Advertisement

அத்தியாயம் -13
வஞ்சு காதலின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் குரு அவள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே.
அதுவும் ராம்குமார் அவள் காதலை ஒத்துக் கொண்ட அடுத்த நாளே வந்து அவன் அக்காவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதோடு அவளைப் பார்க்க அக்காவை குடும்பத்தோடு அழைத்திருப்பதாக சொல்லவும் பயந்து விட்டாள்.
இன்னும் அவள் வீட்டில் மூச்சு கூட விடாத போது ராம்குமார் வேகமாக போவது போல தோன்ற அவர்களின் சந்திப்பை தள்ளிப் போட தான் விரும்பினாள்.
“இப்ப வேண்டாம் குரு! கொஞ்சம் தள்ளிப் போடுங்க. நா இன்னும் வீட்டுல சொல்லவே இல்ல. அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கன்னு தெரியல. பயமா இருக்கு. 
ரெண்டு வாரம் கழிச்சு ஊருக்குப் போறதா இருக்கேன். அப்ப போய் முதலில் பேசி சம்மதம் வாங்கறேன். அதுக்கப்புறம் உங்க அக்கா வரட்டும்…”
அவளும் ஆன மட்டும் பேசிப் பார்த்தாள். வீட்டை நினைத்து பயத்தில் அழுகை வேறு கொட்ட ராம்குமார் பொறுமையாக அவனுக்கே உரிய நிதானத்துடன் சமாளித்தான்.
இருவரும் அன்று கப்பன் பார்க்கில் உட்கார்ந்து இருந்தனர். சுற்றிலும் இருந்த மலர்கள் இதமாக வருடிய காற்று எதுவும் வஞ்சுவின் மனதைக் கவரவில்லை.
ராம்குமாருக்கு அவள் பயம் புரிந்தது. அதே பயம் அவன் அம்மா அப்பாவை நினைத்து அவனுக்கும் இருந்தது. அவனுக்கு தெரிந்தவரை அவன் பெற்றோர்களை சமாதானம் செய்ய அக்கா தான் ஒரே வழி. 
அதோடு வீட்டு மாப்பிள்ளையாக ஷ்யாம் மாமா பேசினால் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள் என்று நம்பித் தான் இருவரையும் பேசி கரையாய் கரைத்து இங்கே அழைத்திருந்தான்.
புவனாவின் அதிருப்தியும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது. தான் இப்போது தழைந்து போய் தான் சம்மதம் வாங்க வேண்டும் என்பதால் அவள் கோபத்தை தாங்கிக் கொண்டான்.
அவனுக்கு அவன் குடும்பத்தோடு வஞ்சுவும் வேண்டும். அதனால் இடையில் வரும் இந்த சிறு பிணக்குகளை மனதில் போட்டுக் கொள்ளவில்லை.
தன் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளின் கண்ணீரை தன் பேண்டில் இருந்து கைக்குட்டை எடுத்து மெதுவாக துடைத்து விட்டவன் மெல்ல அவள் கன்னத்தை வருடினான்.
இருவரும் காதலர்கள் ஆனதால் தானாகவே ஒதுக்குப்புறமான இடம் கண்டுபிடிக்கும் திறமை வந்திருந்தது.
செயற்கை குன்றும் ஒரு பெரிய மரமும் மறைக்க அந்த மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள் இருவரும்.
“ ஓய் சின்ன பக்கெட்! என்ன பக்கெட் பக்கெட்டா தண்ணி விட்டுட்டு இருக்கே? இப்படியே அழுதா உன் பேரை சின்ன பக்கெட்னு மாத்திருவேன்….புரியுதா?”
அவள் மனநிலை மாற அவன் செய்த சீண்டல் நன்றாகவே வேலை செய்தது.
அவன் சொன்ன செல்லப் பெயர் கேட்டவள் கண்ணீரை மறந்து எழுந்து ஆர்வமாக அவனைப் பார்த்தாள்.
