Advertisement

சாருமதி.
அத்தியாயம் 10.
அந்த மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் முன் நீண்டிருந்த காரிடாரில் நின்று கொண்டும், உலாத்திக் கொண்டும், அங்கு கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுமாக இருந்த அத்தனை பேர்களின் கண்களும்,
அந்த அறையின் முன்னால் எறிந்து கொண்டிருந்த சிகப்பு விளக்கு அணைக்கப்படவும் பரபரப்பாகி, திறக்கப்படப்போகும் வாசல் கதவையே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தன. 
அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சிறிது நேரத்தில் வெளியே வந்த தலைமை மருத்துவர் சிரித்த முகமாக பண்ணையாரைப் பார்த்து,
“மிஸ்டர். மூர்த்தி! ஆப்ரேஷன் சக்ஸஸா முடிஞ்சிடிச்சி. பேஷியண்ட்டும், டோனரும் சேஃபா இருக்காங்க” என்று சொல்ல
அவருக்கு தன் நன்றியைச் சொல்லிய பண்ணையார்,”இரண்டு பேரையும் எப்போ பார்க்கலாம் டாக்டர்?” என்று நெகிழ்ந்து போன குரலில் கேட்டார்.
“அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் சார். இரண்டு பேரையும் ஐசியூ க்கு மாத்துன பிறகு நீங்க பார்க்கலாம். ஆனால் அதுவும் கண்ணாடி தடுப்பு வழியா, வெளியே நின்னு தான்” 
சொல்லியவர் அங்கே கண்களில் தவிப்பை தாங்கியபடி நின்று கொண்டிருந்த சாருமதியின் அம்மா கல்யாணியைப் பார்த்து,”நீங்க தானே அந்த டோனர் சாருமதியோட அம்மா” என்று கேட்க
“ஆமாம்” என்னும் விதமாக தலையசைத்தவரிடம்,
“உங்க பொண்ணு ரொம்ப… ரொம்ப… தைரியமான பொண்ணு மா. இளரத்தம் வேற… சீக்கிரம் குணமாகிடுவா. கவலைப்படாதீங்க” என்று ஆறுதல் வார்த்தை சொல்லி திரும்பியவரை
“எக்ஸ்கியூஸ்மி டாக்டர்…” என்ற குரல் நிறுத்த
அங்கிருந்த சாருமதியின் நான்கு தோழர்களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களின் தோழியின் நிலை குறித்து கேட்டனர். அவர்களோடு சாருமதியின் தம்பியும் சேர்ந்து கொண்டான்.
அவர்கள் அனைவரும் மருத்துவ உயர்படிப்பில் இருக்கும் மாணவர்கள் என்பது தெரிந்ததும் இன்னும் தெளிவாக, வேதவல்லி மற்றும் சாருமதியின் நிலைபற்றிச் சொல்லியவர்
“நீங்க எல்லாரும் பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியுறீங்க… கொஞ்சம் ஃபிரஸ்ஸப் ஆகிட்டுவாங்க கைஸ், அப்புறமா உங்க ஃப்ரெண்ட்டை பாக்கலாம்” என்றவாரே  அனைவரையும் பார்த்து பொதுவான ஒரு சிரிப்புடன் வந்த வழியே திரும்பிச் சென்றார். 
டாக்டரின் வார்த்தைகளுக்குப் பிறகு அங்கிருந்தவர்களின் முகத்தில் லேசான தெளிவு பிறக்க,
“ஹேம்ஸ்! நீயும் ரேணுவும் உங்க வீட்டுக்கு போய் ஃபிரஸ்ஸப் ஆகிட்டு சீக்கிரமா வாங்க. நாங்க இங்க பாத்துக்குறோம்” என்று திவாகர் சொல்ல, 
 அவர்களையேப் பார்த்தபடி நின்றான் கிருஷ்ணா. 
‘சாருமதியின் நட்புக்காக இவர்களும், சொந்தமென்று தாயும், உடன்பிறந்தவர்களும், வந்துநிற்கிறார்கள்’
‘என் தாய்க்காக அவருடன் பிறந்தவர்களும் என் தகப்பனின் உடன் பிறந்தவர்களும் வந்து நிற்கிறார்கள்’
‘என் அப்பாவிற்காக… ஹையோ சொல்லவே வேண்டாம்…
ஐயா… ஐயா… என்று அவரை தலையிலேயே தூக்கி வைத்துக் கொள்வார்கள் போல, அப்படி ஒரு இளையவர்களின் கூட்டம் வந்து நிற்கிறது’
‘ஆனால் எனக்காக? என் துயரத்தில் எனக்கு தோள் கொடுப்பதற்காக என்னோடு யார் வந்து நின்றார்கள்?’
