Advertisement

அத்தியாயம் -14
புவனா பெங்களூரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. அன்று ஹோட்டலில் வஞ்சு கிளம்பிய போது அவளைக் கொண்டு விட ராம்குமார் கூடவே போனான். 
அவன் போனான் என்பதை விட வஞ்சுவின் பார்வை அவனைப் அவள் பின்னால் ஓட வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே பயத்தோடு வந்தவளுக்கு புவனா ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசாமல் இருக்க ரெஸ்ட் ரூம் போகும் போது ராம்குமாரிடம் புலம்பித் தள்ளி விட்டாள்.
“குரு! அக்காவுக்கு என்னை பிடிக்கலைன்னு தோணுது. ஒரு வார்த்தை கூட என் கூட பேசல பாருங்க. 
அக்கா வேண்டாம்னு சொன்னா கண்டிப்பா உங்க அம்மாவும் ஒத்துக்க மாட்டாங்க தானே? அப்ப நம்ம கல்யாணம் நடக்காதா?”
ஏகத்துக்கும் பயந்தவளை ராம்குமார் தான் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
“ஹேய்! ஏன் தப்பு தப்பா யோசிக்கிற? அக்கா யார் கிட்டையும் உடனே பேசிட மாட்டாங்க. கொஞ்சம் பார்த்து தான் பேசுவாங்க. அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு டென்ஷன்? 
உன்ன பார்த்துட்டு ஒரு ஸ்கூல் பொண்ண தள்ளிட்டு வந்திட்டேன்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ? ஆனா இந்த ஸ்கூல் பொண்ணுக்கு எவ்வளவு விஷயம் தெரியும்னு எனக்கு தானே தெரியும்?”
ராம்குமார் வேண்டுமென்றே அவள் மனநிலை மாற்ற சீண்டினான். அவன் சீண்டல் நன்றாகவே வேலை செய்தது. 
“குரு! மத்ததெல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரி இதுக்கும் நீங்க தானே குரு? அப்ப இதுலயும் உங்களுக்கு தானே என்னை விட நிறைய தெரியும்?”
அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து கூடவே சிரித்தவளை ரசனையோடு பார்த்தவனுக்கு ஏன் அக்காவுக்கு அவளை பிடிக்கவில்லை என்று சிந்தனை.
அவனும் வஞ்சுவை அழைத்து வந்ததில் இருந்து அக்காவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தான். வஞ்சுவை பார்த்து லேசாக புன்னகை செய்ததோடு சரி. 
அதன் பிறகு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேச விரும்பவும் இல்லை என்பது போல தான் இருந்தது.
மாமா மட்டுமே அவளிடம் பேச புவனா வஞ்சுவை கண்காணிப்பது போல இருந்தது. 
அக்காவின் எண்ணம் என்ன? அவர் அம்மா அப்பாவிடம் தன் சார்பாக பேசி சம்மதம் வாங்கித் தருவாரா என்ற கவலை வர ஏற்கனவே பயத்தில் இருந்த வஞ்சுவிடம் இருந்து தன் கவலையை மறைத்துக் கொண்டான். 
இருவரும் வாஷ்ரூம் போய் வந்த பிறகும் அக்காவின் முகம் தெளியாமலே இருந்ததோடு மாமாவின் முகமும் இப்போது சிந்தனையைக் காட்டவே இதற்கு மேல் இந்த சந்திப்பு நீடிப்பது சரியில்லை என்று கிளம்பி விட்டான்.
புவனா அவன் கிளம்பும் போது தாங்கள் மட்டும் தீபுவை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் போய் விட்டு அப்படியே நைட் பஸ்ஸில் ஊருக்கு கிளம்பி விடுவதாக சொல்ல ரம்குமாரால் வஞ்சுவின் எதிரே எதுவும் கேட்க முடியவில்லை.
சரி ஊருக்கு போன பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவனும் கிளம்பி விட்டான்.
வோல்வோ பஸ்ஸில் ஏறிய பிறகு புவனா தான் புலம்பிக்கொண்டு இருந்தாள்.
“அப்படியே நா நாங்க போய்க்கறோம் என்று சொன்னால் தான் என்ன? எத்தனை மணிக்கு பஸ்ஸுனு கேட்டு இங்க வரக்கூடாதா? அட! எனக்கு ஒண்ணும் வேணாம். 
