Advertisement

சாருமதி.
அத்தியாயம் 01.
“குட்மார்னிங் டீச்சர்…” என்ற கோரஸான மாணவ மாணவிகளின் குரலுக்கு
“குட்மார்னிங்…சிட்டவுண்”
என்று சொல்லியவாறே தன் கையிலிருந்த  விடைத்தாள் கட்டை மேஜை மீது வைத்தார் அந்த இயற்பியல் ஆசிரியை..
“எப்படி… எல்லாரும் லீவ்ல கொஞ்சமாவது படிச்சீங்ளா? இல்ல பரீட்சை முடிஞ்ச அன்னைக்கு வீட்ல கொண்டு போய் வச்ச பையை நேற்று தான் தூக்கிகிட்டு ஸ்கூலுக்கு வந்தீங்களா?” என்று கேட்டவாறே வருகைப் பதிவு நோட்டை எடுத்து அன்றைய மாணவர்களின் வருகையைக் குறிக்க ஆரம்பித்தார்.
அது திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள திருமுருகன் மேல்நிலை பள்ளியின் மேத்ஸ் பயோ பிரிவில்  பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறை.
நேற்று அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறந்திருந்தது. இவர் களியக்காவிளையைச் சேர்ந்த ஆசிரியர். இந்த வருடம் தான் புதிதாக இங்கு மாற்றலாகி வந்திருக்கிறார்.
அங்கிருந்து இங்கு தினமும் வந்து போவது சாத்தியமில்லாத காரணத்தால் இங்கே பள்ளிக்கு பக்கத்தில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருக்கிறார். கூடவே ஒரு மகளும் உண்டு. மிருதுளா என்று பெயர்.
அவளும் இங்கே தான் இதேப் பிரிவில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கிறாள். தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்றைய தினம் வரமுடியாத ஆசிரியை இன்று வந்திருக்கவே மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார்.
ஆசிரியையின் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்ல கலகலப்பான வகுப்பறை இப்போது ஆசிரியை விடைத்தாள் கட்டை கையிலெடுக்கவும் ஊசி விழுந்தால் கூட உலக்கை விழும் சத்தம் கேட்பது போல நிசப்தமாகியது.
“தேன்மொழி…175”
“வெண்ணிலா… 160”
“கீதா…140”
“சாருமதி…192” என்று நிதானமாக ஒவ்வொரு மாணவிகளின் பெயராக வாசித்து கூடவே அவர்களின் மதிப்பெண்களையும் சொல்லி பேப்பரை கொடுத்து முடித்தவர். இப்போது  
“ராஜு…145”
“செல்வன்…132”
“விக்னேஷ்… 106”
 “கிருஷ்ணா…187” என்று சொல்லத் தான் தாமதம் வகுப்பறையில் இருந்த மாணவிகளின் பக்கத்திலிருந்து ஓ… என்ற சத்தத்தோடு பலத்த கரகோஷம் எழுந்தது.
“கீப் சைலண்ட்” என்று தன் கைகளால் மேஜையை தட்டிய ஆசிரியர்,”இப்போ எதுக்கு கிருஷ்ணாவுக்கு இந்த கைதட்டல்? ஃபர்ஸ்ட் மார்க் க்கு ன்னா நீங்க சாருமதிக்குல்ல கைதட்டியிருக்கணும்” என்று குழப்பத்தோடு கேட்க
“நாங்களும் சாருமதிக்கு தான் டீச்சர் கைதட்டுனோம்” என்று  கோரஸ் பாடினர் மாணவியர்
“ப்ச்ச்… யாராவது ஒருத்தர் குழப்பாமச் சொல்லுங்க”  என்று ஆசிரியை கேட்கவும் சாருமதி தடுக்கத் தடுக்க அவள் பக்கத்தில் இருந்த அவளின் உயிர்த்தோழி தேன்மொழி எழுந்து நின்று
“நேற்றே உங்க சப்ஜெக்ட் தவிர எல்லா பேப்பர்ஸ்ஸும் குடுத்துட்டாங்க டீச்சர். கிருஷ்ணாவுக்கும், சாருவுக்கும் ஒரே டோட்டல். இன்னைக்கு சப்ஜெக்ட் ல யாருக்கு ஃபர்ஸ்ட் மார்க் வருதோ அவங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் ராங்க்…இப்போ நாங்க கைதட்டுனது சாருமதி ஃபர்ஸ்ட் ராங்க் வாங்குனதுக்காக” என்று சொல்ல மறுபடியும் ஒருகைதட்டல் அலை எழுந்து அடங்கியது மாணவிகளிடமிருந்து.