‘தனா… அந்த ஒருவனைத் தவிர என்னோடு வர எவருமே இல்லையா? அப்படி என்றால், தான் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன?’
அந்நேரத்திலும் சுய அலசலில் ஈடுபட்டு கலங்கி நின்றது கிருஷ்ணாவின் மனது.
“ப்ரோ… அம்மாவுக்கு ஒன்னும் இல்லை… சீக்கிரம் நல்லபடியா குணமாகிடுவாங்க” அவன் நின்ற கோலத்தைக் கண்டு அவனின் கையைப்பிடித்து குலுக்கிய திவாகரின் கைகளை, இனி விட்டுவிடப் போவதில்லை என்பதுபோல நட்போடு பற்றிக்கொண்ட கிருஷ்ணாவின் கண்களில்,
அந்த இடத்தை விட்டு போக மனமில்லாமல் கண்களில்  கண்ணீரோடு,”நான் இங்கேயே இருக்கிறேன்… அக்காவை வெளியில கொண்டு வந்ததும் பாக்கணும்” என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்த சாருமதியின் அம்மா விழ
சட்டென்று மனம் மீண்டும் தொட்டாற் சிணுங்கியாய் வாடியது. ‘ஹையோ! என் தாயின் கண்களில் உயிர்ப்பை காண்பதற்காக இன்னொரு தாயின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறோமோ?’
அப்போது தான் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்திருந்த கிருஷ்ணாவின் மனது
மீண்டும் தடுமாறி நின்றது.
அவனின் மனது அஸ்வினுக்கு புரிந்ததோ என்னவோ?  அவனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கல்யாணியிடம்
வந்தவன்,
“ம்மா… வாங்க…  போய் ஏதாவது சூடா குடிச்சிட்டு வரலாம். அதுக்குள்ள சாருவையும் ஐசியூ க்கு கொண்டு வந்துடுவாங்க. நாமளும் வந்த உடனே பார்த்துடலாம்” என்று உரிமையோடு கை பிடித்து அழைத்து சென்றே விட்டான்.
அஸ்வினின் செயலை வியப்போடு பார்த்து நின்ற கிருஷ்ணாவுக்கு,’தன்னால் இவர்களுடன் இத்தனை இலகுவாக பழக முடியுமா?’ என்ற எண்ணம் தோன்ற
‘ஏன் முடியாது? முடியணும்…’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் கிருஷ்ணா.
************
அப்பாவும், மகனும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த  அறையில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்கள்.
தங்கள் கூடவே நின்றிருந்த சொந்தங்களும், நட்புகளும் விடைபெற்றிருக்க, அந்த ஐசியூ இருந்த ப்ளாக்கையே சுற்றி சுற்றி வந்தவர்களிடம்,
“உங்க ரூம்ல போய் இருங்க சார். நாங்க கூப்பிடும் போது இங்க வந்தாப் போதும்”என்று மருத்துவ ஊழியர்கள் சொல்லிவிடவே, வேறுவழியில்லாமல் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் இருக்கிறார்கள்.
பக்கத்து அறையில் கல்யாணி தன் இரு பெண்களுடன் இருக்கிறார். நல்லவேளையாக இப்போது கோடைவிடுறையாகிப் போனதால் பிள்ளைகளை எங்கே விடுவது? என்ற பிரச்சினை இல்லாமல் தன்னோடே வைத்து கொண்டார் கல்யாணி.
தாயையும், சகோதரிகளையும் இங்கே விட்டு விட்டு கிளம்ப மறுத்த ரகுவை அவனது பயிற்சி காலத்தை காரணம் காட்டி, சாருமதியின் தோழர்கள் கிளம்பச் சொல்ல,
“நாங்க இங்க எல்லோரையும் நல்லா பார்த்துக்குறோம். நீ கவலைப்படாமல் போய்ட்டு வா” என்று உறுதி கூறி அனுப்பி வைத்திருந்தார்கள் அப்பாவும் மகனும்.
ஆனாலும் தாயிடமும், சகோதரிகளிடமும் அத்தனை பத்திரம் சொல்லி,”எதுவும் பிரச்சினை என்றால் தன்னை கூப்பிட்டு விட வேண்டும்” என்று சொல்லியேச் சென்றிருந்தான் ரகு.
