Advertisement

அத்தியாயம் – 4
“நான் பிறந்தது ஆந்திராவில்… பத்து வயசுல ஒரு பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாம சென்னை வந்தோம்… பிஎஸ்சி படிச்சிட்டு சாப்ட்வேர் பிரிலான்ஸராக இருந்தேன்… கிளையன்ட்சுக்கு சாப்ட்வேர் டெவலப் பண்ணிக் கொடுக்கிறது தான் என் வேலை, பிரீலான்சரா இருந்ததே சின்ன வயசுல இருந்து கத்துட்டு வர்ற டான்சுக்கு அதிக நேரம் கொடுக்கணும்னு தான்… பாரதநாட்டியத்தை முழுமையா கத்துகிட்டு அதையே புரபஷனலா தொடரணும் என்பது தான் என் விருப்பமா இருந்துச்சு… அப்பதான் ஒரு நடன நிகழ்ச்சில ராஜஸ்ரீ வாரியர் மேமை சந்தித்தேன்… அவங்ககிட்ட நாட்டியம் தொடரணும்னு என் ஆசையை சொன்னதும் அடுத்த நாளே வர சொல்லி சம்மதிச்சாங்க… சென்னைப் பல்கலைகழகத்துல எம்ஏ பரதநாட்டியம் கோர்ஸ் படிச்சுகிட்டே ராஜஸ்ரீ மேடம்கிட்ட பிராக்டீஸ் தொடர்ந்தேன்… அவங்க எனக்கு சிறந்த குருவா மட்டுமில்லாம நல்ல வழிகாட்டியாவும் இருந்தாங்க…”
“நீ கத்துகிட்ட வித்தையை மத்தவங்களுக்கும் கத்துக் கொடுன்னு எனக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்தது மேடம் தான்… நான் தஞ்சாவூர் பாணில தான் நடனம் கத்துகிட்டேன்… ஆனா எம்ஏ படிக்கும்போது மற்ற பாணி நடனங்களையும் பழகினதால எனக்கு கிளாஸ் எடுக்க வசதியா இருந்துச்சு…”
“என்னென்ன விருதுகள் வாங்கிருக்கீங்க மேடம்…?”
“கலைவாணி, நாட்டிய கலாரத்னா, கலாநிதி உள்ளிட்ட பல விருதுகள் கிடைச்சிருக்கு… 2019ல 50 பேரை சேர்ந்து பின்னல் கோலாட்டம் நிகழ்ச்சி நடத்தினேன்… அது இந்தியன் புக் ஆப் ரெக்கார்டுல இடம் பிடிச்சிருக்கு… அடுத்து தமிழக அரசு நடத்துற இளம் தளிர் போட்டிக்கு மாணவிகளைத் தயார் பண்ணிட்டு இருக்கேன்… நிச்சயம் அதுலயும் எங்க முத்திரையைப் பதிக்க முயற்சி செய்வோம்… ஆனா, இது எல்லாத்தையும் விட ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் வந்து பாராட்டுவதைத்தான் ரொம்பப் பெரிய விருதா நினைக்கிறேன்…”
“பரத நாட்டியம் பொதுவா இந்துக்களுக்கான கலைன்னு ஒரு எண்ணம் இருக்கு… அதைப் பத்தி என்ன நினைக்கறிங்க…?”
“என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் கலை… என்கிட்ட சதாம் பாஷா எனும் வெஸ்டர்ன் டான்சர், பரதம் கத்துக்க வந்தார்… ரொம்ப ஆர்வமா முழுமையா பயிற்சி பெற்று ஷீரடி கோவில் உள்பட பல கோயில்கள்ல நிகழ்ச்சி பண்ணியிருக்கார்… அவர் மூலமா நிறையப்பேர் என்கிட்ட பரதம் கத்துக்க வர்றாங்க…”
“உங்களுக்கு வேற கலைகள்ல ஆர்வம் இருக்கா…”
“ம்ம்… ஓவியம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்… நடனத்தில் எப்படி எங்கள் அபிநயங்கள் உணர்வை வெளிப்படுத்துதோ, அதுக்கு சற்றும் குறையாமல் வெறும் கோடுகளில் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானவை… சின்ன வயசுல ஒரு கட்டத்துல, அடுத்து என்னன்னு கூடத் தெரியாம தேங்கி நின்ன என்னை எனக்கான இலட்சியத்தை நோக்கி அடியெடுத்து வைக்க உதவினது ஓவியம் தான்… என் நாட்டியத்தின் பல பாவனைகளை சில ஓவியங்களில் கண்டு பிரம்மித்துப் போயிருக்கேன்…”
“ஓ… நடனத்தாரகைக்கு ஓவியத்தில் இத்தனை விருப்பமா… ஒருவேளை, உங்கள் ஒவியாங்கற பெயர் தான் காரணமா… உங்களுக்குப் பிடிச்ச ஓவியர் யார்னு சொல்ல முடியுமா…” எங்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அழகாய் சிரிக்கிறார் அந்த ஓவியத் தாரகை.
