Advertisement

“என்ன மேடம், நேத்து பெரிய வீர சாகசம் எல்லாம் பண்ண போல இருக்கு…” கேட்டவளை திகைப்புடன் நோக்கியவள்,
“உனக்கு எப்படி தெரியும்…” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“காலைல அப்பா போன் பண்ணி உன் போனை வீட்டுலேயே வச்சுட்டு வந்ததுல இருந்து வண்டி நின்னது, உன் ஆதர்ஷ நாயகன் ஹெல்ப் பண்ணது எல்லாம் சொன்னார்…”
அதைக் கேட்டதும் ஓவியா முகத்தில் ஒரு குழைவான புன்னகை எட்டிப் பார்க்க, “ம்ம்… இந்த அப்பா ஒரு ஓட்டவாய்… அதுக்குள்ள எல்லாத்தையும் உன் கிட்ட போன் பண்ணி ஒப்பிச்சிருக்கார்…” என அலுத்துக் கொண்டாள்.
“அப்பாவை சொல்லுறது இருக்கட்டும்… எப்படி இருந்தார் பிரம்மா சார்… போட்டோலயே செமையா இருப்பார்… நேர்ல எப்படி செம ஹான்ட்சமா…”
“ச்சீ, என்ன பேச்சு இது… அவர் எப்படி இருந்தா நமக்கென்ன…”
“எனக்கொண்ணும் இல்ல தான்… ஆனா உனக்கொண்ணும் இல்லேன்னு சொல்லிட முடியாதே… அவர் பேரை சொன்னாலே உன் முகத்துல சின்னதா ஒரு வெக்கப் புன்னகை வருதே… அதுக்கு என்ன அர்த்தம்…”
“அர்த்தமும் இல்ல, அனர்த்தமும் இல்ல… அவரும் நம்மைப் போல சாதாரண மனுஷன் தானே… பேரு பிரம்மான்னு இருக்கிறதால கடவுள் ஒண்ணும் இல்லையே…”
“இந்த சால்ஜாப்பு எல்லாம் வேணாம்… என்னதான் அவரோட ஓவியத்துக்கு நீ தீவிர ரசிகையா இருந்தாலும் அவரையும் கொஞ்சமாச்சும் ரசிக்காமலா இருந்திருப்ப… நான் கேட்ட வரைக்கும் அவர் ரொம்ப ஸ்மார்ட்டா இருப்பாராமே…” 
“இருந்துட்டுப் போகட்டும், நமக்கென்ன… எனக்கென்னவோ, அவர் தாடியும், மீசையும் சட்டுன்னு தீவிரவாதியைப் பார்க்கற போல தான் இருந்துச்சு…”
“அடிப்பாவி, அது இப்பத்த டிரன்டிங் தெரியுமா… ஓவியத்தை ரசிக்கத் தெரியுற உனக்கு அழகை ரசிக்கத் தெரியலியே…”
“தெரிஞ்ச வரைக்கும் போதும், வா வேலையை முடிப்போம்…”
“அது எப்பவும் தானே முடிக்கறோம்… முதல்ல நேத்து என்ன நடந்துச்சுன்னு சொல்லப் போறியா, இல்லியா…” ராதிகா பிடிவாதமாய் கேட்கவும், சுருக்கமாய் சொல்லி முடித்தாள்.
