Advertisement

சாருமதி.
அத்தியாயம் 14.
அன்னை தன் கைபிடித்து இழுத்து தன்னருகே அமரவைத்து,”குட்டா! பேசாமல் அப்பாகிட்ட சொல்லி சாருவை பொண்ணு கேட்டு போவோமா?” என்று கேட்கவும் ஒரு நொடி முகம் மலர்ந்த தனையன்
“ப்ச்ச்… எப்படிமா? அவதான் என்னை பிடிக்கலைன்னு சொல்லுறாளே? பிடிக்கலைன்னு சொல்லுறவளைப்  போய் எப்படி பொண்ணு கேட்குறது?” முகம் சுருக்கினான் மகன்.
“குட்டா! ஆனாலும் நீ இப்படி அநியாயத்துக்கு நல்லவனா மாறியிருக்க வேண்டாம் பா…” சொன்னவரின் பேச்சில் பரிகாசம் இழையோட
“ம்மா…” என்று சிணுங்கிய மகனிடம் 
“ஓகே… இப்போ… நோ கிண்டல்”  சொல்லியபடியே,
“என்னோட கேள்விக்கு நீ உன் மனசைத் தொட்டு உண்மையான பதிலைச் சொல்லணும். ஓகே யா?” என்றவர்
“உண்மையிலேயே நீ சாருவை, சாருவுக்காகவே விரும்புறியா? இல்லை உன் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுனதால வந்த நன்றி உணர்வால கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறியா? சொல்லு…” என்க
“உண்மையைச் சொல்லுறதா இருந்தா நானும் கூட, நம்ம அம்மா உயிரையேக் காப்பாத்தி நம்ம கையில கொடுத்த பொண்ணு, அதனால அவளை கல்யாணம் செய்து நம்ம கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்கணும்னு, நினைச்சதாதத் தான் இப்போ வரை நம்பிக்கிட்டிருந்தேன்”
“ஆனால்…  அப்படி இல்லடா மடையான்னு, இன்னைக்கு அவளோட மறுப்பு எனக்கு சொல்லிடிச்சி.”
“எப்படி?”
 “வெறும் நன்றிக்கடனுக்காக இந்த கல்யாணம்ன்னா அவளோட மறுப்பு எனக்கு சந்தோஷத்தையும், ஒரு விடுதலை உணர்வையும்ல குடுத்துருக்கணும்!” 
“ஆனால் அதுக்கு பதில், அவளோட மறுப்பு என்னை உயிரோடக் கொல்லுதே! அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு தோணுதே! அப்போ நான் அவளை அவளுக்காகவே விரும்புறேன்னு அர்த்தம் தானே”
மகனின் வார்த்தைகள் வேதவல்லியை ஒரு உலுக்கு உலுக்க, பதில் சொல்லாது மகனையே விழியகலாது  பார்த்திருந்தார்.
“ம்மா… என்னம்மா?”
“ஹாங்… ஒன்றுமில்லை குட்டா!”
“ம்மா…என்னை… என்னை உனக்கு புரியுது தானே?” தவிப்போடு வந்தது கிருஷ்ணாவின் குரல்
“ம்ம்… எனக்கு புரியுது ப்பா. அதேப்போல சாருவுக்கும் உன்னைப் புரியும். ஆனால்  அதுக்கு கண்டிப்பா கொஞ்சம் நாளெடுக்கும்.”
“ஏன்னா நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்து வச்சிருக்குற வேலை அப்படி. அதனால கொஞ்சம் பொறுமையா காத்திரு.” சோபையாகச் சிரித்தவர்
“இப்பல்லாம், சாரு ஹாஸ்பிடல்ல இருக்கும் போது பேசின மாதிரி எங்கூட பேசுறதில்லை, உனக்கு தெரியுமா கிருஷ்ணா?”
“ஹாஸ்பிடல்ல வச்சி எம்மனசு ரிலாக்ஸாகுறதுக்காக எங்கூட நல்லா பேசியிருப்பா போல. அவ ஒரு நல்ல டாக்டர் எங்குறதை எங்கிட்டயே நிரூபிச்சிட்டா. இப்பத்தான் எனக்கே அது புரியுது.”
