Advertisement

அத்தியாயம் – 5
விகடனுக்காய் வரைந்த ஓவியத்தை திருப்தியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்து குமுதம் இதழின் சிறுகதைக்கான ஓவியத்தை தீட்டத் தொடங்கினான் பிரம்மா.
கோடுகள் மெல்ல இணைந்து கவர்ச்சியான பெண்ணின் வடிவமானது. டீக்கடை ஒன்றில் ஒரு ஆண் அமர்ந்து அங்கே வேலை செய்யும் அழகுப் பெண்ணையும் அவளது விலகிய மாராப்பையும் கள்ளத்தனமாய் ரசிப்பது போன்ற ஓவியம். பெண்ணின் முகத்தில் ஒரு சுருள் முடியைத் தொங்க விட்டு காதில் ஜிமிக்கியை வரைந்தவன் அவள் கடைக்கண்ணில் வழியும் புன்னகை கண்டு தானும் புன்னகைத்தான்.
தலையில் அவன் பூவைச் சூட்ட இன்னும் நாணத்துடன் அழகானாள் ஓவியப்பெண். இறுதி டச்சப் முடிந்து பார்க்க, அந்தக் கண்களும் முகமும் ஓவியாவை ஒத்திருக்க வியப்புடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் வரையும் பெண் சித்திரங்கள் எல்லாம் அவள் முகத்தையே ஒத்திருக்கும் ரகசியம் என்னவாய் இருக்கும்… ஒருவேளை அவளை எங்காவது பார்த்திருக்கிறோமா…” தனது நினைவடுக்கில் தேடியவனுக்கு இல்லை என்றே தோன்றியது.
“யார் அந்த ஓவியா… அவளுக்கும் என் ஓவியங்களுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்கிறதா…” யோசித்துக் கொண்டே அதன் இறுதி வடிவத்தை முடித்தவன் வெளியே வந்தான்.
ராகவ் கம்ப்யூட்டரில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருக்க, அவனிடம் சென்றான்.
“ராகவ்… அந்த சிப்பி வார இதழ் ஆசிரியர் ஒரு கவர் கொடுத்தாரே எடு…” என்றதும் அவர் எடுத்துக் கொடுத்தான். அதைத் திறக்க அதற்குள் நான்கு நடிகைகள் மேக்கப்புடன் புகைப்படத்தில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சார், நடிகைங்க போட்டோவா இருக்கு…”
ராகவ் கேட்க புன்னகைத்த பிரம்மா, “இந்த நாலு நடிகைகளை மிக்ஸில போட்டு அரைச்சா எப்படி இருக்கு…”
“என்ன தெய்வமே இப்படி கேக்கறிங்க, ரொம்ப நாஸ்டியா இருக்கும்…” என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.
“ம்ம்… ஆனா இவங்க நாலு பேரையும் மிக்ஸ் பண்ணி புதுசா ஒரு ஓவியம் வேணுமாம் தொடர்கதைக்கு…”
“ஓ… அதெப்படி… ஒருத்தரோட கண்ணு, ஒருத்தரோட மூக்கு, ஒருத்தரோட உதடுன்னு எடுத்து வரையப் போறீங்களா…” அவன் ஆச்சர்யமாய் கேட்க, “வரைஞ்சதும் நீயே பாரு…” என்றவன் மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
சுவிங்கத்தைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டவன் அந்த நான்கு புகைப்படங்களையும் சில நிமிடங்கள் பார்த்தான். ராகவ் சொன்னது நினைவில் வர சிரித்துக் கொண்டவன், அவர்கள் படத்தை நான்காய் பிரித்துக் கொண்டு பென்சிலைக் கையில் எடுத்து கோடுகளை இழுக்கத் தொடங்கினான்.