தீபுக்குட்டிக்கு எதாச்சும் வாங்கித் தரட்டாக்கானு கேக்கலாமில்ல? இன்னும் வீட்டுல சம்மதம் கூட கேக்கல. அதுக்குள்ளேயே அவ பிடியில இருக்கான். இன்னும் போகப்போக மொத்தமா எங்கள மறந்துருவான் போல…!”
“ஹே! இப்ப ஏன் அவனைக் காஞ்சிட்டு இருக்கே? அதான் தீபுக்கு பிஸ்கட் வாங்கும் போது உனக்கு பிடிச்ச புளிப்பு மிட்டாயும் லேஸ் சிப்ஸும் நான் தான் வாங்கித் தந்தேன் இல்ல? 
உனக்கே தெரியும். நீ இங்க வான்னு சொன்னா கண்டிப்பா அவன் வந்திருப்பான். வேல மெனக்கெட்டு வராதேன்னு சொல்லிட்டு இப்ப பொலம்பினா என்ன அர்த்தம்? 
இந்த ஒரே நாளில் நீ ரொம்ப மாறிட்டே புவனா? என் தம்பி என் தம்பின்னு சொல்லிட்டு இருந்தவ இப்ப சொல்றது பூரா குறை தான். 
அவனும் மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கட்டுமே? இதுல என்ன தப்பு?”
ஷ்யாம் அதட்டியதில் புவனா வாயை மூடிக் கொண்டாலும் மனதில் இருந்த நெருடலை உதற முடியவில்லை.
ஷ்யாம் சொன்னதில் உண்மையில் தம்பியை தேவை இல்லாமல் குறை கூறுகிறோமா என்று குழம்பினாள்.
அதே போல் பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் ராம்குமார் போன் செய்திருந்தான்.
“அக்கா! நீங்க மாமா தீபுக்குட்டி எல்லாம் பஸ் ஏறிட்டீங்களா? நா வரணும்னு தான் நினைச்சேன். ஆனா ரஞ்சித் தெரியும் இல்ல? 
அவனுக்கு சின்ன ஆக்சிடென்ட். அதான் அவன் கூட இருந்திட்டேன். சின்ன அடி தான். நீங்க பத்திரமா போயிட்டு மெசேஜ் பண்ணுங்க. மாமா கிட்டயும் தீபு கிட்டயும் சொல்லிடுங்க.”
ஷ்யாம் அர்த்தத்துடன் புவனாவைப் பார்க்க புவனா வாயே திறக்கவில்லை.
ஊரில் இருந்து வந்த அன்றே அவர்கள் பயண விவரத்தை பானு போன் செய்து விசாரிக்க புவனாவுக்கு அவரிடம் ராம்குமாரின் காதல் விவகாரத்தை மறைக்கும் குற்ற உணர்வு. 
ஆனால் ஷ்யாம் அவள் குணம் அறிந்து எச்சரித்திருந்தான்.
“நீ இப்பவே எதுவும் வஞ்சுவைப் பத்தி உங்க அம்மா கிட்ட சொல்ல வேணாம். நீ இப்ப இருக்கிற மன நிலையில் கண்டிப்பா குறையா தான் சொல்லுவ. அதனால யோசிச்சு சொல்லலாம். சரியா?”
ஆனாலும் பானு விடவில்லை.
“ரஞ்சனியை பத்தி தம்பி கிட்ட பேசினியா புவி? என்ன சொல்றான்? சம்மதம் சொல்லிட்டானா?”
என்று பரபரத்தார்.
“அம்மா! அவனுக்கு ஆஃப் ஷோர் வரும் போல இருக்காம். ஆறு மாசம் யூஎஸ்ல இருக்கணுமாம். அதனால இப்போதைக்கு எதுவும் வேண்டாம் போயிட்டு வந்து பாத்துக்கலாம்னு என்று சொல்றான்.
அவங்க வீட்டுல கேட்டா ஜாதகத்துல இப்ப நேரம் கூடி வரலன்னு சொல்லி தள்ளிப் போடுங்க.”
ராம்குமார் மேல் அதிருப்தி இருந்தாலும் அம்மாவிடம் வேறு சொல்லி சமாளித்தாள்.
