Advertisement

‘ஹையோ! இவன் பாத்துப் பாத்தே சாகடிக்குறான் என்னை? இதுல டாக்டர் நிர்மலா வேற, சின்னவரை இப்பல்லாம் அடிக்கடி ஹாஸ்பிடல் பக்கம் பாக்கமுடியுதுல்லன்னு சொல்லுறாங்க’ 
‘இவங்க யதார்த்தமா சொல்லுறாங்களா? இல்லை எதையும் கவனிச்சிட்டு சொல்லுறாங்களான்னு தெரியலையே?’
‘டேய்… நீ என்ன சொல்லணும்ணு நினைக்கிறியோ, அதை 
சீக்கிரம் சொல்லித் தொலையேன்டா. நானும் நச்சுன்னு உன் நடுமண்டைல உறைக்குற மாதிரி பதிலைச் சொல்லி உன்னை சீக்கிரம் கிளீன் கட் பண்ணி விட்டுருவேன்ல.’ 
நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடியபடியே உள்ளுக்குள் புலம்பியபடியே இருந்தவளை
“ஹலோ டாக்டர்! என்னாச்சு? உடம்பு ஏதும் சரியில்லையா?”
என்ற குரல் உலுக்க, சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தாள்.
பக்கத்தில் பேஷண்ட் உட்காரும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு லேசாக நெருங்கி இவள் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
 சட்டென்று மூண்ட கோபத்தோடு,”கிருஷ்ணா! நீ உன்னோட லிமிட்டை தாண்டுற. உங்க ஹாஸ்பிடல்ன்னா நீ என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைக்கிறியா?”
” உன்னை யாரு இங்க வந்து உட்கார சொன்னது? முதல்ல எழும்பு நீ”  அடக்கப்பட்ட கோபத்தோடு அடிக்குரலில் உறுமினாள் சாருமதி.
“இது பேஷண்ட் உக்கார்ற சீட் தான? அப்போ நான் சரியாத்தான் உட்கார்ந்திருக்கேன் டாக்டர்”  லேசாக கண்ணை சிமிட்டியபடியேச் சொல்ல, அவன் செய்கையில்
 “இன்னும் சரியா… நல்லா… அழகா… ஆசைதீர… நீயே உட்கார்ந்துக்கோ நான் போறேன்” சொன்னபடியே இருக்கையிலிருந்து எழுப்பினாள் சாருமதி.
“அப்போ இதுக்கு யாரு ட்ரீட்மெண்ட் குடுப்பாங்க டாக்டர்?” சிரித்தபடியே கேட்டவன் தன் இடது கையை உயர்த்தி காட்ட, ஆள்காட்டி விரலிலிருந்து கட்டப்பட்டிருந்த துணியையும் தாண்டி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
பதறிப்போனவள், சட்டென்று கையைப் பற்றி விரலை  பார்வையிட்டுக் கொண்டே,”என்ன ஆச்சு?” என்று கேட்க
 “அரிவாள் கைதவறி பட்டுடிச்சி” என்றான் சாதாரணமாக
காயத்தை காட்டன் கொண்டு துடைத்தபடியே,”கைல வெட்டு பட்டிருக்குன்னு வந்த உடனே சொல்லுறதுக்கு என்ன?” என்றாள் எரிச்சலை மறைக்காத குரலில்.
“நீங்களும் வந்த உடனே என்னாச்சுன்னு கேக்கலையே டாக்டர்!” 
‘ஆமாம்… வந்த உடனே கேக்குற மாதிரி தானே உட்கார்ந்திருந்த’ மனதுக்குள் பொங்கிய எரிச்சலை அடக்கிக்  கொண்டு காயத்தை முழுவதும் சுத்தப்படுத்தி பார்க்க விரலின் ஓரம் வெட்டுக்காயம் வாயைப் பிளந்து கொண்டு இருந்தது.
“காயம் கொஞ்சம் ஆழமா இருக்கு. தையல் போட்டுருவமா?” கேட்டபடியே தையல் போடுவதற்கான ஆயத்தத்தை செய்யத்தொடங்க,
“நீ என்ன… வேணும்னாலும் பண்ணிக்கோ சாரு…” என்றான் ஏதோ தன்னை அவளிடம் முழுதாக ஒப்புக்குடுப்பவன் போல…
அவனுடைய பேச்சில் சாருமதிக்கு சுர்ரென்று கோபம் உச்சிக்கு ஏறினாலும், செய்ய வேண்டிய வேலையை மட்டும் கருத்தில் கொண்டு காயத்திற்கு தையல் போடும் வேலையில் மும்முரமானாள்.
