Advertisement

அத்தியாயம் – 6
“ச்சே… ராத்திரி நேரத்தில் தனியாய் ஒரு பெண் நின்று உதவி கேட்கிறாள்… அதை செய்ய மனமில்லாமல் நான் மெக்கானிக் இல்லைன்னு கிண்டலா சொல்லறானே… இவன்லாம் என்ன மனுஷனோ…”
மனதுக்குள் அவனை கோபமாய் கொஞ்சியபடி பார்க்க, வண்டியிலிருந்து கீழே இறங்கினான். தள்ளாட்டம் எதுவும் இல்லாமல் ஸ்டடியாக தான் இருந்தான். நல்ல உயரத்தில் தாடி மீசையுடன் நின்றவனை சட்டென்று எங்கோ பார்த்தது போலத் தோன்ற நன்றாய் கவனித்தாள் ஓவியா.
“இந்த முகரையை எங்கயோ பார்த்த போல இருக்கே…” அவள் யோசிக்க, “உன்னை எங்கயோ பார்த்திருக்கேனே…” என்றவன், “ஹா… நீ ஓவியம் தானே…” என்றதும் திகைத்தாள். “இவனுக்கு நம்மளைத் தெரியுமோ…” என நினைத்தவள் அமைதியாய் நிற்க அவள் அருகே வந்தான்.
வண்டியில் சாவியைத் திருகி ஸ்டார்ட் பண்ண முயன்றவன் முடியாமல் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்தான். அவள் அவனையே சற்று பயத்துடன் பார்த்து நின்றாள்.
“என்னமா, அப்படிப் பார்க்கிற… நான் இப்ப குடிச்சிருந்தாலும் குடிகாரன் எல்லாம் இல்லை… அது ஒரு எமோஷன், பீலிங்… அதான் குடிச்சேன்… நீ என்னமோ என்னை அல்குவைதா தீவிரவாதி போலப் பார்க்கிற…” என்றவன் மீண்டும் முயற்சி செய்ய, வண்டி சத்தமில்லாமல் யுத்தம் செய்தது.
“ஸ்டார்ட் ஆகலையே… பெட்ரோலும் இருக்கு, என்ன பிராப்ளம்னு தெரியல… இந்த நேரத்துல எதுக்கு தனியா வந்திங்க…” என்றவன் அந்த குட்டி வண்டியில் எங்கே என்ன செக் பண்ணுவதென்று புரியாமல் முழித்துக் கொண்டு நிற்க அவள் அமைதியாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சில நாளிதழ்களில் பிரம்மாவின் போட்டோ வந்திருந்தாலும் அத்தனை கிளியராய் இருந்ததில்லை. இவளும் ஓவியத்தை கவனிக்கும் அளவு ஓவியரை கவனிக்காததால் சட்டென்று புரியாமல் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்பப் புரியுதா… நான் ஏன் மெக்கானிக் இல்லைன்னு சொன்னேன்னு…” என்றவனை அவள் தவிப்புடன் பார்த்து நிற்க, “உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தான் நானும் நினைக்கறேன், பட் முடியலயே… வேணும்னா ஒண்ணு பண்ணலாம்…” அவன் சொல்ல, என்னவென்பது போல் பார்த்தாள் ஓவியா.
“இந்த வண்டியை எங்காச்சும் ஓரமா பார்க் பண்ணிட்டு என்னோட கார்ல வந்திங்கன்னா அப்படியே நீங்க இறங்க வேண்டிய இடத்துல இறக்கி விட்டுட்டுப் போயிடறேன்… நாளைக்கு மெக்கானிக் விட்டு வண்டியை எடுத்துக்கங்க… சிம்பிள்…” என்று தோளைக் குலுக்கினான்.
“ச்சே, எப்படியாச்சும் ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்திருவான் நினைச்சா இப்படி சொல்லறானே…” என நினைத்தவள் அமைதியாய் நிற்க இதமாய் புன்னகைத்தான் பிரம்மா.