அவரவர், அவரவர் நினைப்பில் மூழ்கியிருக்க, கிருஷ்ணாவின் கண்களில் மருந்துவ உபகரணங்களுக்கு மத்தியில் தான் கண்ட தாயின் முகமும், சாருமதியின் முகமுமே மின்னி மின்னி மறைந்தன.
தன் தாயைக் கண்டபோது, ‘இனி அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை’ என்ற எண்ணம் மகிழ்ச்சியை உண்டாகிய அதே நேரம், 
பக்கத்து அறையில் கண்ட சாருமதியின் தோற்றம் ஏனோ இதயத்தை வாள் கொண்டு அறுத்தது. 
‘தன் அம்மாவாவது அவருடைய சிகிச்சைக்காக ரணப்பட்டு கிடக்கிறார். ஆனால் இந்த பெண் எதற்காக ரணப்படவேண்டும்?’
‘தந்தைக்காக மட்டுமே அவள் இதை செய்திருக்கிறாள் என்று அவனுக்கும் புரியத்தான் செய்கிறது. ஆனால் அன்று தன் அம்மாவிடம் வேறு சொன்னாளாமே!’ 
ஆமாம்… அறுவை சிகிச்சை க்கு முன்னரே சாருமதியும், வேதவல்லியும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்க, ஆப்ரேஷனுக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது கணவனிடம்,”எனக்கு சாருமதியை பாக்கணும்” என்றார் வேதவல்லி. 
“இரும்மா… டாக்டர் கிட்ட கேட்டுட்டு சாருமதியை வரச்சொல்லுறேன்”
“இல்லை… என்னை அவ ரூம்க்கு கூட்டிட்டு போங்க” 
 மனைவியின் வார்த்தைகளில், மருத்துவரின் அனுமதியோடு மனைவியை சாருமதியின் அறைக்கு கூட்டிச் சென்றார். 
தன்னை கண்டதும் லேசாக வியந்து போன சாருமதியின் அருகில் உட்கார்ந்த வேதவல்லி, அறையிலிருந்த மற்ற யாரையும் கருத்திற்கொள்ளாமல் அவள் கைகளிரண்டையும் பற்றியபடி,
“சாரு! உன் மனசு வருத்தப்படும்படி நான் எத்தனையோ செய்திருக்கேன். அது வேற யாருக்கும் தெரியலைன்னாலும், ஏன் உனக்கே கூட தெரியலைன்னாலும், எனக்குத் தெரியும்.”
“யாருக்கும் தெரியாமல் செய்த தப்பா இருந்தாலும் எல்லாருக்கும் தெரிஞ்சு மன்னிப்பு கேக்குறதுல எனக்கு
எந்த தயக்கமும் இல்லை.”
“ஹும்… உடம்புக்கு ஒரு நோவு வந்ததும் ஞானோதயம் வந்து, செய்த தப்பு எல்லாம் ஞாபகம் வருதான்னு கூட நீ நினைக்கலாம். ஏன்? அப்படி நினைக்க உனக்கு முழு ரைட்ஸும் இருக்கு” என்றவர் லேசாக இடைவெளி விட
“வேதா… என்ன ஆச்சு? ஏன் இப்படியெல்லாம் பேசுற?”  லேசாக பதறிய கணவரைப் பார்த்து 
“எல்லாம் உங்களுக்கு அப்புறம் சொல்லுறேங்க. இப்போ நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்” என்றபடியே சாருமதியைப் பார்த்து,
“ஆனால் உண்மையும் அது தானே. எனக்கு உடம்பு சரியில்லாமல் போகலைன்னா, நானெல்லாம் இப்படி வந்து உட்கார்ர ஆளா என்ன?” 
ஏதோ தன்னையே வெறுத்தார்போல பேசிக்கொண்டிருந்த வேதவல்லியை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த சாருமதிக்கு,
‘சர்ஜரியை பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தமாதிரியான மனநிலையில் அவர் இருப்பது நல்லதில்லை’ என்று ஒரு மருத்துவராக புரிய
“ம்மா… என்ன சொல்லுறீங்க நீங்க? நம்ம செயல்கள் எல்லாம் சிலநேரம் சந்தர்ப்பவசத்தால அமைஞ்சிடுது. அதுக்காக நாம நல்லவங்க இல்லைன்னு ஆகிடுமா?”
