Advertisement

அத்தியாயம் – 8
அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவைக் கனிவோடு நோக்கிய பிரம்மா, “அமிர்தா, உனக்கு என்னாச்சுமா… ரெண்டு நாள்ல இது என்ன கோலம்…” என்றான் புரியாமல்.
“ப்ச்… ஒண்ணுமில்ல… தினமும் போடற மாத்திரையை ஒரே ஒரு நாள் தான் போடல, அதுக்கு மூச்சுத் திணறல், மயக்கம்னு படுத்தி எடுத்திருச்சு… நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க பிரம்மா… உங்களைப் பார்த்ததும் எனக்கு பாதி ஒகே ஆயிடுச்சு…” மென்மையாய் சிரித்தவள், “அப்பா, கேக் ஆர்டர் பண்ணிருந்தேன்ல, அதை வாங்கிட்டு வர ஈவனிங் டிரைவரை அனுப்பிடுங்க… நல்லவேளை, அதைக் கான்சல் பண்ண டைம் கிடைக்கல…”
“சரி மா, அனுப்பறேன்…”
“அப்பா, பர்த்டே பேபிக்கு புது டிரஸ் வாங்கி வச்சிருந்தேனே… அதைக் கொடுங்க…” என்றதும் பிரம்மா திகைத்தான்.
“எதுக்கு இதெல்லாம்… எனக்கு இந்த மாதிரி செலபரேஷன் எல்லாம் பழக்கமில்லை…”
“உங்க தங்கை கொடுத்தா வாங்கிக்க மாட்டிங்களா, எனக்காக வாங்கிக்கங்க ப்ளீஸ்…” என்றவளை அவன் திகைப்புடன் நோக்க, “நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாமா…” என்றவளின் கண்கள் கலங்க அவனுக்குள் இருந்த பெரிய திரை ஒன்று விலகி மனது லேசானது போல் இருந்தது.
“ஹேய், என்ன இது… தாராளமா கூப்பிடு… இதுக்குப் போயி கலங்கிட்டு… எனக்கு தம்பி மட்டும் தான், தங்கை இல்லையேன்னு சின்ன வயசுல ஏங்கியிருக்கேன்…”
அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், “தேங்க்ஸ் அண்ணா… என்னோட அண்ணனுக்கும் இதே டேட்ல தான் பிறந்தநாள்… ஆனா அதைக் கொண்டாட அவன் உயிரோட இல்லை…” அவள் குரல் கமுற சொல்லவும், மதியழகன் கலக்கத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க பிரம்மா அதிர்ந்து நோக்கினான்.
“பாப்பா, நீ அம்மா கூடப் போயி அந்த டிரஸ் பாக்ஸ் எடுத்துட்டு வா…” எனவும், “ம்ம்… சரிப்பா, எடுத்திட்டு வரேன்…” என்றவள் அன்னையுடன் நகர்ந்தாள். 
“சார், இவங்க சொல்லறது… உங்க பையன்…”
“உண்மைதான் பிரம்மா… அருண் என் மூத்த பையன்… இவளுக்கு அண்ணன்னா ரொம்ப உசுரு… அவனும் அப்படித்தான்… தன்னை விட நாலு வயசு சின்னவளா இருந்த தங்கையை எங்களை விட ரொம்ப கவனமாப் பார்த்துக்குவான்… அவன் தான் பஸ்சுல இவளை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வருவான்… அப்படி ஒருநாள் ரெண்டு பேரும் பஸ் ஏறும்போது முதல்ல தங்கையை ஏத்திவிட்டுட்டு அடுத்து அவன் ஏறுறதுக்குள்ள பஸ் நகரவும் தவறி விழுந்தவன் மேல… சக்கரம் ஏறிடுச்சு…” என்றவரின் கண்கள் நிற்காமல் நிறைந்து நின்றது.
“அதைப் பார்த்து அதிர்ச்சில அமிர்தாவும் மூச்சு இழுத்துகிட்டு மயங்கி விழவும், ரெண்டு பேரையும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க… ஆனா கொஞ்ச நேரத்துல பையன் மூச்சு நின்னுபோச்சு… பொண்ணைப் பரிசோதித்த டாக்டர் இன்னொரு அதிர்ச்சியான விஷயத்தையும் சொன்னார்…” அவர் நிறுத்த என்னவென்பது போல் பார்த்தான் பிரம்மா.
“அமிர்தா இதய சுவர்ல துளை இருக்குன்னு…”
“ஐயோ, என்ன சொல்லறிங்க சார்…” அதிர்ச்சியோடு கேட்டான் பிரம்மா.