“என்ன குரு! சின்ன பக்கெட்டா? எனக்கு பேரெல்லாம் வெச்சிருக்கீங்களா? எனக்கு நீங்க இப்படி பெட் நேம் வெச்சு கூப்பிடணும் என்று ரொம்ப ஆசை. தெரியுமா? 
சுஜிய அவ பாய் பிரெண்ட் ட்ரீம் கேர்ள்னு தான் கூப்பிடுவானாம். நானே உங்க கிட்ட கேக்க நினைச்சேன். எனக்கு என்ன செல்லப்பெயர் வச்சிங்கனு?”
அவள் கண்ணீர் நின்று ஆர்வமாக அவனை பார்க்க ராம்குமாருக்கு ஏன் இத்தனை பேர் தன் பின்னால் சுற்றியும் அவள் பார்வையில் விழுந்தோம் என்று இன்னொரு முறை புரிந்தது.
‘கண்ணை விரித்தே ஆளை கவுத்துடறா!’
“சொல்லலாம் தான். நம்ம ஃப்யூச்சர் பத்தி கூட பேசலாம். எங்க? நீ தான் வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கியே?”
காதலுக்கு வேண்டுமானால் வயது ஒரு நாள் இருக்கலாம். ஆனால் இருவரும் பல வருடங்களாக நட்பாக பழகியதால் எந்த தயக்கமும் இல்லாமல் பேச்சு சரளமாக வந்தது.
எத்தனையோ முறை இருவருமாக தனியே வெளியே வந்திருந்தாலும் காதலர்களாக இது புதிதல்லவா? அதனால் ராம்குமார் ஆர்வமாக அவளோடு பேச வந்திருந்தான்.
காதலில் அவன் நிதானமாக முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் தன் வாழ்க்கைத்துணை வஞ்சு தான் என்று முடிவு செய்த பிறகு திருமணத்தைத் தள்ளிப்போட அவன் விரும்பவில்லை.
முன் தின நினைவின் சந்தோஷங்கள் இன்னும் மிச்சம் இருக்க ஆர்வமாக வஞ்சுவோடு தனியாக பேச வந்தவனுக்கு அவள் அழுது புலம்பியதை எப்படி சமாளிக்க என்று விழித்தான்.
“எனக்கு ஏன் சின்ன பாக்கெட்னு பேர் வெச்சிங்க? அத மொதல்ல சொல்லுங்க…”
ஆர்வமாக தன்னிடம் கேட்டவளைப் பார்த்து ராம்குமாருக்கு சிரிப்பு வந்தது. இவ்வளவு நேரம் அப்படி அழுதது என்ன? இப்போது ஒரே நொடியில் அழுகையை விட்டு விட்டு செல்லப்பெயர் பற்றி ஆர்வமாக கேட்பதென்ன?
அவள் தோளில் கை போட்டவன் குறும்போடு பதில் சொன்னான்.
“நீ அந்த ஆட் பாத்ததில்லையா? அந்த குட்டிப்பொண்ணுக்கு கண் மட்டும் தான் பெரிதா இருக்கும். தோள் கை எல்ல்லாம் இப்படி குச்சி குச்சியா இருக்கும்…”
சொல்லியபடியே அவள் தோள் கைகள் எல்லாம் அழுத்திக் காட்டியவனின் செயலில் கூச்சத்தில் நெளிந்தாள் அவள்.
“அவளோட சீனியர்ஸ் எல்லாம் அதனால அவளை சின்ன பக்கெட்னு கிண்டலா கூப்பிடுவாங்க. அவ அதை எவ்வளவு அழகா ஹான்டில் பண்ணுவா தெரியுமா? நீ கூட ஃபர்ஸ்ட் இயர்ல என் கிட்ட வந்து ப்ரொஜெக்டர் வேணும்னு வந்து கேக்கும் போது அப்படி தான் இருந்துச்சு. ரஞ்சித் கூட உனக்கு ரெட்டை ஜடைனு பேர் வெச்சிருக்கான். தெரியுமா?”