“ஆனால் நானும் ஒரு நல்ல மனுஷிதான் எங்குறதை கண்டிப்பா அவளுக்கு புரியவைக்காமல் ஓயப்போறதில்லை. பாத்துடலாம் நானா? அவளா ங்குறதை” ஒரு தீவிரத்தோடு வேதவல்லி சொல்ல 
 அன்னையின் பேச்சால் கொஞ்சம் சமன்பட்டிருந்த கிருஷ்ணாவின் மனது, இந்த தகவலில்,,’அப்போ அம்மணியை மலையிறக்க ரொம்ப பாடுபடணும் போலயே’ என்று முணுமுணுக்க
 ‘பரவாயில்லை…என்ன ஆனாலும் பாத்துக்கலாம்’ என்று புதிதாக தைரியம் வரப்பெற்றவனாக
“ம்மா…அப்பா  இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பாங்களோ தெரியலையே?” என்று சந்தேகமாக தாயிடம் கேட்டான்.
“குட்டா! அப்பாவுக்கும்  உன் விஷயம் முதல்லயேத் தெரியும். ஹாஸ்பிடல்ல உன்னோட நடவடிக்கையை வச்சு கண்டுபிடிச்சிட்டார் போல. எங்கிட்ட அவருதான் சொன்னாரு தெரியுமா?”
“அப்பவேயா? எப்டிமா?!”
“ம்ம்… மொசபிடிக்கிற எதையோ மூஞ்சியை வைத்து கண்டுபிடிச்சிக்கலாமாம். அது உனக்கு தெரியாதா?”
“ம்மா… அப்போ நான் நாயா?” தகப்பனுக்கும் தன் விஷயம் தெரியும் என்றதும் தன்னைப்போல் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ள தாயைச் சீண்டியபடியே,
“என்ன சொன்னாரு? என்றான் உற்சாகமாக
“அவருக்கும் இந்த விஷயம் சந்தோஷம் தான். அதனால கொஞ்ச நாளைக்கு இந்த விஷயத்தை  ஆறப்போடு. அப்புறம் அப்பாகிட்ட சொல்லி நாம முறைப்படி பொண்ணு கேட்டு நேரடியா கல்யாணத்தையே முடிச்சிடலாம். சரியா?”
ஏதோ எல்லாம் சொடுக்கு போட்டதும் எளிதாக நடந்துவிடும் போன்ற பாவனையில் வேதவல்லி பேசிக்கொண்டே போக மலர்ந்து விகசித்த முகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தான் கிருஷ்ணா.
*******************
“காயு… ஏய் காயூ! பஸ்ஸுக்கு நேரமாகுது. நீ இன்னும் உள்ள என்னடி பண்ணுற?” மருத்துவமனைக்கு புறப்பட்ட சாருமதி தன் மெல்லிய காட்டன் சாரியின் மடிப்பை நீவிவிட்டுக் கொண்டே முன் அறையிலிருந்து குரல் கொடுக்க
“ரெடியானா வெளியே வரப்போறேன். நீ எதுக்கு சும்மா நொய்நொய்னு கத்திகிட்டு இருக்குற?” அறையினுள் இருந்து சலிப்பாக வந்தது காயத்ரியின் பதில்.
“மினிபஸ்ஸை விட்டா, மணிமுத்தாறு வரைக்கும் சைக்கிளை லொங்கு லொங்குன்னு மிதிச்சிட்டு போறா. நமக்கென்ன சாரு? என்ற கல்யாணி,
“நீ சாப்பிட்டுட்டு ஹாஸ்பிடல்க்கு கிளம்பு” சொல்லியபடியே காலை சாப்பாட்டை தட்டில் வைத்து சாருமதியின் கைகளில் கொடுத்தார்.
“அதானே… நான் எப்படிப் போனா உங்களுக்கு என்ன? உங்களுக்கு இந்த டாக்டர் மகளும், இங்கெல்லாம் இஞ்சினியரிங் படிக்க காலேஜ் இல்லைன்னு சென்னைல போய் தங்கி படிக்கிறாளே அவளும் மட்டும் போதும். நாங்கல்லாம் எதுக்கு?” கோபக்குரலில் பொரிந்தபடியே அறையைவிட்டு வெளியே வந்தவள்,
சாருமதியின் கையிலிருந்த இட்லியை பார்த்து,”இந்த இட்லியைத் தவிர வேற எதுவுமே உங்களுக்கு செய்யத் தெரியாதாம்மா?” அலுத்துக்கொண்டபடியே
 “அதையும் சாப்பிடத் இப்போத் தரப்போறீங்களா? இல்லை பட்னியாப் போகட்டுமா நான்? ஏதோ அவர்களுக்காக சாப்பிடுபவள் போல மிரட்டினாள்.
