Advertisement

அத்தியாயம் – 3
ரோஜாக்களில் பன்னீர்த்துளி
வழிகின்றதேன் அது என்ன தேன்…
அதுவல்லவோ, பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்…
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்…
வந்தேன்… தர வந்தேன்…
இளையராஜாவின் இதமான இசையில் கமல், ஜானகியின் குரல் சுகமாய் ஸ்டீரியோவில் வழிந்து கொண்டிருந்தது. உடன் சேர்ந்து பாடிக் கொண்டே தான் வரைந்ததை சரி பார்த்துக் கொண்டிருந்த பிரம்மா கதவு தட்டும் ஓசையில்,  “எஸ்…” என, கதவைத் திறந்து ராகவ் எட்டிப் பார்த்தான்.
வரைந்திருந்த ஓவியத்தின் சில வண்ணங்கள் உடை மீதும் அங்கங்கே இருக்க, தலையில் ஒரு முண்டாசைக் கட்டிக் கொண்டு, முக்கால் டிரவுசரும், மிலிட்டரி டீஷர்ட்டுமாய் கையில் தூரிகையுடன் நின்றவனின் வாயில் பபிள் கம் அரைபட்டுக் கொண்டிருந்தது.
“ஆஹா, ஓவியம் ரெடி போலருக்கு தெய்வமே…”
“ம்ம்… பைனல் டச்சிங்…”
“விகடன் ஆபீஸ்ல இருந்து தான் கால் பண்ணாங்க… ஓவியம் இன்னைக்கு கிடைக்குமான்னு கேட்டாங்க…”
“ம்ம்… இதை ஸ்கேன் பண்ணி அவங்களுக்கு அனுப்பிடு… இனி நான் ரெஸ்ட் எடுக்கலாமா…” என்றான்.
“போங்க தெய்வமே, நல்லாத் தூங்கிட்டு வாங்க… மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்ற ராகவின் தலையில் செல்லமாய் தட்டிவிட்டு சிரித்துக் கொண்டே சென்றான் பிரம்மா.
சிங்கப்பூரில் இருந்து வந்த கையோடு சாப்பிட்டு டிராயிங் அறைக்குள் நுழைந்தவன் ஒரு மணி நேரத்தில் வரைய வேண்டியதை முடித்துக் கொடுத்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தான். மெத்தையில் சுருண்டவன் திவ்யமாய் உறங்கத் தொடங்கினான்.
ராகவ், தாய் தந்தை இல்லாமல் ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன். பிரம்மாவின் ஓவியம் எந்த இதழில் வந்திருந்தாலும் அதைப் பாராட்டி ஒரு வரியாவது சொல்லி விடும் ரசிகன். ரசிகனாய் அறிமுகமானவன் படித்து முடிந்ததும் வேலை தேடிக் கொண்டிருக்க தனக்கு உதவியாய் அழைத்துக் கொண்டான். தன்னை விட ஐந்து வயது சின்னவனாய் இருந்தாலும், பிரம்மா மனதில் நினைப்பதை அப்படியே செயலில் செய்யும் புரிதல் ராகவிடம் இருந்ததால் அவனை மிகப் பிடிக்கும்.
மாலையில் உற்சாகமாய் எழுந்து வந்தவன், “ஜானும்மா, காபி…” அடுக்களையை நோக்கி குரல் கொடுத்துவிட்டு ஹாலில் சென்று அமர்ந்தான். தினசரிகளும், அவனது ஓவியம் வந்த புத்தகங்களும் டீப்பாயில் அழகாய் அடுக்கி வைத்திருக்க அதை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தான்.
“இந்தாங்க தம்பி…” ஐம்பதுகளில் இருந்த ஜானும்மா புன்னகையுடன் கோப்பையை அவனிடம் நீட்டினார்.
“என்ன ஜானும்மா, நான் சிங்கப்பூர் போனதும் மகனைப் பார்க்க ஊருக்குப் போறேன் சொன்னிங்க, போனிங்களா…”
“போனேன் தம்பி… ஒருவாரம் இருந்துட்டு வந்தேன்… ராகவ் தம்பி நீங்க வந்திருவிங்கன்னு சொல்லவும் அங்க இருப்புக் கொள்ளாம ஓடி வந்துட்டேன்…” அன்னையின் பரிவுடன் சொன்னவரை நோக்கி சிரித்தான் பிரம்மா.
“ம்ம்… உங்க காபியை பத்து நாளா ரொம்ப மிஸ் பண்ணேன், ஜானும்மா…” என்றவன் ருசித்துக் குடித்தான். அவர் காலிக் கோப்பையுடன் நகர இதழ்களைப் புரட்டியவன் முன்னில் உதயமானான் ராகவ்.