ஆனால் அவனோ சும்மாயிராமல்,”நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? சாரு” என்றான் ஆளை மயக்கும் குரலில் மெதுவாக
அவனது கேள்வியில் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி கோபமாக நிமிர்ந்து பார்த்தவள்,”பார்த்து நிதானமா பேசு கிருஷ்ணா… இல்லைன்னா வாய்க்கும் சேத்து தையல் போடவேண்டி வரும்” என்றாள் எச்சரிக்கும் குரலில்.
“இதப்பாருடா… கல்யாணம் பண்ணிக்குவமான்னு கேட்டா வாயைத் தச்சிடுவாங்களாம் இந்த டாக்டர் அம்மா. அப்படி இது கேக்கக் கூடாத கேள்வியா என்ன?” 
“ஆமாம்… கேக்கக்கூடாத கேள்வி தான்… அதுவும் என்னைப் பார்த்து நீ கேக்கக் கூடாத கேள்வி தான்” உறுதியான குரலில் சொன்னவள், காயத்திற்கு செய்ய வேண்டிய சிகிச்சையை முடித்திருக்க,
டிரஸ்ஸிங் செய்யப்பட்ட விரலை தூக்கி பார்த்தபடியே,”ஏன்? ஏன்? நான் மட்டும் ஏன் கேட்கக்கூடாது? சொல்லு?” சற்றே குரலை உயர்த்தினான் கிருஷ்ணா.
“ஷ்ஷ்ஷ்… சத்தமாப் பேசி இங்க என்ன நடக்குதுன்னு எல்லாருக்கும் காட்ட பாக்குறியா? மெதுவா பேசுறதா இருந்தா பேசு… இல்லைன்னா எழும்பி போய்ட்டே இரு” 
கண்களை உருட்டியபடியே கண்டிப்பாக பேசும் இந்த சாருமதி உண்மையிலேயே புதியவள் தான் கிருஷ்ணாவுக்கு.
“இப்பல்லாம் நீ ரொம்ப பேசுற சாருமதி…” லேசாக அலுத்துக் கொண்டவன்,
“சொல்லு ஏன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேக்கக் கூடாது? அதை நானும் தெரிஞ்சிக்கிறேன்” குரலில் இப்போது நிதானம் வந்திருந்தது.
“எப்படி முடியுது கிருஷ்ணா? இல்லை எப்படி… உன்னால  முடியுதுன்னு கேக்குறேன்? இதே வாயால என்னோட ஏழ்மையை கிண்டலடிச்சு எத்தனை நாள் என்னை அழவச்சிருப்ப?”
“அப்படியிருக்கும் போது, அதே வாயால நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு என்னைப் பார்த்து கேட்க உன்னால எப்படி முடியுது?” 
“நீ அலட்சியமா பார்த்த, ஏளனமா பேசுன, உன் அந்தஸ்துக்கு, உன் பக்கத்துலக் கூட வரமுடியாதுன்னு நெனைச்ச அதே சாருமதியாத் தான் நான் இன்னும் இருக்குறேன்..”
“நீ எங்கிட்ட கல்யாணம் பண்ணிக்குவோமான்னு கேக்குற அளவுக்கு பெருசா எங்கிட்ட இப்போ வரைக்கும் எந்த மாறுதலும் வரலை” நக்கலாகச் சொன்னவள், திடீரென்று வேகமாக
“இல்லை… இல்லை… ஒரே ஒரு மாறுதல் இருக்கு. அப்போ அந்த சாருமதி கிட்ட இரண்டு கிட்னியும் இருந்தது. ஆனால் இப்போ அவகிட்ட ஒன்னே ஒன்னு தான் இருக்குது” என்று லேசான கிண்டல் தொனியில் சொல்லியவள்
“ம்ஹும்… ஒருவேளை அதுதான் நீ இப்போ அவளை கல்யாணம் பண்ண கேக்குறதுக்கான தகுதியோ என்னவோ?” 
தன் நெஞ்சத்தில் பூட்டி வைத்திருந்த அத்தனை குமுறல்களையும் மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டியவள், 
‘நீ என்னை மணக்க கேட்பதற்கான காரணம் இதுதானே!’ என்ற கேள்விக் கணையை  இலைமறைக்காயாய் கிருஷ்ணாவின் மேல் வீசிவிட்டு அசராமல் அவனை பார்த்து நின்றாள். 
ஆனால் தொடுத்த கேள்விக்கணையும், கொட்டப்பட்ட குமுறல்களும், காளையவன் நெஞ்சை இடம் பார்த்து பதம் பார்க்க பேச்சுகளற்று மௌனியானான் அவன். 
‘என்ன பதிலைச் சொல்லிவிட முடியும் அவனால். உலக ஞானம் அற்று முட்டாளாக இருந்த அந்த திமிர் பிடித்த கிருஷ்ணா, இந்த பெண்ணின் மனம் நோகச் செய்த அத்தனை செயல்களுக்கும் என்ன பதில் சொல்லிவிட முடியும் அவனால்?” 