சொல்லிவிட்டு ராம்குமார் சத்தம் போட்டு சிரிக்க வஞ்சு பொய் கோபத்துடன் முறைத்தாள்.
“இப்படி ஒரு பேர் வெச்சிருக்காங்களா ரஞ்சித் அண்ணா? வெச்சிக்கறேன் அவங்கள!”
அவள் பேசப்பேச ராம்குமார் விடாமல் சிரிக்க அந்த வழியில் வாக்கிங் போனவர்கள் எல்லாம் திரும்பிப் பார்த்தனர்.
அதில் வஞ்சுவுக்கு வெட்கம் வர எக்கி ராம்குமாரின் வாயை மூடினாள்.
அவள் கையை சுலபமாக தன் கையால் மூடியவன் அப்போதும் விடாமல் சிரிக்க வஞ்சு கெஞ்ச ஆரம்பித்தாள்.
“ப்ளீஸ் குரு! எல்லோரும் நம்மளையே தான் பாக்றாங்க.நிறுத்துங்க…”
ராம்குமார் அவள் கெஞ்சலில் இன்னும் வாய் விட்டு சிரித்தவன் “ஹே! இப்படி எல்லாம் சொன்னா வாயை மூட மாட்டேன். நேத்து மாதிரி செய்யறதா இருந்தா சொல்லு.. வாயை மூடறேன்…”
என்று உல்லாசமாக சொல்ல ஒரு நொடி விழித்த பிறகே வஞ்சுவுக்கு புரிந்தது.
“வேணாம்! அதுக்கு நீங்க நிறுத்தாம சிரிச்சிட்டே இருங்க….” என்று அந்த பக்கம் திரும்பி அமர மீண்டும் அவள் தோளில் கை போட்டு தன் பக்கம் எளிதாகவே இழுத்தவன் சிரிப்பு மெல்ல மெல்ல மறைந்து அதில் அவள் மேல் கொண்ட காதல் மட்டுமே தெரிந்தது.
“கொஞ்ச நேரம் உன் கூட இருந்ததே இவ்வளவு நல்லா இருக்கே. இன்னும் வாழ்க்கை முழுக்க நாம ஒண்ணா இருக்கப் போறோம் என்று நினைச்சாலே சந்தோஷமா இருக்கு. லைப் ரொம்ப சுவாரசியமாக போகும் என்று தோணுது… சிப…!” என்று அவள் பேரை சுருக்கி அழைத்து ஒரு அடியும் வாங்கிக் கொண்டான்.
அவள் எப்படியெல்லாம் அவன் முழியை பிதுங்க வைக்கப் போகிறாள் என்று அவனுக்கு அப்போது தெரியாதே!
அன்று மாலை முழுதும் அவளோடு பேசி பொழுதைக் கழித்து அவளை ஒரு மாதிரியாக சம்மதிக்க வைத்து விட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு நிம்மதி சில மணி நேரங்களே.
மீண்டும் நள்ளிரவில் வாட்சப்பில் “குரு! தூங்கிட்டீங்களா?” என்று வஞ்சு குறுஞ்செய்தி அனுப்ப ராம்குமாருக்கு தூக்கம் எது?
மறுபடி முதலில் இருந்து ஆரம்பித்தாள் வஞ்சு. அவனோடு இருந்தவரை இருந்த தைரியம் அவன் வீட்டில் விட்டுப் போன பிறகு அதுவும் ஓடி விட்டது.
மறுபடி அவளிடம் பேசிப்பேசி சமாளித்து ராம்குமார் தூங்கும்போது விடிந்து விட்டது.
‘அவனவன் விடிய விடிய லவ்வர் கிட்ட எப்படி கடலை போடறானோ தெரியல!’