நான்கு பேரின் கண்களையும் ஒரு ஜோடிக் கண்களாய் மாற்றி, ஒருத்தருக்கு நீண்டு மற்றவருக்கு குறைந்து, என இருந்த மூக்கை எடுப்பான நீண்ட மூக்காய் மாற்றி அதற்கு அதில் ஒருவரின் இதழைப் பொருத்தினான். அதற்கேற்ற முக அமைப்பை இன்னொருவரின் படத்திலிருந்து எடுத்துக் கொண்டு அழகாய் முகத்தை வரைந்தவனுக்கு திகைப்பாய் இருந்தது.
அழகாய் இதழோடு கண்களும் சிரித்துக் கொண்டிருந்த அந்த ஓவியத்திலும், ஓவியாவின் ஜாடை தெரிய வியப்புடன் நோக்கினான். அதில் கழுத்தைக் கோடுகளால் இழுத்து சேலை பார்டர் கை டிசைனை வடித்து தூரிகையால் வண்ணம் கொடுக்கத் தொடங்கினான்.
அவன் எதிர்பார்த்ததை விட அழகான ஓவியம் மிளிர்ந்தது. இறுதியில் பைனல் டச் கொடுக்கும் போது ராகவ் கதவைத் தட்ட, “வா ராகவ்…” குரல் கொடுத்தான். உள்ளே வந்தவன் அங்கே உருமாறி, உயிர் கொண்ட புது உருவம் கண்டு கண்களை வியப்புடன் விரித்து, “வாவ்…” என்றான்.
“எப்படி தெய்வமே இப்படி… வரைஞ்சிடுவிங்கன்னு தெரியும்… ஆனாலும் இவ்ளோ அழகா வரும்னு எதிர்பார்க்கல… அச்சோ, என்னா அழகு… எனக்கே லவ் பண்ணனும் போல இருக்கே…” என்றவனை நோக்கிப் புன்னகைத்த பிரம்மா கைகளைத் துணியில் துடைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
அவனது கண்கள் ஓவியத்தின் ஒவ்வொரு பாகங்களையும் அலச இதழ்களில் மென்னகை வந்து அமர்ந்து கொண்டது.
“இது எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி அனுப்ப வேண்டியவங்களுக்கு அனுப்பிடு… லாஸ்ட் டைம் அனுப்பின ஓவியங்களுக்கு பேமன்ட் வந்திருச்சான்னு செக் பண்ணிக்க…” என்றான்.
“ம்ம்… சரிங்க தெய்வமே…”
“நான் அசோகன் சார் ஆபீசுக்குப் போயிட்டு வரேன்… ஆர்கே சார் தொடர் ஒண்ணு குடும்ப நாவல்ல வருதாம்… அதுக்கு வரையணும்னு சொல்லி இருந்தார்…”
“ஓகே சார், அப்புறம் நாளை சன்டே, அந்த காமெடி ஸ்டோரிக்கு கார்ட்டூன் ஓவியம் வரைஞ்சு தரேன்னு சொல்லி இருந்தீங்க… அதை நாளைக்கு அனுப்பனும்…”
“ம்ம்… அனுப்புவோம்… நைட் முடிச்சிடறேன்…” என்றவன், எழுந்து நெட்டி முறித்துக் கொண்டு வெளியே வந்தான்.
“தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா…” அவனைக் கண்டதும் ஜானும்மா அன்போடு கேட்க, “வெளிய கிளம்பிட்டேன்… வந்து சாப்பிடறேன், ஜானும்மா…” என்றான்.
“இப்பவே சாப்பாட்டு நேரம் ஆகிடுச்சு… இனி போயிட்டு வந்து சாயந்திரமா சாப்பிடறது… இந்த வயசுல நேரம் காலத்துக்கு சாப்பிடலேன்னா எப்படி…” அவர் அங்கலாய்க்க, “சரி, எடுத்து வைங்க, சாப்பிட்டுப் போறேன்…” என்றதும் மலர்ந்தவர் வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தார்.
புறப்பட்டு ஜீன்ஸ், டீஷர்ட்டில் வந்தவன் சாப்பிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பிரம்மாவைக் கண்டதும் தோளில் கையிட்டு அன்போடு வரவேற்ற அசோகன்ஜி, “ஹலோ யங் மேன், வா, வா… இப்ப தான் ஆர்கே சார் பேசிட்டு போனை வச்சார்…” என்றார் புன்னகையுடன்.
