Advertisement

சொல்லியபடியே மருத்துவமனைக்குரிய லெட்டர் பேடில் போலிடாக்டர் பூபாலனைப் பற்றிய புகாரை எழுதத் தொடங்கினாள் சாருமதி.
அவள் செயலில் உள்ளுக்குள் லேசாக நடுக்கம் ஓடினாலும், அந்த இளவயது பெண் மருத்துவரிடம் கெஞ்சுவதற்கு  அவன் இளவயது இடம் கொடாததால்,
“நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ… அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கும் தெரியும்” என்று கெத்தாக சொல்லியபடியே, கூட்டி வந்த நபரைக் கூட அங்கேயே விட்டு விட்டு வீராப்பாக திரும்பி நடந்தான் அந்த போலிமருத்துவன்.
************
இப்போதெல்லாம் முழு விவசாயி ஆகிப்போன கிருஷ்ணா தங்கள் நிலத்தில் நடக்கும் விவசாயத்தை தானே விரும்பி மேற்பார்வை செய்ய ஆரம்பித்து விட்டான். 
அதுவுமில்லாமல், இவன் எதற்கெடுத்தாலும் கைக்கொரு உதவியாளை எதிர்பார்க்கும் பழைய கிருஷ்ணாவும் அல்ல.
 எது என்றாலும் ஒருகை பார்த்து விடலாமென்று தயக்கமின்றி தானே களத்திலிறங்கி வேலை பார்க்கும் புதிய கிருஷ்ணா. 
தான் படித்ததை கொண்டு விவசாயத்தில் ஒரு பெரிய இலக்கையே அடைந்து விடவேண்டும் என்ற வெறியோடு அலையும் இலட்சியவாதி கிருஷ்ணா.
 
சமீபத்தில் தங்கள் தென்னந் தோப்புகளிலிருந்து கிடைக்கும் தேங்காய் மட்டைகளிலிருந்து நார்களை பிரித்தெடுத்து அவற்றை மட்கச் செய்து அவற்றிலிருந்து இயற்கை உரங்களை தயார் செய்யவும் ஆரம்பித்திருந்தான்.
முதலில் உற்பத்தி செய்து தங்களுடைய விளைநிலங்களுக்கு பயன்படுத்தி பார்த்து விட்டு அதன்பிறகு அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்பது அவனது திட்டம்.
அதற்காக சிறிய அளவில் யூனிட் ஒன்றை தோப்புக்குள்ளேயே போட்டு அதில் உள்ளூர் ஆட்களையே வேலைக்கும் வைத்திருந்தான்.
அதோடு பள்ளிக்கூடத்தில் கட்டிட வேலையும் போய்க்கொண்டிருந்தது. 
அங்கேயும் இங்கேயும் அலைந்து மேற்பார்வை செய்துகொண்டிருந்தாலும் தினமும் மதியம் மூன்று மணிக்கு போல் சாருமதியைப் பார்ப்பதற்காகவே ஏதாவது ஒரு சாக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான் கிருஷ்ணா.
அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் சாருமதியிடமிருந்து பதில் வாங்க முடியாவிட்டாலும் அவன் அவளுடன் பேசுவதையும் நிறுத்தவில்லை, அங்கு போவதையும் நிறுத்தவில்லை.
என்றும் போல அன்றும் தன்னுடைய நேரத்திற்கு ஹாஸ்பிடலுக்கு கிளம்பியவனை அங்கு இறக்கி வைத்திருந்த இளநீர் கவர ,வெட்டித்தர வந்த நபரை ஒதுக்கி தானே‌  வெட்டமுயன்றான்.
அளவில் பெரியதாக இருந்த காயை இடது உள்ளங்கைக்குள் வைத்து விரல்களால் பற்றியபடியே  வலது கையிலிருந்த அரிவாளால் சீவ முதல் வெட்டு சரியாகத்தான் விழுந்தது. 
உற்சாகமாக அடுத்தும் சீவ கையிலிருந்த அந்த பெரியக்காய் நழுவி தரையில் விழ, அரிவாளோ கனகச்சிதமாக அவன் விரலைப் பதம் பார்த்திருந்தது. 
பக்கத்தில் நின்றிருந்தவர்கள் பதறிப்போய் தங்கள் மேல் துண்டை கிழித்து கட்டுப்போட்டபடி அவனை மருத்துவமனைக்கு அழைக்க, 
அவர்களை சமாதானப்படுத்தியவன், தானே கிளம்பினான். என்றைக்கும்  ஏதாவது காரணத்தை  உருவாக்கிக் கொண்டு செல்பவனுக்கு, இன்று உண்மையான காரணம் கிடைக்க உற்சாகமாகவே கிளம்பினான். 