“அப்புறம், நான் வெளிநாடு கிளம்பினதும் விட்டது தொல்லைன்னு ஜாலியா இருந்திருப்பியே…” ராகவை நோக்கிக் கேட்க அவன் முறைத்தான்.
“ஏன் சார், வெறுப்பேத்தறிங்க… ரஜினி சார் அடிக்கடி இமய மலைக்குப் போயி உக்கார்ந்துக்குற போல நீங்களும் அடிக்கடி வெளிநாடு கிளம்பிடறிங்க… இங்க உள்ளவங்க என்னைப் போட்டு நச்சரிக்கறாங்க…”
“ஒய் மேன், எங்க போனாலும் நான் ஓவியத்தை உனக்கு மெயில் பண்ணிட்டு தானே இருக்கேன்…”
“பண்ணறிங்க தான்… இருந்தாலும் நீங்க இல்லேன்னா இந்த பிரம்மலோகம் களையிழந்து போயிடுது தெய்வமே…”
“ஹாஹா… ஸ்வீட் ராஸ்கல்… சரி, வேறென்ன ஸ்பெஷல்…”
“அந்த அமிர்தா உங்களைக் கேட்டு ரெண்டு மூணு டைம் கால் பண்ணாங்க… உங்களுக்கு போன் பண்ணியும் எடுக்கலேன்னு சொன்னாங்க…”
“ம்ம்…” என்றவனுக்கு அவளது அழைப்பைக் கண்டும் எடுக்காமல் இருந்தது நினைவில் வந்தது.
இந்த அமிர்தா கொஞ்ச நாளாய் அவனையே சுற்றி வந்து அதிகம் வழிவது போலத் தோன்றியது… அவளது தந்தை கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் பெரிய புள்ளி. ஒரு விழாவில் அவருடன் வந்திருந்தவள் பிரம்மாவைக் கண்டதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவனது ஓவியங்களுக்கு ரசிகை என்று அறிமுகமானவள் பிறகு அடிக்கடி அவனை போனில் அழைக்கத் தொடங்கினாள்.
முதலில் இயல்பாய் பேசினாலும் ஓவியத்தைத் தாண்டி அவள் அவனை ரசித்துப் பேசுவது பிரம்மாவுக்குப் பிடிக்காமல் தவிர்க்கத் தொடங்கினான்.
தொலைபேசி சிணுங்க எடுத்துப் பேசிய ராகவ், “சார்… வானவில் இதழ் ஆசிரியர் பேசறார்… உங்க கிட்டப் பேசணுமாம்…” என்றதும் போனை வாங்கிக் கொண்டான்.
“ஹலோ சார், வணக்கம்… எப்படி இருக்கீங்க…”
“நல்லாருக்கேன் பிரம்மா… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்…”
“சொல்லுங்க சார்…”
“நம்ம இதழ்ல ஒரு தொடருக்கு ம.செ. ஓவியம் வந்துட்டு இருந்துச்சு… இப்ப அவருக்கு கொஞ்சம் உடம்பு முடியாம ட்ரீட்மென்ட்ல இருக்கறதா சொன்னாங்க… அதான் அவரை டிஸ்டர்ப் பண்ண முடியல… அவரோட ஸ்ட்ரோக்ல எனக்கு ஓவியம் வரைஞ்சு தர முடியுமா…”
“ஓ… பண்ணலாமே சார்… என்ன கதை, எந்த சீன் சொல்லுங்க… வரைஞ்சிடறேன்…” இயல்பாய் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் பிரம்மா.
“உங்க மெயிலுக்கு எல்லா விவரமும் அனுப்ப சொல்லறேன்… கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சாப் பரவால்ல…”
“டோன்ட் வொர்ரி சார், உடனே பண்ணிடறேன்…”
“நன்றி தம்பி…” என்றவர் சந்தோஷத்துடன் போனை வைக்க ராகவிடம் அலைபேசியை நீட்டினான் பிரம்மா.
“எப்படி சார், கேட்டதும் மறுக்காம ஓகே சொல்லறிங்க…”
“ஓவியம் என் தொழில், எதுக்கு மறுக்கணும்… மெயில் வந்ததும் சொல்லு…” என்றுவிட்டு பேப்பரை விரித்தவன் மேலோட்டமாய் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நாட்டிய உடையில் அழகாய் கண்களை உருட்டி பாவத்துடன் போஸ் கொடுத்த ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கண்டவன் அதையே உன்னிப்பாய் கவனித்தான். அப்பெண்ணின் முகத்தில் தன் ஓவியத்தின் சாயலை உணர்ந்தவன் பிரம்மிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதன் கீழே “நாட்டியத் தாரகை ஓவியாவின் பேட்டி நாளைய இதழில்…” என்று எழுத்துகள் ஓட மனதைக் கவர்ந்த அந்தக் கண்களையே வெகு நேரம் பார்த்திருந்தான்.