“அவங்க பேரை சொல்லுங்களேன்…”
“இல்ல, ஒருத்தர் இந்த உலகம் அறியப்படற பிரபல ஓவியர்… இன்னொருத்தர் இந்த உலகத்துல எங்கே இருக்கார்னு எனக்குத் தெரியாத சின்ன வயசுல அறிமுகமான ஒவியர்… அதனால பேர் குறிப்பிட விரும்பலை…” அழகாய் பதில் சொல்லாமல் தவிர்த்து சிரிக்கிறார். அவரது பூரிப்பான புன்னகையில் கலைமகளின் பூரண ஆசி தெரிகிறது. அழகாய் புகைப்படங்களில் சிரித்துக் கொண்டிருந்தாள் ஓவியா.
கையில் இருந்த நாளிதழில் கண்ணைப் பதித்திருந்த பிரம்மா மீண்டும் அதையே படித்துக் கொண்டிருக்க அழைப்பு மணியைத் தொடர்ந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தொடர்ந்து கிண்கிணியாய் ஒலித்த பெண்ணின் பேச்சுக் குரல் உள்ளே தொடர ஹாலில் அமர்ந்திருந்தவன் நிமிர்ந்தான்.
அமிர்தா வந்து கொண்டிருந்தாள்.
“ஹாய் பிரம்மா, ஹவ் ஆர் யூ… சிங்கப்பூர் போனதுல இருந்து ஒரு கால் கூடப் பண்ணல… நான் பண்ணினாலும் எடுக்கவே இல்ல…”
“ஹூம்… கொஞ்சம் பிஸி, அதான்…”
“தெரியுமே… நீங்க பிசியா இருப்பிங்கன்னு தான் நானே உங்களைத் தேடி வந்துட்டேன்…” என்றவள் அவன் கையிலிருந்த நாளிதழைக் கண்டதும், “அட பேப்பர் படிக்க எல்லாம் உங்களுக்கு டைம் இருக்கா…” கேட்டுக் கொண்டே சலுகையுடன் அருகில் சோபாவில் அமர்ந்தாள்.
பிரம்மா நிமிர்ந்து ராகவை முறைக்க, “அவங்க உள்ள வரும்போது நான் என்ன பண்ணுறது…” என்பது போல் பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“சரி… என்ன விஷயம் அமிர்தா…” நேராய் விஷயத்துக்கு வந்தான் பிரம்மா.
“நான் உங்களை மீட் பண்ண விஷயம் வேணுமா என்ன… உங்களைப் பார்க்கணும்னு தோணுச்சு, வந்துட்டேன்… சிங்கப்பூர்ல இருந்து எனக்கு என்ன வாங்கிட்டு வந்திங்க பிரம்மா…” கேட்டவளின் காதில் தொங்கிய பெரிய வளையங்கள் இரண்டும் அவள் பேச்சுக்குத் தகுந்தவாறு நாட்டியமாடின. அணிந்திருந்த வெல்வெட் புல் பிராக் அவளது அங்க வளைவுகளை அப்பட்டமாய் காட்டியது.
நாகரீகப் பணக்காரப் பூச்சுக்கு அவளது தோற்றத்தில் எந்தக் குறைவும் இல்லாமல் இருந்தாலும் அதையும் மீறி பளிங்கு முகத்தில் ஒரு குழந்தைத்தனம் வழிந்தது.
“பெருசா பர்சேஸ் ஏதும் பண்ணல…”
“ஓ… சரி விடுங்க, இங்க கிடைக்காததா… அப்புறம் இன்னொரு விஷயமும் இருக்கு…” என்றவள் ஜானும்மா யாரென்று எட்டிப் பார்க்கவும் அவரை நோக்கி சிரித்தாள்.