“ஓ…அப்படியா?” என்ற ஆசிரியர் “இப்ப வாங்குனா மட்டும் போதாது ம்மா, பப்ளிக் எக்ஸாம்லயும் வாங்கணும்” என்று சொல்ல, ஒரு சின்ன புன்னகையோடு அதை ஆமோதித்தாள் சாருமதி.
ஆனால் விடைத்தாளை ஆசிரியரிடமிருந்து வாங்கிச் சென்ற கிருஷ்ணாவோ வகுப்பறையில் இருந்த ஒட்டுமொத்த மாணவிகளையும் பார்த்து ஒரு முறை முறைத்தவன்  தேன்மொழியையும் சாருமதியையும் பார்வையாலே பஸ்பமாக்கி விடுவது போல பார்த்துக் கொண்டே செல்ல 
“கொக்கென நினைத்தாயோ கொங்கணவா…” என்று வாய்க்குள் முணுமுணுத்தாள் தேன்மொழி. அவள் முணுமுணுத்தது சாருமதிக்கு தெளிவாக கேட்க, தனது வலது கையால் வாயை மறைத்தபடி”ஏய்! ஏழரையைக் கூட்டாதடி” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
“என்னவோ இவன், சமஸ்தானத்து அடிமைகளை மாதிரி நம்மளை பார்ப்பான். அதை பார்த்துட்டு கையை கட்டி வாயப்பொத்தி நிக்கணுமா நாம? முறுக்கிக் கொண்டாள் தேன்மொழி.
இறுகிப்போன முகத்தோடு தன் அருகே வந்தமர்ந்த நண்பனை காண சகிக்காதவனாய் கிருஷ்ணாவின் தோழன் தனஞ்செயன் நண்பனின் விடைத்தாளை வாங்கி  கடகடவென்று புரட்டிப் பார்த்து சில விடைகளை சுட்டிக்காட்டி,”மாப்ள! இந்த ஆன்சர்ஸ்க்கு எல்லாம் டீச்சர் கிட்டபோய் மார்க் கூடுதல் போடச் சொல்லு அப்போ இரண்டு பேரோட டோட்டலும் சமமாக சான்ஸ் இருக்கு”  என்று ஐடியா  சொல்ல
“இந்த அஞ்சு மார்க்குக்காக நான் இந்த டீச்சர் கிட்டப் போய் பிச்சையெடுப்பேன்னு நினைச்சுக்கிட்டியா தனா? ம்ம்ம்.. சின்ன வயசுல இருந்தே எங்கூட இருந்தும் கூட உனக்கு இன்னும் என்னைத்பத்திச் சரியாத் தெரியலையே?” என்று கொஞ்சம் திமிராக பதில் வந்தது கிருஷ்ணாவிடமிருந்து.
மணிமுத்தாறிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளடங்கி இருக்கும் பாப்பன்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் பண்ணையார் ராமமூர்த்தி, வேதவல்லி தம்பதியரின் தவப்புதல்வன் தான் இந்த கிருஷ்ணா.