“இந்த ராத்திரி நேரத்துல இப்படி ஒரு இடத்துல தனியா நிக்கறது சேப் இல்ல மா… தெரியாத ஒருத்தனோட எப்படி வர்றதுன்னு யோசிக்கறிங்களா… யாருக்காச்சும் போன் பண்ணி வேணும்னா என் கார் நம்பரை சொல்லி அதுல வர்றேன்னு விவரம் சொல்லிக்கங்க…” எனவும், அவளுக்கும் அதைத் தவிர வேறு வழி தோன்றாமல் யோசித்தவள், கையில் போன் இல்லையே என நொந்து கொண்டு பரிதாபத்துடன் அவனைப் பார்த்தாள்.
“ம்ம்… ரொம்ப தேங்க்ஸ் சார்… வந்து, என் போன் பிரண்டு வீட்டுல மறந்து விட்டுட்டு வந்துட்டேன்…” தயக்கமாய் சொன்னவளை திகைப்புடன் பார்த்தான்.
“இன்னும் காந்தி கண்ட சுதந்திரக் கனவு நம்ம நாட்டுல பலிக்கலை ஓவியமே… ராத்திரி வெளிய கிளம்பற பொண்ணு எப்பவும் கவனமா இருக்க வேண்டாமா…” என்றவன் தனது அலைபேசியை நீட்டினான்.
“யாருக்கு சொல்லணுமோ, விவரம் சொல்லிக்கங்க…” என்றவன் அவளது ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு சிறிது தூரத்தில் இருந்த மரத்தடிக்கு சென்றான். அவனது போனை ஆன் பண்ணியவள் திரையில் அழகாய் மிளிர்ந்த அவன் வரைந்த ஓவியத்தைக் கண்டதும் சட்டென்று பல்பு புரிந்தது.
“பிரம்மா… பிரம்மா சாரா இது…” என்றவளுக்கு திகைப்பு, சந்தோஷத்துடன் சற்று அதிர்ச்சியாய் இருந்தது.
“பிரம்மா சார் குடிப்பாரா… இவர் மேல எத்தனை மதிப்பு  வச்சிருந்தேன்… இவரைப் போல உள்ளவங்க மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்க வேண்டாமா… இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டினா மத்தவங்களையும் பாதிக்காதா… இவர் செய்யறதைப் பார்த்து நாளைக்கு இன்னொருத்தனும் குடியை சரின்னு நினைக்க மாட்டானா…” மனதில் அவன் மீதிருந்த மதிப்பும், மரியாதையும் ஒரு ரசிகையாய் அவள் மனதில் பல கேள்விகளைத் துளைத்தது.
மனதுக்குப் பிடித்தவரின் சின்னத் தவறும் கூட உரிமைக் கோபத்தை வரவழைக்கும்… ஒரு சிறந்த கலைஞன் இப்படி தவறான வழிகாட்டலைக் கொடுக்கலாமா என்ற ஆதங்கமும் அவளுள் எழுந்தது.
தந்தையின் எண்ணை அலைபேசியில் அழுத்தியவள், அவரிடம் விஷயத்தைக் கூற, “அச்சோ, ராத்திரி நேரத்துல இப்படி தனியா மாட்டிகிட்டயே, நான் வேணும்னா உடனே கிளம்பி வரட்டுமா…” என்று படபடத்தார் சிவநேசன்.
“அப்பா, பயப்பட வேண்டாம்… பிரம்மா சார் இந்தப் பக்கம் கார்ல வந்தார்… டிராப் பண்ணறேன்னு சொல்லிருக்கார்…” எனவும் அந்தப் பெயரைக் கேட்டதும் அவருக்கும் சற்று நிம்மதியாக, “சரிம்மா… பத்திரமா வா…” என்று அழைப்பைத் துண்டித்தாலும் கலக்கத்துடனே காத்திருக்கத் தொடங்கினார்.
திரும்பி வந்தவன், “என்ன ஓவியமே, கிளம்பலாமா…” எனவும், “பிரம்மா சார், ஒரு கலைஞன் இப்படிப் பண்ணலாமா…” என்றதும் திகைத்து புன்னகைத்தான்.