சட்டென்று தன் கையிலிருந்த தட்டை அவளிடம் நீட்டிய சாருமதி,”சாப்பிடு… நான் இன்னும் கை வைக்கலை” என்றபடியே கொடுக்க
வெடுக்கென்று வாங்கியவள் நின்றபடியே அள்ளி விழுங்கிக் கொண்டே,”பொல்லாத மினிபஸ்ஸு… போன மாசம் வரைக்கும் இதே மணிமுத்தாறுக்கு, ஊரே சைக்கிள் மிதிச்சு தானே போய்ட்டு இருந்தது” 
முணுமுணுத்தவாறே சாப்பிட்டு முடித்தவள் தட்டை சாருமதியின் கைகளில் கொடுத்தவாறே கைகழுவச் செல்ல,
“காயூ! சாப்பிட்ட தட்டை கழுவி வச்சிட்டு நீ காலேஜுக்கு போனா போதும். நீ தட்டை அவகைல குடு சாரு!” என்று கல்யாணி அதட்ட
அன்னையின் குரலில் பேசாமல் தமக்கை நீட்டிய தட்டை வாங்கியபடியே,”நேரமாகுதுன்னு சொல்லவேண்டியது…
ஆனால் ஒரு ஹெல்ப் கூட பண்ணுறது கிடையாது” வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே செல்ல
“லேட்டாகுதுன்னா கொஞ்சம் சீக்கிரம் நீ முழிக்கணும்… சூரியன் உச்சிக்கு வர்றவரைக்கும் தூங்க நினைச்சா இப்படித்தான் ஆகிப்போகும்” சொல்லியவர்,
 “நீயும் சாப்பிட்டுட்டு கிளம்பு சாரு! நான் கடையை திறக்கப்போறேன்” என்றவாறே நகர்ந்தார்.
பாப்பன்பட்டிக்கும் மணிமுத்தாறுக்குமிடையே காலை, மதியம், இரவு இந்த மூன்று பொழுதுகள் மட்டுமே அரசாங்க பேருந்து உண்டு. அதுவும் வந்தால் உண்டு,  இல்லையென்றால் இல்லை தான்.
அதனாலேயே ஊர்மக்கள் பெரும்பாலும் அந்த பஸ்ஸை நம்பாமல் மணிமுத்தாறு வந்து அங்கிருந்து தாங்கள் செல்ல விரும்பும் ஊர்களுக்கு செல்வது.
அதுவும் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளூரிலிருக்க ‌ஆறாம் வகுப்பிலிருந்து சிறுவர், சிறுமியர் கட்டாயம் ஏழு கிலோமீட்டர்  சைக்கிள் மிதித்து மணிமுத்தாறுக்கு வரவேண்டிய நிலைமை.
சாதாரண பருவகாலங்களில் இந்த தூரத்தை சைக்கிளில் எளிதாக கடக்கும் மாணவர்கள், காற்று, மழைக்காலங்களில் கஷ்டப்பட்டுத்தான் போவார்கள்.
அவர்களின் கஷ்டங்கள் இப்போதைய கிருஷ்ணாவிற்கு பளிச்சென்று புரிய தந்தையின் அனுமதியோடு மினிபஸ் சர்வீஸ் ஒன்றை சமீபத்தில் தொடங்கியிருக்கிறான்.
அதுவும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கு கன்செஷன் டிக்கெட் என்ற சலுகையோடு தன்னுடைய ஓட்டத்தை தொடங்கியிருக்கிறது அந்த மினி பேருந்து.
அதில் செல்லத் தான் கிளம்பிக் கொண்டிருக்கிறாள் காயத்ரி. சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி கிச்சனில் வைத்தவள் ரூமுக்குள் இருந்த புத்தகங்களை அள்ளியபடி
கிளம்ப,
சரியாக சாருமதிக்கு பக்கத்தில் வரும் போது புத்தகத்திற்கு நடுவிலிருந்து நழுவி ஒரு கைபேசி தரையில் விழுந்தது.
பதறிப்போன காயத்ரி சாருமதியை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து எடுக்கும் முன் அதை கைப்பற்றியிருந்த சாரு, ஃபோனை தன்கைகளில் வைத்து முன்னும் பின்னும் திருப்பி பார்த்தபடி
“உனக்கு நாங்க ஃபோன் வாங்கித் தந்ததா ஞாபகம் இல்லையே! ஏது டி இது?” 
 கொஞ்சம் கடுமையாக கேட்டபடியே ஃபோனை ஆன் செய்ய, வேகமாக கீழே விழுந்த அதிர்விலோ என்னவோ அது தன் உயிரைத் துறந்து தன்னை வாங்கி கொடுத்தவனைக் காப்பாற்றியது.