“அப்படிப் பார்த்தால் உங்களை விட நல்லவங்க இந்த உலகத்துல யாருமே கிடையாது தெரியுமா?. ஐயா கூட சேர்ந்து எவ்ளோ நல்லகாரியம் செய்றீங்க. சொல்லப்போனா என்னை படிக்க வைக்கிறதே நீங்க தானே!” 
“நான் எங்க உன்னை படிக்க வைக்கிறேன்? அதை உங்க ஐயா ல்ல பண்ணுறாரு!” 
“நல்லா யோசிச்சு பாருங்க… நீங்க ஒரு வார்த்தை என்னை படிக்க வைக்க கூடாதுன்னு ஐயா கிட்ட முரண்டு பண்ணுனா, ஐயாவால உங்களை மீறி என்னை படிக்க வச்சிருக்க முடியுமா?, இல்லை மத்த நல்லகாரியங்களைத் தான் செய்ய முடியுமா? சொல்லுங்க…” 
“ஆனால் நீங்க அப்படி செய்யலையே! இதிலிருந்தே தெரியலையா, நீங்க எவ்வளவு நல்லவங்கன்னு!”
“உண்மையாவா?”
“கண்டிப்பா… இதிலனென்ன சந்தேகம் உங்களுக்கு? அதனால மனசை போட்டு குழப்பிக்காமல் தைரியமா சர்ஜரிக்கு தயாராகுங்க. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று குழம்பிய மனநிலையில் வந்தவரை தெளிவாக்கி அனுப்பியிருந்தாள் சாருமதி.
அதை மகன் வந்தவுடன் சொல்லியவர்,”சாருமதி எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா குட்டா? இந்த அம்மாவுக்காகவாவது இனிமேல் அவகிட்ட வம்பு வளக்காதப்பா” என்று வேறு சொல்லியிருந்தார்.
அதை இப்போது நினைத்துப் பார்த்தவனுக்கு உடனேயே அவளை பார்க்க வேண்டும் போல தோன்ற,”ப்பா… நான் போய் அம்மாவையும், சாருமதியையும் பாத்துட்டு வரேன்”
என்றவாறு வந்தவன், அனுமதி வாங்கி உள்ளே வந்தான்.
நிர்மலமான முகத்தோடு தூங்கிக் கொண்டிருந்த தாயை முதலில் பார்த்தவன், சாருமதியின் அறைமுன்னே நின்று அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சோர்ந்து போன முகத்தில் அல்லி விழிகள் இரண்டும் மூடியிருக்க, வறண்டுபோன இதழ்கள் லேசாக திறந்திருக்க, தன்னை மறந்து மருந்துகளின் உதவியால் தூங்கிக் கொண்டிருந்த சாருமதி,
அலையாமல் குலையாமல் கிருஷ்ணாவின் கண்கள்வழியே நுழைந்து இருதயத்தில் ஜம்மென்று குடியேறிக் கொண்டாள்.
**********
“ச்ச்சை… சுத்த போர், இன்னும் எத்தனை நாள்தான் இப்படி இந்த ஹாஸ்பிடல் ரூம்லயே அடைஞ்சு கிடக்கணுமோ தெரியலை?”
“அடைஞ்சு தான் கிடக்குறோம்… ஒரு ஃபோனைப் பாத்தாவது நேரத்தை போக்கலாம்னா, அதுக்காகவது வழியுண்டா?”
“இதெல்லாம் ஒரு ஃபோனுன்னு பெரிசா இதை வாங்கி தந்துட்டு போய் படுத்துகிட்டா மகராசி!” என்று தன் கையிலிருந்த பட்டன் ஃபோனை தூக்கி கட்டிலில் வீசி எறிந்த காயத்ரி
“ஏய் கௌரி!  இப்போ உன் அக்காவுக்கு இதெல்லாம் தேவையா சொல்லு? என்னமோ இவ கிட்னி டொனேட் பண்ணுன உடனே அவங்க இவளுக்கு காசை அள்ளி கொட்டிற போற மாதிரி தான்”
 “எல்லாத்துலயும் முந்திரி கொட்டை தனம் தான் அவளுக்கு. எப்போ பார்த்தாலும் அவளை அடுத்தவங்க புகழ்ந்துகிட்டே இருக்கணும், அதுக்காக நம்ம உயிரையும் சேத்து வாங்குறா.”