“ஜானும்மா, வீட்டுக்கு வந்தா காபி, டீ, ஜூஸ் எல்லாம் தர மாட்டிங்களா…” சிணுங்கலாய் கேட்க, “என்ன வேணும் மா…” என்றார் அவர்.
“ம்ம்… உங்களோட ஸ்பெஷல் காபி, உங்களுக்கும் வேணுமா பிரம்மா…” என்றாள் அவனிடம் திரும்பி.
“வேண்டாம்… நான் கொஞ்சம் வெளிய கிளம்பிட்டேன்…”
“ஓ… சூப்பர், நானும் கூட வரட்டுமா… அப்படியே சொல்ல வந்ததை சொல்லிடுவேனே…” என்றாள் சிரிப்புடன்.
“எதுவா இருந்தாலும் இங்கயே சொல்லு… நான் போறது பத்திரிகை ஆபீசுக்கு…” என்றான் அழுத்தமாக.
“வர்ற சன்டே என்ன விசேஷம் தெரியுமா…” என்றாள் கண்ணை சிமிட்டி சிரிப்புடன்.
யோசித்தவன் புரியாமல், “என்ன…” என்றான்.
“ஒரு லிஜன்டோட பிறந்தநாள்…”
“ஓ… யாருக்கு…” என்றான் அப்போதும் புரியாமல்.
“அந்த லிஜன்டை நான் சந்திச்சு ஒரு வருஷம் ஆச்சு…” என்றதும் அவன் யோசனையாய் பார்க்க, “என்ன பிரம்மா, உங்க பிறந்த நாளையே மறந்துட்டிங்க…” என்றாள் சிறு பிள்ளையின் சிணுங்கலுடன்.
“ஹோ, என் பிறந்தநாளா…” என்றவனுக்கு அவளை நினைத்து சற்று சங்கமாய் இருந்தது. அவளோடு வேண்டா வெறுப்பாய் பழகினாலும் தன்மீது உண்மையான அன்பு கொண்டிருப்பதால் மட்டுமே தனது பிறந்தநாளை நினைவு வைத்திருக்கிறாள் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.
போன வருடம் அவனது பிறந்த நாளுக்கு அடுத்த நாள் தான் ஒரு நிகழ்ச்சியில் அவளைத் தந்தையுடன் கண்டிருந்தான்.
“என்ன இப்படி அசால்ட்டா கேக்கறிங்க… உங்க பிறந்தநாள் எனக்கு எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா… டாடிகிட்ட சொன்னேன்… உங்களை எங்க வீட்டுக்கு அழைச்சு கிரான்டா ட்ரீட் கொடுத்து, அசத்தலா செலபரெட் பண்ணனும்னு… அவரும் ஹாப்பியா ஓகே சொல்லிட்டார்… சன்டே எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சிட்டு நம்ம வீட்டுக்கு வரணும்… எங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்… இதை போன்ல சொல்லறதை விட நேர்ல சொல்லறது தான் மரியாதைன்னு தோணுச்சு… டாடி, உங்களுக்கு கால் பண்ணி இன்வைட் பண்ணுவார்… கண்டிப்பா வருவிங்க தானே…” சிறு குழந்தையின் ஏக்கமும், சந்தோஷமும் அவள் கண்ணில்.
“எதுக்கு இந்த செலபரேஷன் எல்லாம்… நான் அப்படி ஒண்ணும் லைப்ல சாதிக்கலைன்னு நினைக்கறேன்…”
“நீங்க அப்படி தான் சொல்லுவிங்க, எனக்காக ப்ளீஸ்…”
“நிறைய பெண்டிங் வொர்க் இருக்கு… எல்லாம் முடிக்கணும்… என்னைக் கம்பெல் பண்ணாத…” சட்டென்று அவன் மறுக்கவும் அவள் முகம் வாடியது.
“நீங்க வருவிங்கன்னு எவ்ளோ ஆசையா டாடிகிட்ட சொல்லி சம்மதம் வாங்கினேன், இப்படி பொசுக்குன்னு சொல்லறீங்க…”
“என்னைக் கேட்டா பண்ண… எனக்கு விருப்பம் இல்லமா, கம்பெல் பண்ணாத…” என்றதும் அவள் கண்களில் ஏமாற்றம். ராகவ், ஜானும்மாவுக்கு கூட பாவமாய் இருந்தது.
ஜானும்மா கொடுத்த காபியை மௌனமாய் வாங்கிக் கொண்டவள், குடித்துவிட்டு திருப்பிக் கொடுத்தாள்.
