Advertisement

ரகுராமின் அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு காயத்ரியின் படிப்பு சம்மந்தப்பட்ட அனைத்து அப்டுடேட் விபரங்களையும் தந்து கொண்டிருந்தார்.
கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் பாடங்கள் பாஸாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தவள், 
அந்த ராகேஷூடனான தெய்வீக காதலுக்கு பின் ஒவ்வொரு தடவையும் அவன் கிளாஸை கட் செய்து விட்டு வெளியே செல்ல கூப்பிடும் போதெல்லாம், தான் கல்லூரிக்கு மட்டம் போடும் விஷயம் பேராசிரியர் மூலம் ரகுவிற்கு தெரிந்து விட்டால் வீட்டில் கேள்வி எழும்,
ஒருவேளை விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டால் அதன்பிறகு கல்லூரிக்கு வராமல் போகக் கூட வாய்ப்பு உண்டு என்பதால் அந்த தெய்வீகக் காதலனிடம் கல்லூரியை கட் அடித்து விட்டு வெளியே செல்ல மறுத்துக் கொண்டிருந்தாள். 
பெரும்பாலும் அவர்களின் சந்திப்பு கல்லூரி விட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் ஒரு இருபது முப்பது நிமிடங்கள் மட்டுமே, 
அதற்காக அந்த தெய்வீகக் காதலன் அலுத்துக் கொள்ளும் சமயங்களில்,”என்னை கல்யாணம் செய்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க பாஸ். அப்புறம் உங்க கூடவே தான் இருப்பேன்” சாமாதானம் பண்ணுகிறேன் பேர்வழி என்று தனக்கான குழியை அடிக்கடி அவளே வெட்டிக்கொள்ள 
அந்த தெய்வீகக் காதலன் என்ன, இவளை திருமணம் செய்துகொள்வதற்காகவா பின் தொடர்கிறான்? அவள் சொன்னதும் தாலி கட்ட?
கொக்குக்கு மீன் ஒன்றே மதியாக சரியான சந்தர்பத்திற்காக அவன் காத்திருக்க…
இந்த முட்டாளோ காதல் என்னும் பெயரில் தன்னை அப்படியே கபளீகரம் செய்ய அந்த ராகேஷ் ஒற்றைக்காலில் தவம் செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாமல்,
 அவன் பரிசுமழையில் நனைந்து காதல்பித்தம் தலைக்கேற கண்ணிருந்தும் குருடாக வலம் வந்து கொண்டிருந்தாள். 
*************
காயத்ரி சென்ற சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு வந்திருந்த சாருமதி தன்னுடைய வழக்கமான வேலைகளில் தன்னை பொருத்திக் கொண்டாள்.
இப்போதெல்லாம் பக்கத்து ஊரிலிருந்து கூட சிகிச்சைக்காக மக்கள் வர ஆரம்பித்திருந்தார்கள். அதுவும் போலிடாக்டர் பூபாலனின் கைதுக்கு பிறகு மக்கள் வருகை கொஞ்சம் அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.
ம்ம்… அன்று பூபாலனைக் குறித்த புகாரை சாருமதி, அங்கே பணிபுரியும் மருத்துவர்களின் கையெழுத்தோடும் பூபாலன் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்த அந்த நபரின் சாட்சியோடும் பக்காவாக தயார் செய்து பண்ணையாரின் அனுமதியோடு மாவட்ட கலெக்டருக்கே அனுப்பி விட்டாள். 
பலன்… பத்துநாளிலேயே கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டான் பூபாலன். 
அவனின் தவறான சிகிச்சையால் மரணத்தின் வாயிலைத் தொட்டு பின் சாருமதியின் முறையான சிகிச்சையினால் நலம் பெற்ற மனிதர்களின் வாக்குமூலத்தோடு, 
பூபாலனின் கைதும் மக்களிடையே ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்த தங்களின் உடல்நோவிற்காக முறையான மருத்துவர்களையே நாடவேண்டுமென்ற பாடத்தை படித்து விட்டார்கள் அந்த கிராம மக்கள். 
விளைவு… திரு. கிருஷ்ணமூர்த்தி நினைவு மருத்துவமனையின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்டார கிராமங்களில் பரவ ஆரம்பித்து மக்கள் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்தது.
கூடவே மகப்பேறு மருத்துவத்தில் பழம் தின்று கொட்டை போட்ட மருத்துவர்  நிர்மலா, ஒருசில பிரசவங்களையும் சாருமதியோடு இணைந்து நல்லபடியாக முடித்து விட, இப்போது பிரசவத்திற்காகவும், தங்களின் மாதாந்திர செக்கப்பிற்காகவும் கர்ப்பிணி பெண்களும் வர ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆகவே எப்போதுமே மருத்துவமனையின் மூன்று மருத்துவர்களும் பிஸியாகவே இருந்தார்கள்.
