந்தது பண்ணையாரிடமிருந்து. 
“சரிங்க ய்யா” என்றவள்,”காயூ… கடைக்கு போய் ஒரு பால் பாக்கெட் எடுத்து கொண்டு தந்துட்டு, அம்மா வர்ற வரைக்கும் கடைல உட்கார்ந்திரு, போ…” என்று மெல்லிய குரலில் சொல்லி காயத்ரியை அனுப்பிவிட,
‘இங்க என்ன நடக்குதுன்னு ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கலாம்னு நினைச்சா, அதுக்கு வேட்டு வச்சிட்டாளே இந்த சாரு… மோரு…’ 
மனதுக்குள் புலம்பினாலும், உடன்பிறந்தவள் சொன்ன வேலையைச் செய்துவிட்டு, உதட்டில் செயற்கையாக ஒட்டிவைத்த புன்னகையோடு அந்த இடத்திலிருந்து  நகர்ந்தாள் காயத்ரி.
வந்த நேரத்திலிருந்து சாருமதியை விழியகலாது பார்த்திருந்த கிருஷ்ணாவிற்கு அவளின் ட்ரெஸிலிருந்து, அவள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஓடும் காயத்ரியை பார்ப்பது வரை எல்லாமேப் புதிதாக இருக்க, உதட்டில் உறைந்த புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
முறையான தேநீர் உபச்சாரத்திற்குப் பிறகு நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்ட பண்ணையார் மெதுவாக  தொண்டையை செருமியபடியே,
“கல்யாணி ம்மா… என்னடா இது? ஒருநாளும் இல்லாத திருநாளா இவன் குடும்பத்தோட வந்திருக்கான்!”
“அதுவும் தாம்பூலத் தட்டோடு வந்துருக்கான்! என்ன விஷயம் ன்னு உங்களுக்கு கண்டிப்பா குழப்பம் இருக்கும்”
“நீங்க வீணா மனசை போட்டு குழப்பிக்காதீங்க… நானே என்னன்னு விஷயத்தை சொல்லிடுறேன்” என்றவர்   மகனையும் மனைவியையும் பார்த்தபடியே புன்னகையோடு,
“நம்ம சாருவை, எம்பையன் கிருஷ்ணாவுக்கு பொண்ணு கேட்டு வந்துருக்கேன். உங்க சம்மதத்தைச் சொன்னீங்கன்னா அடுத்த முகூர்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம். என்ன சொல்லுறீங்க” என்று ஆர்வமோடு கேட்க
கிருஷ்ணாவும், வேதவல்லியும் கல்யாணியின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளுக்காக இமைகொட்டாது அவர் முகத்தையே பார்த்திருந்தனர்.
 அவர்கள் தன் வீட்டுக்கு வந்ததையே நம்ப முடியாமல் நின்று கொண்டிருந்த கல்யாணியை, பண்ணையார் கேட்ட விஷயம்  ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல, நம்பமுடியாதவராய்,
“ஐ…யா… என்ன… சொல்லுறீங்க?” என்றார் ஒரு தடுமாற்றத்தோடு
“நம்ம பிள்ளைங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டேன் ம்மா…” என்றார்  பண்ணையார் மீண்டும் தெளிவாக. குரலோ கனிவில் குளித்திருந்தது.
பண்ணையாரின் வார்த்தைகள் உலகத்து சந்தோஷத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக அந்த தாயின் காலடியில் கொண்டு வந்து குவித்தது.
தன் மகளின் விளக்கத்தில் சமாதானமடைந்து, வேதவல்லி அம்மாவிற்கு சிறுநீரக தானம் செய்ய சாருமதியை அவர் அனுமதித்திருந்தாலும்,
 ஒரு தாயாக அவர் மனதில், தன் மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்த பயம் ஒன்று அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டு தான் இருந்தது. 
அந்த பயத்திற்கு பண்ணையாரின் வார்த்தைகள்  மூடுவிழா நடத்த, ‘எதற்கும் மகளிடம் ஒருவார்த்தை கேட்டு விடலாம்’ என்று நினைத்து அருகில் நின்று கொண்டிருந்த சாருமதியின் முகம் பார்க்க, 
அங்கோ, இன்னதென்று தெரியாத கலவையான உணர்வுகள் கூட்டணி போட்டு ஊர்வலம் நடத்திக்கொண்டிருந்தது.