“இந்த ஆப்ரேஷனாவது காலேஜ் ரீஓப்பன் ஆன பிறகு வந்து தொலைச்சிருக்கலாம். அப்படி இருந்திருந்தாலாவது நான் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து  ஜாலியா ஹாஸ்டல்ல இருந்திருப்பேன்”
கல்யாணி, சாருமதியை பார்ப்பதற்காக போயிருக்க, கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக மருத்துவமனையின் அறையில் அடைந்து கிடந்த எரிச்சலில் புலம்பிக் கொண்டிருந்த காயத்ரி.
“ஏய் கௌரி! இங்க ஹாஸ்பிடல் கேம்பஸ்குள்ள ஒரு சின்ன பார்க் இருக்கு. அங்க கொஞ்ச நேரம் போய்ட்டு வரலாம், நீ வர்றியா?”  என்று கேட்க  
“ம்ஹும்… நான் வரலை க்கா… எனக்கு படிக்குறதுக்கு இருக்கு. அதுவுமில்லாமல் அம்மா வேற ரூம்ல இல்லை. அம்மா கிட்ட சொல்லாமல் நீயும் எங்கயும் போகாத க்கா, ப்ளீஸ்…” கெஞ்சலாகச் சொன்ன கௌரி, இனி பன்னிரெண்டாம் வகுப்பு செல்ல இருக்கிறாள்.
“ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வர நாளாகும்” என்று சாருமதி ஏற்கனவே சொல்லியிருக்கவே, தன் சீனியர் மாணவியிடமிருந்து வாங்கிய பன்னிரெண்டாம் வகுப்பிற்கான புத்தகங்களை, கௌரி கையோடு கொண்டு வந்து விட்டாள்.
“நீ இந்த புத்தகத்தையே கட்டியழுதுட்டு, இந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்துடுவ. ஆனால் என்னால முடியாது தாயே… அம்மா வந்தவுடன் நீயே நான் பார்க்கு போயிருக்கேன்னு சொல்லிடு” 
கௌரி, மறுக்க மறுக்க விறுவிறுவென அறையை விட்டு வெளியே வந்தவள், பார்க்கில் தான் வந்து நின்றாள். 
அங்கிருந்த நடைபாதையில் நிதானமாக அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்து கொண்டிருந்தவளின் நடையை,
“ஒரு நிமிஷம்… நான் உங்களை எங்கயோப் பாத்திருக்கேன்… ஆனால் எங்கன்னு தான் சரியா ஞாபகத்துக்கு வரலை” யோசித்தவாறே தன் நெற்றியை தடவியபடி தன்முன்னால் வந்து நின்ற இளைஞனின் செயல் கட்டிப்போட, 
“நீங்க என்னை இங்க எங்கேயும் பாத்துருக்க முடியாது.
ஏன்னா எனக்கு திருநெல்வேலி” பட்டென்று பதில் சொன்னாள்.
“ஓஹ்… அதானே பாத்தேன்… நம்ம ஊரு பொண்ணா நீங்க! அதனால தான் எனக்கு பார்த்த மாதிரியே இருந்துருக்கு” என்றவன்,
“பை தி வே எனக்கும் திருநெல்வேலி தான் சொந்த ஊர்” என்க
“இல்ல… இல்ல… எனக்கு ப்ராப்பரா திருநெல்வேலி சொந்த ஊர் கிடையாது… அங்க மணிமுத்தாறு பக்கத்தில இருக்கிற கிராமம் தான் என்னோட ஊரு” 
“மணிமுத்தாறு பக்கத்துலன்னா… அங்க… சாருமதி…”  வார்த்தைகளில் கொக்கி போட்டு நிறுத்தினான்,
“ஹாங்… அது எங்க அக்கா தான்… அக்காவை உங்களுக்கு தெரியுமா?” 
“தெரியுமாவா? உங்க அக்கா நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திருநெல்வேலியில எங்க வீட்டுக்கு தான் வேலைக்கு வந்ததே” 
“ஆனால், எனக்கு அவ்வளவா பழக்கம் கிடையாது. நான் அப்போ சென்னையில் படிச்சிட்டு இருந்தேன். ஒரே ஒருதடவை இரண்டு நாள் லீவ்க்கு வீட்டுக்கு வரும்போது பாத்திருக்கேன். அவ்வளவு தான்” 
தான் எதிர்பார்த்த பதில் காயத்ரியிடமிருந்து வரவும் உற்சாகமான மனநிலையில் நின்று பேசிக் கொண்டிருப்பது ராஜாத்தி பாட்டியின் பேரன் சாட்ஷாத் அந்த ‘ராகேஷ்’ தான்…
தன் தந்தையின் இருதய ஆப்ரேஷனுக்காக தன் தாயோடு வந்திருந்தவனின் கண்களில் இன்று காயத்ரி விழ, அவன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை நடத்திச் சென்றிருந்த  சாருமதியின் அடையாளம் இவளில் தெரியவே, வந்து தானே பேச ஆரம்பித்து விட்டான். 
