Advertisement

“நாளைக்குத் தர்றேன்னு சொல்லு…” என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தான். அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தவன் இவன் யாரென்று தெரியாததால், “இந்தப் படத்தோட சத்தத்துல கூட ஒருத்தன் இப்படித் தூங்குறானே…” என அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஞாயிற்றுக் கிழமை.
ராதிகாவின் வீட்டில் உறவுகளும் நட்பும் கூடியிருக்க அனைவரின் முகத்திலும் ஒருவிதமான திருப்தி, சந்தோசம்… நிகழ்ச்சியின் நாயகரான அவளது மாமனாரும், மாமியாரும் புத்தாடைகளில் ஜொலிக்க, புன்னகைக்கும் முகங்களில் பரவசம் தெரிந்தது.
ராதிகாவும், அவள் கணவன் சரத்தும் வாசலில் நின்று வந்தவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர். இளையவர்கள் பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொள்ள முதியவர்கள் திருப்தியுடன் பார்த்து நின்றனர்.
ஓவியா தனது ஸ்கூட்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு கையில் பளபள பேப்பரால் பொதியப்பட்ட பரிசுப் பொருளுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.
“ஹேய், ஓவி… வா, வா… எங்க இன்னும் உன்னைக் காணோம்னு நினைச்சுட்டு இருந்தேன்…” வாயெல்லாம் பல்லாகத் தோழியை வரவேற்றாள் ராதிகா.
“வாங்க, நாட்டியத் தாரகை ஓவியா அவர்களே… உங்களின் பாதம் பட்டதில் எங்கள் இல்லம் புனிதயமடைந்தது…” ராதிகாவின் கணவன் தலை தாழ்த்தி இரு கை கூப்பி வரவேற்க செல்லமாய் அவனை முறைத்தாள் ஓவியா.
“போங்கண்ணா, என்னைப் பார்த்தாலே உங்களுக்கு கிண்டல் தான்…” என்றாள் சிரிப்புடன்.
“சேச்சே, அப்படிலாம் இல்லைமா… உண்மையிலேயே உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு… ஆனா, என் பொண்டாட்டியை வச்சு எப்படி ஸ்டூடண்ட்ஸ்க்கு கிளாஸ் எடுக்க வைக்கிறேன்னு நினைக்கும்போது தான் என் சின்ன நெஞ்சு கொஞ்சம் படபடன்னு வருது…”
“என்ன, உங்க தங்கச்சியைப் பார்த்ததும் பொண்டாட்டிய டீல்ல விட்டுட்டீங்களா, வச்சுக்கறேன் இருங்க…” செல்லமாய் ராதிகா மிரட்டவும், “ச்சே இதென்ன தப்பாப் பேசிட்டு, புருஷனையே யாராச்சும் வச்சுப்பாங்களா…” என்றவனை நறுக்கென்று கிள்ளியவள், “இப்ப வாயை மூடறீங்களா, இன்னும் ஸ்ட்ராங்கா கிள்ளட்டுமா…” எனவும், “ஆ… சரியான ராட்சசி…” எனத் தடவிக் கொண்டே “உள்ள போம்மா ஓவியா…” என அவளை மனைவியுடன் அனுப்பினான்.
“ஹாஹா, பாவம் அண்ணா, எதுக்கு அப்படிக் கிள்ளின ராதி…”
“மனுஷன் இன்னைக்கு ஓவர் குஷில எங்க என்ன பேசறோம்னு தெரியாம மிதப்புல இருக்கார்… ஒரு கிள்ளு தானே, இருக்கட்டும்…” என்றவள் சரத்தின் பெற்றோரிடம் தோழியை அழைத்துச் சென்றாள்.
“அம்மா, அப்பா… ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்றபடி காலில் விழுந்தவளை இருவரும் புன்னகையுடன் வாழ்த்தினர்.
“தீர்க்காயுசோட, சகல சௌபாக்கியத்தோட நல்லாரும்மா… சீக்கிரமே கல்யாணம் அமைஞ்சு கணவனோட சிறப்பான வாழ்க்கை வாழணும்…” ஓவியாவின் தலையில் தொட்டு மனதார ஆசிர்வதித்தார்.
