Advertisement

“ம்ம்… ஓகே சார்… ஆனா, நான் உங்களை சார்னு தான் கூப்பிடுவேன்…”
“பிரண்ட்லியா பழகியாச்சு, இன்னும் எதுக்கு இந்த சார், மோரெல்லாம்… என்னமோ கூப்பிடுங்க…” என்றவன் அதற்குப் பிறகு அமைதியாகிவிட்டான். கார் வீட்டை நெருங்கவே, அவன் கொடுத்த டவலைத் துடைத்துவிட்டு போர்வை போல் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தவள் அதை எடுத்துவிட்டு உடையை சரி செய்து கொண்டாள். 
“சார், ரெண்டு நாள்ல எங்க ஒரு டான்ஸ் கான்டஸ்ட் வருது… நம்ம பள்ளி சார்பா சில மாணவிகள் கலந்துக்கற நடனம் இருக்கு… நீங்களும் வந்தா சந்தோஷப்படுவேன்…”
“ம்ம்… டிரை பண்ணறேன்…” என்றவன், எங்கே எப்போது என்ற விவரங்களையும் கேட்டுக் கொண்டான்.
“சார், இன்னிக்காச்சும் வீட்டுக்கு வந்திங்கன்னா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார்…” ஓவியா சொல்ல யோசித்தவன், “சரி, என்னோட பெரிய விசிறின்னு வேற சொன்னார்… பாத்துட்டே கிளம்பறேன்…” என்றதும் அவள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
மழை குறையாமல் அடித்து ஊற்றிக் கொண்டிருக்க, தெருவில் மின்சாரம் காணாமல் போயிருந்தது.
“கரன்ட் போயிருச்சு போலருக்கு…” ஓவியா சொல்ல, கார் ஹெட் லைட் வெளிச்சத்தில் கவனமாய் ஒவியாவின் வீட்டுத் தெருவில் காரைத் திருப்பினான்.
வாசலிலேயே காத்திருந்தார் சிவநேசன். காரைக் கண்டதும் குடையுடன் ஓடி வந்து கேட்டைத் திறந்தார்.
கேட்டுக்குள் காரை நிறுத்த வசதி இல்லாததால் வாசலிலேயே வண்டியை நிறுத்தினான் பிரம்மா.
“வாங்க சார்…” ஓவியா அழைக்க காரிடம் வந்த சிவநேசன், குடையை மகளிடம் நீட்டினார்.
“இந்தா அம்மு குடை, சாரை நனையாம அழைச்சிட்டு வா…” என்றவர் டவலை தலையில் போட்டபடி வீட்டுக்கு ஓடினார்.
சட்டென்று நிமிர்ந்தவன் அவளைப் பார்க்க, இறங்கியவள் அவன் கதவுக்குப் பக்கத்தில் வந்து, “வாங்க சார்…” எனவும், இறங்கி குடையை வாங்கிக் கொண்டான்.
“ஓவியம் நனையாம நான் குடை பிடிக்கறேன்…” என்றவன் குடையை வாங்கிக் கொண்டு அவள் நனையாமல் பிடித்துக் கொள்ள அருகில் அவனுடன் சேர்ந்தபடி நடந்தவள் வீட்டுக்குள் நுழைய குடையை மடக்கிவிட்டு வந்தான்.
“வணக்கம் பிரம்மா சார், மழையோட வீட்டுக்கு வர்றிங்க… ரொம்ப சந்தோஷம், வாங்க…” என்றவர் கை கூப்ப சிரித்தான்.
“வணக்கம் சார்… எனக்கும் ரொம்ப சந்தோஷம்…” என்றவனிடம். “உள்ள வாங்க சார்…” என்று சொல்ல பாதி சுவரின் மீது அழகான மர வேலைப்பாடுடன் சாய்வாய் இருந்த சிட் அவுட்டில் சோபாவில் அமர்ந்தான் பிரம்மா.
செயற்கை மின்சார உதவியால் வீட்டில் வெளிச்சம் இருந்தது. “என்ன சார், இங்கயே உக்கார்ந்துட்டிங்க, உள்ள வந்து உக்காருங்க…” சிவநேசன் சொல்ல “இருக்கட்டும் சார்… இங்கயே நல்லார்க்கு… இந்த சிட் அவுட் டிஸைன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்றான் அதைப் பார்த்துக்கொண்டு.