“அடிப்பாவி, உதவி செய்தவரை இந்த வாங்கு வாங்கிருக்க…”
“ஆமா, அவர் செய்தது தப்புன்னு தோணுச்சு, கேட்டேன்…”
“ஹூம்… உன்னைலாம் அங்கேயே நில்லுன்னு விட்டுட்டுப் போகாம கூட்டிட்டுப் போயி வீட்ல டிராப் பண்ணாரே, பெரிய விஷயம் தான்…” 
“அவர் செய்தது தப்புன்னு அவருக்கும் தோணிருக்கு, அதான் சாரி சொன்னார்… இருந்தாலும் இவ்ளோ பெரிய மனுஷன் நான் சொன்னதுக்காக, புரிஞ்சு சாரி சொல்லறது எல்லாம் பெரிய விஷயம் தான்… பார்க்க தீவிரவாதி போல இருந்தாலும் அவர் ஓவியம் போலவே அழகான மனசு…”
“பார்றா, திட்டுற போல திட்டிட்டு இப்ப பாராட்டுறியா… சரி, இந்தா உன் போன்… இனியாச்சும் கவனமா இரு…”
“ம்ம், ஒரு நாள் மறந்துட்டேன், அதுக்கு இவ்ளோ சீனு… சரி கிளம்பு, நாம புரோகிராம்க்கு உள்ள நகை எல்லாம் பார்த்திட்டு வந்திருவோம்… போட்டிக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குன்னு யோசிச்சாலே படபடங்குது…”
“அதெல்லாம் நம்ம பொண்ணுங்களை நல்லாவே ட்ரெயின் பண்ணிருக்கோம், பயப்படாத…”
“ம்ம்… தச்சு வந்த டிரஸ் அளவெல்லாம் சரி பார்க்கணும்… ஆடும்போது எங்காச்சும் பிடிக்கவோ, லூசா இருந்தாலோ கஷ்டம்… வந்து பார்க்கலாம்…” என்றவள் எழுந்து கொள்ள ராதிகாவின் வண்டியில் இருவரும் கிளம்பினர்.
நான்கைந்து கடைகளில் நகைகளைப் பார்த்து விலை கேட்டு நடன உடைக்குப் பொருத்தமான நகையை வாடகைக்குப் பேசி அட்வான்ஸ் கொடுத்தனர். எல்லாம் முடிந்து திரும்புகையில் மதிய உணவுக்கான நேரம் கடந்து கொண்டிருக்க, பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து சிறிது ஓய்வெடுக்க, நான்கு மணி வகுப்புக்கான மாணவிகள் வரத் தொடங்கினர்.
புதிய மாணவி ஒருத்தி அன்னையுடன் காத்திருக்க, “ராதி, நீ கிளாஸ் ஸ்டார்ட் பண்ணு… நான் அவங்களைப் பார்த்திட்டு வரேன்…” என்ற ஓவியா அவர்களிடம் சென்றாள்.
“வணக்கம் மேடம்… இது என் பொண்ணு ரம்யா, இவளுக்கு டான்சுன்னா ரொம்பப் பிடிக்கும்… சேர வந்தோம்…” அழகான வட்ட முகம், கதை பேசும் கண்கள் என சூட்டிப்புடன் இருந்த ரம்யாவைக் கண்டதுமே ஓவியாவுக்குப் பிடித்தது.
“ஓ, என்ன கிளாஸ் படிக்கிற ரம்யா…”
“பிப்த் மேம்… ஸ்மார்ட் ஸ்கூல்ல தான் படிக்கிறேன்…”
“மேடம், நான் பிரைவேட் கம்பெனில வொர்க் பண்ணறேன்… இவளா தான் ஸ்கூல் விட்டதும் டியூஷன் முடிஞ்சு இங்க வந்துட்டு, வீட்டுக்கு வரணும்… வீட்ல வேற யாரும் உதவிக்குக் கிடையாது…”
“ம்ம்… சரி, உங்களுக்கு எந்த டைம் வர முடியும்…”
“சிக்ஸ் மேம்…” என்றாள் அந்தப் பெண்.
“ம்ம்… சிக்ஸ் டு செவன் தான் லாஸ்ட் பாட்ச்… அது முடிஞ்சு உன்னால தனியா போயிக்க முடியுமா…”
“ம்ம்… போயிக்கறேன் மேம்…” அவள் சந்தோஷமாய் தலை ஆட்ட புன்னகைத்தாள்.