புலம்பிக்கொண்டே அக்கா குடும்பத்தை அழைக்க கிளம்பினான் ராம்குமார்.
இதோ மதிய உணவுக்கு அக்கா குடும்பத்தை சந்திக்க போக வேண்டும் என்று சொன்னதில் இருந்து வஞ்சுவுக்கு ஆயிரம் சந்தேகங்கள்.
என்ன உடை போடுவது? என்ன பேசுவது? அவங்கள பாக்க வரும் போது என்ன கிபிட் வாங்குறது? என்ன அவங்களுக்குப் பிடிக்கும்? முடிவில்லா கேள்விகள்.
எல்லாம் சமாளித்து ஒரு வழியாக மதியம் அவளை அழைத்து வர அவள் வீட்டுக்கு போனவனுக்கு ஹோட்டல் வரும் வரை காது குடையும் அளவுக்கு புலம்பித் தீர்த்தாள்.
அவள் கூடவே இருப்பதாக பல முறை ராம்குமார் உறுதி சொன்ன பிறகே அவள் கேள்விகள் ஓய்ந்தது.
பைக்கை ஹோட்டல் வாசலில் நிறுத்த வஞ்சுவின் வலது கை தானாய் குருவின் இடது கையை இறுகப் பிடித்து கொண்டது.
புவனா குடும்பம் முன்பே கிளம்பி அவர்களுக்காக ஒதுக்கி இருந்த மேஜைக்கு வந்து காத்திருந்தனர். 
தீபு குட்டிக்கு மட்டும் சிக்கன் சூப் ஆர்டர் செய்து அதை ஊதி ஊதி ஊட்டிய படி தம்பியின் வரவுக்காக புவனா காத்திருந்தாள்.
பனிரெண்டரைக்கே வருவதாக சொன்னவர்கள் வந்த போது மணி ஒன்றரை.
சொன்ன நேரத்திற்கு வராமல் காக்க வைத்த அதிருப்தியில் இருந்த புவனா அவர்கள் வந்த உடனே கவனித்து விட்டாள்.
தன் தம்பியின் தோள் உயரத்திற்கு ஒல்லியாக சற்றும் அவன் கம்பீரமான தோற்றத்திற்கு பொருந்தாமல் வந்தவளை பார்த்த முதல் நொடியே புவனாவுக்கு அதிருப்தி.
முந்தின நாள் முகநூலில் அவள் பக்கத்தில் இருந்த போஸ்ட் எல்லாம் பார்க்க அது முழுதும் ராம்குமாரை டேக் செய்து காதல் கவிதைகள். அதற்கு ராம்குமார் லவ் ரியாக்ஷனும் சூப்பர் என்று போட்ட கமெண்டும் பார்த்தவளுக்கு தம்பியின் மேல் இப்போது அவநம்பிக்கை.
இந்த காதல் வெகு நாட்களாக தொடர்கிறது போலவே? தம்பி தான் தன்னிடம் மறைத்து விட்டான் என்று தோன்றியது. 
இந்த அபிப்பிராயம் கொண்டே இப்போது வஞ்சுவைப் பார்க்க அவள் எதோ சொல்வதும் ராம்குமார் அதற்கு எதோ சமாதனாமாக சொல்வதும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
பக்கத்தில் திரும்பி ஷ்யாமைப் பார்க்க அவன் மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.
ஏற்கனவே அவன் சொன்னது நினைவுக்கு வர தன் மனதில் இருந்ததை தன்னிடமே வைத்துக் கொண்டு மீண்டும் அவர்களை கவனித்தாள் புவனா.
ராம்குமார் வஞ்சு ஒரு நடுத்தர டவுனில் இருந்து வருவதாக சொல்லி இருக்க வஞ்சுவை இப்போது கவனித்தாள்.
