Advertisement

தனஞ்செயனின் பெற்றோரும் பண்ணையார் மகனின் நட்பு தங்கள் மகனுக்கு கிடைத்திருப்பது பெரிய பாக்யம் என்ற மனநிலையில் இருக்க அவர்கள் இருவரின் நட்பில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூரிலே முடித்திருக்க, ஆறாம் வகுப்பிற்கு வெளியூருக்கு தான் செல்ல வேண்டும் என்றதும் இதோ இன்று இந்த பிள்ளைகள் கூறியது  போல மகனை “ஊட்டி கான்வென்டுக்கு அனுப்பலாமா? இல்லை கொடைக்கானலுக்கு அனுப்பலாமா?” என்று மனைவியிடம் கேட்டார் பண்ணையார் மூர்த்தி.
ஆனால் இம்முறை மகனே தாயைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது. ஆதலால் இங்கே மணிமுத்தாறிலேயே படிக்கிறேன் என்று சொல்லி விட்டான். 
இது தான் கிருஷ்ணா திருமுருகன் மேல்நிலைப் பள்ளியில் மாணவனான கதை. 
ஐந்தாம் வகுப்பு வரை படித்தது அவர்கள் பள்ளியில். அதனால் அவனை அங்கு பயிலும் மாணவர்கள் முதல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் வரை ஒருமாணவனாகப் பார்க்காமல் சின்னபண்ணையாகவே பார்த்தனர். எனவே அவன் தான் அங்கு ராஜா அவனே அங்கு மந்திரி.
ஆனால் இந்த புதுபள்ளியில் அப்படி எல்லாம் இல்லை என்று சிறிது நாளிலேயே புரிந்து கொண்டான் சூட்டிகையான கிருஷ்ணா.
தான் யாரிடமும் எதற்காகவும் தலைகுனிந்து நிற்கக் கூடாது என்ற எண்ணத்தில் முயன்று படித்து எப்போதுமே வகுப்பில் முதலிடத்தை தன்னிடமே தக்கவைத்துக் கொண்டான். அதற்கு இயல்பிலேயே  அவனுக்கு இருந்த புத்திசாலித்தனம் நிரம்பவே உதவி செய்தது.
எல்லாம் எட்டாம் வகுப்பு வரைக்கும் தான். ஒன்பதாவது வகுப்பில் மாணவர்களை செக்ஷன் பிரித்து அனுப்பும் போது சாருமதி அவன் வகுப்பில் வர அன்றிலிருந்து இன்றுவரை பலநேரங்களில் அவனிடமிருந்து முதலிடத்தை தட்டிப்பறித்து அவன் வெறுப்பை மூட்டை மூட்டையாக சம்பாதித்து வைத்திருக்கிறாள் சாருமதி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருவருமே முதல் மதிப்பெண் எடுத்து சமமாக நின்றார்கள்.
 இந்த வருடம் எப்படியாவது தான் முதல் மதிப்பெண் எடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் அவனிருக்க  அரையாண்டு தேர்விலேயே அவன் நம்பிக்கையை குலைக்கும் விதமாக சாருமதி ஜெயித்து
தனது வெற்றிக்கொடியை ஓங்கி பறக்க விட்டதை அவனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அதுவும் தன்னைவிட ஒருவயது சிறியபெண்ணான அந்த சாருமதி தன்னை அடிக்கடி இரண்டாம் இடத்துக்கு தள்ளுவதை அவனுக்குள் இருந்த அகங்காரன் ஏற்றுக்கொள்ள மறுத்து அவனுள் ஒரு ருத்ரதாண்டவமே ஆடுகிறான்.
அத்தனையையும் மறைத்து தேர்ந்த நடிகனைப்போல வகுப்பறையில் அவன் உட்கார்ந்திருந்த நேரம் கைகளில் அட்டைப்பெட்டிகளோடு பள்ளியின் அட்டெண்டர் இருவர் ஆசிரியரின் அனுமதியோடு வகுப்பறைக்குள் வந்தனர்.
 வந்தவர்கள் எல்லோருக்கும் தனித்தனியாக கவரில் பொதியப்பட்டிருந்த ப்ளம் கேக்கை ஆளுக்கொன்றாக விநியோகம் செய்யத் தொடங்கினர்.