“ஓ… ஓகே அண்ணே… எந்த மாதிரி ஓவியம்னு சொன்னாரா…”
“ஹீரோயின் பேரு மீனாட்சி, அமைதியான அழகான, பண்பான பொண்ணு… அதுக்குத் தகுந்தாப் போல ஒரு ஓவியம் வரைஞ்சு கொடுக்க சொன்னார்… கதாநாயகி தான் முக்கிய கதாபாத்திரம்… அதனால, அந்த ஓவியம் அழுத்தமா வேணும்னு சொல்ல சொன்னார்…” என்றார் அசோகன்ஜி.
“சரிண்ணே, வரைஞ்சிடுவோம்… எப்ப வேணும்…”
“ரெண்டு நாள்ல… அதைப் போட்டு தான் ஸ்டோரிக்கு இன்ட்ரோ போடணும்… சரி, நான் இன்னும் லஞ்ச் முடிக்கல… கம்பெனி கொடுக்க ஹோட்டலுக்கு வர்றியா…” என்றார் அலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டு.
“நான் லஞ்ச் முடிச்சுட்டு தான் கிளம்பினேன்… நீங்க போயிட்டு வாங்க…”
“பரவால்ல வாப்பா… உன்னோட பேசி ரொம்ப நாளாச்சு…” எனவும் மறுக்க முடியாமல் உடன் கிளம்பினான். அவர் அழைத்துச் சென்ற பெரிய ரெஸ்டாரண்டில் அவருக்கு முன்னில் அமர்ந்தான். அவர் பிரைடு ரைஸ், சப்பாத்தி என்று சொல்லிக் கொண்டிருக்க இவனுக்கு ஒரு ஜூஸ் மட்டும் சொல்லிக் கொண்டான்.
“துபாய் டிரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு அண்ணா… பொண்ணு பாமிலி நல்லாருக்காங்களா…”
“சூப்பரா இருந்துச்சு, ரொம்ப என்ஜாய் பண்ணேன்… நம்மளை மாதிரி நேரம், காலம் பார்க்காம ஓடிட்டே இருக்கவங்களுக்கு இந்த மாதிரி ட்ரிப் தான் ஒரு எனர்ஜி பூஸ்டர்… நீ கூட சிங்கப்பூர் போயிட்டு இப்ப தானே வந்த… இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் தனியா போனா என்ன ஜாலி… சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடாம ஏமாத்திட்டே இருக்க…”
“ஹாஹா… சிங்கிளா இருக்க வரைக்கும் தான் நினைச்ச போல, நினைச்ச நேரத்துக்குப் போக முடியும்… கல்யாணம், குடும்பம்னு வந்துட்டா எல்லாத்துக்கும் யோசிச்சுப் பண்ணனும்… நமக்கு அது செட்டாகாது…”
“அதுக்காக பீஷ்மர் போல இப்படியே இருந்துடலாம்னு நினைக்கறியா… இந்த சந்தோஷம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான்… அதுக்கப்புறம் வாழ்க்கைல அடுத்து என்னன்னு மனசு அங்கேயே நிக்க ஆரம்பிச்சிடும்… அதுக்கு இடம் கொடுக்காம காலாகாலத்துல எல்லாத்தையும் பண்ணிட்டு வாழ்க்கையை அதன் போக்கில என்ஜாய் பண்ணறது தான் சரி…” வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்த சகோதரனாய் அவர் சொல்ல அதை மறுக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான் பிரம்மா.
“சரிதாண்ணே… இது வரைக்கும் எந்தப் பெண்ணிலும் அப்படி ஒரு எண்ணம் எனக்குத் தோணலை… பார்ப்போம்… என்னோட அலைவரிசைக்கு ஒத்து வர்ற ஒரு பொண்ணைப் பார்த்தா உங்களுக்கு கல்யாண சாப்பாடு நிச்சயம்…”  
“இத்தன வருஷமாவா உனக்குப் பிடிச்ச போல ஒரு பொண்ணு கிடைக்கல… ஒருவேளை உன் ஓவியத்துல உள்ள பொண்ணு போல வேணும்னு தேடறியோ…” அவர் சிரிப்புடன் எதார்த்தமாய் சொல்ல கண்ணுக்குள் மின்னிய ஓவியாவின் உருவம் கண்டு அவனுக்கு சற்று அதிர்ச்சியாய் இருந்தது.
