Advertisement

“ம்ம் ஆமா சார், கொஞ்சம் வேலை இருக்கு… இன்னைக்கு முடிச்சு கொடுக்கணும்… அதான் மறுத்தேன்… தப்பா நினைச்சுக்காதிங்க…”
“ம்ம்… புரியுது பிரம்மா, உங்களை டிஸ்டர்ப் பண்ணறதா நினைக்க வேண்டாம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்… பார்க்க முடியுமா…” அவர் கேட்கவும், “இவர் என்ன என்கிட்ட பேசப் போறார்… ஒருவேள அந்தப் பொண்ணு எதாச்சும் லவ்வுன்னு சொல்லிருக்குமோ…” யோசித்தவன், “எதுவா இருந்தாலும் இப்பவே சரி பண்ணறது தான் நல்லது…”  என நினைத்து, “சரி சார்… எங்க மீட் பண்ணலாம்…” என்றான்.
“நம்ம வீட்டுக்கே வந்துடறீங்களா ப்ளீஸ்…” வயதில் மூத்த, தான் மதிக்கும் ஒரு நபரின் கெஞ்சலான வார்த்தைகளை மறுக்க முடியாமல், “ம்ம்… வரேன் சார்…” என்றான்.
ஓவியத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்தவன் உடை மாற்றி ஹாலுக்கு வர, வெளியே ஒரு வேலையாய் சென்று திரும்பி இருந்த ராகவ், “டிராயிங் ரூம்ல இருக்கீங்கன்னு ஜானும்மா சொன்னாங்க…” என்றான் கேள்வியுடன்.
“ம்ம்… அந்த இராமாயண ஓவியம் தான் வரைஞ்சுட்டு இருந்தேன்… மதியழகன் சார் கால் பண்ணார்… பார்த்துப் பேசிட்டு வந்துடறேன்… வந்து முடிச்சுக் கொடுத்துடலாம்…” என்றவனிடம் அவன் ஏதோ கேட்க வரவும், “வந்து பேசிக்கலாம்…” என்றவன் காரை எடுத்துக் கிளம்பினான்.
“அமிர்தம்” பளிங்குக் கல்லில் தங்க எழுத்துகள் மின்னிய பெரிய கேட்டின் முன் காரை நிறுத்தி ஹாரன் அடித்தான் பிரம்மா. முன்னில் காவலுக்கு இருந்த செக்யூரிட்டி இவனைக் கண்டதும் பரிச்சயத்துடன் புன்னகைத்து ஒரு சல்யூட் வைத்து கேட்டைத் திறக்க இரு புறமும் நிறைந்திருந்த செடிகளுக்கு நடுவே பிரம்மாண்டமாய் அழகாய் இருந்த மினி பங்களா முன் கார் அமைதியானது.
கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த மதியழகன் பிரம்மாவை அன்புடன் வரவேற்றார். அங்கங்கே நரைத்திருந்த கேசத்துக்கு கலர் அடிக்காமல் இயல்பாய் அப்படியே விட்டிருந்தார். இதழ்கள் புன்னகையை சிந்தினாலும், வெளுத்த முகத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மூக்குக் கண்ணாடிக்குள் பளபளத்த கண்களில் சோகம் அப்பிக் கிடந்தது.
“வாங்க பிரம்மா… என் பேச்சை மதிச்சு நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்…” கை குலுக்கி வரவேற்றவரைப் புன்னகையுடன் பின் தொடர்ந்தான் பிரம்மா.
“உக்காருங்க…” சோபாவைக் காட்டியவர், “மேனகா, யாரு வந்திருக்காங்க பாரு…” என்றதும் அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த அவர் மனைவி, இவனைக் கண்டதும் சோகமாய் புன்னகைக்க இவனுக்கு குழப்பமாய் இருந்தது.
“வாங்க தம்பி, இன்னிக்கு உங்க பிறந்தநாள்னு சொன்னாங்க,  வாழ்த்துகள்…” என்றார் உதட்டில் மட்டும் மலர்ச்சியுடன்.
“ம்ம்… நன்றி மேடம்…” அவன் சொல்லவும், “இதோ வந்திடறேன்…” என்றவர் அடுக்களைக்கு சென்று சூடான பாதாம் பாலுடன் வந்தார்.
“தேங்க்ஸ் மேடம்…” என்றவன் ஒரு கிளாசை எடுத்துக் கொள்ள, “உங்களுக்கு பாதாம் பால் பிடிக்கும்னு அம்ரு சொன்னா…” என்றார் அவர்.
