Advertisement

சாருமதி.
அத்தியாயம் 13.
கிருஷ்ணா சென்ற வெகு நேரத்திற்கு பிறகும் கூட கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் சாருமதி. 
வெளியே அமைதியாக தெரிந்ததற்கு நேர்மாறாக அவள் உள்ளம் குழம்பி தவித்துக் கொண்டிருந்தது.
‘என்றைக்காவது ஒருநாள் தன்னிடம் நேரடியாக கிருஷ்ணா பேசும் போது தன் உள்ளத்து குமுறல்களையெல்லாம் கொட்டி தீர்த்துவிட வேண்டும்’ என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தாள் தான்…
ஆனால்… இப்போதோ,’உன் வார்த்தைகள் எல்லாம் என்னை காயப்படுத்தின என்று அவனிடம் தான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டாமோ?  வேறு ஏதேனும் காரணம் சொல்லி அவனை மறுத்திருக்கலாமோ?’ என்று தோன்றியது.
‘சரி…எப்படியோ உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று அவனிடம் தெள்ளத்தெளிவாகச் சொல்லியாயிற்று! ஆனால், அவன் இதை மதித்து இதோடு ஒதுங்கிப் போய்விடுவானா?’
‘இல்லை, இன்னும் ஏதாவது சொல்லிக் கொண்டு தொடர்ந்து வருவானா?’ நினைக்கும் போதே கண்ணைக்கட்டியது சாருமதிக்கு.
‘பேசாமல், ஹேமாவோட அண்ணா டாக்டர் பிரவீண் என்னை மணக்க கேட்டுருக்கிறார். நானும் இங்கே என்னுடைய சர்வீஸை முடித்து விட்டு மதுரைக்குப் போய் அவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று பொய் சொல்லியிருக்கலாமோ?’
‘என்மனம் இன்னொருவரின் வசம் என்று சும்மாவேனும் சொல்லியிருந்தால் கூட கண்டிப்பாக கிருஷ்ணா இத்தோடு ஒதுங்கிப் போய்விட வாய்ப்புகள் உண்டு. ஆனால்… இப்போது?’
‘சீச்சீ… இவன் ஒதுங்கிச் போய்விட வேண்டும் என்பதற்காக, நீ உன்னுடைய மறுப்பை சொன்னதும் அதை புரிந்து கொண்டு ஒதுங்கிப் போன மனிதரின் பெயரை உன்னுடைய சுயநலத்திற்காக தவறாக உபயோகப்படுத்துவதா?’ சாருமதியின் மனது “நீ செய்ய நினைப்பது தவறு” என்று அவளை இடித்துரைத்தது.
 படிப்பு முடிந்ததும் சாருமதி ஊருக்கே கிளம்பி போய்விடுவாள் எனத்தெரிந்து, பிரவீண் தன் தங்கை ஹேமா, சாருமதியோடு இல்லாத சமயம் பார்த்து தங்களுடைய மருத்துவமனையில் சாருமதியை சந்தித்து,
“நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்,” என்று தன்னுடைய விருப்பத்தை  சொல்லியிருந்தான்.
அவனிடமிருந்து அப்படியொன்றை எதிர்பார்த்திராத சாருமதி முதலில் லேசாக திகைத்து போனாலும் சட்டென்று தெளிவான முடிவெடுத்து,
“சாரி டாக்டர்…உங்களை என் உயிர் தோழியின் அண்ணனா, என் மரியாதைக்குரிய டாக்டர்ஸ்ஸோட மகனா, என்னோட சீனியரா மட்டும் தான், நான் இதுநாள் வரைக்கும் பாத்துருக்கேன்”
“அதைத் தாண்டி என்னோட மனசுல ஒரு செகண்ட் கூட  உங்களை வேறவிதமா நினைத்து பார்த்தது கூட கிடையாது.”