ஆமாம்… தவப்புதல்வன் தான். திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் கழித்து பண்ணையார் தம்பதிகளுக்கு அவர்கள் செய்த தர்மத்தின் பலனாகவோ இல்லை தவத்தின் பலனாகவோ வந்து பிறந்தவனைப் போல பிறந்தவன் தான் இந்த கிருஷ்ணா.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பண்ணையாருக்கு குழந்தை பிறந்திருக்கிறது அதுவும் ஆண்குழந்தை என்னும் சந்தோசத்தில் கிராமத்தில் உள்ளவர்கள் எல்லோரும் கிருஷ்ணாவை பெயர் சொல்லி அழைப்பதை விடுத்து ‘சின்னப்பண்ணை’ என்றே அழைக்க, அந்த வார்த்தை சிறுவனான கிருஷ்ணா மனதில் ஆழப்பதிந்து போனது.
அதுவும் வயதில் பெரியவர்கள் கூட  சிறுவனான தன்னை மரியாதையாக அழைக்க ஏதோ தன்னை ஒரு சாம்ராஜ்யத்தின் இளவரசனாகவே கருதத் தொடங்கினான் கிருஷ்ணா.
விளைவு, தான் பெரியவன் தனக்கு கீழ் தான் அனைவரும் என்ற எண்ணம் கல்லில் பொறித்த எழுத்தாக அவன் மனதில் பதிந்து போனது. 
பண்ணையார் மூர்த்தியின் சொத்துக்களும் ஒரு சாம்ராஜ்யத்திற்கு குறைவில்லாததாகவே இருந்தது. அவருக்கே அவருடைய சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியுமோ என்னவோ? கண்ணுக்குத் தெரிந்ததை வைத்து பண்ணையம் செய்து வருகிறார் மனிதர். 
விவசாய நிலம், தோப்பு துரவு தவிர திருநெல்வேலியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள வணிகவளாகத்தின்  மதிப்பு கோடிகளையும் அதிலிருந்து வரும் வாடகை லட்சங்களையும் தாண்டும்.
சமீபத்தில் கூட திருநெல்வேலியில் ஒரு ஹோட்டலும், கல்யாணமண்டபமும்  கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார் பண்ணையார்.
கரைகடந்த சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும்
தந்தை பணிவின் பிறப்பிடமாகத் திகழ தனயனிடமோ அதிகப்படியான அலட்சியம் மெதுமெதுவாக வேரூன்றி விட்டது. அது, ‘தான்’ என்னும் அகங்காரத்தை அவன்   கூடவே தாராளமாக வளர்த்து விட்டிருந்தது.
தன் உடன் பயிலும் மாணவர்களிடம் கூட ஒரு கண்ணுக்குத் தெரியாத இடைவெளியோடு தான் பழகுவான் கிருஷ்ணா. இந்த விஷயத்தில் தனஞ்செயன் மட்டும் விதிவிலக்கு.
 கிருஷ்ணா மூலம் தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் அதிகமென்பதால் அவனுடைய இந்த குணத்தை பெரும்பாலான‌ அவன் வகுப்பு மாணவர்களும் கண்டுகொள்வதில்லை.
மாணவர்களிடமே இப்படி என்றால் மாணவிகளிடம் கேட்கவே வேண்டாம்…ஏதோ வேற்று கிரகவாசிகளை பார்ப்பது போலவே அவர்களை ஒரு பார்வை பார்த்துவைப்பான் கிருஷ்ணா.
“ஏன்டி… இவன் நம்ம ஸ்கூல்ல அதுவும் நம்ம கிளாஸ்ல வந்து உயிரைவாங்குறான். தொரைக்கு இருக்கிற காசுக்கு ஊட்டிலயோ கொடைக்கானல்லயோ ஏதாவது கான்வென்ட்லப் போய் சேந்திருந்தா நாமளாவது கொஞ்சம் நிம்மதியா ஸ்கூலுக்கு வந்திருப்போம்ல” என்று அவன் வகுப்பு மாணவிகளிடையே அங்கலாய்ப்பை  உண்டாக்கும் வகையிலிருக்கும் கிருஷ்ணாவின்  செயல்கள்.