“ஓ… என்னை உங்களுக்குத் தெரியுமா…”
“ம்ம்… உங்களை விட உங்க ஓவியங்களை ரொம்ப நல்லாத் தெரியும்… ஒவ்வொரு ஓவியமும் என்னை அதிசயிக்க வைக்கும்… எப்படி உங்களால இப்படி உணர்வுகளை ஓவியத்தில் வெளிப்படுத்த முடியுதுன்னு பிரம்மிச்சுப் போவேன்… நான் உங்களோட பயங்கர விசிறி… அப்படி ஒரு உன்னதமான கலையை கையில் வச்சிருக்கிற நீங்க இப்படிக் குடிச்சிட்டு வண்டி ஓட்டலாமா…” தெளிவாய் அதே நேரம் ஆதங்கத்துடன் உரிமையாய் ஒலித்தது அவளது குரல்.
அதைக் கேட்டதும் வியப்புடன் அவளை ஏறிட்டான் பிரம்மா.
“சாரி, நான் எப்பவும் குடிக்க மாட்டேன்… இன்னைக்கு என் பிறந்தநாள்… மனசுக்கு வருத்தத்தைத் தரக் கூடிய ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டேன்… சட்டுன்னு தாங்கிக்க முடியல… அதான் கண் முன்னாடி லிக்கர் இருக்கவும் எடுத்து குடிச்சுட்டேன்…” தயக்கமாய் தான் செய்த தவறுக்கு வருத்தத்துடன் கூறினான் பிரம்மா.
“சொல்லறேன்னு தப்பா நினைக்காதீங்க சார்… நான் உங்க மேல ரொம்ப மதிப்பும், மரியாதையும் வச்சிருக்கேன்… குடி எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு கிடையாது… நீங்க எத்தனையோ ரசிகர்களின் மனசுல ஒரு ஹீரோவா இருப்பீங்க… உங்களைப் போல உள்ளவங்களே இப்படி செய்யத் தொடங்கினா இது தப்பில்லேன்னு சாதாரண மனுஷங்களும் நினைக்கத் தொடங்குவாங்க…”
அவள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு அமைதியாய் நின்றவனின் முகத்தில் குற்றவுணர்வு இருந்ததே தவிர சற்றும் அவள் சொன்னதற்காய் கோபம் வரவில்லை. சிறு பிள்ளையாய் இருக்கும்போது தனது தவறுக்கு கோபத்துடன் கேள்வி கேட்கும் அன்னையைப் போல் தோன்ற மெல்லப் புன்னகைத்தான்.
“சாரிமா, நான் அவ்வளவு யோசிக்கல, நீங்க சொல்லுறது சரிதான்… இனி கவனமா இருந்துக்கறேன்… இப்ப கிளம்பலாமா… என்னோட வர உங்களுக்கு பயமா இருந்தா எதாச்சும் டாக்சி வேணும்னா வர சொல்லட்டுமா…” அவன் கேட்க, முறைப்புடன் ஒரு பார்வையை அவனை நோக்கி வீசி விட்டு, “உங்களோட வர மாட்டேன்னு சொல்லலயே… ஒரு நல்ல கலைஞனை எப்பவும் நம்பலாம்…” என்றவள் காரின் கதவைத் திறந்து உள்ளே அமர அவனது வியப்பு கூடிக் கொண்டே போனது.
“நான் என்னவோ இவளது ஸ்டூடன்ட் போல இத்தனை அட்வைஸ் பண்ணுகிறாள், முறைக்கிறாள்… ஆனாலும் எனக்கு கோபமே வராமல் சாரி கேட்கிறேன்… இதெல்லாம் பிரம்மாவின் வாழ்க்கை வரலாறில் இல்லாத விஷயமாச்சே…” யோசித்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் வண்டியை எடுத்தான்.
சற்று நேரம் கழித்து, “எங்க போகணும்னு இன்னும் சொல்லலை…” கண்ணாடி வழியே பின்னில் நோக்கி அவன் கேட்க, செல்ல வேண்டிய இடத்தைக் கூறியவளுக்கும் அதே யோசனையாய் இருந்தது.
“நான் யார் இத்தனை பெரிய மனிதரைக் கோபிக்க, அவரைக் கண்டிக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது… நான் பாட்டுக்கு சின்னப் பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டிருக்கிறேன், அவரும் சாரி சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார்… உதவி செய்ய வந்தவரிடம் இத்தனை உரிமை எப்படி வந்தது… ச்சே, என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்…” தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.
காரின் வெளிச்சம் சுற்றிலும் நிறைந்திருந்த இருட்டை விரட்டியடித்துக் கொண்டிருந்தது. சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்க ஓவியா மெல்லத் தொடங்கினாள்.