காரணம் கேட்ட ஆசிரியரிடம்,”இன்னைக்கு நம்ம கிருஷ்ணா தம்பிக்கு பிறந்தநாளு, அதான் ஸ்கூல் முழுக்க குடுக்கச்சொல்லி தம்பியோட வீட்டுல இருந்து வந்துருக்கு” என்றவர்கள்,
“நீங்க ஸ்கூலுக்கு புதுசுல்ல டீச்சர், அதான் உங்களுக்கு இந்த விஷயம் தெரியலை. வருஷா வருஷம் இப்படித் தான் செய்வாங்க” என்று சொன்னபடியே தங்கள் வேலையைத் தொடர 
மாணவர்கள் பக்கம் இருந்து இப்போது ஆரவாரம் எழும்பியது. மாணவிகளோ இப்போது தான் அவனைச்  சீண்டி முடித்தோம், அதற்கிடையில் எப்படி அவன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கொடுக்கப்படும் கேக்கை வாங்குவது என்ற தயக்கத்தோடு வேறுவழியில்லாமல் வாங்கினர். 
இதையெல்லாம் கண்டும் காணாததும் போல பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணாவின் இதழ்களில் ஒரு அலட்சிய புன்னகை வழிந்தது.
கேக் கொடுக்கும் நபர் இப்போது சாருமதி, தேன் மொழியிடம் நீட்ட,”இல்ல… இந்த கேக் கசக்கும், எங்களுக்கு பிடிக்காது…வேண்டாம்” என்று லேசாக முகத்தை சுழித்தபடியே இருவருக்கும் சேர்த்து தானே பதில் சொன்னாள் தேன்மொழி.
அவர்கள் இருவரையும் குறிப்பாக பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவின் மனது,”என்னவோ இவ அம்பானி மக மாதிரியும், அவ விஜய்மல்லைய்யா மக மாதிரியும், தினமும் பாலுலயும் தேனுலயும் முங்கி எழுந்த மாதிரியும் என்ன ஒரு பில்டப்பு” என்று எள்ளிநகையாடியது. 
எல்லோருக்கும் கேக் குடுத்து முடிக்கப் பட்டிருக்கவும்,”காலைல வந்த உடனே உனக்கு பிறந்த நாளுங்குறதை சொல்லியிருந்தா அப்பவே விஷ் பண்ணியிருப்போம்ல  கிருஷ்ணா” என்று ஆசிரியர் கேட்க
‘இந்த கிருஷ்ணா தன்னோட சரித்திரத்திலயே எதையும் கேட்டு வாங்குனாங்குற பேச்சுக்கே இடங்கிடையாது’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், பதிலேதும் சொல்லாமல் லேசாக சிரித்தபடி இருந்தான்.
ஆசிரியை அனைவரையும் எழுந்து நின்று அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடச்சொல்ல அவன் செயல்கள் பிடிக்காத  உள்ளங்களும் கூட “கிருஷ்ணா! நீ நீடுழி வாழ வேண்டும்” என்று பாடல் மூலம் உண்மையாக வாழ்த்தின.
**********
மதிய இடைவேளையில் கிருஷ்ணாவும், தனாவும் பேசியபடியே பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது எதிர்ப்பட்ட சிறியவர்கள்,”பிறந்த நாள் வாழ்த்துகள் ண்ணா…” என்று கிருஷ்ணாவிடம் ஆவலோடு சொல்ல ஒரு புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டே கடந்தான் அவர்களை.
மைதானத்தின் ஓரத்தில் ஒரு பெரிய குல்மோஹர் மரத்தின் அருகில் செல்லும் போது மரத்தின் பின்னிருந்து
ஒரு அழகிய வளைகரம் கிருஷ்ணாவை நோக்கி நீண்டது.
அந்த கைகளில் ஒரு வாழ்த்து அட்டையோடு ஒரு பெரிய சாக்லேட் பாரும் இருந்தது.’என்னடா இது?’ என்று கிருஷ்ணா பார்க்க அந்த வளைகரத்துக்குச் சொந்தக்காரி,”மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே கிருஷ்” என்ற வாழ்த்தோடு அதை அவனிடம் நீட்டினாள்.