“ஓகே… இப்ப ஒரு கான்டஸ்ட்க்கு பிராக்டீஸ் தான் போயிட்டு இருக்கு… நெக்ஸ்ட் மண்டேல இருந்து புது பாட்ச் தொடங்குது… நீ ஜாயின் பண்ணிக்கலாம்…”
“தேங்க்ஸ் மேம்…” என்றவளின் கண்கள் ஆவலுடன் அங்கே ஆடிக் கொண்டிருந்த மாணவிகள் மீது படிய, “வாங்க, அட்மிஷன் போட்டுடலாம்…” என்றவள் அவளது அறைக்கு அழைத்துச் சென்று விண்ணப்பத்தைக் கொடுக்க பூர்த்தி செய்தவள், “அட்வான்ஸ் எதுவும் இப்ப கட்டணுமா…” என்று கேட்க, “பீஸ் மட்டும் மண்டே கொடுத்து விட்டாப் போதும்…” என்றவளிடம் தலையாட்டினாள்.
“அப்புறம், இன்னொரு விஷயம் மேடம்… ரம்யாக்கு அப்பா இல்ல, அவளுக்காக தான் இந்த உடம்புல நான் உசுரைப் பிடிச்சு வச்சிருக்கேன்… எதுவும் பிரச்னை வராம கவனமாப் பார்த்துக்கணும்…” என்றவரை நோக்கிப் புன்னகைத்தாள்.
“கண்டிப்பா, இங்க வர்ற குழந்தைங்க எல்லாம் என் பொறுப்பு… கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்குவேன்…”
“ம்ம்… சரி மேடம், நாங்க வர்றோம்…” என்றவள் கை குவித்துக் கிளம்ப ஆசையுடன் நடனமாடும் மாணவிகளைப் பார்த்தபடி கடந்தது ரம்யாவின் பெரிய அழகிய விழிகள்.
ராதிகாவுடன் ஓவியாவும் சேர்ந்து கொள்ள சீராக ஒலித்த சலங்கைகளின் சத்தம் இதமாய் ஹாலை நிறைத்தது.
கிளாஸ் முடிந்து மாணவிகள் கிளம்பத் தொடங்க,  ராதிகா ஓவியாவிடம் வந்தாள்.
“ஓவி… நான் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குப் போகணும்… இப்ப கிளம்பினா தான் சரியாருக்கும்… நீயும் வந்தா, வீட்ல டிராப் பண்ணிட்டுப் போறேன்…”
“இல்ல ராதி… கொஞ்சம் சிஸ்டம் வேலை இருக்கு… நீ கிளம்பு… நான் பார்த்துக்கறேன்…”
“அதை நாளைக்குப் பார்க்கலாம்ல, பஸ் ஸ்டாப்புக்கு அவ்ளோ தூரம் நீ நடக்கணுமேன்னு தான் சொன்னேன்…”
“நாளைக்கு வேற வேலை இருக்கு… இன்னைக்கு இதை முடிச்சா தான் உண்டு… நீ கிளம்பு, நான் பார்த்துக்கறேன்…”
“சரி… நான் கிளம்பறேன், பத்திரமா கிளம்பு… இன்னைக்கும் வழியில முழிச்சிட்டு நின்னா, உன் நாயகன் வருவான்னு எதிர்பார்க்காத…” என்றவளை முறைத்து தலையாட்டி, அவள் கிளம்பியதும் புன்னகையுடன் அறைக்கு சென்றாள்.
“நேத்து ஒருநாள் வழியில மாட்டிகிட்டேன்… அதுக்காக என்னை குழந்தை போல ஆயிரம் பத்திரம் சொல்லுறா…” என சிரித்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தவள் மனதில் சிநேகத்துடன் கண்கள் சுருங்க சிரித்த பிரம்மாவின் புன்னகை முகம் வந்தது.