போய், அடாவடியாக அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது, அதற்கு சாருமதியிடம் திட்டு வாங்கியது, தன் கைக்காயத்தைக் கண்டதும் அவள் பதறிப்போய் கையைப்பற்றி மருத்திட்டது, தான் திருமணத்திற்கு கேட்டதும் ஒழுங்காக பேசவில்லை என்றால் உன் வாயையும் சேர்த்து தைப்பேன் என்று சொன்னதுவரை உற்சாகமாக தான் இருந்தது அவனுக்கு.
ஆனால் “நீ என்னை திருமணம் செய்யக் கேட்கக் கூடாது” என்று சொல்லி, அதற்கு அவள் சொன்ன காரணம்… ஹையோ! அப்படியே சமைந்து போனான் கிருஷ்ணா. 
‘இத்தனை வருடங்கள் கழித்தும் அப்படியே ரணம் ஆறாத வடுக்களாகவா இருந்திருக்கிறது என் பேச்சு!’ எண்ணி எண்ணி மருகிப்போனது கிருஷ்ணாவின் மனது. 
‘சாருமதியிடம் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பேரிடமும் நான் இதேபோல் திமிராக பேசி அவர்களை மதிக்காமல் நடந்திருக்கிறேனே!’
‘அப்போது அவர்களின் மனதும் இப்படித்தான் ரணப்பட்டு போயிருக்குமா? என் மீதுள்ள கோபத்தை என்மீது கொட்டிவிட சாருமதிக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்துவிட்டது’
‘ஆனால் அப்படி சந்தர்ப்பம் அமையாத இன்னும் எத்தனை பேர் என்மீது துவேஷத்தோடு இருக்கிறார்களோ தெரியவில்லையே?’
‘இறைவா… இது என்ன சோதனை?’ மொத்தமாக உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தத்தளித்தவன் கொஞ்சம் கஷ்டப்பட்டே தனது வண்டியை எடுத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்திருந்தான். 
வீடுவந்தவன் தனது அறைக்குச் செல்லாமல் ஹால் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து இடது கையை மடித்து முன்நெற்றியில் வைத்தவாரே அமைதியாக கண்மூடி அமர்ந்திருக்க,
மகனின் வண்டிசத்தம் கேட்டதுமே,’என்ன? இந்த நேரத்தில் கிருஷ்ணா வந்திருக்கிறான்?’ என்று குழம்பியவாரே வெளியே வந்த வேதவல்லியின் கண்களில் மகனின் கைக்கட்டு கண்களில் விழ, 
பதறியடித்து மகனின் அருகில் ஓடி வந்தவர் அவன் கையைப் பற்றி,”என்ன ஆச்சு குட்டா? ஏன் விரல்ல கட்டு போட்டுருக்க?” கிட்டத்தட்ட கதறினார்.
“ப்ச்ச்… ஒன்னுமில்லை ம்மா” அசட்டையாக வந்தது பதில்.
“ஒன்னுமில்லையா… அதான் இவ்வளவு பெருசா கட்டுபோட்டுருக்கா? யாரு… சாருமதி தானே கட்டுபோட்டது? நீ சொல்லாட்டா என்ன? நான் அவக்கிட்டயே கேட்டுக்கிறேன்” 
சொல்லியவாறே மகனின் சட்டைப் பையிலிருந்து ஃபோனை எடுத்து அதற்கு உயிர் கொடுக்க, ஒளியை அள்ளி இறைத்தபடி உயிர்பெற்ற அதன் திரையில் வெள்ளை உடை தேவதையாக கழுத்தில் டெதஸ்கோப்போடு அமைதியே உருவாக வீற்றிருந்தாள் சாருமதி. 
ஃபோன் செய்ய தன் ஃபோனையே அம்மா எடுப்பார் என்று எதிர்பாராத கிருஷ்ணா,”ம்மா… என்ன பண்ணுற நீ!” என்று பதட்டத்தோடு அன்னையின் கையிலிருந்த ஃபோனை பிடுங்க,
அதற்குள் சாருமதியின் ஃபோட்டோவைப் பார்த்து விட்ட வேதவல்லி வாயெல்லாம் பல்லாக,”குட்டா… உண்மையாவே நீ… ” என்று முடிக்காமல் இழுத்தார். 