அது வேறு யாரும் இல்லை. இந்த வருடம் புதிதாக இந்த பள்ளிக்கு மாறுதலாகி வந்திருக்கும் இயற்பியல் ஆசிரியையின் மகள் மிருதுளா தான்.
சமீபகாலமாக  இந்த பெண் தங்கள் வகுப்பறையை கடந்து வராண்டாவில் நடந்து செல்லும் போதெல்லாம் தன் வகுப்பில் உள்ள மாணவர்கள் “கிருஷ்ணா…” என்று தன் பெயரை சொல்லி கத்துவதையும் அதற்கு அவள் வெட்கப்பட்டுக் கொண்டே ஓடுவதையும் கிருஷ்ணாவும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்
வேறோன்றுமில்லை… இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் இவ்வளவு நாளும் நகரத்து பள்ளிகளில் அதுவும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் படித்த மிருதுளாவிற்கு இங்கே ஒரு இராஜகுமாரனைப் போல கெத்தாக அலையும் கிருஷ்ணாவிடம் ஒரு ஈர்ப்பு. 
அதனால் தன் வகுப்பில் படிக்கும் அவன் ஊரைச் சேர்ந்த மாணவிகளிடம் அவனைப் பற்றி விசாரிக்க அவர்களோ அவனைப் பற்றி கதைகதையாகச் சொன்னார்கள்.
அத்தனையையும் கேட்டவளுக்கு அவன்மீது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. இதனால் அவன் செல்லுமிடமெல்லாம் தன் வண்டுவிழிகளால் அவனை வட்டமிடத்தொடங்கினாள். 
அதுவும் வருடந்தோறும் கிருஷ்ணாவின் பிறந்தநாளன்று
ஊர் முழுவதற்கும் இரவு பண்ணையார் வீட்டிலே அறுசுவை விருந்து என்பதால் அவன் பிறந்தநாள் முதற்கொண்டு ஞாபகம் வைத்து அந்த பெண்கள் சொல்ல, தன் ஊருக்கு சென்றவள் முன்னேற்பாடாக வாழ்த்து அட்டையோடு வந்துவிட்டாள். 
கிராமத்து மாணவிகள் போலல்லாது பளிச்சென்ற நாகரீக தோற்றத்தோடு தன் முன்னே வந்து நின்று தைரியமாக வாழ்த்து சொல்லியவளைக் கண்டு முதலில்,’இது என்ன பழக்கம்?’ என்று தோன்றினாலும் ஆங்காங்கே நின்ற மாணவர்களின் கண்கள் தங்களையே மொய்ப்பதைப் கண்டவன் மெல்லிய சிரிப்போடு கைநீட்டி அதை வாங்கிக்
கொண்டு அங்கிருந்து நகர
“கிருஷ்…” என்ற மிருதுளாவின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. நின்றவன் லேசாகத் திரும்பிப் பார்க்க,”உங்க பிறந்தநாளைக்கு நீங்க எனக்கு சாக்லேட் ஏதும் தரலையே?”  மிழற்றினாள் அந்த மிருதுளா.
தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து விலையுயர்ந்த சாக்லேட் பார் ஒன்றை எடுத்து நீட்டியவன் நகர்ந்துவிட ஏதோ கிடைப்பதற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போன்ற பாவனையில் அவனையே திரும்பித் திரும்பி பார்த்தபடி தனது வகுப்பறையை நோக்கி சென்றது அந்த பெண்.
சிறிது தூரம் சென்றதும் கிருஷ்ணா தன் கையிலிருந்த மிருதுளா தந்த சாக்லேட்டை தனாவிடம் கொடுத்து,”வீட்ல தங்கச்சிங்க கிட்ட கொண்டு குடு” என்று சொல்லியபடியே வாழ்த்து அட்டையைத் திறந்து பார்க்க
இரண்டு இணைந்த இதயங்களின் பிண்ணனியில் ஒரு பிறந்த நாள் கேக் ஒற்றை மெழுகுவர்த்தி எரிய ஹேப்பி பர்த்டே என்ற கலர்கலரான எழுத்துக்களோடு அவனை பார்த்து சிரித்தது.
******************
சாயங்காலம் பள்ளி முடிந்ததைக் குறிக்கும் மணி அடிக்கவும் குடுகுடுவென்று ஓடிச்சென்று பெண்கள் வரிசையில் நிற்கும் தங்கள் சைக்கிளை தான் பார்த்தார்கள் சாருமதியும் தேன்மொழியும்.