“நான் டாடிகிட்ட என்ன சொல்லுவேன்…”
“எனக்கு வேலை இருக்குன்னு மறுத்துட்டேன்னு சொல்லிடு…” என்றவன் மேலே பேசாமல் எழுந்து உள்ளே சென்று விட அவள் சிறுத்துப் போன முகத்துடன் எழுந்தாள்.
“சரியான இம்சை… முதல்லயே கட் பண்ணியிருக்கணும்… அவ அப்பாவுக்காக சும்மா இருந்தா ஓவரா தான் உரிமை எடுத்துக்கிறா…” முணுமுணுத்துக் கொண்டே சென்றவனின் வார்த்தைகள் ஒன்றிரண்டு அவள் காதில் விழ கலங்கிய கண்களுடன் அங்கிருந்து சென்றாள் அமிர்தா.
அமிர்தாவின் தந்தையை பிரம்மாவுக்கு பத்து வருடப் பழக்கம். முதன்முதலில் அவனது உழைப்பில் பதினொன்பது வயதில் ஒரு பிளாட் வாங்கத் தீர்மானித்தபோது அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்தது அமிர்தா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தான். அதற்குப் பிறகு இருவரும் அவரவர் தொழிலில் பிஸியாகிவிட அவர் மீது பிரம்மாவுக்கு இப்போதும் ஒரு மரியாதை உண்டு.
மூன்று வருடங்களுக்கு முன்பு இப்போது தாமசிக்கும் இந்தப் பெரிய வீட்டை கட்டத் தீர்மானித்தபோது மனதில் வந்ததும் அமிர்தா கன்ஸ்ட்ரக்ஷன் தான். அவன் விருப்பம் போல் அழகாய் அமைந்தது வீடு. தொழில் முறையில் மட்டுமே பழக்கத்தில் இருந்தவர்களை பிரம்மாவின் ஓவியத்தின் மீது அமிர்தாவுக்கு இருந்த ஈர்ப்பே இன்னும் நெருக்கமாக்கியது. தொழில் அளவில் இருந்த நட்பு மெல்ல வீட்டுக்குள் நுழைந்தது. அமிர்தா வீட்டுக்கு ஒரே செல்லப் பெண். மெல்ல அவளது ரசனை ஓவியத்திலிருந்து ஓவியம் வரைபவனின் மேல் திரும்பவும் பிரம்மாவுக்குப் பிடிக்காமல் தவிர்க்கத் தொடங்கினான். அவளது தந்தைக்காக யோசித்து எதுவும் சொல்லாமல் இருந்தவன் இன்று பொங்கி விட்டான்.
எரிச்சலுடன் கையிலிருந்த பேப்பரை கட்டிலில் விசிறியவன் கண்களில் அழகாய் சிரிக்கும் ஓவியாவின் போட்டோ விழ, அதை கவனித்தவனின் மனம் மெல்ல சமனப்பட்டது. எழுந்து டிராயிங் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.
“ம்ம்… இனி தெய்வம் ஈவனிங் வரைக்கும் கதவைத் திறக்காம வரைஞ்சு தள்ளிடும்…” ஜானும்மாவிடம் சொன்ன ராகவ் வேலையை கவனிக்க செல்ல, ஜானும்மாவும் தலையாட்டிவிட்டு தனது பணிகளைத் தொடர சென்றார்.  பிரம்மா எப்போதும் அப்படித்தான்… சந்தோஷமோ, கோபமோ, எரிச்சலோ, வெறுப்போ எதுவாய் இருந்தாலும் தனது உணர்வுகளை மற்றவரிடம் அதிகம் பகிர்ந்து கொள்வதை விட ஓவியங்களில் தான் வெளிப்படுத்துவான். இன்றும் அவனது கைகளில் சிக்கிய தூரிகை படாதபாடுபட, மனதுக்குள் தான் வாசித்த ஓவியப் பெண்ணின் வார்த்தைகள் ஸ்ருதி மீட்டிக் கொண்டிருந்தது.
