Advertisement

சாருமதி.
அத்தியாயம் 12.
“அப்படித்தான்… மூச்சை கொஞ்சம் நல்லா இழுத்து வெளியே விடுங்க பாட்டி”  சொல்லிக்கொண்டே அந்த முதிய பெண்மணியை தன் டெதஸ்கோப் மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தாள் சாருமதி.
“ஒன்னுமில்லை… லேசா நெஞ்சுச்சளி  இருக்கு பாட்டி! அதனாலத் தான் இந்த காய்ச்சல். ஒரு ஊசி போட்டு மூனு நாளைக்கு மாத்திரையும் தர்றேன், சாப்பிடுங்க சரியாகிடும்”
“அப்படியே ஒரு இரண்டு மூனு நாளைக்கு வெந்நியேக்   குடிங்க. அப்புறம்  காலையில எழும்பி இந்த பனிக்குள்ள நடமாடாதீங்க. அப்படியே நடமாடவேண்டி வந்தாலும் தலையில ஒரு  துண்டு கட்டிக்கோங்க  சரியா?”
 அவருக்கு புரியும்படி சொல்லியவாறே ஊசிபோடுவதற்காக சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தாள் சாருமதி. 
“அதெல்லாம் இது வலுத்தகட்டை தாயி. பனி, மழையெல்லாம் இதை ஒன்னும் செய்யாது. இப்போக்கூட நான் ஒரு கஷாயம் வச்சிக் குடிச்சாப் போதும், இந்த நெஞ்சு சளியெல்லாம் இன்னாப் போறேன்னு ஓடிப்போயிடும்” 
“ஆனால் நம்ம ஊரு புள்ள நல்லா மருத்துவம் பாக்குதுன்னு எல்லாரும் சொல்லுதாவ. அதான் நானும் பாத்துட்டு போலாம்னு வந்தேன்” 
வெள்ளந்தியாய் பதில் பேசிய அந்த பெரியமனுஷிக்கு ஊசியைப் போட்டபடியே,”எப்படி? உங்க ஊரு பொண்ணு நல்லா மருத்துவம் பாக்குதா?” 
லேசாகச் சிரித்தபடியே கேட்ட சாருமதியின் கன்னம் வழித்து நெட்டிமுறித்தபடியே,”அதெல்லாம் மகராசியாப் பாக்குது” என்ற அந்த பாட்டியின் செயலில் வெட்கச்சிரிப்பு சிரித்த சாருமதி
 சொந்த ஊருக்கு வந்து திரு. கிருஷ்ணமூர்த்தி நினைவு மருத்துவமனையில் மருத்துவராகச் சேர்ந்து மாதங்கள் இரண்டாகப்போகிறது.
“உங்க ஊர் மக்களுக்கு உங்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறதுல தான் ஆர்வம் அதிகமா இருக்கு சாரு. அதனால நீ வந்த பிறகு, நான் ஃப்ரீயாகி வெட்டி ஆஃபீஸராத் தான் உட்கார்ந்திருக்கேன்” என்று டாக்டர் நிர்மலாவே சொல்லிச் சிரிக்குமளவிற்கு இங்கே எல்லாம் நன்றாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த கிருஷ்ணாவும் அவன் அம்மா வேதவல்லியும் செய்கின்ற அலப்பறைகளைத் தான் சாருமதியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
தடியால் அடித்து பழுத்த பழம் சுவைக்காதது போல, தன்னுடைய தானத்திற்கு பிறகு அம்மா, மகனிடம் வந்த மாற்றத்தை ரசிக்க முடியவில்லை இவளால்.
ஊரிலிருந்து வந்த மறுநாள் காலையிலேயே பண்ணையார் வீட்டுக்கு வந்திருந்தாள் சாருமதி.
 எப்போதுமே அவளைக் கண்டாலும், காணாதது போலச் செல்லும் வேதவல்லி, இம்முறை இவள் வாசலில் நுழையும் போதே வேகமாக வந்து கைகளைப் பற்றி வீட்டுக்குள் அழைத்து சென்று, ஹாலில் கிடந்த சோஃபாவில் உட்கார வைத்து, தானும் கூடவே உட்கார்ந்து கொண்டதைப் பார்க்கும் போது
‘என்னடா இது! தலைகீழாக பூமி சுற்றுகிறதா என்ன?’ என்பது போலப் பார்த்திருந்தவளுக்கு, ‘எப்படி இவர்களால் சட்டென்று தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ள முடிகிறது?’ என்றே எண்ணத் தோன்றியது.
 கூடவே அன்று பின்வாசல் வழியே தான் கண்களில் நிறைந்த கண்ணீரோடு  இங்கிருந்து வெளியே போன காட்சி நினைவுக்கு வந்து,”காஃபி குடிக்கிறியா? டீ குடிக்கிறியா?” என்ற பரபரப்பான  வேதவல்லியின் வரவேற்பை ஏற்றுக்கொள்ள முடியாமல்  செய்தது.