“நான் இங்க எப்படி வந்தேன், யார் என்னை படிக்க வைக்கிறதுன்னு எல்லாமே உங்களுக்கு கண்டிப்பா ஹேமா மூலமாத் தெரிந்திருக்கும்”
“இதோ இப்ப கூட எம்பிபிஎஸ் முடிச்சிட்டு நான் வேலைக்கு வரேன்னு போய் நிற்கும் போது, மேல படிக்க விரும்பம் இருந்தா படிச்சுக்கோ ம்மான்னு எங்க ஐயா சொன்னதாலத் தான் நான் ஹையர் ஸ்டடீஸ் படிக்க வந்ததே” 
“அதுக்காக நானே தான், எங்க ஐயா கிட்ட, த்ரீ இயர்ஸ் கூட ட்டூ இயர்ஸ் சேர்த்து ஃபைவ் இயர்ஸ் அவங்க ஹாஸ்பிடல்ல வர்க் பண்ணுறேன்னு சொல்லியிருக்கிறேன்” 
“அப்படியே ஃபைவ் இயர்ஸ் சர்வீஸ் முடிந்தாலும் நான் அந்த ஹாஸ்பிடல்ல விட்டு வெளியே வருவேன்னு சொல்ல முடியாது. ஏன்னா என்னோட சேவை எங்க ஊருக்கு தான்னு நான் எப்பவோ முடிவு செய்துட்டேன்”
“ஆனால் உங்க கனவுகளும், ஆசைகளும் உலகளவானதுன்னு ஹேமா எங்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கா. உங்களோட ஆசைகளை நான் தவறுன்னு சொல்லலை”
“ஆனால் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை நான் இல்லைன்னு மட்டும் என்னால தெளிவா சொல்லமுடியும்.”
“ஏன்னா, என்னால உங்க கூடவும், உங்களால என்கூடவும் தொழில்முறையில் ஒன்னா சேர்ந்து பயணம் செய்யமுடியாது”
“அப்படி இருக்கும் போது நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசமா சங்கடப்படுற கேட்டகிரில தான் போய் நிற்போம்” நிதர்சனத்தை உணர்ந்து சொன்னாள் சாருமதி.
தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் எதிர்காலத்தில் அந்த திருமணத்தின் நிலை என்ன என்பதை தெளிவாக சாருமதி சொல்ல,
அமைதியாக கேட்டிருந்தவன்,
” முதல்ல என்னோட விருப்பத்தை கோபப்படாமல் காது கொடுத்து கேட்டதற்கு நன்றி சாரு”
“எனக்கும் உன்னைப் பற்றி நீ சொன்ன எல்லா விஷயமும் தெரியும். இருந்தாலும் என்னோட விருப்பத்துக்கு ‘எஸ்’ சொல்லிடமாட்டியான்னு ஒரு ஆசைல தான் நான் உங்கிட்ட கேட்டது.” 
“இப்போ நானும் என்னோட விருப்பத்தை கேட்டுட்டேன், நீயும் உன்னோட முடிவை சொல்லிட்ட. அதனால ஒருவேளை நான் கேட்டிருந்தால் சாருமதி சம்மதிச்சிருப்பாளோ? எங்கிற எண்ணம் என் வாழ்நாள் முழுவதும் என் கூடவே வராது” சிறு புன்னகையோடு சொன்னவன்
“எனிவே… தேங்ஸ் ஃபார் எவ்ரிதிங்…அண்ட்   ஆல் தி பெஸ்ட் சாரு!” என்றவாறே சிறு புன்னகையோடு சென்றிருந்தான். அதன் பின் வந்த நாள்களில் ஒருநாள், ஒருபொழுது கூட அவன் அதைப்பற்றி சாருமதியிடம் பேசவே இல்லை.