“அந்தப் பொண்ணோட முகமும், கண்ணும் எனக்கு ஒரு அமைதியைக் கொடுக்குது… என்னோட ஓவியங்களுக்கு எல்லாம் இவளோட சாயல் எப்படி வந்துது… அவ சொன்ன இரண்டு ஓவியர்கள் யாரா இருக்கும்… ஒருவேளை சின்ன வயசுல அறிமுகமான ஓவியர்னு சொன்னது என்னையா இருக்குமோ…” என யோசித்தவன்,
“ம்ஹூம்… அப்படி இருக்காது… அது அந்த அம்முவா இருந்தா இந்நேரம் என்னைத் தேடி வராம இருப்பாளா…” பதினாலு வருஷம் முன்பு இருந்த தேவ் கிருஷ்ணா, இன்று ஆஜானுபாகுவான ஆண்மகனாய் தாடி, மீசையுடன் அடையாளம் தெரியாமல் வளர்ந்து நிற்பதை மறந்து யோசித்தான் பிரம்மா.
      தினசரியில் ஓவியாவின் பேட்டியைக் கண்டவர்கள் விடாமல் அவளை அலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூற புன்னகையுடன் எல்லாருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஓவியா.
“மேடம், அசத்திட்டிங்க… அருமையா இருந்துச்சு பேட்டி… உங்ககிட்ட என் பொண்ணு டான்ஸ் படிக்கிறது நினைச்சா ரொம்பப் பெருமையாருக்கு…” மாணவி ஒருத்தியின் அன்னை அழைத்துப் பாராட்ட நன்றி கூறி போனை வைத்தாள் ஓவியா.
“மா, நான் ஸ்மார்ட் ஸ்கூல் பிரின்சிபல் பேசறேன்… உங்க இண்டர்வியூ பேப்பர்ல படிச்சேன்… ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு… நீங்க எங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்க்கு பார்ட் டைமா டான்ஸ் சொல்லித் தர முடியுமா…” என்றவரிடம், “தேங்க்ஸ் மேடம்… கண்டிப்பா முயற்சி பண்ணறேன்… நானே உங்களை ஸ்கூலுக்கு நேர்ல வந்து பார்க்கறேன்…” என்றவள் சந்தோஷத்துடன் அழைப்பைத் துண்டித்தாள்.
“ஓவி, கலக்கிட்ட… ஓவியம் உனக்கு ரொம்பப் பிடிக்கும்னு தெரியும்… அந்த ரெண்டு பேருல ஒருத்தர் பிரம்மா, இன்னொருத்தர் யாரு… எதுவும் சைல்டு கிரஷ்ஷா…” கிண்டலாய் கண்ணடித்துக் கேட்ட தோழியை செல்லமாய் முறைத்தாலும் எதுவும் சொல்லவில்லை.
சிவநேசனும் மகளின் பேட்டியைப் பார்த்துவிட்டு அவரை அழைத்துப் பேசியவர்களிடம் பெருமையுடன் மகளைப் பற்றி சிலாகித்துப் பேசினார். மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தார்.
வீடு திரும்புகையில் மகளுக்குப் பிடித்த பால் கோவாவும், முந்திரி கேக்கும் வாங்கிக் கொண்டு வந்தார்.
“அம்மு… அப்பாக்கு ரொம்ப சந்தோஷமா, பெருமையா  இருக்குடா… உன்னோட வளர்ச்சியை அம்மா மேல இருந்து பார்த்து சந்தோஷப்பட்டிட்டு இருப்பா… நீ சாதிக்கப் பிறந்தவ… இன்னும் பல உயரங்களை நீ காணனும்… இந்த நிமிஷம் எனக்கு உயிர் போயிட்டாலும் நிம்மதிதான்…” என்ற தந்தையை முறைத்தாள் ஓவியா.
“உங்களோட சந்தோஷத்துக்கு என் அப்பாவை நான் இழக்கனுமா… அம்மா இல்லாத எனக்கு எல்லாமா இருந்து பார்த்துகிட்டது நீங்க தானப்பா… எனக்கு விருப்பமான எந்த ஒரு விஷத்துக்கும் நீங்க மறுப்பு சொன்னதே இல்லை… உங்க துணையும், நம்பிக்கையும் இல்லேன்னா நான் எதுவுமே இல்லப்பா…” என்ற மகளை சந்தோஷத்துடன் அணைத்துக் கொண்டார் சிவநேசன்.
“உன் விருப்பங்கள் சரியா இருக்கும்போது நான் எதுக்குடா மறுக்கணும்… சந்தோஷமா உனக்குத் துணை நிக்கறதை விட பெருசா என்ன பண்ணிட்டேன்… இந்த நிமிஷம் அந்தப் பதினஞ்சு வயசுப் பையன் தேவ் கிருஷ்ணா முகம் தான் நினைவுக்கு வருது… அவன் மட்டும் அன்னைக்கு உனக்கு நம்பிக்கையைக் கொடுக்காம இருந்திருந்தா இந்த சாதனை எல்லாம் சாத்தியமே இல்லை… அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்…” மனதார வாழ்த்தினார்.