அதனால் தான், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவனுக்கு வெறுப்பை ஏற்றிவிட்டு அவன் கொதிப்பதில் கொஞ்சம் குளிர்காய்ந்து கொள்வார்கள்.
கிருஷ்ணாவின் செயல்கள் பிடிக்காமல் ஏதாவது கலாட்டா செய்து வெறுப்பேற்றுவது அவனது வகுப்பு மாணவிகள் மட்டும் தான். மற்றபடி பள்ளிக்கே அவன்தான் சூப்பர் ஹீரோ.
அவன் நின்றால், நடந்தால், பேசினால், சிரித்தால் என்று அவனின் அத்தனை நடவடிக்கைகளையும் ரசிக்கவென்று பள்ளியில் ஒரு பெரிய ரசிகர்பட்டாளமே உண்டு. அது பெண் பிள்ளைகள் மட்டும் தான் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. 
உண்மையிலேயே அவனுக்கு மூன்று வயது நிறைவடையவும் “திருநெல்வேலியிலோ இல்லை அம்பாசமுத்திரத்திலோ கிண்டர்கார்டன் வகுப்பில் சேர்ப்போமா?” என்று தன்மனைவி வேதவல்லியிடம் பண்ணையார் மூர்த்தி கேட்கத்தான் செய்தார்.
ஆனால் ஏழுவருடங்களுக்குப் பிறகு பிறந்த மகனை மூன்று வயதிலேயே கல்விக்காக என்றாலும் பிரிய மனமில்லாத வேதவல்லி
“ஒழுங்கா தம்ளர் பிடிச்சு தண்ணி கூட குடிக்கத்தெரியலை, இதுல இந்த பச்சபிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பி என்னங்க செய்யபோறோம்?” என்று பதில் கேள்வி கேட்டு மகனை தன் இடுப்பிலிருந்து இறக்க மறுத்து விட்டார்.
அடுத்த வருடம் மனைவியிடம் கேட்கும் போது,” உள்ளூரில் இருக்கும் நமக்கு சொந்தமான தொடக்கப்பள்ளியில் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளலாம்” என்று விட  அந்த வருடமும் கிருஷ்ணா பள்ளிக்குச் செல்லவில்லை.
ஐந்து வயது முடிய ஆறாவது வயது தொடக்கத்தில் தங்களது பள்ளியில்  ஒன்றாம் வகுப்பில் சேர்த்து வகுப்பிலே விட்டு விட்டு வந்தால் வீட்டில் மகனின்றி வேதவல்லியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
மகன் பிறந்த இத்தனை வருடங்களில் முதன்முதலாக மகனின்றி தனியே இருக்கிறார் அந்தத் தாய். அங்கு பள்ளியில் விட்டு விட்டு வந்திருந்த மகனின் நிலைமையும் அதுதான்.
தாயின் கைகளில் ஆனந்தமாக இருந்த பிள்ளை சுற்றிமுற்றி பார்த்தும் தாயில்லாது போகவே அவளிடம் சென்று விடவேண்டும் என்ற உந்துதலில் எப்படியோ பள்ளியை விட்டு வெளியே வந்து விட்டான்.
வெளியே வந்தவனுக்கு முன்னேபின்னே ஊரின் தெருவில் ஓடியாடி விளையாடியோ இல்லை வீட்டை விட்டு தனியே வெளியே வந்திருந்தாலோ தானே வீட்டுக்கு செல்லும் வழிதெரியும்.
திக்குதெரியாமல் தனியே முழித்து நின்றவனைப் பார்த்த,  ஒரு மனிதர் அவனை அழைத்து வந்து வீட்டில் ஒப்படைத்து விட்டுப் போனார்.
அவ்வளவு தான்… அன்று பள்ளியின் ஆசிரியர்களுக்கு தீபாவளி கொண்டாடி விட்டுத் தான் ஓய்ந்தார் வேதவல்லி.
