Advertisement

அத்தியாயம் – 9
மழை சற்று வலுவாகவே பிடித்துக் கொள்ள மேலும் சிலர் கடையில் ஒதுங்கி நின்றனர். ஒருசிலரின் பார்வை எக்ஸ்ரே போல தனது உடல் துளைப்பதை உணர்ந்த ஓவியா அவஸ்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.
மழை தொடங்கியதும் வீட்டை அடையும் வேகத்தில் வண்டிகள் வேகமாய் கடக்கத் தொடங்கின. தான் செல்ல வேண்டிய பேருந்து தூரத்தில் தெரிந்த சாலையில் கடந்து கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு எப்படி இந்த மழையில் பேருந்து நிறுத்தத்தை அடைவது என்று புரியவில்லை.
ஆட்டோ எதுவும் வருகிறதா எனப் பார்த்தாலும் சாலைக்கு சென்றால் தான் காலி ஆட்டோ கிடைக்கும், எனப் புரிய தவிப்புடன் மழையை ரசிக்க முடியாமல் நின்றாள்.
அலைபேசியை நனையாமல் இருப்பதற்காய் கைப்பையில் போட்டிருக்கவே அது சப்தித்ததும் கேட்கவில்லை.
சிவநேசன் மகளைக் காணாமல் அழைத்துக் கொண்டிருந்தார்.
“அம்மு என்ன போன் எடுக்க மாட்டேங்கறா… மழை வேற வருது… பஸ் ஏறிட்டாளா, என்னன்னு தெரியலையே… குடை எடுத்திட்டு போகலாம்னு பார்த்தாப் போனும் எடுக்க மாட்டேங்கறா… இப்ப என்ன பண்ணுறது…” தவிப்புடன் அந்தத் தந்தை யோசித்துக் கொண்டிருக்க அவர் கையிலிருந்த அலைபேசி சிணுங்கியது.
“இது நேத்து அம்மு கால் பண்ணின நம்பராச்சே… அப்படின்னா, பிரம்மா சாரா…” திகைப்புடன் யோசித்துக் கொண்டே ஆன் பண்ணி காதில் கொடுத்தார்.
“ஹலோ…”
“ஹலோ இது டான்சர் ஓவியா வீடு தானே, நான் ஆர்டிஸ்ட் பிரம்மா பேசறேன்…” கம்பீரமாய் ஒலித்தது அவன் குரல்.
“ஆமா சொல்லுங்க சார்… நான் அவ அப்பா தான் பேசறேன்…”
“ஓ… வணக்கம் சார், ஒண்ணுமில்ல… சட்டுன்னு நேத்து கம்ப்ளெயின்ட் ஆன ஸ்கூட்டியை ரோட்டோரத்துல வச்சிட்டுப் போயிட்டமே, ஒண்ணும் பிராப்ளம் இல்லையேன்னு கேக்க தான் கூப்பிட்டேன்… வண்டியை எடுத்து சரி பண்ணிட்டிங்களா…”
“ம்ம்… உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, பிரம்மா சார்… என் பொண்ணு மட்டுமில்ல, நான் கூட உங்களோட மிகப் பெரிய விசிறி தான்… காலைலயே வண்டியை மெக்கானிக் விட்டு வண்டிய சரி பண்ணக் கொடுத்திருக்கு, நாளைக்கு தான் கிடைக்கும்னு சொன்னாங்க… நேத்து நீங்க வீட்டுக்குள்ள வராம அப்படியே கிளம்பினதுல கொஞ்சம் வருத்தம் தான்…”
“ரொம்ப சந்தோஷம் சார்… அது ஒரு வேலைன்னு அப்படியே கிளம்பிட்டேன்… இன்னைக்கு இந்தப் பக்கம் வரவும் நினைவு வந்துச்சு, கால் பண்ணேன்… ஓவியா இருக்காங்களா…”
“அவ இன்னும் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரல சார்… பஸ்ல வரேன்னு சொன்னா, போன் பண்ணாலும் எடுக்கல…”
“அப்படியா, மழை வேற பெய்யுது… நான் உங்க ஏரியால தான் இருக்கேன்… அவங்க ஸ்கூல் எங்கன்னு சொல்லுங்க… வழியில இருக்காங்களான்னு பார்க்கறேன்…”
“ரொம்ப நன்றி தம்பி…” என்றவர் விவரத்தை சொல்ல, “சரி சார்… வச்சிடறேன்…” என்றவன் காரை எடுத்தான்.