“உங்களுக்கு என் சின்னப் பரிசு மா… நீங்க ரெண்டு பேரும் நிறைய புஸ்தகம் படிப்பிங்கன்னு ராதி சொல்லுவா… அதான் கொஞ்சம் புக்ஸ்…” என்றாள் புன்னகையுடன்.
“ஓ… ரொம்ப சந்தோஷம் மா… பேப்பர்ல உன் பேட்டி படிச்சோம்… ரொம்ப நல்லா இருந்துச்சு… நீ இன்னும் பல உயரங்களை அடையணும்… சாதிக்கணும்னு நினைக்கிற நிறையப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கணும்… ராதி எப்பவும் உன்னைப் பத்தி தான் சொல்லிட்டு இருப்பா… உன்னை அவ பிரண்டுன்னு சொல்லிக்கிறதுல அவளுக்கு ரொம்பப் பெருமை…” என்றார் சந்தோஷத்துடன்.
அதற்குள் ஓவியாவைத் தெரிந்த சிலர் அவளிடம் பேச வர, “நீ பாரு மா… உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்…” என்றார் சரத்தின் அன்னை.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவளிடம், “அப்பாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல… இனி கால்ல வெந்நீர் கொட்டின கதையா கிளம்பறேன்னு சொல்லிட்டே இருப்ப… அதெல்லாம் முடியாது, இப்பவே சொல்லிட்டேன்…” என்றவளை நோக்கி சிரித்தவள், “பங்க்ஷன் முடிஞ்ச பிறகு தான் கிளம்புவேன் போதுமா… நீ வந்தவங்களை கவனி…” என்றாள் தோழியிடம்.
கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து சின்னக் குழந்தைகள் பாடி, ஆடி என்று உற்சாகமாகவே சென்றது நிகழ்ச்சி. ஓவியாவிடம் ஒரு டான்ஸ் ஆடும்படி நேயர் விருப்பமாய் நிறையப் பேர் கேட்க, அவள் சுரிதாரில் வந்திருந்ததால் முதலில் மறுத்தவள் பிறகு துப்பட்டாவை சுற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு களத்தில் குதித்தாள்.
“மன்னவன் வந்தானடி… தோழி…
மஞ்சத்திலே இருந்து
நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி, தோ…ழி…
நாட்டியப் பேரொளி பத்மினி ஆடிய பாடலுக்கு அழகாய் துள்ளி, வளைந்து பாவத்தோடு அவள் ஆடி முடிக்கவும் அனைவரும் சந்தோஷமாய் கை தட்டினர்.
“ரொம்ப அருமையா ஆடற மா… அடுத்து உங்க நிகழ்ச்சி எந்த மேடைல இருந்தாலும் கண்டிப்பா வந்திருவோம்…”
அவர்களின் சந்தோஷமும், பாராட்டும் அவளை புன்னகைக்க செய்ய நன்றி கூறினாள்.
“ஓவி, எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு… வந்ததோட இப்படி ஒரு டான்சும் ஆடி எல்லாரையும் சந்தோஷப் படுத்திட்ட…” நெகிழ்ச்சியுடன் கூறிய ராதிகாவிடம் புன்னகைத்தாள். சிறிது நேரம் இருந்து சாப்பிட்ட பிறகே அனுப்பி வைத்தாள்.
“ஓவி, தனியாப் போயிடுவியா… இவரை வேணும்னா துணைக்கு அனுப்பட்டுமா…” ராதிகா கேட்க, “அப்புறம் அண்ணா எப்படி திரும்ப வருவார்… நான் பார்த்துக்கறேன்…” மறுத்து தைரியத்தில் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாலும் வானத்தில் காணாமல் போயிருந்த நிலவும், சுற்றிலும் படர்ந்திருந்த இருட்டும் அச்சத்தை விளைவிக்காமல் இல்லை. சிவநேசனுக்கு அன்று வயிறு சரியில்லை என்பதால் ஆயிரம் பத்திரம் சொல்லியே பயத்துடன் மகளைத் தனியாக அனுப்பி இருந்தார்.