ஆனால் இந்த பைத்தியக்காரப் பெண்ணோ அவன் விரித்த வலையில் எளிதாகவே மாட்டிக்கொண்டது.
‘ஏய் சாருமதி! அன்னைக்கு நீ என்னவோ பெரிய இவளாட்டம் என்னை அடிச்சல்ல… அதுவும் எங்க வீட்டு கிழவி  முன்னாடி’
‘அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அந்த கிழவி என்னை புழுவைவிட கேவலமாக பாக்குது. இதுக்கெல்லாம் காரணமான உன்னை, உன் தங்கச்சியை வச்சே பழி வாங்குறேன் டி’ மனதுக்குள் உறுமிக்கொண்ட அந்த பெண் பித்தன்,
அதன் பின்வந்தநாட்களில் நெஞ்சுக்குள் வஞ்சத்தை வைத்துக் கொண்டு வார்த்தைகளில் தேன் தடவி பேச ஆரம்பித்தான்.
ஆனால் இது எதுவும் புரியாமல் வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணத்தில் அவன் சக்கரை பேச்சுகளில் மயங்கி நின்றது பெண்.
 
சாதாரண நட்பாக தொடங்கி அதை காதல் என்னும் அளவிற்கு நாலைந்து நாட்களிலேயே கொண்டு வந்து நிறுத்தியிருந்தான் அந்த ராகேஷ். 
அங்கிருந்த எல்லோருடைய மொத்த கவனமும் சாருமதி, வேதவல்லி மீதே குவிந்திருக்க, காயத்ரியின் நடவடிக்கைகளை கவனிக்க தவறிவிட்டனர் எல்லோரும்.
அன்று எப்போதும் போல தங்களின் வழக்கமான நேரத்திற்கு தன்னை சந்திக்க வந்த காயத்ரியிடம், “நாளை காலை டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிடுவோம்” என்ற தகவலை சொன்னவனிடம்
“அப்போ நாம இனி எப்படி தான் பாத்துக்குறது?” என்று கேட்க
“நீ காலேஜ்க்கு வர்றது திருநெல்வேலிக்கு ங்குறதை மறந்துட்டியா? என்னோட சொந்த ஊர், நான் வேலை பாக்குறது எல்லாமே அங்கதான…”
“அதனால, இனிமேல்தான் நாம அதிகமா சந்திக்க பிரகாசமான வாய்ப்புகள் இருக்கு பேபி” வில்லங்கமாக சிரித்தவனோடு இணைந்து சிரித்தவளின் பின்னாலிருந்து,
“இங்க என்ன பண்ணுற காயத்ரி?” என்ற அதட்டலான குரல் கேட்க, தூக்கிவாரிப்போட்டாற் போல திரும்பிப் பார்த்தாள். 
அங்கே யோசனையை முகத்தில் சுமந்து கொண்டு இவளின் பதிலுக்காக, இவளையே பார்த்தபடி நின்றிருந்தான் கிருஷ்ணா.
“ல்ல… இவங்களும் திருநெல்வேலி தானாம். நமக்கும் சொந்த ஊர் அது பக்கம் தான்னு தெரிஞ்ச உடனே, சும்மா பேசிட்டு இருந்தாங்க…” 
திக்கித் திணறி சொன்னவளின் பதிலை ஒரு நம்பாத தன்மையோடு பார்த்தவன், அந்த ராகேஷை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தபடியே,
“வா… ரூம்க்கு போகலாம்” என்று அழைக்க, மறுபேச்சு இல்லாமல் தன்னோடு வந்தவளிடம்,
“இவன் என்னவோ எனக்கு சரியான ஆளாத்தெரியலை காயத்ரி… இதுக்கு மேல இந்தாளு கூட பேச்சு எதுவும் வச்சிக்காத”
சொன்னவனின் குரலில், மனதில் புதிதாக முளைத்திருந்த உறவின் காரணமாக வந்திருந்த அக்கறை கலந்திருந்தது…
  

Advertisement