Advertisement

“வாங்க சார்…” கை கூப்பி விடை கொடுத்தாள் ஓவியா. அவர்கள் சென்றதும் தன் அறை நோக்கி நடக்க பின்னில் தோழியும், நடன ஆசிரியையுமான ராதிகாவும் வந்தாள்.
“ஓவி, இந்த வார குமுதத்துல பிரம்மா சார் ஓவியம் வந்திருக்கே, பார்த்தியா…”
“அச்சோ, பார்க்கலியே… கொண்டு வந்திருக்கியா…” ஓவியா ஆர்வத்துடன் கேட்க, “ம்ம்… உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்திட்டு வந்தேன்…” என்றவள் தனது பாகில் இருந்து குமுதம் புத்தகத்தை எடுக்க ஆவலுடன் வாங்கிப் புரட்டினாள் ஓவியா.
“வாவ்… ரெண்டு கதைல அவர் ஓவியம் இருக்கே… சூப்பர்… தேங்க்ஸ் ராதி…” என்று அவளை உற்சாகத்துடன் அணைத்து விடுவித்தாள்.
“ஹாஹா… அவர் ஓவியத்துல அப்படி என்னதான் இருக்கோ, அதைப் பார்த்தா மட்டும் குழந்தை போல ஆகிடற…”
“அவர் ஓவியம் எல்லாம் எனக்குள்ள ஒரு உயிர்ப்பைக் கொடுக்குது, ராதி… அது உனக்கு சொன்னாப் புரியாது…” சொன்னவள் அதில் இருந்த பிரம்மாவின் ஓவியங்களை ரசித்துப் பார்த்து அழகாய் வெட்டி எடுத்துக் கொண்டாள்.
“ம்ம்… இப்படி எங்க பார்த்தாலும் அவர் ஓவியத்தைக் கட் பண்ணி வச்சுக்கறியே… இதெல்லாம் என்ன பண்ணற…”
“ஹூம்… அப்பப்போ சூப் வச்சுக் குடிச்சுருவேன்…” சொன்னவளை முறைத்தாள் ராதிகா.
“சரி வா, கிளாசுக்கு டைம் ஆச்சு…” கட்டிங் பேப்பரை தனது பாகில் பத்திரப்படுத்தி விட்டு ராதிகாவுடன் நகர்ந்தாள். பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் பெரிய ஹாலெங்கும் ஒலிக்க தங்கள் இடங்களில் நின்ற மாணவிகளின் நடுவில் இருவரும் பாடலுக்கேற்ப அபிநயம் பிடிக்கத் தொடங்கினர்.
நகுமோ… ஓ மு கனலே, நி நா ஜாலி தெலிஸி
நகுமோ… ஓ மு கனலே, நி நா ஜாலி தெலிஸி…
நானு பரோவாக ராதா ஸ்ரீ ரகுவர நி….
நகுமோ… மு கனலே, நா ஆ…ஆ… தெலிஸி…
கிருஷ்ணனை உருக்கமாய் அழைத்த பாடலுக்கேற்ப மாணவியர் ஆடிக் கொண்டிருக்க அந்த இடமே ஒரு ஆலயம் போல் தெய்வீகமாய் இருந்தது. கண்களை உருட்டியும் இடுப்பை வளைத்தும் ராதையாய் சுழன்று கொண்டிருந்தாள் ஓவியா. அவளுக்கு ஈடு கொடுத்து கண்ணனாய் மாறி அபிநயம் பிடித்தாள் ராதிகா.
இளந்தளிர் நாட்டியப் போட்டிக்கு வேண்டி நான்கு மாணவிகளைத் தயார் செய்து கொண்டிருந்தனர். எனவே மற்ற மாணவிகள் பயிற்சி முடிந்து சென்ற பின்னரே இவர்களுக்கு ஸ்பெஷலாய் பயிற்சி அளித்தனர்.
பாடல் முடிந்து மாணவிகள் மீண்டும் பயிற்சி செய்ய இருவரும் மாறி நின்று கவனித்தனர்.