வேதவல்லியின் மாற்றத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் போல  ஆனால் அந்த ‘முசுட்டு முனுசாமி’ இவளைக் கண்டதும் ‘சிரித்தவாயன்’ ஆகிப்போவதைத் தான் இவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.
‘நல்ல காலம்… சரியான நேரத்தில், சரியான முடிவை அம்மா எடுத்தார்களே!’ என்று அந்த நேரத்திலும் எண்ணியது மனது.
ஆமாம்… இப்போது சாருமதியின் அம்மா பண்ணையார் வீட்டுக்கு சமையல் வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டு, தன் வீட்டுக்கு முன்னால் சிறியதாக பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
 மதுரையிலிருந்து பண்ணையார் குடும்பம் வருவதற்கு காலம் எடுத்துக் கொண்டது, கடை வைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்றால், 
இவர்களிடம் ஏதோ கடன்பட்டவர்கள் போல, ஒரு தயக்கம்  பண்ணையார் குடும்பத்தினருக்கு வந்து ஒட்டிக்கொண்டது இன்னொரு காரணம் என்று சொன்னாலும் மறுப்பதற்கில்லை.
புதியதாக வேலையில் இருந்த சமையல்காரர் வந்து டீ கொடுக்க,”குடிச்சிட்டு இரு சாரு … இதோ ஐயாவை கூட்டிட்டு வரேன்” என்றவாறே கிட்டத்தட்ட தங்கள் அறையை நோக்கி ஓடினார் வேதவல்லி. 
வேதவல்லி சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வெளியே இருந்து உள்ளே வந்த கிருஷ்ணாவின் கண்களில், அந்நேரத்துக்கு  அங்கே சாருமதியை எதிர்பார்த்திராததால் ஒரு சின்ன சந்தோஷ மின்னல் வந்து போக,
கையிலிருந்த பைக் சாவியை கீஸ்டாண்டில் போட்டுவிட்டு சிறு புன்னகையோடு அவள் எதிரே கிடந்த சோஃபாவில் உட்கார்ந்தபடியே,”வெல்கம் ஹோம்” என்று அமர்த்தலாகச் சொன்னவன்,
“காஃபி எதுவும் குடிக்கிறியா?” என்றபடியே அவளைப் பார்க்க, அவளிடமிருந்து பதிலேதும் இல்லாது போகவே, அவள் அருகில் டீபாயில் காஃபி கப்பை பார்த்தவன்,”ஓ… ஏற்கனவே ஆச்சா” என்றவாரே
“ராஜ் அண்ணா… எனக்கு லெமன் டீ ஒன்னு குடுங்க” என்று இங்கிருந்தே சத்தம் கொடுத்தான்.
வெளியே இருந்து வந்ததிலிருந்து அலட்டிக்கொள்ளாமல் அவன் செய்து கொண்டிருந்த செயல்களை சோஃபாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவள்,
‘வெல்கம் ஹோம் மா! என்னடா வரவேற்பெல்லாம் ஒரு மார்க்கமாயிருக்கு! நேற்று என்னடான்னா நம்ம கார்னு சொல்லுறான்… இன்னைக்கு இப்படி!  இது சரியில்லையே?’ உள்ளுக்குள் பதறியவள் வெளியே வெகு அலட்சியமாக அவனை கண்டுகொள்ளாமல் உட்கார்ந்திருக்க
அவளை வெகுநேரம் காக்கவைக்காமல் ஆபத்பாந்தவனாய், அனாதரட்சகனாய் தன் மனைவி பின்தொடர பண்ணையார் வந்து சேர்ந்தார்.
அவரைக் கண்டதும் மரியாதையாக எழுந்து நின்று வணங்கியவள்,”நான் இன்னைல இருந்து வேலைல  சேர்ந்துக்கட்டுமா ஐயா!” என்று கேட்க 
“அது உன் ஹாஸ்பிடல் மா. நீ எப்போ வேணும்னாலும் சேர்ந்துக்கலாம்” என்றவர்,
“நானே உன்னை கூட்டிட்டு போய் அங்க இருக்கிற டாக்டர்ஸ் கிட்ட அறிமுகப்படுத்தி விடுறேன். முதல்ல சாப்பிட்டுட்டு போகலாம். வா…” என்றழைக்க 
“இல்ல… நான் சாப்பிட்டுட்டே வந்துட்டேன்ங்க ய்யா. நீங்க சாப்பாடை முடிச்சிட்டு வாங்க, நான் மெதுவா போய்ட்டு இருக்கிறேன்” என்று அந்த இடத்தை விட்டு  நகர்ந்தாள்.