“பிரம்மா சார், நான் அப்படிப் பேசினதுக்கு சாரி… என்னவோ நான் ஆராதிக்கற ஒரு மனுஷன் கிட்ட எந்தக் குறையும் இருக்கக் கூடாதுன்னு ஒரு எண்ணத்துல சட்டுன்னு பேசிட்டேன்… தப்பா நினைச்சுக்காதிங்க…” அவள் சொல்லவும் கண்ணாடி வழியே பார்த்தவன்,
“இல்ல, நீங்க சட்டுன்னு சொன்னாலும் சரியானதை தான் சொன்னிங்க… இதுவரை நான் குடிச்சதில்லை… இனி எந்த வருத்தம் வந்தாலும் குடிக்கப் போறதுமில்லை… எனிவே தேங்க்ஸ்… அதை விடுங்க, நீங்க பரதநாட்டிய டான்சர் ஓவியா தானே…” அவன் கேட்கவும், திகைப்புடன் நோக்கியவள், “ஆமா சார், என்னைப் பார்த்ததுமே நீங்க கூட ஓவியம்னு கூப்பிட்டீங்களே…” என்றதும் சிரித்தான்.
“இல்ல, அது என் ஓவியம் போலத் தோணினதால சட்டுன்னு சொல்லிட்டேன்… இப்ப தான் ஓவியம் இல்லை, ஓவியான்னு தெளிவு வந்திருக்கு…” என்றதும் புன்னகைத்தாள் அவள்.
“பரவால்லியே, என்னைப் பத்தி கூட ஓவியருக்குத் தெரிஞ்சிருக்கே…” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“ஓவியத்தைத் தெரியாத ஓவியன் இருக்க முடியுமா ஓவியா… உங்க பேட்டி படிச்சேன்… நல்லாருந்துச்சு… புரோக்ராம் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன், இன்னும் நாட்டியத் துறைல பல சாதனைகள் செய்ய என் வாழ்த்துகள்…”
“ரொம்ப தேங்க்ஸ் சார்… பிரம்ம வாக்கு பலிக்குதான்னு பார்ப்போம்… ரொம்ப சந்தோஷமா இருக்கு… அச்சோ, உங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னு சொன்னிங்களே, உங்களுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தான் பிரம்மா.
“ம்ம்… தேங்க்ஸ் மா…”
“இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் டே… உங்களைப் பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல, உங்க ஓவியங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்… அதைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப நிம்மதியாருக்கும்… முடிஞ்சவரை நீங்க வரைஞ்ச ஓவியங்களை சேகரிச்சு வச்சிருக்கேன்… முதல்ல உங்களை அடையாளம் தெரியாம யாருன்னு யோசிச்சுட்டே இருந்தேன்… மொபைல்ல உங்க ஓவியத்தைப் பார்க்கவும் தான் உங்க முகத்தை புக்ல பார்த்தது நினைவு வந்துச்சு…”
“ம்ம்… இல்லேன்னா இப்பவும் நம்பிக்கை இல்லாம, வரலாமா, வேண்டாமான்னு அங்கயே குழம்பிட்டு நின்னுட்டு இருந்திருப்பீங்க…” என்றவன் காரை கவனமாய் ஓட்டிக் கொண்டே கண்ணாடியில் அவளைப் பார்க்க மென்மையாய் சிரித்தவளின் சிரிப்பு அவன் கண்ணை விரிக்க வைத்தது.
அந்த சிரிப்பு பட்டாம்பூச்சியாய் மனதுக்குள் சிறகடிக்க அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தான்.
கார் அவள் வீட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்க சிறிது நேர மௌனத்தை ஓவியா கலைத்தாள்.
“எப்படி சார், இத்தனை ஓவியங்களை விதவிதமா வரைஞ்சுட்டே இருக்கீங்க…”
“பிடிச்ச விஷயத்தை எத்தனை செய்தாலும் அலுக்காதே…”
“ம்ம்… உண்மைதான் சார்… எனக்கு டான்ஸ் எத்தனை ஆடினாலும் அலுக்காது…” என்றவள், “அதோ, அந்தக் கட்டுல திரும்பனும் சார்…” என்றதும் காரை வளைத்தான். அதற்குள் பிரம்மாவின் அலைபேசி சிணுங்க, ராகவ் அழைத்தான்.