“ஓ… எங்க அமிர்தா, ஆளைக் காணோம்…”
“ஆறுறதுகுள்ள குடிங்க… அவ வருவா…”
“பிரம்மா, எப்படியும் வீட்டுக்கு வந்துட்டிங்க, எங்களோட லஞ்ச் சாப்பிடறதுல ஆட்சேபனை இல்லையே…” மதியழகன் கேட்க, “வீட்ல கொஞ்சம் வொர்க் இருக்கு சார்… நீங்க கால் பண்ணி சொன்னதால வந்தேன்…” என்றான்.
“ப்ளீஸ், இன்னும் கொஞ்ச நேரத்துல லஞ்ச் டைம் ஆயிடும்… அதை இங்கயே சாப்பிடலாமே…” அவர் மீண்டும் சொல்ல, யோசித்தவன், “சரி, உங்க விருப்பம்…” என்றான்.
“என்ன சார், ஏதோ பேசணும்னு சொன்னிங்க…”
“ம்ம்… பேசுவோம்… உங்க பாமிலி எல்லாம் எங்க இருக்காங்க… யாரையும் இங்க பார்த்தது இல்லியே…”
“நாங்க ஆந்திராவுல செட்டிலான தமிழ் குடும்பம்… என் குடும்பத்துல எல்லாரும் ஆந்திரா, நரசிங்கப்பள்ளிங்கற ஊருல இருக்காங்க… அங்க எங்களுக்கு ஏக்கர் கணக்குல பண்ணை, விவசாயம், ரைஸ் மில்லுன்னு இருக்கு… அப்பாவும், தம்பியும் அதைப் பார்த்துக்கிறாங்க…”
“ஓ… நல்ல விஷயம் தான்… அப்புறம் எப்படி நீங்க இங்க வந்திங்க…” என்றார் அவர் புரியாமல்.
“எனக்கு ஓவியம்தான் எல்லாம்னு தோணுச்சு, வந்துட்டேன்..”
“வந்துட்டேன்னு சொன்னா…”
“வீட்டை விட்டு வந்துட்டேன்…” என்றான் பிரம்மா. அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவர், “என்ன பிரம்மா சொல்லறிங்க… வீட்டை விட்டு வந்திங்களா…”
“ம்ம்… என் ஓவியத்தோட மதிப்பு அவங்களுக்குத் தெரியல, ரசிக்கப்படாத இடத்துல ஓவியத்துக்கு என்ன வேலைன்னு கிளம்பிட்டேன்… அதுக்காக அவங்க யாரும் வேண்டாம்னு எல்லாம் நினைக்கல, அப்பா கொஞ்சம் கோபமா இருக்கார்… ஒரு சாதனையாளனா தான் அவங்க முன்னாடி நிக்கனும்னு வெறியோட வரைஞ்சுட்டு இருக்கேன்…”
“ஓ… இத்தனை நாளா இதெல்லாம் எனக்குத் தெரியவே இல்ல பாருங்க…” என்றார் அவர் திகைப்புடன்.
“இதுல தெரிஞ்சுக்க என்ன இருக்கு சார்… ஓவியம் என் உயிர்… எனக்கு உயிர் தந்த அவங்களே என் உயிரைப் பறிக்க நினைக்கிறது சரியில்லை தானே…”
“ம்ம்… ஓவியம் வரையறதுல இவ்வளவு விருப்பமா…”
“விருப்பம் மட்டுமில்லை சார்… என் வாழ்க்கையே ஓவியம் தான்… எனக்கான பாதை ஓவியம்னு முடிவு பண்ண பின்னாடி அதுக்கான பாதைல போறது தானே சரி…”
“ம்ம்… ஓவியத்தில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு தான் இத்தனை சின்ன வயசுல உங்களை ஒரு வெற்றி பெற்ற ஓவியனா உருவாக்கியிருக்கு…”
“இல்ல சார்… என்னைப் பொறுத்த வரைக்கும் வெற்றின்னாலே தோல்வி தான்… நான் வெற்றி அடைஞ்சுட்டேன்னு நினைச்சா, அதோட நம்ம வளர்ச்சி நின்னு போயிடும்… நான் இப்பவும் வெற்றிக்கான பாதைல போயிட்டு இருக்கேன், அவ்ளோ தான்…”
“ரொம்ப அருமையா சொன்னிங்க பிரம்மா… உங்களை நினைச்சா பெருமையா இருக்கு…” என்றார் மனதார அவனைப் பாராட்டி.
“அதெல்லாம் இருக்கட்டும் சார், அமிர்தா எங்க… நான் உங்க வீட்டுக்கு வரணும்னு ரொம்ப எதிர்பார்த்தது அவங்க தான்… இப்ப ஆளையே காணோம்…” அவன் கேட்கவும் அது வரை இயல்பாய் உரையாடியவரின் முகம் வாடியது.
“ம்ம்… அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியல… வாங்க… அவளைப் பார்த்திட்டு வரலாம்…” என்றவர் எழுந்து கொள்ள, அவனும் புரியாமல் எழுந்து நின்றான்.