எதார்த்தமாய் அந்தப் பக்கம் ஒரு வேலையாய் வந்தவனின் மனம் நேற்றைய சம்பவத்தை யோசிக்க, அநாதரவாய் இரவில் விட்டுச் சென்ற வண்டியைப் பற்றிய கவலையில் அழைத்திருந்தான். இப்போது சிவநேசன் சொன்னதைக் கேட்டதும் நாட்டியப் பள்ளி இருந்த திசையில் மழை நீரை சிதறடித்துக் கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது.
தான் எதற்காக வந்தோம், இப்போது எதற்காக அவளைத் தேடி செல்கிறோம் என்றெல்லாம் யோசிக்காமல், “பாவம் மழையில் எங்காவது மாட்டிக் கொண்டிருப்பாளோ, நேற்று போல் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாதே…” மனம் இயல்பாய் தவிக்க அவனுக்கு வியப்பாய் இருந்தது.
அதிகம் யோசிக்காமல் வழி எங்கும் பார்வையால் சல்லடை இட்டவன், முக்கிய சாலையில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் வண்டியைத் திருப்பினான்.
மழையில் நனைந்ததில் கலைந்திருந்த ஓவியம் முகத்தில் கவலையுடன் அவன் கண்ணில் பட்டுவிட, அவள் அருகே சென்று காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கினான். தன் அருகில் நின்ற காரை வியப்புடன் ஏறிட்டவள் முகம் பிரம்ம கமலமாய் மலர்ந்தது.
“வாங்க ஓவியமே…” அவன் கையசைத்து உள்ளே ஏறும்படி கூறவும் அதற்கு மேல் யோசிக்காமல் முன் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தாள் ஓவியா. அதற்குள் மழை அவள் மீது மீண்டும் தன் திறமையைக் காட்ட முகத்தில் வடிந்த நீர்த்துளியை கையால் வழித்துத் துடைத்தாள்.
“டவல் இருக்கு, வேணுமா…” அவன் கேட்க, “இல்ல பரவால்ல சார்…” அவனுடையதை எப்படி உபயோகிப்பது என்ற எண்ணத்தில் மறுத்தாள்.
“அட, வாஷ் பண்ணி யூஸ் பண்ணாதது தான், இந்தாங்க…” அவன் எடுத்துக் கொடுக்கவும், தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.
“அநியாயமா இந்த மழை, ஓவியத்தைக் கலைச்சிருச்சே…” அவன் சொல்லவும் நிமிர்ந்தவள் புன்னகைத்தாள். முகம், கழுத்தில் இருந்த நீரை டவலால் ஒற்றிக் கொண்டவள்,
“ரொம்ப தேங்க்ஸ் பிரம்மா சார்… நீங்க எப்படி இந்தப் பக்கம்…” என்றாள் அவனிடம்.
விஷயத்தைக் கூறியவன், “உங்கப்பா உங்களைக் காணோம்னு எத்தன தடவை போன் பண்ணிருக்கார்… நீங்க அட்டன்ட் பண்ணாம பாவம், ரொம்ப தவித்துப் போயிட்டார்… முதல்ல அவருக்கு போன் பண்ணி சொல்லுங்க…” என்றதும்,
பாகில் இருந்து போனை எடுத்துப் பார்த்தவள் அதிலிருந்த தவறிய அழைப்புகளைக் கண்டு, “அச்சோ, பாவம் அப்பா…” என நினைத்தபடி அழைத்துப் பேசினாள்.
காரின் இருபக்கமும் வைப்பர், மழை நீரை வழித்தெடுத்து வழியை கண்ணாடியில் சீராகக் காட்டிக் கொண்டிருந்தது.
அதுவரை காரை எடுக்காமல் அங்கேயே நிறுத்தி இருந்தவன், “பேசியாச்சா, கிளம்பலாமா…” எனவும், “ம்ம்… எப்பெல்லாம் எனக்குப் பிரச்சனை வருதோ அப்பெல்லாம் ஆபத்பாந்தனா வந்து நிக்கறிங்க… இதுதான் பிரம்மவிதி போலருக்கு… ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றவளை நோக்கி அவன் புன்னகைக்க அந்த சிரிப்பின் வசீகரத்தில் தனை மறந்து லயித்துப் பார்த்தாள் ஓவியா.
