Advertisement

“ஓவி, இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க… அமிர்தா கோவிச்சுக்கப் போறா… ரெடியாகு மா…”
“ஹூம்… உங்க சின்ன வயசு போட்டோ ஆல்பத்தை எத்தனை பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது…”
“அப்படி என்ன அதுல இருக்கு…” அவன் கேட்கவும் கழுத்தில் கைகளை மாலையாய் போட்டுக் கொண்டாள். அவன் மூக்கோடு தன் மூக்கை உரசி, “நிறைய… உங்க மேல காதலும், பிரமிப்பும் கூடிட்டே போற அளவுக்கு…” என்றாள்.
“சரி, வந்து பார்த்துக்கலாம், இப்ப மண்டபத்துக்கு கிளம்பு…”
“ஹூம்… பத்தே நிமிஷம், பிரம்மா சார்…” என்றவள் சொன்னது போல் தயாராகி வர கிளம்பினர்.
சுற்றமும், நட்பும், உறவினர்களும் சூழ்ந்து வாழ்த்த அமிர்தா, ராகவின் கல்யாணம் இனிதே நடந்தேறியது. தங்கள் வீட்டுக் கல்யாணம் போல பிரம்மாவும் ஓவியாவும் ஓடியாடி வந்தவர்களை கவனித்து உபசரித்தனர்.
“பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கங்க…” மணமக்களிடம் ஐயர் சொல்ல அமிர்தாவின் பெற்றோர், தேவின் பெற்றோர் காலில் வணங்கி எழுந்தவர்கள், அடுத்து பிரம்மா காலில் விழவும் அவன் பதறினான்.
“ஹேய், என்ன என் காலில் விழுந்திட்டு…” வேகமாய் ராகவை எழுப்ப அவன் கண்கள் குளமாய் நிறைந்து நின்றது.
“ஹேய், என்ன மேன், சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல கண் கலங்கிட்டு…” சொன்ன பிரம்மா ராகவை அணைத்துக் கொண்டான்.
“நீங்க இல்லேன்னா இது எதுமே சாத்தியம் இல்லை சார்…”
“நீ ஓவரா யோசிச்சு எமோஷன் ஆகாதே ராகவ்… உனக்கு செய்ய வேண்டியது எங்க கடமை… இத்தனை நாளா குடும்பத்தை விட்டுத் தனியா இருந்த அவனுக்கு நீதான எல்லாமா கூட இருந்த… நீயும் எங்களுக்குப் பிறக்காத பிள்ளை தான்…” ஆருத்ரா ஆறுதலாய் சொல்ல நெகிழ்ந்தான்.
“என்ன ராகவ், நாங்க எங்க வீட்டுப் பிள்ளைக்கு செய்யாம யாருக்கு செய்வோம்… இதுக்குப் போயி பீல் பண்ணிட்டு இருக்கீங்க…” ஓவியா சிரிக்க,
“அதானே, சும்மா செண்டியாகிட்டு…” அமிர்தாவும் அவன் இடுப்பில் கிள்ள துள்ளியவன் அவளைப் பார்த்த பார்வையில் நாணத்தோடு குனிந்து கொண்டாள்.
எல்லாம் நல்லபடியாய் முடிந்து வீட்டுக்கு கிளம்பினர்.
அமிர்தாவின் தந்தை சந்தோஷத்துடன் பிரம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“நிஜமாலுமே என் பொண்ணுக்கு அண்ணனா இருந்து நல்லபடியா கல்யாணத்தை முடிச்சுக் கொடுத்துட்டீங்க… என்னோட தொழிலுக்கு வாரிசா இனி மாப்பிள்ளை தான் எல்லாம் பார்த்துக்கணும்… மாப்பிள்ளை எங்களோடவே இருக்க நீங்க தான் பர்மிஷன் கொடுக்கணும்…”
“என்ன அங்கிள், என்கிட்டே பர்மிஷன் கேட்டுட்டு… தாராளமா இருக்கட்டும்… நல்ல விஷயம் தானே…”
“அவர் இவ்ளோநாள் உங்களுக்குத் துணையா இருந்துட்டாரு… இப்ப அவர் இல்லன்னா கஷ்டம் இல்லியா…”
“இந்த பிரம்மாவுக்கு தூரிகையா, எல்லாமாதான் ஓவியம் இருக்கே…” என்றவனின் பார்வை தன்னவள் மீது படிந்தது.
ராகவை அமிர்தாவின் வீட்டோடு மாப்பிள்ளையாய் அவனுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டு இவர்கள் மட்டும் வீட்டுக்கு கிளம்பினர்.
மாலையில் ஓய்வெடுக்க தோட்டத்தில் அமர்ந்திருக்கையில் மனைவியிடம் கூறினார் ராம் கிருஷ்ணா.