“எழுந்து வர முடியாத அளவுக்கு அப்படி என்ன உடம்புக்கு, ஒருவேளை, காய்ச்சலா இருக்குமோ…” என நினைத்தவன் அமைதியாய் அவரைத் தொடர்ந்தான்.
வெறுமனே சாத்தியிருந்த ஒரு அறைக்கதவைத் தள்ள உள்ளே கட்டிலில் கலைந்து போன ஓவியம் போல் களைத்துக் கிடந்தாள் அமிர்தா. அவள் கண்கள் சோர்வுடன் மூடி இருக்க, இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த பொலிவான அமிர்தாவா இவள் என்பது போல் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் பிரம்மா.
மகள் அருகே சென்று அமர்ந்த மதியழகன், “அம்ரு, பாப்பா… இங்க பாருடா… யாரு வந்திருக்காங்கன்னு…”
“அமிர்தாக்கு என்னாச்சு சார்…” அவன் கேட்க கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு தலையாட்டியவர், மகள் அருகே அமர்ந்து மெல்ல அழைத்தார்.
அவரது குரல் அவளது மூளையை உணர்த்த மெல்ல அசைந்தாள். இமைப் போர்வை கனமான கம்பளி போல் விழியை மூடியிருக்க சிரமத்துடன் கண்ணைப் பிரித்தாள்.
தந்தையின் முகத்தில் சோகமாய் பதிந்த பார்வை அருகில் நின்ற பிரம்மாவைக் கண்டதும் வியப்புடன் மலர்ந்தது. உலர்ந்து கிடந்த இதழ்கள் மெல்ல, “பி..ரம்மா…” என்று உச்சரிக்க நாவால் தடவிக் கொண்டு, மீண்டும் “பிரம்..மா, வந்..துட்டிங்களா…” என்றவள், மெல்ல வலது கையை அவனை நோக்கித் தூக்கி, “ஹா…ப்பி பர்த்டே பிரம்மா…” திணறலுடன் கூறி மெல்லப் புன்னகைக்க, அவன் எதுவும் புரியாமல் அதிர்ந்து கலங்கிப் போய் நின்றான்.
“இருபத்து ஒன்று வயதில் பட்டாம்பூச்சி போல் சிறகடித்து, ஒரு நிமிடமும் உற்சாகம் குறையாமல் வலம் வரும் அமிர்தாவா இது… இவளுக்கு என்னவாயிற்று…” மூளையைத் தாக்கிய அதிர்ச்சி முகத்திலும் பிரதிபலிக்க அமைதியாய் பார்த்து நின்றான்.
“அ..ப்பா… தூக்கு..ங்க…” என்று இரண்டு கையையும் தூக்க முயன்ற மகளை மெல்ல எழுப்பி சாய்வாய் உக்கார வைத்தவரின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
“அப்பா, அவருக்கு லஞ்ச்…” மெல்லிய குரலில் நிதானமாய் கேட்க, “அவர் சாப்பிட்டு தான் போவார் மா… அம்மா, ரெடி பண்ணிட்டு இருக்கா, உனக்கு ஹாப்பி தான…” எனவும், “நான் ரொம்ப ஹாப்பிப்பா… தேங்க்ஸ் பிரம்மா…” என்றவள்,
“என்னை ஹாலுக்கு அழைச்சிட்டுப் போங்கப்பா…” எனவும்,
“எதுக்குடா, நீ தூங்கி ரெஸ்ட் எடு…”
“பிரம்மா வந்திருக்கும்போது நோ தூக்கம், டயர்டு… ப்ளீஸ்…”
“ம்ம்… சரி வா…” என்றவர் அவளை கைத்தாங்கலாய் பிடித்துக் கொண்டு ஹாலுக்கு அழைத்து வந்தார். அங்கே நடப்பது எதுவும் சத்தியமாய் பிரம்மாவுக்குப் புரியவில்லை. குழப்பத்துடனே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். மகளின் குரலைக் கேட்ட மேனகா வேகமாய் அடுக்களையில் இருந்து வந்தார்.
“நீ எதுக்கு பாப்பா எழுந்து வந்த, ஹார்லிக்ஸ் தரட்டுமா…” எனவும், “ம்ம்… கொடுங்க… கொஞ்ச நேரத்துக்கு எனக்கு எனர்ஜி வேணும்…” சோகமாய் சொல்லி சிரித்தவளை கலக்கத்துடனே பார்த்து நின்றான் பிரம்மா.
ரசிக்கப்படாத இடத்தில்
கவிதையும் வெற்று
வார்த்தைகளே…
ரசனையில்லா இடத்தில்
ஓவியமும் வெறும்
கோடுகளே…

Advertisement