மகளின் முகத்தை பார்த்தவருக்கு அவளிடம் கேட்க வந்த வார்த்தைகள் தொண்டைக்குழியோடு நின்று போக,”சாரு…” என்றழைத்தார் மெதுவாக,
“ஹாங்… ம்மா…” ஒரு நொடி திருதிருத்தவள், தனக்குத் தானே உறுதியாக முடிவெடுத்துக் கொண்டவள் போல நிதானமாக பண்ணையாரைப் பார்த்து,
“பெரியவங்க முதல்ல என்னை மன்னிக்கணும்…” என்றவள் 
“எனக்கு எப்பவுமே எங்க ஐயாவோட வார்த்தைகள் வேதவாக்காத் தான் இருந்துருக்கு. ஆனால்… இன்னைக்கு… இன்னைக்கு…” 
‘தன் ஐயாவின் வார்த்தைகளை  மறுக்க வேண்டியிருக்கிறதே’ என்று மருகியவள், அப்படி ஒரு சூழ்நிலையில் தன்னைக் கொண்டு நிறுத்திய காலத்தை சபித்துக் கொண்டே தடுமாற,
சாருமதியிடமிருந்து என்ன  பதில் வரும் என்று ஒருவாறு யூகித்துவிட்ட பண்ணையார்,”சொல்லும்மா… நீ சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லு” என்றார் மென்மையாக
அவரின் வார்த்தைகளில் தைரியம் வரப்பெற்றவளாக,”இன்னைக்கு… நீங்க சொன்ன விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லைங்க ய்யா” 
சொல்லிவிட்டாள்… கிருஷ்ணா கேட்க விரும்பாத அந்த வார்த்தைகளை சொல்லியே விட்டாள் சாருமதி. 
அவள் வார்த்தைகளில் உயிர் வலிக்க அடிவாங்கிய கிருஷ்ணா உடல் இறுக உட்கார்ந்திருக்க… கல்யாணியும், வேதவல்லியும் ஒரு தவிப்போடு சாருமதியை பார்த்திருக்க…
“ஏன் மா?” என்றார் அந்த கருணாமூர்த்தி 
அவர் கேள்வியில் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டவள்,”நம்ம இரண்டு குடும்பத்துக்கிடையே எதைக்கொண்டு இட்டு நிரப்பினாலும் நிரம்பாத அந்தஸ்து பேதம் இருக்குதுங்க ய்யா…”
“அந்தஸ்து பேதம் பாக்குறவனா ம்மா நான்?”
“நீங்க மட்டும் உங்க குடும்பம் இல்லீங்களே ய்யா!” 
‘ஹா… எத்தனை நுட்பமான பதில்! இதை எப்படி எடுத்துக் கொள்வது?’ மலைத்துப் போனார் மனிதர் 
‘உன் வீட்டிலிருக்கும் உன் மனைவியும் மகனும் அந்தஸ்து பேதம் பார்ப்பார்கள் என்று எடுத்துக் கொள்வதா? இல்லை… உன் சுற்றத்தார் அந்தஸ்து பேதம் பார்ப்பார்கள் என்று எடுத்துக் கொள்வதா? எப்படி எடுத்துக் கொள்வது?’
ஒருநொடி பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவரைப் பார்த்த கல்யாணி,”ஏய் சாரு! இது என்ன புது பழக்கம்? பெரியவங்க கிட்ட கூடக்கூட பேசிக்கிட்டு” அவசரமாக அதட்ட
“இல்ல… கல்யாணி! அவ மனசுல இருக்குறதைப் பேசட்டும் விட்டுருங்க…” என்றவர்
“நீ எதை மனசுல வச்சிட்டு இப்படி பேசுறன்னு எனக்கும் தெரியும் மா. வேதவல்லி எல்லாத்தையும் எனக்கும் சொல்லியிருக்குறா” என்றவர் மனைவியையும் மகனையும் ஒருசேர முறைத்தபடி
“அன்னைக்கு இருந்தது எல்லாம் அப்படியே இல்லை மா. காலம் எல்லாத்தையும் மாத்திடிச்சி. அதிலும் படிக்கிற காலத்துல நீ பார்த்த கிருஷ்ணா இல்லை ம்மா இவன். இவன் ரொம்ப நல்லவன்”
“எம்புள்ளையைப் பார்த்து நல்லவன்னு நானே சொல்லிக்கிறது சுயதம்பட்டம் தான். ஆனால் அவன் இப்போ ரொம்ப ரொம்ப மாறிட்டான் எங்குறது தான் நிஜம்.”