ஃபோன் ஆன் ஆகவில்லை என்பது தெரிந்தவுடன் இழுத்து பிடித்த மூச்சை வேகமாக வெளியே விட்ட காயத்ரி,
“இது என் ஃப்ரெண்ட் டோடது. அசைன்மெண்டுக்காக கொஞ்சம் கூகுள் சர்ச் பண்ணவேண்டியிருந்தது அதான் வாங்கிட்டு வந்தேன்”
“ஆனால் இப்போ கீழே விழுந்து டிஸ்பிளே வேலைசெய்ய மாட்டேங்குதே! நான் என்ன சொல்லி அவக்கிட்ட திருப்பி குடுப்பேன்?” சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன் உடனடி நாடகத்தை அரங்கேற்றியவள் கண்ணீர் வராத கண்களை கசக்க,
“நீ ஏன் காயூ அடுத்தவங்க கிட்ட வாங்குற? என்னோடதை எடுத்து யூஸ் பண்ணியிருக்கலாம் தானே?”
“அம்மாடியோவ்…உன்னோடதா? ம்ஹூம்… அதைத் தொடாதே, இதைத்தொடாதேன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுவ நீ. அதுக்கு உன் ஃபோனை யூஸ் பண்ணாமலே இருக்கலாம்” 
சொல்லியபடியே கிட்டத்தட்ட சாருமதியின் கைகளிலிருந்து ஃபோனை பறித்துக் கொண்டு அந்த இடத்தை வேகமாக காலி செய்தவள்,
‘இவ்வளவு நாளும் அந்த குட்டிபிசாசு கண்ணுல படாமல் இதை எப்படியோ காப்பாத்திட்டேன். இப்ப தான் அவ காலேஜ்க்கு  போனா… அப்பாடின்னு கொஞ்சம் மூச்சு விட்டேன். அதுக்கிடையில் கீழவிழுந்து பல்லக்காட்டுது இந்த சனியன்…’ 
“நல்ல காலம் டிஸ்பிளே புட்டுகிச்சி. இல்லைன்னா ஸ்க்ரீன் சேவர்ல ராகேஷ் கூட நான் இருக்குற ஃபோட்டோவை சாரு பாத்துருப்பா…’
‘அப்புறம் என்னால காலேஜ்க்கு போறதை நினைச்சுக் கூட பார்க்கமுடியாது. சும்மாவே இந்த ரகு என்னை காலேஜ்ஜை விட்டு நகரமுடியாதபடி செக் வச்சிட்டான்’
‘இதுல இந்த விஷயம் அவன் காதுக்கு போனா கண்டிப்பா காலேஜ்க்கு நீ போன வரைக்கும் போதும்னு நிறுத்திடுவான்’ புலம்பிக் கொண்டவளின் வார்த்தைகளில் நூறுசதவீதம் உண்மை இருந்தது.
ஆமாம்…முதல் செமஸ்டரில் காயத்ரி அனைத்து பாடங்களுமே தேர்ச்சி பெறவில்லை என்னும் விஷயத்தை சாருமதி தன் தம்பி ரகுவிடம் சொல்ல,
அவனோ காயத்ரியிடம்,”காயூ! நீ எல்லா பேப்பர்ஸும் ஃபெயில் ஆனதிலிருந்தே உனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னு தெளிவாத்தெரியுது. அதனால நீ காலேஜ் போகவேண்டாம்” என்று சொல்லி அவளை அதிரவைத்தவன்
“இல்லை… எனக்கு படிப்புல விருப்பம் தான்னு நீ சொன்னா, எனக்கு அடுத்த செம்ல எல்லா பேப்பர்ஸூம் கிளியர் பண்ணி காட்டுற. அப்படி செய்துட்டா நீ காலேஜ் போகலாம். இல்லையா திவ்யமா வீட்ல இருந்துக்கலாம்”  
கண்டிஷன் போட்டதோடல்லாமல் கல்லூரிக்கு வந்து அவளின் ஹெச்ஓடியை யும் பார்த்து பேச, 
தங்கையின் படிப்பின் மீது அக்கறை கொண்டு கல்லூரி வரை வந்து விசாரித்த அந்த மருத்துவருக்கு படிக்கும் அண்ணன், அந்த ஐம்பதுகளிலிருந்த பேராசிரியருக்கு மரியாதைக்குரிய நபராகிப்போக, 

Advertisement