அன்று கொஞ்சம் ஃப்ரீ ஆகவும் ஒரு சிகிச்சையில் தனக்கிருக்கும் சந்தேகத்தை டாக்டர் நிர்மலாவிடம் கேட்டுவிட்டு வரலாமென்று அவருடைய ரூமிற்கு வந்து அவரோடு டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தாள் சாருமதி.
அப்போது அங்கு வந்த கிருஷ்ணா டாக்டரின் அனுமதி வேண்டி அறைக்கு வெளியே நிற்க, மருத்துவரோ,
“ஹையோ! உள்ள வாங்க தம்பி! நீங்க போய் பெர்மிஷன் கேட்டு வெளியே நின்னுகிட்டு?” என்று பரபரப்பாக அழைத்து அவருக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சாருமதியின் பக்கத்து இருக்கையில் அவனை அமரவைத்தார்.
 சாருமதியோ அனுமதி கேட்ட குரலிலேயே அவனை கண்டுகொண்டவள், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு காணும் அவனின் இந்த புதிய அவதாரத்தைக் கண்டு உதடுகளை சுழித்தபடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ஆமாம்… கிருஷ்ணா அன்று கைக்கு தையல் போட்டதோடு சென்றவன் தான், அதன்பிறகு எதற்காகவும் சாருமதியிடம் வந்து நிற்கவில்லை.
விரலுக்கு அதைத்தொடர்ந்த மருத்துவத்தையும் கூட டாக்டர் ராகவனிடம் பார்த்துக் கொண்டு, அவரிடமே தையலையும் பிரித்துக் கொண்டான்.
 அமைதியாக சாருமதியின் பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்த கிருஷ்ணா, அன்று காயம்பட்ட விரலின் தையல் தளும்பை வலதுகை விரல் கொண்டு தடவியபடியே,
“மேடம்! அந்த பூபாலன் நாளைக்கு பெயில்ல வெளியே வர்றானாம்..  எனக்கென்னவோ ஒருவேளை அவன் இங்க வந்து பிரச்சினை ஏதும் பண்ணுவானோன்னு தோணுது” 
சொல்லியவாறே லேசாக சாருமதியை திரும்பி பார்த்தவன்,”அப்படி பிரச்சினை எதுவும் பண்ணுனா தயங்காமல் எனக்கு ஒரு ஃபோன் பண்ணிடுங்க. நான் பெரும்பாலும் இங்க இருக்கிற தென்னந்தோப்புல தான் இருப்பேன்”
சொல்லியதோடல்லாமல் மேஜையில் இருந்த பேனாவை எடுத்து பக்கத்திலிருந்த பேப்பரில் தன்னுடைய ஃபோன் நம்பரை எழுதியவன்,”இது தான் என்னோட நம்பர். சேவ் பண்ணிக்கோங்க மேடம்” என்றபடியே திரும்பவும் ஒருதடவை சாருமதியைப் பார்க்க 
அவன் சொல்லியவை அத்தனையும் தனக்கான வார்த்தைகள் என்பதை புரிந்து கொண்டவளோ,
‘ஹையோடா! என்னா அக்கறை!’ மனதுக்குள் கிண்டலடித்தபடியே, முகத்தை எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாத கல்லாக வைத்திருக்க
ஒரு பெருமூச்சோடு,”மறந்துறாதீங்க மேடம்…” என்று திரும்பவும் ஒரு முறைச்சொல்லி, விழியாலே தன்னவளைத் தழுவி அந்த இடத்தை விட்டு வெளியேறினான் கிருஷ்ணா. 
அவன் சென்ற பிறகு டாக்டர் நிர்மலா சாருமதியிடம்”ஆளு முன்ன மாதிரியெல்லாம் இல்லை சாரு, செம ஸ்மார்ட். இப்போ நம்ம கிராமத்து மக்களுக்கு என்ன பண்ணலாம் ங்குற திங்கிங்கேத் தான் மைண்ட் ஃபுல்லா ஓடுதாம்.”
“அன்னைக்கு என்னோட ஹஸ்பெண்ட் கூட பேசும் போது அவரோட எதிர்கால லட்சியங்கள்னு நிறைய சொன்னாராம். அதுல பாதிக்கு மேல எல்லாம், இங்க கிராம மக்களோட முன்னேற்றத்தை அடிப்படையா கொண்டததாத் தான் இருந்ததாம்”
“அதுவுமில்லாமல் உங்களுக்கு ஏதாவது ஐடியா தோணினாலும் எனக்கு சொல்லுங்க சார் ன்னு வேறச் சொன்னாராம்ல” 
“அவ்வளவு தான்… நம்ம சார் இப்போ, யங் ஜெனரேசன் பசங்க கிருஷ்ணா மாதிரி இருக்கணும் னு அவரோட புகழைப்பாட ஆரம்பிச்சிட்டார்னா பாத்துக்கோயேன்!” என்று புன்னகை முகமாக அவன் புகழ்பாட
“வேறுவழியில்லாமல் ம்ம்… கொட்டி கேட்டுக் கொண்டிருந்தாள் சாருமதி.
