Advertisement

அத்தியாயம் – 7
“என்ன தெய்வமே, பிறந்தநாள் அதுவுமா வீட்ல இல்லாம, இப்ப வந்துடறேன்னு கிளம்பிட்டு இவ்ளோ லேட்டா வர்றிங்க… நாளைக்கு கொடுக்க வேண்டிய ஓவியத்தை வேற வரஞ்சு முடிக்காமப் போயிட்டிங்க… அந்த பதிப்பகத்துல இருந்து போன்ல கேட்டுட்டு, நேர்லயே ஆள் வந்துட்டாங்க… நான்தான் சொல்லி அனுப்பி வச்சேன்… அப்படி எங்க அவசரமா கிளம்பிப் போனிங்க…” ராகவ் கேட்கவும்,
“ம்ம்… முதல்ல வரைஞ்சு முடிச்சிட்டு சொல்லறேன்…” என்றவன் அருகே வர மூக்கை சுளித்த ராகவ், “என்ன புது வாசம் எல்லாம் வருது…” என்றான் சந்தேகத்துடன்.
“யோவ்… என்னமோ என் பொண்டாட்டி மாதிரி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் கேள்வியா கேட்டுட்டு இருக்க… முதல்ல படம் வரைஞ்சு முடிச்சிட்டு அப்புறம் பதில் சொல்லறேன்…” சொன்னவன் தனது அறைக்குள் நுழைந்து பிரஷ் ஆகிவிட்டு டிராயிங் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஒரு பதிப்பகத்துக்காக இராமாயணத்தின் முகப்பு ஓவியங்கள், நிகழ்வு ஓவியங்களைக் கேட்டிருந்தனர். முகப்பு ஓவியம் உடனே வேண்டுமென்றும் கூறியிருந்தனர். தான் பாதியில் வரைந்து நிறுத்திய ஓவியத்தை நோக்கினான் பிரம்மா.
ராமனும், சீதையும் காவி உடையில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, இலக்குவன் கையில் வில்லுடன் பின்னில் பயபக்தியோடு நின்றிருந்தான். அதைப் புன்னகையுடன் நோக்கியவன் தூரிகையைக் கையில் எடுத்து முழுமையாக்கத் தொடங்க மனதுக்குள் ஓவியாவின் முகம் எட்டிப் பார்க்க திகைத்தான்.
“இத்தன வருஷமா தம்பி மாதிரி கூடவே இருக்கற ராகவ் கேள்வி கேட்டதுக்கு, பொண்டாட்டி மாதிரி கேள்வி கேக்கறியானு கேட்ட நான், இந்த ஓவியா கேள்வி கேட்டப்ப மட்டும் ஏன் பீல் பண்ணி சாரி சொல்லிட்டு வந்தேன்…” யோசித்தவனுக்கு வியப்பாய் இருந்தது. ஒரு சுவிங்கத்தை வாயில் போட்டுக் கொண்டு வேலையில் முனைப்பானவன் கையில் தூரிகை நர்த்தனமாடிக் கொண்டிருந்தது.
வெறும் கோடுகளில் தொடங்கிய ஓவியம் நளினத்தோடு அவனை நோக்கிப் புன்னகைக்க திருப்தியாய் நோக்கியவன் பைனல் டச் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
“ராகவ், ஓவியம் ரெடி… அனுப்பிடு…” எனவும், “எப்படி தெய்வமே, இவ்ளோ சீக்கிரம் முடிச்சிங்க…” என்றான். “கையால தான்…” என்றவன் சோபாவில் அமர, அவனை முறைத்தபடி சென்றான் ராகவ். உறங்கப் போயிருந்த ஜானும்மா எழுந்து வந்திருந்தார்.
“தம்பி, மதியம் உங்களுக்குப் பிடிச்சதா சமைச்சு வச்சேன், சாப்பிட வரலையே…” என்றார் வருத்தத்துடன்.
“வெளிய சாப்பிட்டேன் ஜானும்மா… நீங்க போயி தூங்குங்க…”
“ம்ம்… பாயாசமாச்சும் குடிங்க தம்பி…” என்றவர் இதமான சூட்டோடு பால் பாயாசத்தை கொடுத்துவிட்டே உறங்க சென்றார். அந்த வீட்டிலேயே ராகவ்க்கு ஒரு அறையும், ஜானும்மாவுக்கு சின்ன ஒரு அறையும் ஒதுக்கியிருந்தான்.
 அவன் மனதில் காலை முதல் உள்ள காட்சிகள் விரிந்தன.