‘அடிமேல் அடிவைத்தால் நகர்வதற்கு இது கல் அல்ல, காயம்பட்ட கன்னியின் மனது’ என்று இப்போது புரிய,
கண்களை ஒருமுறை அழுந்த மூடித்திறந்தான் கிருஷ்ணா.
 மேஜைமீது சாருமதி குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தவன், சாருமதியின் முகத்தை பார்த்தபடியே,
“நான் தெரியாமல் உன்னை காயப்படுத்திட்டேன், என்னை மன்னிச்சிடுன்னு என்னோட தவறை உங்கிட்ட பூசிமெழுக நான் விருப்பப்படலை சாரு. ஏன்னா நான் பேசுன ஒவ்வொரு வார்த்தையும்  உனக்கு வலிக்கணும்னு தெரிஞ்சே பேசுனது தான்”
“ஆனால் இதோ இப்போ உன் முன்னாடி இருக்கானே இந்த கிருஷ்ணாவால, உன்னோட எல்லா மன உணர்வுகளையும் நல்லா புரிஞ்சுக்க முடியுது சாருமதி”
“அவனால இப்போ மனசார உங்கிட்ட எந்தவித ஈகோவும் இல்லாமல் மன்னிப்பும் கூட கேக்கமுடியும். சோ என்னோட வார்த்தைகள், செயல்கள் அத்தனைக்கும் என்னை உன் மனசார மன்னிச்சிடு” இருகரம் கூப்பி மன்னிப்பை யாசித்தவன்,
“ஆனால் எல்லாம் தெரிந்தே செய்தவனுக்கு, இப்படி  ஒருநாள்  உனக்கு மனசு வலிச்சா எனக்கும் வலிக்கும் ங்கிற விஷயம் மட்டும் உண்மையிலேயே  தெரியாமல் போச்சு” 
லேசாக கம்மியக் குரலில் சொல்லி முடித்தவனின் பேச்சைக் கேட்டவளின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைய,
அவளின் அந்த செயலில்,”எப்பவோ நடந்ததை எல்லாம் ஞாபகம் வச்சிட்டு, இப்போ என்னோட இந்த அன்பை சந்தேகப்படாத சாரு” என்றான் கிருஷ்ணா தன்னை நிரூபித்துவிடும் வேகத்தில் 
“சந்தேகப்படாம… நீ சொன்னதும் நானும் காதல் வந்துடிச்சி… ஆசையில் ஓடிவந்தேன்னு, உன்பின்னாடி ஓடிவரணுமா? ஹாங்…”
“அன்பாம்… பொடலங்கா அன்பு… இந்த பொல்லாத அன்பு ஏன் வந்தது? எதுக்கு வந்ததுன்னு தெரியாம இருக்க நான் ஒன்னும் முட்டாளில்லை” என்று பொரிந்தவள், 
“உனக்கும் எனக்கும் இந்த காலத்தில் மட்டும் இல்ல… எந்த காலத்திலும் பொருந்தாது. அதனால தயவு செய்து இனிமேலாவது இந்த மாதிரி ஏதாவது முட்டாள்தனமா உளறிகிட்டு எங்கிட்ட வராத.” 
அவ்வளவு தான்… நான் பேசவேண்டியதை எல்லாம் பேசிவிட்டேன். இனிமேல் இதைப்பற்றி என்னிடம் எதுவும் பேசாதே என்னும் முகபாவனையில் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் சாருமதி. 
சாருமதியின் இந்த புதிய பரிணாமத்தில் பேசுவதற்கு வார்த்தைகளற்று  வாயடைத்து போன கிருஷ்ணா,’என்ன பேசி இந்த பெண்ணிடம் தன்னை விளங்க வைப்பது?’ என்று தெரியாமல், 
திகைத்துப் போய் அவளையே சிறிது நேரம் பார்த்தபடி நின்றவன் மௌனமாக அறையை விட்டு வெளியேறினான். 
கிருஷ்ணா சென்ற வெகு நேரத்திற்கு பிறகும் பல்வேறு எண்ணங்களால் குழம்பிப் போன சாருமதி தன் மனதை சமன்செய்ய குளிர்ந்த நீரால் முகம் கழுவி  அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். 
பின்னர் சிகிச்சைக்காக வேறு நோயாளிகள் யாரும் இல்லாத காரணத்தால், தான் கையோடு வைத்திருந்த மருத்துவ புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கியவள் அதில் மூழ்கியும் போக,
சிறிது நேரத்தில்  ஒரு வயதான  நபரை தன் கைகளில் அள்ளியபடி பதட்டமாக வந்து நின்றான் பூபாலன். 
ஆம்… போலிடாக்டர் துரைபாண்டியின் மகன் பூபாலன்…

Advertisement