**************
கிருஷ்ணா சந்தேகப்பட்டது போல பூபாலனும் வெளியே வந்ததும் சாருமதியைத் தேடி மருத்துவமனைக்கு வந்தான். 
உடனே அல்ல ஒருவாரம் கழித்து வந்தான். வந்தவன்  சாருமதியின் முன் கிடந்த நாற்காலியில் அசால்டாக உட்கார்ந்தபடியே, 
“நான் இந்த ஊசி போடுறதை விட்டுரலாம்னு நினைக்கிறேன் சாரு! இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று கேட்க
‘விட்டுத்தான் ஆகணும்… இல்லைன்னா உன்னை யாரு விடுறாப்பா…’ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டவளுக்கு, அவனின்  அழைப்பு எரிச்சலைத் தர,
“நல்ல முடிவு… அதேப்போல நமக்கு சம்மந்தம் இல்லாத பொண்ணுங்களை மரியாதையா பேசணுங்குற முடிவையும் இன்னைல இருந்து எடுத்துக்கோங்க. போங்க… போயிட்டு வாங்க” என்று நக்கலாகச் சொல்ல
“நமக்கு சம்மந்தம் இல்லைன்னா தானே மரியாதை தேவை. ஆனால் நான் தான் சம்மந்தப்படுத்திக்கணும்னு முடிவெடுத்துட்டனே”
“என்ன உளற்றீங்க?” பூபாலனின் பதிலில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சாரு அவனை அதட்ட, 
அவனோ “ஏன் டென்ஷனாகுற டாக்டரம்மா… கூல்” என்று கூலாகச் சொன்னவன்,”எனக்கு நிச்சயம் பண்ணி வச்சிருந்த பொண்ணு நான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்ததும் என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லுது” 
“உன்னால் தானே நான் ஜெயிலுக்கு போனேன். அப்போ என் கல்யாணம் நின்னுபோனதும் உன்னாலதானே. அதனால, நான் இழந்த வாழ்க்கையை நீ எனக்கு தா…. அவ்வளவு தான் சிம்பிள்” என்றவாறே சாருவின் கைபற்ற முயன்றான்.
எதிர்பாராத அவன் செயலில் மேஜை மேல் இருந்த தன் கையை இழுத்துக் கொள்ள முயன்ற சாருமதி செயரோடு தடுமாறி கீழேவிழப்போக
அந்த நேரம் சரியாக உள்ளே வந்த கிருஷ்ணா செயரோடு சாருமதியை சாயவிடாமல் தாங்கிபிடித்து நிமிர்த்தியவன்,
 அவள் முன்னே இருந்த பூபாலனின் கையை வளைத்து முதுகுக்கு பின்னே கொண்டு வந்து ஒரு திறுக்கு திறுக்கியபடியே
“செய்யுறது சட்டத்துக்கு புறம்பான தொழில். அதை ஏன்னு கேட்டா உன் இஷ்டத்துக்கு வந்து கையை நீட்டிவியோ? இனி ஒருதடவை சாரு கையை தொடணும்னு  நினைக்கக் கூடாது. அப்படி நினைச்சாக் கூட உன்கை உனக்கில்லை தெரிஞ்சுக்கோ” என்று அழுத்தமாக சொன்னவன்,
“அதெப்படி… நாங்க உன் தப்பை கண்டிச்சா, அப்பனும் பிள்ளையும் எங்க மேலயே சேற்றைவாரி பூசபாப்பீங்களோ? முடிஞ்சுதா? முடிஞ்சுதாடா உங்களால?” என்றவன் இன்னும் வேகமாக கையைத் திருக்கியபடியே
“நீங்க எது செய்தாலும் ஒதுங்கி போறதுக்கு, நான் பண்ணையார் மூர்த்தி இல்லை, கிருஷ்ணா… ஆளு தெரியாமல் வால ஆட்டினால்… வாலை ஒட்ட நறுக்கிடுவேன். ஜாக்ரதை…” என்றவன்,
“இனிமேல் இந்த பக்கம் உன்தலை தெரியக்கூடாது… தப்பித்தவறி தெரிஞ்சுதோ… அப்புறம் உனக்கு எந்த உத்தரவாதமும் நான் தரமுடியாது. அதனால மரியாதையா உன் எல்லை தெரிந்து நடமாடிக்கோ” என்றவாரே முன்னோக்கி அவனை வேகமாகத் தள்ளினான். 