“ம்ம்… அவளுக்கு பிறக்கும்போதே அந்தப் பிரச்சனை இருந்தது அதுவரை வெளிய தெரியல… அந்தத் துளை வழியா அதிக ரத்தம் நுரையீரல்க்கு போனதால தான் மூச்சுத் திணறல், படபடப்பு, மயக்கம் வந்திருக்குன்னு டாக்டர்  சொல்லிட்டார்…” சொன்னவர் மகள் வருவதைக் கண்டு நிறுத்தி கண் சிமிட்டினார்.
“அவளுக்கு இது தெரியாது…” என்று சொல்ல கவலையும் அதிர்ச்சியுமாய் அவளை நோக்கினான் பிரம்மா.
“அண்ணா, எனக்குப் பிடிச்ச கலர்ல எடுத்தேன்… உங்களுக்கு சரியா இருக்கும் நினைக்கிறேன்… பிடிச்சிருக்கா பாருங்க…” என்றவள் நீட்டிய கவரை வாங்கிக் கொண்டான். இளம் ரோஜா வண்ணத்திலும் அடர் நீலத்திலுமாய் இரண்டு சட்டைகள் அழகாய் இருந்தது.
“ரொம்ப நல்லாருக்கு மா, தேங்க்ஸ்…”
“அண்ணா, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டறேன் வாங்க…”
அமிர்தா அழைக்க, “போயி பார்த்திட்டு வாங்க…” என்றார் மதியழகன். அவன் கஷ்டப்பட்டு தனது அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு அவளுடன் சென்றான்.
அங்கே ஒரு அறையில் சின்ன வயது முதல் அமிர்தாவும், அவள் அண்ணனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன், பிரம்மாவுடன் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இருந்தது. சிறு வயது விளையாட்டுப் பொருட்கள், சின்ன சைக்கிள் என்று அந்த அறை இப்போதும் குழந்தைகளின் அறை போலவே இருந்தது.
“இங்க பார்த்திங்களா… அண்ணா அப்படியே உங்க ஜாடைல இருக்கான்ல… போன வருஷம் உங்களைப் பார்த்தப்ப எனக்கு அண்ணாவை மறுபடியும் பார்க்கற போல இருந்துச்சு… அதான் நீங்க என்னை எத்தனை விலக்கி நிறுத்தியும், நானே உரிமை எடுத்துகிட்டு நெருங்க முயற்சி பண்ணேன்… தப்பா எடுத்துக்காதிங்க அண்ணா… என்னைத் தங்கையா ஏத்துக்குவிங்க தானே…” என்றாள் ஏக்கத்துடன்.
“சாரி மா, உன் அன்பையும், உரிமை எடுத்துப் பழகறதையும் தப்பாப் புரிஞ்சுகிட்டேன்… கண்டிப்பா நானும் உனக்கு அண்ணன் தான்…” என்றவன் நெகிழ்ச்சியுடன் அவள் தலையைக் கோதி விட்டான்.
“ம்ம்… ரொம்ப சந்தோஷம் அண்ணா… என் அண்ணா பிறந்த நாள்ல எனக்கு மீண்டும் ஒரு அண்ணா கிடைச்சிருக்கார்…” அதற்குப் பிறகு நிறைய அண்ணனைப் பற்றிய கதைகளை அவள் ஆவலுடன் சொல்லிக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்தான். மதியம் உணவு முடிந்து அவள் மாத்திரை உபயத்தில் ஓய்வெடுக்க, மதியழகனிடம் கேட்டான்.
“அமிர்தாக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது தெரியாம எப்படி, இதை சரி பண்ண முடியாதா சார்…”
“அவளுக்கு மூச்சுத் திணறல் இருக்குன்னு தான் தெரியும்… இப்படின்னு தெரிஞ்சா பயந்துக்குவான்னு சொல்லல… மூணு வயசுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா ஆப்பரேஷன் மூலமா சரி பண்ணியிருக்கலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க… இப்ப மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வரணும்… அது அந்த வால்வ் சுவரை பலப்படுத்தி துளையை சிறியதாக்க முடிஞ்சா அடுத்து ஆப்பரேஷனுக்கு முயற்சி பண்ணனும்…”
“ம்ம்… கேட்கவே கஷ்டமாருக்கு… எப்பவும் சிரிச்சுகிட்டு, துறுதுறுன்னு இருக்கற பொண்ணுக்குள்ள இத்தனை கஷ்டங்களா… நீங்களும் ஏதும் சொன்னதில்லையே…”
“ம்ம்… சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கலாம்… துக்கத்தைத் தேவையில்லாம எல்லார் கிட்டயும் பகிர்ந்துக்க முடியறதில்லை… இப்ப அவளை நீங்க புரிஞ்சுக்கறதுக்கு வேண்டி இதை சொன்னேன்…”
அவள் விருப்பப்படியே மாலையில் அவர்கள் மட்டுமாய் கேக் வெட்டிக் கொண்டாடினர். இரவு உணவும் முடிந்து தான் செல்ல வேண்டும் என்ற அவள் கோரிக்கையை அவனால் இப்போது நிராகரிக்க முடியவில்லை. பிரம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் அவள் முகத்திலும் ஒரு தெளிவு வந்திருக்க அவனுக்கும் சற்று சந்தோஷமாய் இருந்தது.