“சொல்லு மேன், வந்துட்டு இருக்கேன்… ஓகே ஒகே, வந்துடறேன்…” என்று வைத்தான். மேலும் ஐந்து நிமிடப் பயணத்தில் அவள் தெருவுக்குள் கார் நுழைந்தது.
“அதோ அந்த கிரே பெயின்ட் அடிச்ச வீடுதான் சார்…” என்றவள், “வீட்டுக்கு வாங்க சார், அப்பா உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார்…” என்றாள்.
“இல்லமா, எனக்கு அர்ஜென்டா கிளம்பணும்… எனக்காக ஒருத்தர் வீட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார்… அப்பாவை இன்னொரு நாள் பார்த்துக்கறேன்…” என்றவன் காரை நிறுத்த இறங்கியவள் மடியிலிருந்து பெப்பர் ஸ்ப்ரே பாட்டில் கீழே விழுந்தது.
“ஏதோ விழுந்திருச்சு…” அவன் சொல்லவும் எடுத்தவள் கையிலிருந்ததைக் கண்டவன், “இது எதுக்கு…” என்றதும், “அது… நீங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு பாதுகாப்புக்கு எடுத்து வச்சிருந்தேன்…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தவன், “ம்ம்… ரொம்ப தான் முன்ஜாக்கிரதை போல… ஓகே நான் கிளம்பறேன்…” என்றதும் புன்னகைத்தவள்,
“சரி சார், பத்திரமா போயிட்டு வாங்க… உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ், கண்டிப்பா ஒரு நாள் வீட்டுக்கு வரணும்…” சொல்லிக் கொண்டே வீட்டின் கேட்டைத் திறக்க சத்தம் கேட்டு சிவநேசன் கதவைத் திறந்து வருவதற்குள், பை சொல்லி பிரம்மா காரைக் கிளப்பி இருந்தான்.
“எங்கமா, அதுக்குள்ள பிரம்மா சார் கிளம்பிட்டாரா…”
“ஆமாம் பா, யாரோ வெயிட் பண்ணறாங்க போல… அதான் கிளம்பிட்டார்…” என்றாள் மகள்.
“ம்ம்… எப்படியோ உன்னை பத்திரமா கொண்டு வந்து சேர்த்துட்டார்.. நீ போன் பண்ணவும் பக்குன்னு ஆயிருச்சு…”
“அதான் பிரம்மா சார் கூட வரேன்னு சொன்னனே, அப்புறம் எதுக்கு பயம்…” என்றவளை முறைத்தார்.
“அது சரி, ஒரு விசேஷத்துக்குப் போனா இப்படி தான் ராத்திரி வரை இருந்துக்கிறதா… போனை வேற மறந்து வச்சிட்டு வந்திருக்க… அவர் மட்டும் சரியான நேரத்துல வரலேன்னா என்னாகியிருக்கும்…”
“ஒண்ணும் ஆகிருக்காதுப்பா… என்கிட்ட இது இருக்கு…” என்றவள் பெப்பர் ஸ்ப்ரே பாட்டிலைத் திறந்து அதற்குள் இருந்த சின்னக் கத்தியை எடுக்க,
“ஹூக்கும்… நெயில் கட்டர் போல இருக்கற இந்தக் கத்தியை வச்சு தான் பிரச்சனை பண்ண வர்றவங்களைப் போட்டுத் தள்ளுவியாக்கும்…” என்றவரை முறைத்தவள்,
“எதையும் அத்தனை கேவலமாக எடை போடாதீர்கள் தந்தையே… சிறு கத்தியும் கழுத்தறுக்க உதவும்…” என்று சொல்ல, “இனி எந்த விசேஷமா இருந்தாலும் நான் இல்லாம மாலை நேரத்துல தனியாப் போக வேண்டாம்…” என்றார்.