“ம்ம்… கேரளால இருந்து என் பிரண்டு ஒரு ஆசாரியைக் கொண்டு வந்து பண்ணிக் கொடுத்த வொர்க்… எனக்கு கேரளா ஸ்டைல் வீடு ரொம்பப் பிடிக்கும்…” என்றார்.
“ம்ம்… நல்லாருக்கு சார்…” என்றவனிடம், “ஒரு நிமிஷம் சார், காபி… குடிப்பிங்க தானே…” என்றார் தயக்கத்துடன்.
“திவ்யமா குடிப்பேன்… அதும் இந்த மழை நேரத்துல…” அவன் சிரிப்புடன் சொல்ல, “இதோ வந்துடறேன் சார்…” என்றவர் வேகமாய் அடுக்களைக்கு சென்றார். காபிக்கு டிகாஷன் வைத்து மகளுக்குப் பிடிக்குமே என்று செய்த முந்திரிப் பக்கோடா, கார பிஸ்கட்டை ஒரு பிளேட்டில் வைத்தார்.
அதற்குள் உடை மாற்றி ஓவியா பிரஷ்ஷாய் அங்கே வரவும், “அம்மு, இதை சாருக்கு கொடு மா… நான் காபி கொண்டு வரேன்…” என்று சொல்ல அவள் வாங்கிக் கொண்டு வர, பிரம்மா போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான்.
“சார், அப்பா சூப்பரா காபி போடுவார்… ஸ்நாக்ஸ் எடுத்துக்கங்க…” என்றவள் அந்தப் பிளேட்டை டீப்பாயில் வைக்க முந்திரிப் பக்கோடாவை வாயில் போட்டவன், “ம்ம்… சூப்பரா இருக்கே…” என சாப்பிடத் தொடங்கினான்.
“நல்ல வேளை, மழை நேரமாப் போச்சு… இல்லன்னா நீங்க வந்தது தெரிஞ்சு பக்கத்துல உள்ளவங்க வந்திருப்பாங்க…”
“ம்ம்… உங்க அம்மா…”
“என் சின்ன வயசுலயே தவறிட்டாங்க சார்…”
சிவநேசன் காபி டிரேயுடன் வர, புன்னகையுடன் எடுத்துக் கொண்டான் பிரம்மா.
“காபி மணமே தூக்குதே…” என்றவன் ரசித்துக் குடித்தான்.
“நிஜமா நம்பவே முடியல சார்… எவ்வளவு உயரத்துல உள்ள நீங்க எங்களோட இவ்ளோ சாதாரணமாப் பழகறீங்க…” என்றார் சிவநேசன்.
“எவ்வளவு உயரத்துல ஏறினாலும் கீழே இறங்கித்தானே ஆகணும் அங்கிள்…” அவனையறியாமலே சொன்னவன் அவர் முகத்தையே யோசனையுடன் பார்க்க, “என்ன தம்பி, என்னை அப்படிப் பார்க்கறிங்க…” என்றார் அவர்.
“அது வந்து… உங்களை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்த போல இருக்கு… ஆனா எங்கேன்னு தான் தெரியல…”
“அப்படியா, நானும் கூட உங்களோட முன்னவே பேசிப் பழகின போல ஒரு பீல் வருது… எப்படின்னு புரியல…”
“நீங்க எங்க சார் வொர்க் பண்ணறீங்க…”
“ரெயில்வேல தம்பி…”
“ரெயில்வேலயா…” என்றவன் அவர் முதலில் சொன்ன அம்முவையும் சேர்த்து யோசிக்க, புரிவது போல் இருந்தது. சட்டென்று எழுந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
மெல்ல அவனது கண்கள் குழப்பத்தில் இருந்து மகிழ்ச்சிக்கு மாற அதில் ஒரு வெளிச்சம் குடி கொண்டது.
“நீ… நீங்க சிவநேசன் அங்கிளா…”
“அ..ஆமாம்… நீங்க…” என்று அவர் இழுக்க அவரது கைகளை நேசத்துடன் பற்றிக் கொண்டவன், “என்னைத் தெரியலியா… நல்லாப் பாருங்க…” என்று சொல்ல குழப்பத்துடன் உற்றுப் பார்த்தும் உருவ மாற்றம் கண்டு பிடிக்க முடியவில்லை.