பழைய நினைவுகளின் தாக்கத்தில் மதியழகன் சற்று டிரிங்க்ஸ் எடுத்துக் கொள்ள, பிரம்மாவிடம் வேண்டுமா என்று கேட்க, அமிர்தாவை யோசித்துக் கொண்டிருந்தவன் மறுக்காமல் இரண்டு பெக் உள்ளே தள்ளி விட்டான்.
அவன் சொல்வதை அதிர்ச்சியும், கவலையுமாய் கேட்டிருந்த ராகவ், “என்னது, குடிச்சிங்களா…” எனக் கேட்க, “ஹூம்… ஒரு பீலிங்குல அந்தக் கருமத்தை உள்ள தள்ளிட்டு அந்த ஓவியத்துகிட்ட மாட்டி உபதேசத்தைக் கேட்க வேண்டியதாப் போயிருச்சு… அது இன்னும் கொடுமை…” என்றதும், “ஓவியமா, எந்த ஓவியம்…” என்றான் ராகவ் வியப்புடன்.
“அதான் மேன், நம்ம ஓவியத்துல எல்லாம் ஒரு முகம் தெரியுதுன்னு சொன்னேனே, அந்தப் பொண்ணு ஓவியா…”
“என்னது ஒவியாவைப் பார்த்திங்களா… எங்க, எப்ப…” என்றவனை முறைத்தவன், “நீ என்ன ஓவரா கேள்வியா கேட்டுட்டு இருக்க… டைம் ஆச்சு, போயி தூங்கு…” என்றவன் பதில் சொல்லாமல் எழுந்து அறைக்கு சென்று விட்டான்.
“ம்ம்… தெய்வம் இப்படி சோகத்தை மட்டும் சொல்லிட்டு சந்தோஷத்தை தனக்குள்ள வச்சுட்டு கிளம்பிருச்சே…” எனப் புலம்பிக்கொண்டே அவனும் அறைக்கு சென்றான்.
ராகவிடம் சொல்லியதில் மனதின் பாரம் குறைந்தது போல் இருக்க, இறுதியில் அவன் கேட்ட எந்த ஓவியம் என்ற கேள்வி மண்டைக்குள் நுழைந்து, மனதில் அவள் உருவத்தைக் காட்ட, இதழில் புன்னகையைத் தந்தது.
“ஓவியா, ம்ம்… ஓவியம் போல தான் இருக்கா… பிறந்ததுமே எப்படி இத்தனைப் பொருத்தமா பேர் வச்சாங்களோ…” படுக்கையில் விழுந்தவன் மனதில் அவள் காரிலிருந்து இறங்கும்போது கீழே விழுந்த பெப்பர் ஸ்ப்ரே பாட்டில் நினைவில் வர இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது.
“ரொம்பப் பாதுகாப்பான ஆயுதம் தான்…” யோசித்தவன் புன்னகையுடன் கண்ணை மூடிக் கொண்டான்.
காலையில் சிவநேசன் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு நேரமே ஸ்கூட்டியை எடுக்க கிளம்பியிருந்தார்.
சிம்பிளாய் சமையலை முடித்துக் கொண்ட ஓவியாவை வீட்டில் இருந்த இன்னொரு எண்ணில் அழைத்து, “அம்மு, வண்டில ஏதோ பிராப்ளம் போல, நாளைக்கு தான் கிடைக்கும்னு சொல்லுறார் மா…” என்றார் தந்தை. 
“சரிப்பா, நான் பஸ்ல போயிக்கறேன்… நானே சமையலை முடிச்சுட்டேன்… இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க… நான் குளிச்சிட்டு கிளம்பறேன் பா…” என்றவள் தயாராகி பேருந்தில் கிளம்பினாள்.
“தா தை… தித்தித்தை…” தெளிவான குரலில் ஒலிக்கும் சுதிக்கு ஏற்றவாறு மாணவிகளின் சலங்கைகள் ஒலித்துக் கொண்டிருக்க, தனது அறைக்குள் நுழைந்தாள் ஓவியா.
“அண்ணே, நாளைக்கு புரோகிராம்க்கு வேண்டிய டிரஸ் எல்லாம் வந்திருச்சா…” பியூன் பெரியசாமியிடம் கேட்க,
“வந்திருச்சு மா… ராதிகா மா, செக் பண்ணி வச்சிட்டாங்க…”
“ம்ம்… ராதுவைக் கொஞ்சம் வர சொல்லுங்க…” என்றதும் அவர் கிளம்ப புன்னகையுடன் வந்தாள் ராதிகா.

Advertisement