சின்னச் சின்ன குறைகளை சரி செய்து சொல்லிக் கொடுத்தனர். மேசை மீதிருந்த ஓவியாவின் அலைபேசி சிணுங்கவும், “கண்டியூ பண்ணுங்க, வந்துடறேன்…” என்றவள் அலைபேசியுடன் நகர்ந்தாள். அதில் அவளது குரு ராஜஸ்ரீயின் எண் தெரியவும் வேகமாய் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ, வணக்கம் மேடம், நல்லாருக்கீங்களா…”
“நல்லாருக்கேன் மா… உன்னோட பேட்டி முதன்முதலா நாளைய தினசரில வருதுன்னு பார்த்தேன்… சந்தோஷமா இருந்துச்சு… அதான் வாழ்த்தலாம்னு கூப்பிட்டேன்…”
“ஆமாம் மேடம், பொதுவா எனக்கு விருப்பம் இல்லை… அதான் இதுக்கு முன்னாடி சில பத்திரிகைல பேட்டி வேணும்னு சொல்லியும் மறுத்துட்டேன்… இப்ப இளந்தளிர் நடனப் போட்டிக்கு நம்ம பிள்ளைகளும் தயாராகிட்டு இருக்காங்க… இப்ப நம்ம நாட்டியாலயா பத்தின பேட்டி வந்தா நல்லாருக்கும்னு மனசுக்குப் பட்டுச்சு… அப்பாவும் சொன்னார், அதான் சம்மதிச்சேன்…” என்றாள் பவ்யத்துடன்.
“நல்ல விஷயம் மா… நாட்டியம் தனிப்பட்ட கலை கிடையாது, நமக்குள்ள மட்டும் ஒளிச்சு வைச்சுக்க… அதை எப்ப சந்தர்ப்பம் கிடைச்சாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரணும்… அப்பதான் அந்தக் கலைக்கே மரியாதை… என்னோட சிஷ்யை நாட்டிய உலகத்துல ஒரு அறியப்படற நடனக்காரியா வளர்ந்து நிக்கறது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு… இன்னும் நீ பல உயரங்களைத் தொடணும்னு மனசார வாழ்த்தறேன் மா…”
“நன்றி மேம்… அம்மா இல்லாத எனக்கு நல்ல வழிகாட்டியா, சிறந்த குருவா வழிநடத்திக் கொண்டு வந்தது உங்க ஆதரவும், அன்பும் தான்… அதை எப்பவும் மறக்க மாட்டேன்… நீங்க எப்ப மேம் சென்னை வரப்போறீங்க…”
“வந்திடுவேன் மா… தஞ்சாவூர் வந்த வேலை முடியற ஸ்டேஜ்ல தான் இருக்கு… இங்கே நாட்டியப்பள்ளி வைக்க எல்லா பார்மாலிட்டீசும் முடிச்சாச்சு… ஓப்பனிங் முடிஞ்சா பொண்ணு கைல ஒப்படைச்சுட்டு நான் கிளம்பிருவேன்… பங்க்ஷன்க்கு நீ நிச்சயம் வருவ தானே…”
“கண்டிப்பா வரேன் மேம்…
“சரிமா, நாளைக்கு உன் பேட்டியை பேப்பர்ல பார்த்துட்டுக் கூப்பிடறேன்… வச்சிடறேன்…”
“சரி மேம்… நீங்க போன் பண்ணதுல ரொம்ப சந்தோசம்… உடம்பை கவனிச்சுக்கங்க மேம்…” என்றவள் சந்தோஷமாய் அழைப்பைத் துண்டித்தாள்.
ராஜஸ்ரீ வாரியர் திருவனந்தபுரத்தில் பிறந்து, இசை, நாட்டியங்களைப் பயின்று வளர்ந்தவர். பல விருதுகளைப் பெற்ற பிரபல நர்த்தகி. இசை பயின்று அதில் ph.d முடித்திருந்தாலும் நாட்டியத்தின் மீதுள்ள காதலால் அதையே தனது ஜீவித மார்க்கமாய் கொண்டவர்.
திருந்தவனபுரத்தில் நாட்டியப் பள்ளியைத் துவக்கினாலும் பிறகு சென்னையிலும், இப்போது தஞ்சாவூரிலுமாய் தனது நாட்டியச் சுவடுகளை ஆழப் பதித்தவர். சென்னையில் அவரிடமே ஓவியா நாட்டியத்தை தொடர்ந்து கற்றாள்.
அவரிடம் நாட்டியம் பயின்ற மாணவிகள் ஏராளம். அதில் தாளம் தப்பாமல் தனது பாவத்தைக் காட்டும் ஓவியாவை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரது ஊக்கமே ஓவியாவை நாட்டியப்பள்ளி துவங்க வைத்திருந்தது.