சுகமாய் போர்வைக்குள் சுருண்டிருந்தவனை அதிகாலையில் ஒலித்த அலைபேசி சிணுங்கி எழுப்பி விட்டது. கண்ணைத் திறக்காமலே கையை நீட்டி போனை எடுத்து காதுக்குக் கொடுத்தவன் காதில் அன்பும், கண்டிப்புமாய் அவனது தாய் ஆருத்ராவின் குரல் ஒலித்தது.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தேவ்…” என்ற வாழ்த்தில் எழுந்து அமர்ந்தவனுக்கு தூக்கம் தொலைந்து போக அன்னையின் அழைப்பில் உற்சாகமானவன், “தேங்க்ஸ் அம்மா, எப்படி இருக்கீங்க… அப்பா, தம்பி எல்லாம் நல்லாருக்காங்களா…” என்றவன் முழுமையாய் தூக்கம் கலையாமல் கொட்டாவியுடனே கேட்டான்.
“ம்ம்… எல்லாரும் நல்லாருக்கோம்… நீ எப்படி இருக்க… இன்னும் எழுந்துக்கல, போலருக்கு… தனியா தானே இருக்கோம்… இஷ்டப்படி இருக்கலாம்னு நினைக்காத… நேரமா குளிச்சு கோவிலுக்குப் போயிட்டு வா…”
“ம்ம்… பண்ணறேன் மா…” என்றான் மறுக்காமல்.
“உன் பிறந்தநாளுக்கு ஆச்சும் எங்களைப் பார்க்க ஊருக்கு வரலாம்ல… அப்பா அதையே புலம்பிட்டு இருக்கார்… ஏதோ ஒரு கோபத்துல அப்படிப் பண்ணிட்டார்… அதுக்காக இன்னும் உனக்கு எங்களைப் பார்க்க வரணும்னு தோணல இல்ல…”
“அம்மா, அப்படிலாம் எதும் இல்ல மா… அன்னைக்கு அப்பாவோட கோபமும் வெறுப்பும் தான் இன்னைக்கு என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கு… நான் இன்னும் வளரணும் மா… பிரம்மா என் பிள்ளைன்னு அப்பா பெருமையோட எல்லார்ட்டயும் சொல்லிக்கிற அளவுக்கு வளர்வேன்… அப்ப வர்றேன்…” என்றான் உறுதியான குரலில். “என்னடா பேசற… நீ பிரம்மனோ, சிவனோ எவ்ளோ வளர்ந்தாலும் எங்களுக்குப் பிள்ளைதான்… அதை மறந்துடாத…” என்றார் ஆருத்ரா.
“தம்பி எப்படி இருக்கான் மா… காலேஜ் முடிச்சிருப்பானே… அடுத்து என்ன பண்ணப் போறான்…”
“அவன் என்ன உன்னைப் போலவா, என் வழியை நான்தான் தீர்மானிப்பேன்னு சொல்ல… அவன் எப்பவும் இந்த வீட்டுக்கு அடங்கின பிள்ளை தான்… அப்பாகூட துணையா இருந்து நம்ம ரைஸ் மில்லைப் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டான்…”
“ம்ம்… சந்தோஷம் மா…”
“தேவ், உன்னைப் பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு… தாத்தா இறந்தப்ப வந்து தலைய காட்டிட்டுப் போன… அதும் காரியம் முடிஞ்சதும் உடனே கிளம்பிட்ட… இந்த அம்மாவைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையே இல்லல்ல… இனி நானும் செத்த பிறகு தான் வந்து பார்த்திட்டுப் போவியா…”  அன்னையின் குரலில் கோபத்துடன் வருத்தம் இழையோட மகன் பதறினான்.
“அம்மா அப்படில்லாம் சொல்லாதிங்க… நீங்க எப்பவும் என் மனசுல இருக்கீங்க.. என் இலட்சியத்துக்கான பாதையில் உங்க ஆசிர்வாதம் இல்லேன்னா இவ்ளோ தூரம் வந்திருக்க முடியாது… கண்டிப்பா உங்களைப் பார்க்க வரேன்…”
“ஹூம்… உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணனும், என் பேரக் குழந்தைகளைக் கொஞ்சனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா… இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படி வீம்பு பிடிச்சு வீட்டை விட்டு தனியாவே எட்டி நிக்கப் போற… உன் கல்யாணமாச்சும் எங்களுக்கு எல்லாம் தெரிவிப்பியா…” கேட்கும்போதே அவரது குரல் தழுதழுத்தது.
“அம்மா எதுக்கு இவ்ளோ பீலிங்… நீங்க இல்லாம, எனக்கு என்ன கல்யாணம்… இந்த வருஷம் அப்பாக்கு அறுபது வயசாகுது… உங்க அறுபதாம் கல்யாணத்தை சிறப்பா செய்யணும்னு நானும் ஆசைப்படறேன்… கண்டிப்பா உங்களைப் பார்க்க ஊருக்கு வருவேன்… சந்தோஷமா…” என்றதும் அந்த அன்னைக்கும் குஷியானது.