ஒவியாவின் வீடு அங்கிருந்து முக்கால் மணி நேரப் பயணத்தில் இருந்தது. இரவு நேரமாதலால் வாகனங்கள் ஓய்ந்திருக்க, மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கி இருந்தது. ராதிகாவின் தெரு இருந்த குடியிருப்புப் பகுதியில் இருந்து திரும்பி மெயின் ரோட்டில் கலந்தவளை காற்று இதமாய் தட்டிக் கொடுத்து நானிருக்கிறேன் என்றது.
பாதி தூரம் வந்தபிறகு ஸ்கூட்டியில் கடகடவென்று ஏதோ சத்தம் கேட்க அப்படியே ஆப் ஆகி நிற்க அதிர்ந்தாள்.
மீண்டும் ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தும் பிரயோசனமில்லை.
“அச்சோ, இந்த நேரத்துல நடு ரோட்டுல நின்னுருச்சே… என்ன பண்ணுறது…” யோசித்தவள் பாகில் தனது அலைபேசியைத் தேட அதைக் காணவில்லை.
“போனை எங்க வச்சோம்…” யோசித்தவளுக்கு சாப்பிட செல்கையில் ராதி வீட்டில் சார்ஜில் குத்தியது நினைவு வர தலையில் அடித்துக் கொண்டாள்.
“கடவுளே, இப்படி மாட்டிகிட்டனே…” என்றவள் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு உதவிக்கு யாரும் வர மாட்டார்களா…” எனப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஒரு புறநகர் ஏரியாவை ஒட்டி உள்ள மெயின் ரோடு என்பதால் வண்டிகள் குறைவாகவே இருந்தன.
தவிப்புடன் நின்று கொண்டிருந்தவளுக்கு தேவையில்லாமல் ஏதேதோ நினைவுகள் அச்சுறுத்த, டாக்டர் பிரியங்கா, நிர்பயா எல்லாம் நினைவில் வந்து சென்றனர்.  
தூரத்தில் உதயமாகி தனை நெருங்கி வந்து கொண்டிருக்கும்  ஹெட் லைட் வெளிச்சத்தை பயத்துடன் பார்த்து நின்றாள்.
“ஹெல்ப் கேக்கலாமா, வேண்டாமா…” என யோசித்தவள், எதற்கும் இருக்கட்டும் என்று தனது பாகில் வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரே பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டாள்.
“வேறு வழியில்லை, கேட்டுதான் ஆகவேண்டும்…” என முடிவுக்கு வந்தவள் கையை அசைத்து லிப்ட் கேட்டாள். அவள் அருகே வந்து நின்ற காரின் கண்ணாடி இறங்க, டிரைவர் சீட்டில் அடர்ந்த தாடி மீசையுடன் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அவளுக்கு திக்கென்றது.
“பார்க்கவே தீவிரவாதி மாதிரி இருக்கான்… இவனை நம்பி ஹெல்ப் கேட்கலாமா…” என யோசிக்கையில் அவனது குரல் மதுவின் வாடையோடு ஒலித்தது.
“எஸ்ஸ்… என்ன…” என்றவனின் கண்களும் லேசாய் சிவந்திருக்க பயத்துடனே கேட்டாள் ஓவியா.
“சார், என் வண்டி ரிப்பேர் ஆகி நின்னுருச்சு… எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா…” என்றவளை கண்ணைச் சிமிட்டி கண்களை விரித்துப் பார்த்த பிரம்மா,
“இதென்ன, என் ஓவியம் உயிரோட முன்னாடி நிக்குது…” என்றவன், அவளையே உத்துப் பார்க்க அவள் எரிச்சலுடன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“சாரிமா, நான் மெக்கானிக் இல்லையே…” என்றவனை அவள் திகைப்புடன் நோக்கி நின்றாள்.
உள்ளத்தில் உருவாகி   
ஓவியத்தில் கருவானவள்
உயிர் கொண்டு முன்னில்
பெண்ணாக நின்றதென்ன…
இவளென் ஓவியப் பாவையா…
இல்லை… ஓவியா தான்
எனக்கு உயிர் தந்த பாவையா…
புரியாமல் நான்…

Advertisement