அவன் அமைதியாய் இருக்கவே அவரும் சாப்பிட்டு முடித்தார். இருவரும் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அவரிடம் விடைபெற்று தன் காரில் கிளம்பினான் பிரம்மா.
மனதுக்குள் சற்று முன் நடந்த உரையாடல்களும், அதைத் தொடர்ந்து தோன்றிய ஓவியாவின் முகமுமே நிறைந்திருக்க அவனுக்கு ஒரு மாதிரி மூச்சு முட்டியது.
“என்ன இது, இப்படி ஒரு புதுவித உணர்வு… இந்த சில நாளாய் இந்தப் பெண்ணின் உருவம் ஏன் என் கண்களில் பட வேண்டும்… அவளது முகம் என் ஓவியங்களை ஏன் ஒத்திருக்க வேண்டும்… இதற்கெல்லாம் என்ன காரணமாய் இருக்கும்…” யோசித்தவனுக்கு தலை வலித்தது.
சமயம் ஐந்து மணியை நெருங்கியிருக்க சாலையில் வாகனங்கள் கூடத் தொடங்கி இருந்தது. ஒரு தியேட்டர் வாசலில் நிறைந்திருந்த கூட்டத்தைக் கண்டதும் என்ன படம் என்று கவனிக்க, தளபதி விஜய் மாஸ்டர் போஸ்டரில் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.
தனது ஹுண்டாய் காரை நேராய் பார்க்கிங்கில் விட்டவன் டிக்கட்டை வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தான். வேலை நாட்கள் என்பதால் தியேட்டரில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கண்ணில் கூலருடன் பாக்கெட்டில் கையை விட்டபடி நடந்தவன் உள்ளே சென்று தனக்கான இருக்கையை சரிபார்த்து அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலுடன் படம் தொடங்க, சிறிது நேரத்தில் வாத்தி கம்மிங்…
டிரம்ஸ் முழங்க, அனிருத்தின் ஆட வைக்கும் இசைக்கு மாணவ ரசிகர்களின் ஆட்டம் தொடங்க, தளபதியும் அழகாய் ஸ்டெப் வைத்து ஆடுவதை ரசனையுடன் பார்த்திருந்தான். அதற்குப் பிறகு கதை நகரத் தொடங்க சிறிது நேரம் திரையில் கண்ணைப் பதித்திருந்தவன் மெல்ல இருக்கையில் தலை சாய்த்து உறக்கத்துக்கு சென்றான்.
அடுத்து குட்டி ஸ்டோரி பாடலின் அதிர்வில் மெல்லக் கண் விழிக்க, அவனது அலைபேசி அலறிக் கொண்டிருந்ததை உணர்ந்து எடுத்து யாரென்று பார்த்தான். ராகவ் தான் அழைத்திருந்தான்.
அப்படியே எடுத்து காதுக்குக் கொடுக்க பாடலைக் கேட்டவன், “சார், மாஸ்டர் படத்துக்கா போயிருக்கீங்க… குட்டி ஸ்டோரி எல்லாம் கேக்குது…” என்றான் திகைப்புடன்.
“ம்ம் லைட்டா தலைவலி… அதான் தியேட்டருக்கு வந்தேன்…”
“தல வலிச்சா தைலம் தான போடணும்… இவர் எதுக்கு தளபதியைப் பார்க்கப் போனாரு…” யோசித்தாலும் அந்த இரைச்சலில் கேட்காமல், “கார்ட்டூன் படம் ரெடி ஆகிருச்சான்னு கேக்குறாங்க, என்ன சொல்லட்டும்…”

Advertisement