“சிரிச்சா ரொம்ப அழகா தான் இருக்கார்… நாம தான் தாடியப் பார்த்து கேடியோன்னு தப்பா நினைச்சுட்டோம்…” என தன்னைத் தானே தட்டிக் கொண்டு கம்ப்யூட்டரில் பார்வையைப் பதித்தாள். கண்கள் மாணவிகளின் புகைப்படத்தைக் கண்டாலும் மனமோ பிரம்மாவின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.
“ச்சே… என்ன இது… எப்பவும் இல்லாம ஒரு ஆம்பளையை இப்படி எல்லாம் யோசிச்சு ரசிச்சிட்டு இருக்கேன்… இது தப்பாச்சே…” என்றவள் தலையை குலுக்கிக் கொண்டு மீண்டும் கவனத்தை கணினித் திரையில் வைக்க, மீண்டும் அவன் கிண்டலாய் சொன்ன, “சாரி நான் மெக்கானிக் இல்லை…” என்ற வார்த்தை நினைவில் வர,
“அறிவும், திறமையும் இருக்கறவங்க கிட்ட இயல்பாவே ஒரு திமிரும் வந்து ஒட்டிக்குது… இந்த பிரம்மாவும் அதுல மோசமில்லை…” என நினைத்தவள், “ஹூம்… வேலையை செய்யாம இதென்ன இப்படி யோசிச்சிட்டிருக்கேன்… இங்க  சும்மா நேரத்தைப் போக்குறதுக்கு பேசாம வீட்டுக்காச்சும் கிளம்பலாம்…” யோசித்தவள் கணினியை அணைத்துவிட்டு எல்லாம் எடுத்து வைத்து கிளம்பினாள்.
“ஒருவேளை ராதி சொன்ன போல இன்னைக்கும் பிரம்மாவைப் பார்ப்பேனா…” ஆசையுடன் யோசித்த மனதின் போக்கு அவளுக்கு திகைப்பாகவும், திகிலாகவும் இருந்தது.
எல்லாம் சரி பார்த்து அறையைப் பூட்டிக் கொண்டு வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி வேகமாய் நடக்கத் தொடங்கினாள்.
நேரம் எட்டை நெருங்கியிருக்க, அமாவாசை வானம் இருட்டுப் போர்வை போர்த்துக் கொண்டு நட்சத்திரங்களைத் தொலைத்திருந்தது. தேகம் தழுவிய காற்றில் மண் மணத்து எங்கோ மழை பெய்வதாய் அறிவிக்க, கவலையுடன் வானத்தைப் பார்த்தவளுக்கு இருட்டைத் தவிர வேறு தெரியவில்லை.
“மழை வர்ற போல இருக்கு… பஸ்சுக்கு காத்து நிக்காம ஆட்டோ கிடைச்சாப் போயிட வேண்டியது தான்…” என நினைத்துக் கொண்டே வேகமாய் நடக்க இருட்டைக் கிழிக்கும் வெளிச்சத்துடன் வானில் மின்னல் வெட்ட, டமார் என்ற சத்தத்துடன் பெரிய இடியின் சத்தமும் இணைந்து கேட்டு அவளை மிரள வைத்தது.
அடுத்த சில நொடிகளில் வரிசையாய் தொடர்ந்த இடி சத்தத்தைத் தொடர்ந்து படபடவென்ற சத்தத்துடன் பெரும் துளிகளை சுமந்து கொண்டு பூமியை அணைக்கும் வேகத்துடன் பெய்யத் தொடங்கியது மழை. வேகமாய் அருகில் இருந்த கடை வாசலுக்கு ஓடியவளை கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இன்றி உடைகளை நனைத்து அவள் அழகு உடலை ஆசையுடன் தழுவிக் கொண்டிருந்தது.
என் சிந்தைக்குள் புகுந்து
என் நினைவுகள்
எல்லாம் செல்லரிக்கும்
வரை உணர்ந்ததில்லை…
படைப்பாளி மட்டுமல்ல,
நீ ஒரு தாடி வைத்த
கேடியும் தான் என்று…

Advertisement