ஒரு கருநீல பென்சில் பிட் டிசைனர் ஜீன்ஸ். மேலே ஸ்லீவ் லெஸ் வெளிர் நீல காட்டன் ப்ளௌஸ். நீண்ட கூந்தலை அந்த வரைக்கும் வெட்டாமல் இடுப்பு வரை விரித்து விட்டிருந்தாள்.
நெற்றியில் பொட்டு இல்லை. இடது கையில் ஒரு வாட்ச் மட்டுமே. கழுத்தில் கருப்பு கயிறு போல ஒன்றை சரமாக போட்டிருந்தாள்.
கிட்டே வர அவள் நீண்ட நகத்தில் கருநீல நெயில் பாலிஷ். காலில் கருநீல ஹீல் ஷூ.
புவனா எந்த உணர்வும் காட்டாமல் பார்த்தபடி இருக்க அவர்கள் அருகே வந்த பிறகும் வஞ்சுவின் கை ராம்குமாரிடம் இருந்து விலகவில்லை.
ராம்குமார் சிறு புன்னகையுடன் “ ஹாய் அக்கா மாமா! தீபு குட்டி மாமா விட்டு சாப்பிடறீங்களா?” என்று இயல்பாய் பேச புவனாவின் பார்வை இப்போதும் வஞ்சுவின் முகத்தில் தான்.
வஞ்சு அந்த பார்வையில் சங்கடமாக நெளிய ரம்குமாரக்கவின் பார்வையில் வஞ்சுவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினான்.
இந்தப்பக்கம் புவனாவும் ஷ்யாமும் அமர்ந்திருக்க பக்கத்தில் பேபி சேரில் தீபு குட்டி அமர்ந்திருந்தாள்.
அதனால் ராம்குமார் வஞ்சு இருவரும் எதிரே பக்கம் பக்கம் அமர்ந்தனர். 
அப்போதும் வஞ்சு அவன் கையை விடாமல் பிடித்திருக்க புவனாவுக்கு சிந்தனை.
வந்தவுடன் ஹலோ என்றதோடு புவனா பேசாமல் வேடிக்கை பார்க்க ஷ்யாம் மட்டுமே இருவருடனும் பேசினான்.
வஞ்சுவிடம் அவள் வேலை குடும்பம் என்று பொதுவாக பெசியவனிடம் வஞ்சு பதில் சொல்வதை வேடிக்கை பார்த்தபடி புவனா மகளுக்கு ஊட்டியபடி அமைதியாகவே சாப்பிட்டாள்.
ராம்குமாருக்கு அந்த சூழலில் வித்தியாசம் தெரிந்ததோ இல்லையோ அவன் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.
தீபுவுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்தவன் வஞ்சுவுக்கு அவள் கேட்காமலே பிடித்ததை கொண்டு வர செய்தான்.
அதுவும் அவை எப்படி வந்தால் அவளுக்குப் பிடிக்கும் என்பது வரை தம்பிக்கு தெரிந்தது புவனாவுக்கு அவர்கள் இருவரும் எவ்வளவு நெருக்கம் என்று காட்டியது.
எல்லோரும் சாப்பிட்டு முடிக்க வஞ்சு ராம்குமாரின் காதைக் கடித்தாள்.
அவள் சொன்னதில் சங்கடத்துடன் ராம்குமார் “அக்கா! வஞ்சு வாஷ்ரூம் போகணுமாம். காட்டிட்டு வரேன். தீபு குட்டி உனக்கு பிடிச்ச பட்டர்ஸ்காச் ஐஸ்க்ரீம் மாமா சொல்லிருக்கேன். சாப்பிட்டே இருக்கணும். உன் மாமிக்கும் அதான் பிடிக்கும். ரெண்டு பேரும் ஹை-ஃபை குடுத்துக்கங்க.”
என்று இருவரின் கையையும் தட்டிக்கொள்ள வைத்தான்.