“ஹூக்கும்… இவர் என்னமோ புரூஸ்லிக்கு கிளாஸ் எடுத்தவர் போல, ஓவரா தான் பீலா விடுறார்… சரி, இனி அப்படியே பண்ணறேன் போதுமா… நீங்க சாப்பிட்டீங்களா…”
“ம்ம்… ஆச்சு… இருந்தாலும் வீட்டுக்கு வந்த பிரம்மாவை தரிசிக்க முடியலியேன்னு பீலிங்கா இருக்கு…”
“ஹாஹா, நல்ல மனுஷன்ப்பா… எந்த பந்தாவும், திமிரும் இல்லாம இயல்பா இருக்கார்… இன்னைக்கு அவர் பிறந்த நாளாம்… அவரைப் பார்த்ததுல நானும் ரொம்ப ஹாப்பி…”
“ம்ம்… சரி, அவரைப் பார்த்த சந்தோஷத்துல ராதிகா வீட்டு விசேஷத்தைப் பத்தி ஏதும் சொல்லலியே…”
“சூப்பரா இருந்துச்சுப்பா… அவ மாமனாரும், மாமியாரும் ரொம்ப நல்லவங்க… இவ அவங்களைத் தாங்குறதுல தப்பே இல்ல… சொந்தப் பொண்ணு போல தான் அவளைப் பாக்குறாங்க… இன்னைக்கு நிறைய நல்ல மனுஷங்களைப் பார்த்த திருப்தி…” சொன்னவள் தனது அறைக்குள் நுழைய சிவநேசனும் கதவைத் தாளிட்டுவிட்டு படுக்க சென்றார்.
சின்னதாய் குளியல் முடித்து இரவு உடையில் கட்டிலுக்கு வந்தவளின் மனது அன்றைய நிகழ்வுகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தது. பிரம்மாவிடம் தான் பேசியதை நினைத்து சிரிப்புடன் தலையில் தட்டிக் கொண்டாள் ஓவியா.
“வாய்… எல்லார்கிட்டயும் பேசற போல முதன்முறையாப் பாக்குற, அதுவும் நான் ஆராதிக்கிற ஒரு மனுஷன் கிட்ட எப்படிப் பேசி வச்சிருக்கேன்… அவர் வெடுக்குன்னு இதை சொல்ல நீ யாருன்னு கேட்டுட்டு, என்னை அங்கே அப்படியே விட்டுட்டுப் போயிருந்தா என்னவாகியிருக்கும்…” யோசிக்கும் போதே கலக்கமாய் இருந்தது.
“அப்புறம்… அவர் மட்டும் இப்படில்லாம் பண்ணலாமா… தப்பில்லையா… ஒரு விஷயம் தப்புன்னா யாரா இருந்தாலும் பயப்படாம சொல்லனும்னு தேவ் சொல்லிருக்கான்…” என நினைத்தவள் மனம் தேவ் பற்றிய சிந்தனைகளில் சுழல அவன் வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
“தேவ்… இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… அதை எப்படி சொல்லறதுன்னு தெரியல, மனசு ரொம்ப நாளைக்கப்புறம் லேசாகிப் பறக்கிற போல ஒரு உணர்வு…” சொன்னவளை நோக்கி தேவ் கிண்டலாய் சிரிப்பது போலத் தோன்ற உதட்டை சுளித்தவள், “என்ன சிரிக்கிற…” என்றாள் சிணுங்கலுடன்.
“அவனே குடிச்சிருக்கான்னு தான் அவ்ளோ பேசின… இப்ப அவனைப் பார்த்ததை நினைச்சு சந்தோஷப் பட்டுட்டு இருக்க… அதும் எப்படி, தீவிரவாதி போல இருக்கானாம்…” தேவ் கிண்டலாய் சிரிக்க,
“அது… நான் இல்லேன்னு சொல்லலியே… அதுக்கு தான அவரை திட்டினேன்… ஆனா அவ்ளோ பெரிய மனுஷன்… நான் சொன்னதும் தன் தப்பை புரிஞ்சுகிட்டு சாரி சொல்லுறார்னா அவர் கிரேட் தான…” என்றவள் போட்டோவை அணைத்துக் கொண்டு கண்ணை மூடினாள்.
கண்களை மூடினாலும்
கனவுகள் மறைவதில்லை…
இதயம் தேடும் நிஜம்
எதுவென்று இதமாய்
காதில் சொல்லிடுமோ…
இன்று அவன் ஓவியமானவள்   
என்று அவன் கையில்
தூரிகையாய் மாறுவாளோ…

Advertisement