அது அதிசயமாக அவர்கள் காலையில் எப்படி விட்டு சென்றார்களோ அப்படியே நின்றதைக் காணவும்,”ஹேய்! சாரு… இன்னைக்கு சைக்கிள் டயர்ல காத்தை பிடிங்கி விட மறந்துட்டானா அந்த தொர?” என்று கேட்டு தேன்மொழி சிரிக்க
“பிறந்த நாள் குஷியில மறந்துருப்பானா இருக்கும்”  தன்னுடைய சைக்கிளை தள்ளியபடியேச் சொன்னாள் சாருமதி…
இப்படி கிருஷ்ணாவை விட சாருமதி அதிகமான மதிப்பெண்கள் எடுக்கும் அன்று சாருமதியின் சைக்கிள் டயரின் காற்று பிடுங்கி விடப்பட்டிருக்கும்.
அது யார் செய்த வேலை என்பதை கண்டுபிடிப்பது பெரிய
கம்பசூத்திரமா என்ன?
ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்வதால் கொஞ்சம் நெரிசல் அதிகமாக இருக்கவே தங்களுக்குள் வளவளத்தபடியே ஓரிடத்தில் சைக்கிளோடு நின்று கொண்டார்கள் தோழிகள் இருவரும்.
தேன்மொழியோடு பேசிக்கொண்டே  தன் தம்பியும் தங்கையும் எங்காவது தட்டுப்படுகிறார்களா என்று சுற்றும்முற்றும் சாருமதி பார்க்க,”அக்கா…” என்று அழைத்தபடியே ஓடிவந்தான் சாருமதியின் தம்பி ரகுராம்.  இங்கேயே தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான்.
வந்தவன்,”க்கா… எனக்கு இன்னைக்கு பாஸ்கட்பால் பிராக்டீஸ் இருக்கு. வீட்டுக்கு  லேட்டாத் தான் வருவேன்” என்ற தகவலைச் சொல்ல
“காயத்ரி எங்கடா காணோம்? போய்ட்டாளா? நீ பாத்தியா?” என்று அங்கேயே ஏழாம் வகுப்பில் பயிலும் தங்கள் தங்கையைப் பற்றி  தம்பியிடம் கேட்டாள் சாருமதி.
“அதெல்லாம் ஸ்கூல் பெல் அடிக்கவும் வெளியே போயாச்சு. இன்னைக்கு என்னவோ அம்மையார் ரொம்ப கோபத்துல போன மாதிரி தான் எனக்கு தோணுது. காயத்ரி புயல் இன்னைக்கு வீட்ல என்ன பண்ணக் காத்திருக்கோ தெரியலை!”  என்று சிரித்தவன்,
 
“நீங்க ரெண்டு பேரும் பாத்து போங்கக்கா” என்று சொல்லியபடியே வந்த வழியே திரும்பி ஓடிவிட்டான்.
 இப்போது கூட்டம் கொஞ்சம் குறைந்திருக்க சைக்கிளைத் தள்ளியபடியே வெளியே வந்தார்கள் பெண்கள் இருவரும்.
அவர்களுக்கு அடுத்தாற்போல் வெளியேறிக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம்,”அது எப்படி டா அந்த சாருமதி உன்னை ஜெயிச்சுட்டே இருக்குறா?” அவன் மனதை அரித்துக் கொண்டிருந்த நீண்ட நாள் கேள்வியை யதேச்சையாக தனா கேட்க
தன் பெயரைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த சாருமதியைக் கண்டுகொண்ட கிருஷ்ணா,”அது… எங்க வீட்டு மிச்ச சோறு சாப்பிடுதுல்ல…அப்போ அறிவு கொஞ்சம் அதிகமாக தானே இருக்கும்” என்று அவளுக்கு கேட்க வேண்டுமென்றே சத்தமாகச் சொன்னான். 
அவன் எண்ணியது நடந்து விட்டது என்று அவள் முகமாறுதலே இவனுக்கு கூற முகத்தில் ஒரு கோணல் சிரிப்பு உதயமாயிற்று கிருஷ்ணாவுக்கு…

Advertisement