கண்கள் சுருங்க சிரிக்கும்போது விழிகளில் ஒரு ஒளி தெரிய, கறுப்புத் தாடிக்குள் விடுபட்டு சிரிக்கும் இதழ்களில், லேசாய் தெரியும் பற்கள் சற்று முன் கண்ட மின்னலை நினைவு படுத்தியது. கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் அரைக்கை டீஷர்ட், ஜீன்ஸ்… என அம்சமாய் இருந்தவனை தன்னை அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தவளின் மனம் கேலி செய்ய சட்டென்று தனது பார்வையை மாற்றிக் கொண்டு முன்னில் பதித்தாள் ஓவியா.
“என்னாச்சு, ஓவியம் கூட ஓவியனை எடை போடுற போல இருக்கு… எப்படி, ஜஸ்ட் பாஸாச்சும் கிடைக்குமா…” அவன் கேட்க, தனைக் கண்டு கொண்டான் எனப் புரியவும் அவள் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
“ஹேய், கூல்… ரசிக்கறதுல எந்தத் தப்பும் இல்ல… இந்த உலகத்துல எந்த ஒரு விஷயத்திலும் ஏதாச்சும் ஒரு அழகு இருக்கும்… கலைஞர்கள் பொதுவாவே ரசனையானவர்கள்… நீங்க என்னை எடை போட்டதை நான் தப்பால்லாம் எடுத்துக்க மாட்டேன்…” என்று மீண்டும் சிரிக்க அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, மெல்லிய சிரிப்புடன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் குனிந்து கொண்டாள்.
“சரி… அதிருக்கட்டும், நான் உங்களை வாங்கன்னு சொன்னதும் உடனே வந்து வண்டில ஏறிட்டிங்க… இப்ப என் மேல நம்பிக்கை வந்திருச்சா, இல்ல இன்னைக்கும் பெப்பர் ஸ்ப்ரே எல்லாம் கைல பத்திரப்படுத்தி இருக்கீங்களா…” பிரம்மா கேட்கவும் நிமிர்ந்து புன்னகைத்தாள் ஓவியா.
“உங்ககிட்ட அதுக்கு அவசியமில்லைன்னு தோணுச்சு சார்…” அவள் சொல்லவும் திகைப்புடன் நோக்கினான்.
“ஓ… எதனால இந்த நம்பிக்கை…”
“நேத்து சொன்னது தான் இன்னைக்கும் சார்… ஒரு நல்ல கலைஞன் கண்டிப்பாத் தப்பு பண்ண மாட்டான்… நீங்க மிக சிறந்த கலைஞன்… நேத்து நான் பயப்பட்டது கூட முதல்ல எனக்கு நீங்க யாருன்னு தெரியாமலும், நீங்க டிரின்க் பண்ணி இருந்ததாலயும் தான் சார்…”
“ரியல்லி… சூப்பர், தென் ஒரு ரிக்வஸ்ட்…”
“என்னது சார்…”
“இதான், இந்த சார் தான் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுது… நான் ஓவியன், நீங்க ஓவியம்… இப்பதான் நமக்குள்ள ஒரு பிரண்ட்ஷிப் வந்திருச்சே… நீங்க என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாமே…” என்றான் சிரிப்புடன் அவளை நோக்கி.
“நீங்க ரொம்பப் பெரிய ஆள்… நான் எப்படி உங்களைப் பேர் சொல்ல முடியும்…” புன்னகையுடன் கூறியவளை நோக்கி தலையாட்டியவன்,
“ஹலோ, நான் அவ்ளோ வயசானவன் எல்லாம் இல்லங்க, உங்களை விட அஞ்சாறு வருஷம் மூத்தவனா இருப்பேன்… அவ்ளோ தான்…” என்றான்.
“நான் வயசை சொல்லல, உங்க உயரத்தை சொன்னேன்…”
“என்ன பெரிய உயரம், ஒரு ஆறடி இருப்பேன்…”
“ஹாஹா, ரொம்ப வேடிக்கையாப் பேசறிங்க சார்…”
“ப்ச்… மறுபடியும் சாரா… என்ன ஓவியமே இது…”
“சார், என் பேர் ஓவியம் இல்லை ஓவியா…”
“சரிதான்… ஆனா, எனக்கு வாயில் ஓவியம் தான் வருது… நான் அப்படியே கூப்பிடறேனே…”

Advertisement