பானுவும் அவள் சொன்னதை நம்பி “சரிடி! சொல்லிப் பார்க்கறேன். அவங்க பொறுமையா காத்திருப்பாங்களோ என்னவோ? நல்ல சம்பந்தம் கையை விட்டுப் போகுதேன்னு தான் யோசனையா இருக்கு…” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
“அம்மா! யார் யாருக்கு எங்க முடிச்சு போட்டிருக்கோ அங்க தான் நடக்கும். ரஞ்சனி கூட தான் கல்யாணம் ஆகும் என்று இருந்தால் அதான் நடக்கும். இல்லையா வேற நல்ல பொண்ணா அமையாத போய்டும்? பாத்துக்கலாம். விடுங்க!” 
ராம்குமாரால் ஒரு நாளுக்கு மேல் பொறுமையாக காத்திருக்க முடியவில்லை. அக்காவுக்கு அழைத்து விட்டான்.
“அக்கா! என்ன போன் பண்ணவே இல்ல? வஞ்சுவ பத்தி வீட்டுல சொல்லிட்டீங்களா? அம்மா அப்பா என்ன சொன்னாங்க?”
நிச்சயம் ராம்குமார் கண்டிப்பாக தன்னைக் கேட்பான் என்று தெரியும். அதனால் அதற்குள் அவள் தன் சொந்த உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு ராம்குமாருக்கு அக்காவாக மட்டுமே யோசித்திருந்தாள்.
வஞ்சு நல்ல பெண்ணாகவே இருக்கட்டும். ஆனால் அவளை கல்யாணம் செய்தால் தம்பி சந்தோஷமாக இருப்பானா என்ற சிந்தனை அவள் திருமண வாழ்வில் கிடைத்த அனுபவத்தின் மூலம் வந்திருந்தது.
இப்படி எல்லாவற்றுக்கும் அவனையே சார்ந்திருக்கும் ஒரு பெண் எப்படி கல்யாணத்துக்கு பிறகு வரப் போகும் பொறுப்புகளை சமாளிக்க முடியும் என்ற கவலை வந்திருந்தது. 
ஆனாலும் ஒரே ஒரு முறை சில மணி நேரங்கள் பார்த்ததை வைத்து அவசரப்படக் கூடாது என்று அனுபவம் சொல்ல இதற்கான முடிவை காலம் கடத்த முடிவு செய்தாள்.
அதோடு ராம்குமார் இப்போது வஞ்சுவின் மேல் காதல் மயக்கத்தில் (அவள் பார்வையில்) இருந்தாலும் கூடவே இருந்தால் அவள் குணமும் இவன் குணமும் பொருந்தினால் மட்டுமே இந்த உறவு நீடிக்கும் என்று தோன்றியது.
காதலிக்கும் எல்லோருமா கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? 
அதோடு இப்போதே வஞ்சு வேண்டாம் என்று சொன்னால் கண்டிப்பாக ராம்குமார் அவளை கல்யாணம் செய்தே தீருவான் என்று உலக அனுபவம் சொல்ல அவள் நினைப்பது தான் சரி என்று அவளுக்கு தோன்றியது.
ஆர்வத்துடன் கேட்கும் தம்பியை புவனா தெளிவாக சமாளித்தாள்.
“தம்பி! அம்மா ரஞ்சனிய இன்னும் மனசுல நினைச்சிட்டு இருக்காங்க. அதனால இப்ப வஞ்சுவைப் பத்தி பேசறது சரியா வராது. நீ என்ன சொல்ற என்று இன்னிக்கு கூட கேட்டாங்க.
 நீ ஆபிஸ் வேலையா ஆறு மாசம்  வெளிநாடு போக வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லி சமாளிச்சு இருக்கேன். நீயும் அதையே மைண்டேன் பண்ணு. கொஞ்சம் நாள் போகட்டும். அப்புறம் பார்க்கலாம். சரியா?”
ராம்குமாருக்கும் ஏற்கனவே அம்மாவுக்கு ரஞ்சனியை மணம் செய்து வைக்க விருப்பம் இருப்பது நன்றாகவே தெரியும் என்பதால் புவனாவிடம் மேலே வற்புறுத்தவில்லை.
புவனா இப்போதைக்கு சமாளித்த நிம்மதியில் தன் குடும்பத்தைப் பார்க்க ராம்குமார் அவன் அக்கா சொன்ன பதிலை எடுத்துக்கொண்ட விதம் அவள் அறியவில்லை.