“என்னை சமாதானப்படுத்த சும்மா சொல்லலையே…”
“இல்லமா, நிஜமா தான் சொல்லறேன்… எனக்கும் உங்களைப் பார்க்கணும், உங்க மடில படுத்துட்டு கதை சொல்லணும், உங்க கையால சாப்பிடணும்னு ஆசை இருக்காதா…”
“ஹூம்… எதுமே வேண்டாம்னு நீதானடா விட்டுட்டுப் போயிட்ட… சரி, பிறந்தநாள் அதுவுமா பீல் பண்ண வேண்டாம்… நீ எப்பவும் சந்தோஷமா இரு, உனக்குப் பிடிச்ச போல நீ இன்னும் நிறைய சாதிக்கணும்… அம்மாவோட ஆசிர்வாதம் எப்பவும் இருக்கு… சரி வச்சிடட்டா…” என்றவர் அழைப்பைத் துண்டிக்க அவன் மனம் நிறைந்திருந்தது.
அன்னை சொன்னது போல் கோவிலுக்கு சென்று வர, ஜானும்மா அவனுக்காக ஸ்பெஷலாய் செய்திருந்த கிச்சடியை சட்னியுடன் ஒரு கை பார்த்துவிட்டு, கேசரியை ருசித்தவன் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு உற்சாகத்துடன் டிராயிங் அறைக்குள் நுழைந்தான். ராமாயணத் தொடருக்கான சித்திரங்களை மனதுக்குள் கொண்டு வந்து கோடுகளை இழுக்கத் தொடங்கினான்.
பட்டாபிஷேக ராமன், சிந்தனை வயப்பட்டு அசோகவனத்தில் சீதை, ஹனுமான், ராவணன் என்று தனி உருவங்களை வரைந்து கொண்டிருக்கையில் பதிப்பகத்தில் இருந்து அழைத்து ராம, சீதாவுடன் இலக்குவன் நிற்பது போல் அட்டைப் படத்துக்காய் ஒரு காட்சியை உடனே வரைந்து தர முடியுமா என்றதும், சம்மதித்தவன் அதற்கான கோடுகளை இழுக்கத் தொடங்கினான்.
வேகமாய் ஸ்கேன் பண்ணி அனுப்ப வேண்டியதை அனுப்பிவிட்டு தனது வேலையை முடித்த ராகவ் யோசனையுடன் அமர்ந்திருந்த பிரம்மாவிடம் வந்தான்.
“சார், அமிர்தா அப்பா கால் பண்ணினார்னு ஓவியத்தைக் கூட முடிக்காம காலைல கிளம்பிப் போனிங்க, என்னாச்சு…”
“ம்ம்… அதைதான் யோசிச்சுட்டு இருந்தேன்… நம்மை சுத்தியிருக்கிற மனுஷங்களுக்கு தான் எத்தனை பிரச்சனை… அது எதுவும் தெரியாம நாமளும் அவங்களை நோகடிக்கறோம்… எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டு இருக்கற அந்தப் பொண்ணுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனை இருக்கும்னு எனக்குத் தெரியல…” என்றான் வருத்தத்துடன். “என்ன சொல்லறிங்க சார், எனக்குப் புரியல… அமிர்தாக்கு என்ன பிரச்சனை…” என்றான் ராகவ் குழப்பத்துடன்.
“அன்னைக்கு இங்க வந்து என்னை வீட்டுக்கு வர சொல்லிட்டுப் போச்சுல்ல… நான் வரலேன்னு சொல்லவும் ரொம்ப பீல் ஆகிட்டா போல… வீட்ல ஒரே அழுகையாம்… அவ அப்பா என்கிட்ட பேசி வர சொல்லறேன்னு சொல்லியும் கேக்காம பீல் பண்ணி, மூச்சுத் திணறல் வந்து ஆசுபத்திரில அட்மிட் பண்ணிருக்காங்க… நேத்தெல்லாம் ஹாஸ்பிடல்ல தான் இருந்திருக்காங்க…” என்றதும் ராகவ் அதிர்ந்தான்.
“அந்தப் பொண்ணுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா… கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்…” என்றான்.
“ம்ம்… சொல்லறேன்…” என்றவன் தொடர்ந்தான்.
மனதின் உற்சாகம் ஓவியத்திலும் மிளிர ஓவியத்தை வரைந்து முடிப்பதற்குள் அலைபேசி சிணுங்கியது.
“மதியழகன் சார் எதுக்கு கூப்பிடறார்… அந்த லூசு அமிர்தா எதுவும் சொல்லி இருக்குமோ…” எடுக்கலாமா, வேண்டாமா யோசித்தவன் எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரம்மா…”
“ஹோ, ரொம்ப நன்றி சார்…”
“ம்ம்… அம்ரு சொன்னா, உங்களுக்காக ஆசையா எல்லா ஏற்பாடும் பண்ணிருந்தா… நீங்க வரலேன்னு சொல்லிட்டிங்க போல…” என்றவரின் குரல் மிகவும் சோர்ந்திருந்தது.

Advertisement