வஞ்சு தீபுவிடம் நன்றாக தான் பேசினாள். புவனாவிடம் மரியாதையோடு ஒதுங்கியவள் ஷ்யாம் கேட்ட கேள்விகளுக்கும் பணிவாகவே பதில் சொன்னாள்.
இருவரும் எழுந்து போக அப்போதும் கை கோர்த்தே இருந்ததை பார்த்தபடி இருந்த புவனாவை ஷ்யாம் சீண்டினான்.
“என்ன நாத்தனாரு என்ன சொல்றாங்க? தம்பி பொண்டாட்டி ஓகேவா?”
அவனை வருத்தத்துடன் பார்த்த புவனா “என்னை என்ன வில்லி ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?” என்று கேட்டாள்.
தீபு ஐஸ்க்ரீமில் மும்முரமாக இருக்க ஷ்யாம் அவளைப் பார்த்த பார்வை கூர்மையாக இருந்தது.
“வில்லியா இல்லைனாலும் பாசமாவும் இல்லையே? உன் தம்பி எவ்வளவு ஆசையா அந்த பொண்ண இன்றோடுஸ் பண்றான். ஒரு வார்த்தையாவது பேசினியா அந்த பொண்ணு கிட்ட?”
“நான் மட்டுமா பேசல? அவளும் தான் என் கிட்ட பேசல?”
“ம்ச்.. என்ன புவி இது போட்டி? நா உன் கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல? உன் தம்பி நீ பேசி வீட்டுல சரி பண்ணுவன்னு எவ்வளவு எதிர்பார்ப்போட இருக்கான்? 
நீ அதை கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாமா? உன் தம்பி மனச பாக்க வேணாமா? அவங்க ரெண்டு பேர் பார்வையிலேயே எவ்வளவு அன்பு தெரியுது பார்த்த இல்ல?”
“உங்க கண்ணுக்கு அது மட்டுமே தெரியுது. என் கண்ணுக்கு இனிமே என் தம்பி வாழ்க்கை சந்தோஷமா போகுமான்னு கவலை. அந்த பொண்ண பாத்தீங்க தானே? வந்ததுல இருந்து அவன் கையை விடவே இல்ல? 
நாம இருக்கோம்னு கூட பாக்கல! ரெஸ்ட் ரூம் கூட தனியா போக முடியாதா? அதுக்கு கூட அவன் கூட துணைக்கு போகணுமா? 
இதெல்லாம் நாளைக்கு சரிப்பட்டு வருமா சொல்லுங்க? ஒவ்வொன்னுக்கும் அவனை எதிர்பாத்துட்டு இருந்தா சரி வருமா? 
அந்த பொண்ணு எதோ டவுனில் இருந்து வந்ததா தம்பி சொன்னான். அந்த பொண்ணு ட்ரெஸ்ல பாத்தீங்களா? இதெல்லாம் எங்கம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது. கண்டிப்பா பிரச்சனை வரும். இத்தனை அவஸ்தையோட இந்த பொண்ணு என் தம்பிக்கு தேவையா சொல்லுங்க? 
இதெல்லாம் மாடர்னா பண்ணிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு தைரியமா இருக்கவும் தெரியணும் இல்லை?”
மூச்சு விடாமல் புவனா தன் கணிப்பைக் கூற மேலே ஷ்யாம் பதில் பேசுமுன் ராம்குமாரும் வஞ்சுவும் மேஜையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வஞ்சு என்னவோ சொல்ல ராம்குமார் அதற்கு சிரிப்போடு பதில் சொல்ல வஞ்சு அவன் புஜத்தில் குத்தி சிரிக்க இங்கிருந்து பார்த்த இருவருக்கும் அவர்களின் நேசம் புரிந்தது.
இருவரும் சிரித்தபடி கை கோர்த்து வர ஷ்யாம் திரும்பி புவனாவை அர்த்தமுள்ள பார்வை பார்க்க புவனாவால் எதுவும் பேச முடியவில்லை.

Advertisement