கற்ற கலையை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. அதை அவளது சிஷ்யையும் பின்பற்றினாள்.
அவரது அழைப்பு மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முகத்தில் வழியும் புன்னகையுடன் ஹாலுக்கு சென்றாள்.
மீண்டும் மாணவிகளுடன் சேர்ந்து கொண்டாள். ஒரு மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு அனைவரும் வீட்டுக்குக் கிளம்ப ஓவியாவும் கிளம்பினாள்.
தந்தையிடம் அன்று நடந்ததை சொல்லிக் கொண்டே அவர் அழகாய் வட்டத்தில் வார்த்துக் கொடுத்த தோசைகளை பசியோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
வீட்டில் உதவிக்கு ஒரு பெண்மணி இருந்தாலும் சமையல் மட்டும் சிவநேசனின் கைவண்ணம் தான்… அடுக்களையை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார். தனது அத்தையிடம் கத்துக் கொண்ட சமையலை, அவர் மறைந்தாலும் மகளுக்கு விதவிதமாய் சமைத்துப் போட்டு அவள் சாப்பிடுவதை ரசித்துப் பார்ப்பதில் அந்த தந்தைக்கு ஒரு சந்தோஷம்.
“போதும்ப்பா, நீங்க சாப்பிடுங்க…”
“இன்னும் ஒரே ஒரு தோசை வச்சுக்கடா அம்மு…” அவர் அன்பைத் தட்ட முடியாமல் மீண்டும் ஒரு தோசையை உள்ளே தள்ளியவள், “நீங்க உக்கார்ந்து சாப்பிடுங்கப்பா… நான் தோசை ஊத்தித் தர்றேன்…” என்றாள்.
“அம்மாடி, உன் கை வண்ணத்தை எல்லாம் நாட்டியத்துல மட்டும் வச்சுக்கடா, இந்த அப்பாவுக்கு உன் சமையலை சாப்பிடற தண்டனை மட்டும் கொடுத்திடாத…” என்று பாவமாய் சொல்லவும் முறைத்தாள் மகள்.
“ஹூக்கும், போங்கப்பா… என் சமையல் அவ்ளோ மோசமாவா இருக்கு…”
“மோசமா இல்லடா, அம்முக்குட்டி… படு கேவலமா இருக்கு… எனக்கு நானே தோசை ஊத்திக்கறேன்… நீ போயி ரெஸ்ட் எடு…” எனவும், “வேணாம்ப்பா, இப்படி எல்லாம் என்னைக் கடுப்பேத்தினா நாளைக்கு என் சமையலை தான் நீங்க சாப்பிட வேண்டி இருக்கும்…” மகளின் மிரட்டலில் திகிலானவர், “சரிடா அம்மு… அப்பா சும்மா விளையாட்டு சொன்னேன்… நீ ரெஸ்ட் எடு…” என்று அனுப்பி வைத்தார்.
“இது அப்பாக்கு அழகு…” என்றவள் அறைக்கு சென்றாள்.
மனதில் அடுத்தநாள் வரப்போகும் தனது பேட்டியைக் குறித்த சந்தோஷமும், அடுத்தவாரம் நடக்கப் போகும் நாட்டியப் போட்டி குறித்தும் மாறி மாறி எண்ணங்கள் அலைமோதியது.
மேசைக்குள் இருந்த ஆல்பம் ஒன்றை எடுத்தவள் அதில் தான் கொண்டு வந்த பிரம்மாவின் ஓவியங்களை அழகாய் ஒட்டி விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
விதவிதமான வர்ணக் கலவைகள் ஓவியங்களாய் அந்த ஆல்பம் எங்கும் நிறைந்திருந்தது.
“இந்த ஓவியங்களில் தான் எத்தனை உணர்வுக் கலவைகள்… என்னவொரு நேர்த்தி, வெறும் கோடுகளை உருவமாக்கி அதற்கு உயிர் கொடுக்கும் வித்தையை தேவ்க்குப் பிறகு உன் ஓவியத்தில் மட்டும் தான் கண்டிருக்கிறேன்…” சொன்னவள் அந்த ஆல்பத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அப்படியே கட்டிலில் சரிந்தாள்.
உயிரைக் கொடுக்கும்
உன்னதத்தை அந்த பிரம்மன்
மட்டும் செய்யவில்லை…
என்னில் உயிர்ப்பைக்
கொடுத்த உன்
ஓவியங்களும் செய்கின்றன…

Advertisement