“அதுக்காக அவன் செய்தது எல்லாம் சரின்னு நான் எப்பவும் சொல்ல மாட்டேன். ஆனால் அது தப்புன்னு உணர்ந்து உங்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்னு சொன்னான். தயவுசெய்து நீ எனக்காகவும்…” 
அவர் வார்த்தையை முடிக்கும் முன்னே இடையிட்ட சாருமதி,”கழுத்தை அறுத்துட்டு… தெரியாமல் அறுத்துட்டேன் மன்னிச்சுக்கோன்னு சொன்னால், ஒருவேளை மன்னிச்சிடலாம்…”
“ஆனால் அறுக்கும் போது ஏற்பட்ட வலி, வலி தானேங்க ய்யா… என்னைக்கும் அது மறக்காதுங்களே!”
ஒருவேளை,’எனக்காக மன்னித்து விடு என்று சொல்ல வந்த வார்த்தையை பண்ணையார் சொல்லியிருந்தால்  சாருமதியால் இப்படி பேசியிருக்க முடியாதோ? அதனால் தான் அவரை முந்திக் கொண்டாளோ?’
‘அம்மாடி! என்ன மாதிரியான பதில் இது?’ 
சாருமதியின் பதிலில் அரண்டு போன பண்ணையார் சட்டென்று எழும்பி விட, உடன் எழுந்த கிருஷ்ணாவுக்கும் அவளின் பதில் ஒருவித அதிர்ச்சியையேக் கொடுத்திருந்தது.
எழுந்தவர்,”தயவு செய்து எம்புள்ள செய்த தவறுகளை, எனக்காக  மன்னிச்சி மறந்துடு ம்மா” என்றபடியே 
இருகரம் கூப்ப
பதறிய கிருஷ்ணா,”ப்பா… என்ன பண்ணுறீங்க நீங்க”  கத்தியபடியே அவர் கைகளை விலக்கிவிட… அவனுக்கு குறையாத குரலில்,”ஐயா… என்னை பாவி ஆக்காதீங்க”  கதறினாள் சாரு.
இது எதையுமே கருத்தில் கொள்ளாத பண்ணையார் வெளியே செல்லத் தொடங்க
 வேதவல்லியோ,”எம்புள்ளையை வேணாம்னு சொல்லாத சாரு! நான் வேணும்னா உங்கிட்ட மன்…”  
தொடங்கிய வார்த்தையை முடிக்க விடாமல் அன்னையை தன்னை நோக்கி இழுத்தவன்,”ம்மா… நீயும், அப்பாவும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அதிலும் தப்பு செய்ததெல்லாம் நான். நீங்க ஏன் இவக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்” 
“நீங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டுத்தான் இந்த கல்யாணம் நடக்கணும்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்” என்றவன்
“என்னவோ இவள விட்டா ஊர் உலகத்துல பொண்ணே இல்லாமல், இவ பின்னாடி வர்றோம்னு இவளுக்கு நினைப்பு” 
“அதனாலத் தான் இத்தனைபேரு மன்னிப்பு கேட்ட பிறகும் உச்சாணி கொம்புல ஏறி உட்கார்ந்துகிட்டு இறங்க மாட்டேங்குறா” என்றவன்
“பாத்து பதமா உட்காந்துக்கோ அம்மணி… கீழ விழுந்தா அடி பலமா இருக்கப்போவுது” நக்கலாகச் சொன்னபடியே 
“வாம்மா… போலாம்” கைப்பற்றி அன்னையை அழைக்க
“அப்போ உன் கல்யாணம்…” என்ற தாயிடம்
“இதோ… இப்பிடி நான் கைத்தட்டுனா ஆயிரம் பொண்ணுங்க வரிசையில் வந்து நிப்பாங்க. அதுல ஒருத்தியை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்… இப்போ நீ வா…” என்றபடியே அன்னையை அங்கிருந்து அழைத்து வந்திருந்தான் கிருஷ்ணா. 

Advertisement