கணவர் தன்னிடம் ஏற்கனவே இப்படித்தான் என்று சொல்லியிருந்தாலும் அதை நிரூபிப்பது போல தன் மகனின் ஃபோன் திரையில் சாருமதியைக் காணவும் உற்சாகமாக மகனிடமே கேட்க முயல, அவனோ
“ரொம்பல்லாம் கனவு காணாதம்மா…அவளுக்கு இந்த உலகத்திலேயே பிடிக்காத ஆளு ஒன்னு உண்டுன்னா அது நானாத்தான் இருக்கும்” என்று சொல்லி முடித்தான்.
தன் மகனின் கையை எடுத்து ஆராய்ந்தபடியே,”ஏன் குட்டா இப்படியெல்லாம் பேசுற?” குழப்பமாக கேட்ட அன்னையிடம் 
“ப்ச்ச்… விடுமா” சலித்தபடியே முடித்துக்கொண்டான் மகன்.
ஆனால் மகனின் முகம் அத்தனை சோர்ந்திருக்க அப்படியே விட்டுச் சென்றால் அது வேதவல்லி இல்லையே! 
“ஹாஸ்பிடலுக்கு போன இடத்தில்  உன் மனசு நோகுற மாதிரி சாரு எதுவும் பேசுனாளா என்ன?”
 அவருக்கு மகனின் மனச்சோர்வுக்கு காரணம் தெரிய வேண்டும். எனவே மெதுவாக நூல் விட்டுப் பார்த்தார் மகனிடம். அதற்கு பலனும் இருக்கத்தான் செய்தது. 
“யாரு? அவ எம்மனசை நோகடிச்சுற போறாளா? ஹஹஹ…நல்ல ஜோக்”  வாய்விட்டு சிரித்தவன்
“நான் ஒரு ஆள் போதாது இந்த உலகத்துல உள்ள அத்தனை பேரையும் நோகடிக்க? திமிரு உடம்பு முழுக்க எனக்கென்ன ங்குற பணத்திமிரு. ஆனால் அத்தனையும் இன்னைக்கு ஆட்டம் காண வச்சிட்டால்ல” 
மகனின் பதிலில் பெற்ற மனம் பதற அவனை தன் தோளில் சாய்த்துக் கொண்டு மென்மையாக அவன் கேசம் தடவிக்கொடுத்தவர்,”என்னதான் நடந்ததுன்னு இந்த அம்மாகிட்ட சொல்லமாட்டியா கிருஷ்ணா!” என்றார் தழுதழுத்த குரலில். 
சாய்ந்து கொள்ள கிடைத்த தோள்கள் செய்த மாயமா? இல்லை அன்னையின் தழுதழுத்த குரல் செய்த மாயமாத் தெரியவில்லை, இன்று நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தவன், தன்னுடைய மனநிலையையும் சேர்த்தே சொல்ல 
இப்போது பதறிப்போவது வேதவல்லியின் முறையானது.
‘இன்று மகனின் மனக்குமுறல்களுக்கு நானும் ஒரு மறைமுகக் காரணம் தானே! சிறுவயதிலேயே நான் அவன் தவறுகளைச் சுட்டிக் காட்டி இவை தவறு என்று எடுத்து சொல்லி வளர்த்திருந்தால் அவனும் சாதாரணமாக வளர்ந்திருப்பான் தானே?’ காலங்கடந்த யோசனை இப்போது வேதவல்லியின் மனதில். 
ஆனாலும் காலம் கடந்து போனதே என்று சோர்ந்து போகாமல் ‘இந்த மன அழுத்தத்திலிருந்து மகனை மீட்டே ஆகவேண்டும்’ என்ற உத்வேகம் உந்தித்தள்ள,”தப்பே செய்யாமல் இருக்க நாமெல்லாம் மகாத்மாக்கள் இல்லை குட்டா! சாதாரண மனுஷங்க தான்” 
“ஆனால் செய்தது தப்புன்னு தெரிந்த இடத்தில அதை திருத்திக்கிட்டு திரும்பவும் அந்த தப்பை செய்யாமல்  நம்ம வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு போகணுமே தவிர
அதையே நினைச்சு சுயபட்சாதாபத்தில் கரைஞ்சு போகக்கூடாது. புரியுதா குட்டா!” என்றார் ஆழ்மனதில் நுழைந்து விடும் மென்மையான குரலில்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,”குட்டா…” என்ற அன்னையின் அழைப்பில், அன்னையின் தோளிலிருந்து விலகி, லேசாக சிரித்தபடியே “புரிந்தது” என்னும் விதமாக கண்களை மூடித்திறந்து எழும்பி செல்ல முயல,
அவன் கைகளைப் பற்றி தன்னருகே அமரவைத்து,”குட்டா! பேசாமல் அப்பாகிட்ட சொல்லி சாருவை பொண்ணு கேட்டு போவோமா?” என்று கேட்டார்…

Advertisement