வீட்டில் பேசி எப்படியும் அக்கா சம்மதம் வாங்கி விடுவார் என்ற நம்பிக்கை ராம்குமாருக்கு இப்போது வந்திருக்க வஞ்சுவுக்கோ இப்போது தான் தன் காதல் நிறைவேறுமா என்ற பயம் வந்திருந்தது.
அதுவரை ராம்குமார் தன் காதலை ஒத்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலையில் இருந்தவளுக்கு ராம்குமார் தன் அக்காவின் முகத்தை ஒப்புதலுக்காக பார்க்கவும் தான் நிதர்சனம் புரிந்தது.
அதிலும் புவனா அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிருக்க வஞ்சுவிற்கு இப்போது ராம்குமார் தன்னை கை விட்டு விடுவானோ என்ற பயம் வந்திருந்தது.
அது வீட்டைப் பற்றிய பயத்தை பின்னால் தள்ள ராம்குமாரை இன்னும் தன்னோடு இறுகப் பிணைத்துக் கொள்ளும் எல்லா முயற்சியிலும் இறங்கினாள்.
 அதில் ஒன்றாக காதல் போஸ்ட்கள் முகநூலில் மீண்டும் தொடர்ந்தது. 
கானலில் தவித்துக் கொண்டிருந்தேன்! 
கன்னலாக நீ வந்தாய்! 
கையில் கிடைத்த வரம் 
காற்றோடு போகாமல் எந்நாளும் நிலைத்திடுமா?
கவிதையோடு மட்டுமே நிறுத்தாமல் தான் அவன் மேல் வைத்திருக்கும் அன்பை விதவிதமாக காட்டினாள். தினமும் காலையில் வாட்ஸ் அப்பில் காலை வணக்கம் ஒரு முத்தத்தோடு வரும். 
அதன் பிறகு வேலை நடுவே என்ன செய்கிறாய் என்ற விசாரிப்பு. இதற்குள் இருவரும் நேரில் ஒரு முறை பழையபடி நண்பர்களோடு டீ அருந்த போயிருப்பார்கள். 
அங்கும் இப்போது எல்லோருக்கும் அவர்கள் இருவரின் காதலும் தெரியும் என்பதால் இப்போது வஞ்சு அவள் உரிமையை வெளிப்படையாகவே காட்டிக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
ராம்குமார் தெளிவான பையன் தான். ஆனாலும் ஒரு பெண் அவன் மேல் பைத்தியமாக இருப்பது அவனுக்கு ஒரு பெருமிதத்தைத் தந்திருந்தது.
அதனால் வஞ்சு நண்பர்கள் எதிரிலும் அவள் உரிமையைக் காட்டும் போது வாளாவிருந்தான்.
நண்பர்கள் இருக்கும் போதும் பொதுவான பேச்சாக இல்லாமல் வஞ்சு தங்கள் சொந்த பேச்சை எடுப்பாள். 
கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்து விட்டு நண்பர்கள் மெதுவாக அவர்களை விட்டு விலக ஆரம்பிக்க சிறிது நாட்களுக்குப் பிறகு தான் ராம்குமார் அதை உணர்ந்தான்.
 மாலையிலும் முன்பு ஆண் நண்பர்களோடு சினிமா, ஹோட்டல் என்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மாலை வேளைகள் வஞ்சுவோடு தான் போனது.
ஒன்று அவள் ஷாப்பிங் என்று அழைப்பாள். அல்லது அவள் ப்ரொஜெக்டில் சந்தேகம் வரும். அல்லது ஹோட்டலில் சாப்பிட ஆசை என்று அவனை அழைத்துக்கொண்டு போக சொல்லி கூப்பிட்டு விடுவாள்.
இல்லையென்றால் அவள் புதிதாக செய்ய ஆரம்பித்திருந்த விஷயத்தில் அவனையும் சேர்த்துக்கொள்வாள்.
ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை டிக்டாக்கில் செய்து அதை முகநூலில் வெளியிட நண்பர்கள் அனைவரின் பாராட்டும் குவிந்தது.
மற்றவர்களுக்கெல்லாம் அது ஒரு முறை பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வஞ்சுவுக்கு அது மிகவும் பிடித்துப் போனது.