ஆனால் இன்று ஒன்றும் பேசாமல் அமைதியாக திரும்பிச் சென்ற கிருஷ்ணாவின் செயல் ஏனோ சாருமதியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த, ‘திரும்பவும் அவன் தன்னை கல்யாணம் செய்ய கேட்டுவிடுவானோ?’ என்ற எண்ணத்தில்,
‘இப்படி செய்திருக்கலாமோ? இல்லை அப்படி செய்திருக்கலாமோ?’ என்று எண்ணி குழம்பித் தவித்தது சாருமதியின் உள்ளம்.
“ம்ம்ம்… ” எண்ணம் தந்த அழுத்தத்தில் தலையை இருகப்பற்றிக் கொண்டவள்,”இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்து விடும்” 
 வாய்விட்டு முணங்கியபடியே  அறையோடு இணைந்திருந்த ரெஸ்ட் ரூமிற்குள் சென்று முகத்தை குளிர்ந்த நீரால் நன்றாக கழுவிக்கொண்டு அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடைபயின்றாள்.
பின்னர் மனம் ஒருவழியாக சமன்பட கையிலிருந்த மருத்துவ புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கி அதில் ஆழ்ந்தும் போனாள்.
அப்போது தான் பூபாலன் தன் கைகளில் ஒரு வயதான நபரைத் தூக்கிக் கொண்டு பதட்டத்தோடு அறையினுள் நுழைந்தது.
உள்ளே வந்தவனின்,”டாக்டர்…” என்ற பதட்டமான குரலில் நிமிர்ந்து பார்த்தவளின் முகம் பூபாலனைக் கண்டதும் கேள்வியாய் அவனை முறைத்துப் பார்க்க, 
“காய்ச்சலுக்கு போடுற ஊசிதான் போட்டேன் டாக்டர்…
ஏன்னு தெரியலை மயங்கிட்டாரு!” குரலில் பதட்டத்தைத் தாண்டி ஒரு பிடிபட்ட  தன்மை தெரிந்தது.
“பூபாலன்! டாக்டருக்கு படிக்காத நீங்க எல்லாம் ஊசி போட்டு அலோபதி மருந்து குடுக்கிறது சட்டப்படி தப்பு. இனிமேல் இப்படி பண்ணாதீங்கன்னு போனதடவையே உங்ககிட்ட சொல்லித்தானே விட்டேன். திரும்பவும் இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம்?” 
குரலில் கோபம் தெறிக்க பூபாலனைப் பார்த்து கேட்டவள் அங்கிருந்த படுக்கையில் அந்த வயதான ஆணை படுக்க வைத்து பரிசோதித்து கொண்டிருந்தாள். 
ஆம்… கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பும் இப்படித்தான் ஒரு நபரை கொண்டு வந்திருந்தான் பூபாலன். 
அப்போது “எதனால் இந்த மயக்கம்?  திடீரென்று இப்போது தான் மயங்குகிறாரா? இல்லை ஏற்கனவே இந்த பிரச்சினை இருக்கிறதா?” போன்ற நோயாளியைக் குறித்த கேள்விகளை அந்த முதியவரின் மகன் என்று நினைத்து பூபாலனிடம் கேட்கும் போது,
 அவன் திருதிருத்தபடியே,”நான் இன்ஜெக்ஷன் போட்ட பிறகுதான் மயங்கிட்டார். நான் என்ன செய்தும் அவர் மயக்கத்திலிருந்து எழும்பலை. அதனாலத் தான் உங்ககிட்ட கொண்டு வந்தேன்” என்று சொல்ல
“நீங்க டாக்டரா?” சட்டென்று வந்திருந்தது கேள்வி சாருமதியிடமிருந்து.
இதற்கு என்ன பதில் சொல்லமுடியும் அவனால். கொஞ்ச நேரம் யோசித்தவன் போல நின்றவன், வேறுவழியில்லாமல் “இல்லை… நான் டாக்டர் துரைபாண்டியோட பையன்.” இப்படித்தான் பதில் வந்திருந்தது அவனிடமிருந்து.