“ராகவ்…” அவன் அழைப்பில் அங்கே வந்தவன், “சொல்லுங்க சார்…” எனவும், “இந்த டான்சர் போட்டோவைப் பாரு…” என்று நீட்டினான்.
“இவங்க ஓவியா சார்… இவங்க புரோக்ராம் ஒருமுறை பார்த்திருக்கேன்… அவங்க பேருக்கேத்த போல பார்க்கவும் ரொம்ப அழகாருப்பாங்க…” என்றான் வாயெல்லாம் பல்லாக.
“ப்ச்… நான் அதைக் கேட்கலை… அவங்க முகத்தைப் பாரு… நம்ம ஓவியத்துல வர்ற பெண்களோட சாயல் தெரியுதா…”
அவன் சொல்லவும் உன்னிப்பாய் கவனித்த ராகவ், “அட ஆமா சார்… நம்ம ஓவியத்துல உள்ள உருவமே டான்ஸ் டிரஸ் போட்டு போட்டோ எடுத்த போல இருக்கு…” என்றான்.
“ம்ம்… மெயில் வந்திருச்சா…”
“இதோ பார்க்கிறேன் சார்…” என்றவன் லாப்டாப்பில் பார்த்துவிட்டு, “வந்திருக்கு சார்…” என்று சொல்ல பிரம்மா மெயிலை ஓபன் பண்ணிப் பார்த்தான். முன்னமே வரைந்த ஓவியத்தையும் அனுப்பி இருந்தனர். இப்போது வரைய வேண்டிய ஓவியத்தின் காட்சியையும் சொல்லி இருக்க தலையில் ஏற்றிக் கொண்டான்.
“டிராயிங் ரூம்ல இருக்கேன்… டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்…”  என்றவன் எழுந்து கொண்டான். வாயில் ஒரு பபிள் கம்மை போட்டுக் கொண்டவன் மனதில் அதை நினைத்துக் கொண்டு கோடுகளை இழுக்கத் தொடங்கினான்.
அரச சபையில் ஒரு பெண் நாட்டியமாடுவது போல் ம.செ. ஸ்டைலில் வரைந்திருந்த ஓவியத்தை இறுதி டச் கொடுக்க, அழகாய் மையிட்ட பெரிய கண்களில் அவனைப் பார்த்து அபிநயத்துடன் சிரித்தது ஓவியாவின் முகம்.
ஓவியா நாட்டியப்பள்ளி.
அழகான முகபாவனைகள் பாடலின் அர்த்தம் சொல்ல, நாட்டிய உடையில் மனதை அள்ளினாள் அம்மு. ஒலித்த பாடலுக்கேற்ப முகத்திலும் எத்தனையோ பாவங்கள்.
கண்ணா வருவாயா, மீரா கேட்கிறாள்…
மீரா வருவாயா, கண்ணன் கேட்கிறான்…
மாலை மலர்ச்சோலை நதியோரம் நடந்து…
மீரா வருவாயா, கண்ணன் கேட்கிறான்…
பாடல் முடிந்ததும் அவள் ஓவியம்போல் நின்றிருக்க சுற்றிலும் நின்ற அனைவரும் சந்தோஷமாய் கை தட்டினர்.
“மேம் கலக்கிட்டிங்க…”
“சூப்பர் மேடம், அசத்திட்டிங்க…” அவள் நாட்டியத்தை கிளிக்கிக் கொண்டிருந்த பத்திரிக்கை போட்டோகிராபரும் சொல்ல, திருப்தியோடு புன்னகைத்தாள் ஓவியா.
“சாரி மேடம், பேட்டி எடுத்தப்பவே உங்க டான்ஸ் போட்டோ எடுத்திருக்கணும்… சிரமத்துக்கு மன்னிச்சுக்குங்க… ஆன்லைன்ல உங்க வீடியோ போட்டா நல்லாருக்கும்னு சார் சொன்னார்… அதான்…”
“நோ பிராப்ளம் சார்… நாட்டியம் என் தொழில் மட்டுமல்ல, உயிரும் கூட… எத்தனை ஆடினாலும் சலிக்காது…”
“நன்றி மேடம்… உங்க பேட்டியோட ப்ரூப் ரெடியானதும் உங்களுக்கு மெயில் பண்ணுவாங்க… ஏதும் மாற்றம் வேணும்னா சொல்லுங்க, மாத்திக்கலாம்… அப்ப நாங்க கிளம்பட்டுமா…” என்றார் அவர்.

Advertisement