“தெரியலயே தம்பி…” அவர் உதட்டைப் பிதுக்க, “ஹேய் அம்மு… உனக்கும் என்னைத் தெரியலியா… என்னை தாடி இல்லாம யோசிச்சுப் பார்…” என்றான் கண்ணைச் சிமிட்டி. நடப்பதை ஒரு கனவு போல் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
தாடி இல்லாமல் அந்த சிரிக்கும் கண்களை மட்டும் பார்க்கப் பார்க்க மனதுக்குள் ஒரு பட்டாம் பூச்சி பறப்பதை உணர முடிந்தவள், “தே..தேவ்… தேவ் கிருஷ்ணா, நீங்களா… நீங்களா பிரம்மா…” என்றவளின் கண்கள் வெளியே தெறித்து விடுவது போல் திகைப்பில் விரிந்தன.
“எஸ்ஸ்… கிரேட் அம்மு, கிரேட்… அம்முதான் ஓவியாவா… உன்னைப் பார்த்தப்ப இருந்தே மனசுக்குள்ள நெருக்கமான ஒரு பீல்… அது ஏன்னு புரியாம இருந்துச்சு… இப்பப் புரிஞ்சிருச்சு… ஐ ஆம் சோ ஹாப்பி… நான் யாரைப் பார்க்கனும்னு இத்தனை வருஷம் நினைச்சிட்டு இருந்தேனோ அவங்களைப் பார்த்துட்டேன்…” என்றவனின் முகத்தில் தெரிந்த உற்சாகமும், சந்தோஷமும் சற்றும் குறைவில்லாமல் சிவநேசன், அம்மு முகத்திலும் இருந்தது.
“தே..தேவ்… தம்பி, நீங்களா…” என்றவர் நிறைந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “அம்மு… நம்ம தேவ் மா… நாம எப்பவும் நினைக்கிற அதே தேவ் தான், பிரம்மாவா…” என்றவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.
“ரொம்ப சந்தோஷம், என்னோட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்ல தம்பி, மறுபடியும் உங்களைப் பார்க்க ரொம்ப முயற்சி பண்ணோம்… முடியல, இப்படி ஒரு சந்திப்பு எதிர்பார்க்கவே இல்ல…” என்றார் சிவநேசன்.
“தேவ், இங்க வாங்க…” என்ற ஓவியா, சட்டென்று அவன் கையைப் பிடித்து ஹாலுக்கு அழைத்துச் சென்றாள்.
“பாருங்க… நீங்க வரைஞ்ச ஒவியம் தான் என்னை எப்பவும் உயிர்ப்புடன் வச்சிருக்கு… உ…உங்களைப் பார்த்தும் என்னால கண்டு பிடிக்க முடியலயே…” என்றாள் வருத்தத்துடன். ஹாலில் நிறைந்திருந்த அவன் ஓவியங்களை சந்தோஷமாய் பார்த்தவன், “அது உன் தப்பில்ல ஓவியமே, தடிமாடு மாதிரி வளர்ந்து நிக்கற என் தப்பு…” என்றதும் வாய்விட்டு சிரித்தாள்.
அவள் சிரிப்பை ரசனையுடன் நோக்கி நின்றான் பிரம்மா. சின்ன வயதிலேயே அவன் மனதைக் கொள்ளை கொண்டு எங்கோயோ உள்ளுக்குள் புதைந்து, உறைந்து போன அதே கள்ளம் கபடமற்ற வெள்ளை சிரிப்பு.
“தம்பி, இது மட்டுமா, நீங்க தான்னு தெரியாமலே உங்க ஓவியம் எல்லாத்தையும் பொக்கிஷம் போல சேகரிச்சு வச்சிருக்கா… அதெல்லாம் பார்த்தா நீங்களே அசந்து போயிருவிங்க…” என்றார் சிவநேசன்.
“அப்படியா…” என்பதுபோல் அவளை மகிழ்வுடன் நோக்க,
“சரி, ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க… நான் டின்னர் ரெடி பண்ணறேன்… கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும் தம்பி…” அவர் உரிமையுடன் சொல்ல, “சரி அங்கிள்…” என்றான்.
“அம்மு… ஒரு ரயில் யாத்திரையில் ஒரே ஒரு நாள் பார்த்த என்னை மறக்கவே இல்லையா…” என்றான் அதிசயமாக.
நீரின் மேல் விழுந்த
இறகென மனம்
உன் நினைவில்
நிதமும் மிதந்து
கொண்டே இருக்கிறது…

Advertisement