கூடவே இவர்களை நம்பி என் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்ற அடமும் சேர்ந்து கொண்டது அவரிடம்.
அவரை நல்லவார்த்தைகள் சொல்லி மலையிறக்கி ஒருவழியாக அடுத்த வாரத்திலிருந்து மகனை பள்ளிக்கு அனுப்பிவைத்தார் பண்ணையார். 
ஆனால் தாயைப் பிரிந்து பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்த கிருஷ்ணா ஒரு நாலைந்து நாளிலேயே காய்ச்சலில் விழ மறுபடியும் மகனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு இறக்கிவிட மறுத்தார் வேதவல்லி. 
வள்ளுவனின் வாசுகியாய் கணவனின் அடியொற்றி வாழும் வேதவல்லியிடம், தன் பிள்ளை என்று வந்துவிட்டால் மட்டும் கணவனின் வார்த்தைகள் காற்றில் கலந்த கற்பூரமாக மாறிப்போகும்.
கணவனின் எந்த வார்த்தைகளிலும்   வேதவல்லி சமாதானமாக மறுக்க அந்த வருடமும் பள்ளிக்குச் செல்லவில்லை கிருஷ்ணா.
விட்டுத்தான் பிடிக்கவேண்டும் என்று முடிவுசெய்து கொண்ட பண்ணையார் தன் மனைவி கொஞ்சம் சமாதானம் ஆனபிறகு ஒருநாள்,”இப்படி பொத்திப்பொத்தி வளர்த்து நம்ம பிள்ளைக்கு நல்லது செய்யுறோம்னு நீ நினைக்கிற வேதா… ஆனால் அது அப்படி இல்ல” என்று சொல்லி இப்படி பிள்ளைகளை வளர்ப்பதால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச் சொல்லி முதலில் மகனைப் பள்ளிக்கு அனுப்ப மனைவியை மனதளவில் தயார்படுத்தினார்.
பின்னர் வேதவல்லி தன் மகனைப் பள்ளிக்குச் செல்ல மனதளவில் தயாராக்கினார். இப்படி ஆரம்பித்தது தான் கிருஷ்ணாவின் பள்ளிப்பயணம்.
அதுவும் கிருஷ்ணா பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் அவர்கள் வீட்டு கணக்கப்பிள்ளைக்கு வேலையே பள்ளிகூட வாசலில் தான் என்றானது. 
நாளடைவில் கிருஷ்ணா தனியே வீட்டுக்கு வந்து, செல்ல என்றான பின்னே தான் மனிதர் பள்ளி வாசலில் காவல் கிடக்கும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சரியாக காலை நேர இன்டர்வெல் விடும் நேரத்தில் கிருஷ்ணா தன்னோடு தனஞ்செயனையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுவான்.
வந்து அம்மா கையால் பூஸ்ட், போர்ன்விட்டா என்று ஏதாவது குடித்துவிட்டு திரும்ப பள்ளிக்கு ஓடுவான். 
அதேபோல மதியமும் சாப்பிட அன்னையிடம் வந்துவிடுவான் கிருஷ்ணா, கூடவே தனாவோடு… இந்த ஏற்பாடு வேதவல்லிக்கும் நிரம்பவே பிடித்திருந்தது ‌
அந்த சின்ன வயதிலேயே தன் மகனுக்கு துணையாக  அவன் பின்னோடே அலையும் தனஞ்செயனையும் நிரம்பவே பிடிக்கும் அந்த தாய்க்கு.
அதனால் தன் மகனுக்கு என்ன செய்கிறாரோ அதில் கொஞ்சம் கூட வேறுபாடு காட்டாமல் அவனுக்கும் செய்வார்.
முருகப்பெருமானுக்கு வீரபாகு எப்படியோ அப்படித்தான் கிருஷ்ணாவுக்கு தனஞ்செயன்… இப்படி தான் அந்த தாயின் மனதில் பதிந்து போனது.

Advertisement