“நடந்து ஏன் போகணும்? குட்டா! நீ கொஞ்சம் உன் வண்டியில நம்ம சாருமதியை ஹாஸ்பிடல்ல கொண்டு விட்டுட்டு வா. அப்பா பின்னாடியே வந்துடுவாங்க”
அன்னையின் வார்த்தைகளை மகன் தட்டாது, கொண்டு வந்து போட்ட சாவியை எடுக்கப் போக
“இல்ல…ஐயா சாப்பிட்டுட்டே வரட்டும். நான் வெயிட் பண்ணுறேன்” திரும்பவும் அந்த சோஃபாவில் அழுத்தமாக அமர்ந்து கொண்டாள் சாருமதி.
கிருஷ்ணாவோ அந்த ராஜ் அண்ணா குடுத்த லெமன் டீயை குடித்துக் கொண்டே பேப்பர் படிக்கிறேன் பேர்வழி என்று சாருமதியின் முகபாவங்களை படிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்.
பல்லைக்கடித்துக் கொண்டு பண்ணையாருக்காக காத்திருந்து, அவரோடு மருத்துவமனைக்கு வந்து முறையான அறிமுகத்தோடு அன்றிலிருந்தே பணியில் சேர்ந்து விட்டாள் சாருமதி. 
சரி… அத்தோடு பிரச்சினை முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. சாருமதிக்கான மதியப் சாப்பாடு பண்ணையார் வீட்டிலிருந்து அன்று மதியமே அந்த ‘ராஜ் அண்ணன்’ மூலம் மருத்துவமனைக்கே வந்ததைக் காணும் போது அயர்ச்சியாக இருந்தது சாருமதிக்கு.
சற்றுமுன் அம்மா கொண்டு வந்து உண்டு முடித்திருந்தவள், அதை சாக்கிட்டு உணவை திருப்பி அனுப்பிவிட, 
சிறிது நேரத்திலேயே,”அப்போ நாளையில இருந்து நம்ம வீட்லயிருந்தே உனக்கு சாப்பாடு அனுப்பி விடுறேன். நீ உங்கம்மாவை கொண்டு வரவேண்டாம்னு சொல்லிடுறியா சாரு!”
வேதவல்லியிடமிருந்து ஃபோன் மூலம் தகவல் வந்தது சாருமதிக்கு.  இந்த புதிய அக்கறை பிடிக்கவில்லை இந்த டாக்டருக்கு. 
‘இதே வார்த்தையை ஒருவருடத்திற்கு முன் சொல்லியிருப்பாரா இந்த அம்மா! இப்போது மட்டும் ஏன் புதிதாக இந்த அக்கறை?’
‘அவர்களுக்கு தேவையான ஒன்றை நான் செய்தபின் தான், எனக்காக மரியாதையோ, அன்போ அவர்களிடமிருந்து வருகிறது என்றால், எனக்கு அவை  தேவையில்லை.’
சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்படாத மறுப்புகள் எப்போதுமே தேவையில்லாத நம்பிக்கையை எதிராளிக்கு வளர்த்து விடும். உறுதியாக முடிவெடுத்துக் கொண்டவள்,
“இல்ல… இதோ படிப்பு… அது இதுன்னு கிட்டத்தட்ட ஏழு வருசமா அம்மா கைச் சாப்பாடை தவறவிட்டுட்டேன். அதனால இப்பவாவது அம்மா கையால சாப்பிட்டுக்கிறனே… பிளீஸ்… தப்பா எடுத்துக்காதீங்க” நாசூக்காக மறுத்தாள்.
வேதவல்லியை ஓரளவிற்கு தன்னை விட்டு தூர நிறுத்தும் முயற்சிகளில் வெற்றி பெற்றவளால், அவர் பெற்ற மகனை அவ்வாறு செய்ய இயலவில்லை.
ஒவ்வொரு நாளும் காணும் போதெல்லாம் அவன் கண்களாலேயே தன் காதல் சொல்ல இவளோ தன் செய்கைகளாலேயே அதை அழகாக மறுத்துக் கொண்டிருந்தாள்.
ஆகமொத்தம் இருவரின் செயலுமே ‘நீ தடுக்கில் பாய்ந்தால் நான் கோலத்தில் பாய்வேன்’ என்பதாய் இருந்தது.
சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் அனைவரையும் பார்த்து முடித்தவள், லேசாக நிமிர்ந்து தன் உடலை வளைத்து சோம்பல் முறித்தபடியே,
‘இன்னைக்கு எங்க அந்த தொரையைக் காணும்? தினம் இதுக்கு முன்னாடி வந்துடுவானே!’ என்று நினைத்தவாறே வாசலைப் பார்த்தாள்.
ஆமாம்… ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு தினமும் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு வரும்  கிருஷ்ணா, சாருமதியின் அறைக்குச் சென்று அவள் பதில் சொல்லாவிட்டாலும், அவளிடம் இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போவதில்லை.

Advertisement