ஏற்கனவே கல்லூரியில் நடனமாடிய அனுபவம் இருந்ததால் இப்போதும் திரைப்பட பாடல்களுக்கு அந்த கதாநாயகியர் போலவே வேடமணிந்து அதே போல நடனமாட ஆரம்பித்தாள்.
அதைகூட இருந்த நண்பர்கள் எல்லாம் வேறு வெகுவாக பாராட்ட அதில் ஈடுபாடு இன்னும் இன்னும் அதிகம் ஆனது.
ராம்குமாருக்கு அவள் ஈடுபாடு ஆரம்பத்தில் இனித்த அளவுக்கு போகப் போக மூச்சு முட்டியது.
தினமும் டிக்டாக் வீடியோ எடுத்தவள் அதை முகநூலில் பதிவிட ஆரம்பித்தாள். ராம்குமார் சில சமயங்களில் அவளோடு சிம்பிள் ஸ்டெப்ஸ் ஆடுவான். அல்லது அவள் ஆடுவதை வீடியோ எடுத்து எடிட் செய்து தருவது அவன் வேலை.
முழுநேரமும் தன்னோடு பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற அவளின் எதிர்பார்ப்பால் நண்பர்கள் இடையே விரிசல் விழுந்தது.
அன்று மாலை அவன் கூட இருந்த நண்பர்கள் எல்லாம் சீக்கிரம் கிளம்ப ராம்குமார் ரஞ்சித்தை கேட்டான்.
“மச்சி! என்னடா? எல்லோரும் எங்க கிளம்பிட்டீங்க?”
“போர்ட் வேசுஸ் பெராரி படம் —- தியேட்டர்ல போட்டிருக்கானாம். அதுக்கு தான் கிளம்பிட்டு இருக்கோம்.”
“டேய்! சூப்பர் மச்சி. நாம எல்லாம் ஒண்ணா அந்த படத்த பாக்கணும்னு பேசி வெச்சிருந்தோம். நீங்க ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை?”
ராம்குமார் சாதாரணமாகவே கேட்க அப்போது தான் நண்பர்களின் பதில் முகத்தில் அறைந்தது.
“எங்கடா உனக்கு இப்பலாம் நேரம்? எப்பவும் சிஸ்டர் கூட கடலை போடவே நேரம் சரியா இருக்கு. நீ எங்க வரப் போறன்னு டிக்கெட் கூட எங்க மூணு பேருக்கு மட்டும் தான் வாங்கியிருக்கோம். நா ஆதி ரபீக் மூணு பேர் தான் போறோம். 
அப்புறம் மச்சி இன்னிக்கி நாங்க வர லேட் ஆகும். வீகென்ட் இல்ல? நாங்க படம் முடிஞ்சி அப்படியே பப்ல பீர் அடிச்சிட்டு சாப்பாடெல்லாம் முடிச்சிட்டு தான் வருவோம். எப்படியும் நைட் பன்னண்டு மணிக்கு மேல ஆகும். 
நாங்க வீட்டு கீ எடுத்துட்டோம். நீ வஞ்சு கூட என்ஜாய் பண்ணு. பைடா!” என்றவர்கள் ராம்குமாரின் பதிலுக்காக நிற்கவே இல்லை. கிளம்பிப் போய்க் கொண்டே இருந்தனர்.
அந்த நேரத்தில் வஞ்சுவின் அழைப்பு வர ராம்குமார் அவனுக்கிருந்த எரிச்சலை அப்படியே காட்டி விட்டான்.
“குரு! எங்க இருக்கீங்க? இன்னிக்கி டிக்டாக் செய்ய சூப்பர் சாங் ஒண்ணு செலக்ட் பண்ணி வெச்சிருக்கேன். ஸ்டெப்ஸ் கூட ரெடி. எப்ப ஆரம்பிக்கலாம்?”
ராம்குமார் மனநிலை தெரியாமல் வஞ்சு பேச்சை ஆரம்பிக்க ராம்குமார் கோபத்தை அப்படியே மறைக்காமல் காட்டினான்.
“சும்மா நைநைனு ஏதாவது பேசாம போனை வை. எனக்கு இப்ப எதுக்கும் மூட் இல்ல…”
என்று அழைப்பை துண்டித்து செல்லைத் தூக்கிப்போட்டு கட்டிலில் சரிந்தவனுக்கு தலை விண் விண் என்று தெரித்தது.

Advertisement