அவன் பதிலிலேயே புரிந்து கொண்டாள் சாருமதி அவன் ஒரு போலிடாக்டர் என்பதை. ஏனென்றால் அவளுக்குமே அவன் தந்தையைப் பற்றி தெரிந்திருந்தது.
மயக்கமாக கொண்டு வரப்பட்டிருந்த நபருக்கு மாற்று மருந்து செலுத்தி அவர் கண்விழித்த பிறகு அந்த பூபாலனை வாங்கு வாங்கென்று  வாங்கியிருந்தாள் தன் வார்த்தைகளால். 
அதோடு இனி ஒருதடவை இந்த தவறை செய்தால் நானே புகார் செய்து உன்னை சட்டப்படி கைது செய்ய வைப்பேன் என்றும் மிரட்டியே அனுப்பியிருந்தாள். 
அப்படிச் சொன்னாலாவது இதேத் தவறை திரும்பவும் செய்யமாட்டான் என்று அவள் எண்ணியிருக்க, அவனோ இரண்டே வாரத்தில் அதே தவறை திரும்பவும் செய்து கொண்டு வந்து நிற்கிறான்.
அந்த நபரை பரிசோதித்து மாற்று மருந்து குடுத்தவள் பூபாலனைப் பார்த்து,” உங்களுக்கெல்லாம் நல்லவிதமா ஒருதடவை சொன்னா புரியாதா? சொல்லுறது புரியாமல் போறதுக்கு மண்டையில மூளைக்கு பதில் களிமண் ஏதும் இருக்கா?” என்று எரிச்சலோடு கேட்க 
 தன்னை விட சிறுபெண்ணிடம் உதவிக்கு திரும்பத் திரும்ப வந்து நிற்பதோடு அவளை மரியாதையோடு வேறு பேச வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சலில் நின்றவனுக்கு, சாருமதியின் வார்த்தைகள் தன்மானத்தை சீண்டிவிட,
“கொஞ்சம் நிதானமா வார்த்தைகளை விடுங்க டாக்டர்…” என்றான் எச்சரிக்கும் குரலில்.
இப்போதெல்லாம் பாப்பன்பட்டி ஊர்மக்கள் பண்ணையார் மருத்துவமனை திறந்த பிறகு இந்த போலிகளிடம் மருந்துவம் செய்து கொள்வதில்லை. இன்றும் இவன் கொண்டு வந்த நபர் பக்கத்து ஊர்காரர் தான்.
தன்னுடைய சிகிச்சையில் நோயாளி பேச்சு மூச்சற்று திடீரென்று மயங்கி விழவும், ‘வேறு எந்த மருத்துவர்களிடம் கொண்டு சென்றாலும் தனக்கு பிரச்சினையாகும்’,
‘அன்று தன்னை லேசாக மிரட்டி விட்டுவிட்ட இந்த சின்னப் பெண் இன்றும் நம்மை கைவிட்டு விடமாட்டாள்’ என்று நம்பி வந்திருக்க
அந்த சின்னப்பெண்ணோ “உன் மண்டையில் மூளைக்கு பதில் களிமண்ணா இருக்கிறது?” என்று கேட்கிறது.
“என்னது? நிதானமா பேசணுமா! நீங்க காசு பணம் சம்பாதிக்குறதுக்காக தினம்தினம் அப்பாவி மக்களோட உயிரோடு விளையாடுவீங்க”, 
“அதை நாங்க கையை கட்டி வேடிக்கை பார்த்துட்டு எதுவுமே செய்யாமல் ரொம்ப ரொம்ப நிதானமா இருக்கணுமோ! நல்லா இருக்கே உங்க கல்லா கட்டுற கதை” என்று ஏளனமாக சிரித்தவள் 
“ஐயோ பாவம்ன்னு ஒருதடவை மன்னிச்சு விட்டா நீங்க திரும்பத் திரும்ப அதே தப்பை தான் செய்றீங்க. அதனால இந்த தடவை உங்களை நான் மன்னிக்க தயாரில்லை” 

Advertisement