இவ்வளவு நேரமும் பெண்பிள்ளையிடம் வீரம் காட்டிய அந்த  பூ… பாலனுக்கு அண்டமே நடுங்கிப் போயிற்று கிருஷ்ணாவின் செயலால்.
‘அவனறிந்த கிருஷ்ணா சுகவாசியாக இருக்க, இப்படி சீறும்காளையாக இருப்பான் என்று கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை அவன்.’ 
‘அதுவும் அப்பாவும் தானுமாக அவர்களின் மருத்துவமனை மேல் மக்களுக்கு தப்பான அபிப்ராயம் வருவதற்காக ஏனோ தானோ என்று கதைகட்டி விட்டது எல்லாம் தெரிந்தவன் போலவே பேசுகிறானே!’
‘அம்மாடி… உண்மையிலேயே இவன் அபாயகரமானவன் தான். இவனிடம் பார்த்து நடந்து கொள்வது… இல்லை ஒதுங்கி இருப்பதே நமக்கு நல்லது’  நொடியில் முடிவெடுத்துக் கொண்டவன் திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினான்.
நடந்தது அத்தனையையும் இவ்வளவு நேரமும் ஆங்காங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மெதுவாக கலைந்து செல்ல
கிருஷ்ணாவை ஃபோன் செய்து வரவழைத்திருந்த டாக்டர் நிர்மலாவும் ராகவனும் அவனின் செயலைப் பாராட்டியபடி அங்கிருந்த ஒன்றிரண்டு நோயாளிகளை தாங்கள் பார்ப்பதாக அழைத்துச் சென்றார்கள்
அவர்கள் சென்றதும், எதற்காக தன் கோபம் என்றேத் தெரியாத மனநிலையில் கிருஷ்ணாவைப் பார்த்து சாருமதி ,”என்னை பாதுகாக்க எனக்குத் தெரியாதா? நீ எதுக்குடா பெரிய இவன் மாதிரி குறுக்கால வந்த?” என்று குதிக்க
அவனோ சிரித்தபடியே,”மரியாதை… மரியாதை… வேணும் சாரு” என்றான் வேண்டுமென்றே
“எப்போப் பாரு என்விஷயத்திலேயே குறுக்க வர்ற உனக்கென்ன டா மரியாதை… போ… போய் உன் வேலை எதுவும் இருந்தாப் பாரு” என்று சிலிர்த்துக் கொண்டவளிடம், 
“சம்மந்தமே இல்லாத பொண்ணை ஒரு பையன் மரியாதையா பேசணும்… இது கொஞ்சநேரத்துக்கு முன்னாடி உன்னோட ஸ்டேட்மெண்ட்.”
“அந்த ஸ்டேட்மெண்ட் படி பாத்தா சம்மந்தம் இல்லாத பையனையும் ஒரு பொண்ணு மரியாதையாத் தானே பேசணும்… ரைட்” சொன்னவன் இதழ்கடையோரம் கள்ளச் சிரிப்பொன்றை தவழவிட்டபடியே
“ஆனால் நீ என்னை சரமாரியா வாடா… போடா… ன்னு மரியாதையில்லாமல் தான் இவ்வளவு நேரமும் பேசின… அப்போ உனக்கும் எனக்கும் சம்மந்தம் இருக்கா?” என்று நைச்சியமாகக் கேட்க
அவன் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவள்,”அது… நீ என் கிளாஸ்மெட்… அதான்…” என்று இழுத்தவளிடம்
“கிளாம்மெட்னாலும் ஒரு வருஷம் உன்னோட பெரியவன் மா…” அதிமுக்கியமான தகவலை இடைச்செருகிய கிருஷ்ணாவைப் பார்த்து
_ஆமாம்… இவன் கிட்ட நின்னு நான் ஏன் சாதாரணமாக பேசிட்டு இருக்கிறேன்’ சட்டென்று விழித்துக்கொண்ட சாருமதியின் அறிவு தாராளமாக கிருஷ்ணாவைப் பார்த்து முறைக்க 
‘இதுக்கு மேல இவளோட அக்கப்போரை என்னால தாங்க முடியாது சாமி. எதுவா இருந்தாலும் இனி கல்யாணம் பண்ணிட்டே சமாளிக்கலாம்’ 
முடிவெடுத்து கொண்டவன் தகப்பனிடம் சொல்லி நாளையே பெண் கேட்டு சென்றுவிட வேண்டியது தான் என்று எண்ணியபடியே அந்த இடத்தை வேகமாக காலி செய்தான்.
ஆனால்… நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?

Advertisement