அவர் சொல்லவும் ஒரு நிமிடம் அமைதியாய் நின்ற ஓவியா, “சரி, சந்தோஷப்படற நேரத்துல எதுக்கு பீல் பண்ணிட்டு…” பால்கோவாவை தந்தை வாயில் திணித்தாள். மகளை நிற்க வைத்து திருஷ்டி சுற்றினார் தந்தை.
மனைவியின் போட்டோவை வைத்துக் கொண்டு, “சாரு… நம்ம பொண்ணு உன் ஆசைப்படியே வளர்ந்து நிக்கறா… இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கு தானே…” என்ற தந்தையை நெகிழ்வுடன் நோக்கினாள் மகள்.
அடுத்தநாள் ஸ்கூலுக்கு சென்றவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவளது நாட்டியப் பள்ளியைப் பற்றித் தெரிந்து கொண்டு நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்க வந்திருந்தனர். புதிதாய் தொடங்கும் பாட்ச்சில் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுத்தவள் ஸ்மார்ட் ஸ்கூலுக்கு சென்று பிரின்சிபலைக் கண்டு வாரம் இருமுறை நடன வகுப்பு எடுக்க அனுமதியோடு திரும்பி வந்தாள்.
தனது அறையில் கம்ப்யூட்டர் திரையில் கண்ணைப் பதித்து இருந்தவள் ராதிகாவின் வரவில் நிமிர்ந்தாள்.
“ஓவி… நாளைக்கு நான் லீவு… வீட்ல சன்டே பங்க்ஷன் இருக்கறதால நிறைய வேலை இருக்கு… நீ பார்த்துக்க…”
“ம்ம்… சரி ராதி… பெத்தவங்களையே பிள்ளைங்க பாரமா நினைக்குற காலத்துல உன் மாமனாரோட அறுபதாம் பிறந்தநாளை சிறப்பாக் கொண்டாடனும்னு நினைக்கிற உன் மனசு ரொம்பப் பெருசு…”
“என் புருஷனோட உறவுகள் எனக்கும் உறவுகள் தானே… அவங்களுக்கு கல்யாணமாகி ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பிறந்தவர் தான் என் கணவர்… அவர் மட்டுமே உலகம்னு பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க… அந்த அன்புக்கு ஈடா நாம என்ன செய்துட முடியும் சொல்லு… எங்க சந்தோஷத்துக்கு இந்த விசேஷத்தை சிறப்பா செய்யணும்னு நினைக்கறோம்… காலைல கோவில் போயிட்டு அப்படியே ஆஸ்ரமத்துக்குப் போயிடுவோம்… குழந்தைகளோட மதியம் லஞ்ச் சாப்பிட்டு ஈவனிங் நம்ம வீட்டுல எல்லாரையும் அழைச்சு சின்னதா ஒரு பார்ட்டி… நீ நிச்சயம் வந்திருவ தானே… வரலேன்னா உதைப்பேன், பார்த்துக்க…” தோழியை மிரட்டினாள்.
“நீ இவ்ளோ சொல்லணுமா ராதி… சன்டே ஈவனிங் தானே… கண்டிப்பா வந்திருவேன்…” புன்னகைத்தாள் ஓவியா.
“ம்ம்… உன்னைப் பார்க்கணும்னு அத்தை ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்காங்க… வந்தா, ரொம்ப சந்தோஷப் படுவாங்க…” என்றாள் ராதிகா. பிறகு அடுத்தநாள் வேலைகள் சிலதை இருவரும் டிஸ்கஸ் செய்துவிட்டு ராதி வீட்டுக்குக் கிளம்ப பாக்கி இருந்த வேலைகளை முடித்துக் கொண்டு ஓவியாவும் கிளம்பினாள்.
பாதை இதுவென்று
புரிந்து கொண்டால்
பயணம் எளிதாகும்…
பாலைவனத்திலும்
பூக்கள் மலர்ந்திருக்கும்…
பட்டாம் பூச்சியும்
பெரும் பாரம் சுமக்கும்…
தேடு, தேர்ந்தெடு…
வெற்றியின் பாதையில்…

Advertisement