“ருத்ரா, நம்ம பிள்ளையை நினைச்சா பெருமையா இருக்கு… ஒருவேளை நம்மளோட இருந்திருந்தா அவனுக்கு இந்த சாதனை எல்லாம் சாத்தியமே இல்லாமப் போயிருக்குமோ…”
“ஏங்க அப்படி சொல்லறீங்க, சாதிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் சாதிக்கும்… பெத்தவங்களா நாம அதுக்கு வழி உண்டாக்கிக் கொடுத்தாப் போதும்… திறமை விதை மாதிரி… அது முளைக்கிறதும், பட்டுப் போறதும் விதைக்கிறவன் கையில இருக்கு… நம்ம பையனோட நம்பிக்கை தான் அந்த விதைக்குத் தண்ணி ஊத்தி, விருட்சமா அவனை வளர்த்தி விட்டிருக்கு…” என்றார் ஆருத்ரா நிதானமாக.
“இப்பதான் மனசுக்கு ஒரு நிறைவா இருக்கு…”
“சரி வாங்க, உள்ள போகலாம்… காத்துல ரொம்ப நேரம் உக்கார வேண்டாம்…” என்ற ஆருத்ரா கணவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.
அடுத்தநாள் மாலையில் பிரம்மாவின் பேட்டி டீவியில் ஒளிபரப்புவதாய் இருக்க காலையில் இருந்தே அதற்காய் காத்திருக்கத் தொடங்கி விட்டாள் ஓவியா.
“ஹேய், இண்டர்வியூல பேசின நானே இப்படி டென்ஷனா இல்ல, நீ எதுக்கு இவ்ளோ டென்ஷனா இருக்க…”
“ப்ச்… எப்ப புரோகிராம் போடுவாங்கன்னு இருக்கு… இந்த உலகமே உங்களை டீவில பார்க்கப் போகுது, சும்மாவா…” பரபரப்புடன் நேரத்தை நெட்டித் தள்ளியவள் அந்த நேரத்துக்கு முன்னரே டிவி முன்னில் ஹாஜராகி இருந்தாள். ஹாலில் இருந்த டீவி முன்னர் அனைவரும் காத்திருக்க நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சி தொகுப்பாளர் முதலில் பிரம்மாவைப் பற்றிய பொதுவான அறிமுகம் முடிக்க அடுத்து காமிரா அவனிடம் திரும்ப, புன்னகை முகமாய் கம்பீரமாய் அமர்ந்திருந்தவனை கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டாள் ஓவியா.
“நீங்க பாருங்க, எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு…” என்ற தேவ், ஓவியா சொல்ல சொல்ல நிற்காமல் டிராயிங் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“வணக்கம் மிஸ்டர் பிரம்மா…”
“வணக்கம்…” கை கூப்பினான்.
“உங்க உண்மையான பெயர் பிரம்மா தானா, இல்ல புனைப்பெயரா…”
“என் உண்மையான பெயர் தேவ் கிருஷ்ணா… உயிர்களைப் படைக்கிற பிரம்மா போல நானும் ஓவியத்தைப் படைக்கிறதால பிரம்மான்னு பெயர் வச்சுகிட்டேன்…”
“அருமையான பதில் சார், எப்படி இந்தத் துறைக்கு வந்திங்க… உங்க குடும்பத்தைப் பத்தி, சொல்லுங்க…” என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.
“உங்க வெற்றிக்கான இலக்கா எதை நினைக்கறிங்க…”
“அப்படி எதும் நினைக்கலை, ஆக்சுவலா வெற்றிக்குப் பிறகு எதுவுமே இல்ல, வெற்றிங்கறதே மிகப்பெரிய தோல்வி… நாம வெற்றி அடைஞ்சுட்டோம்னு நினைச்சாலே அடுத்து எந்த வளர்ச்சியும் இல்லாமப் போயிடும்… எனக்கு வரைஞ்சுட்டே இருக்கணும், சோ, நாம வெற்றிப் பாதைல போயிட்டு இருக்கோம், வெற்றியை நோக்கிப் போயிட்டு இருக்கோம்னு தான் நினைக்கனுமே தவிர, இதுதான் வெற்றின்னு ஒரு இடத்துல தேங்கி நின்னுடக் கூடாதுங்கறது என் அபிப்ராயம்…”
“ரொம்ப அழகான விளக்கம் சார்… சுமார் நீங்க எத்தனை ஓவியங்கள் வரைஞ்சிருப்பீங்க…”
“ம்ம்… அது கணக்குல வச்சுக்கல…” என்றவன் தாடியை சொறிந்து கொண்டே யோசனையாய் பதில் சொன்னான். “தினமும் ஐம்பது ஓவியமாச்சும் வரைஞ்சிருவேன், என்னால மெதுவா வரைய முடியாது, கண் பார்த்தா உடனே கை வரையத் தொடங்கிடும்… கிட்டத்தட்ட கோடியைத் தாண்டி இருக்கலாம்னு நினைக்கிறேன்…”
“அற்புதம் சார்… அதை லிஸ்ட் அவுட் எடுத்து கின்னஸ் ரெக்கார்டுக்கு அனுப்பலாமே…”
“அதெல்லாம் யோசிச்சதில்லை, இதையே நினைச்சுட்டு இருந்தா நம்ம அடுத்த வேலையைப் பார்க்க முடியாது… வரையறதை சாதனைன்னு எப்பவுமே நினைக்கலை…”
“எப்படி அப்டேட்டடா இவ்ளோ ஓவியங்களை உங்களால வரைய முடியுது…”
“என்னை ஒரு பாக்டரி மாதிரி நினைச்சுப்பேன்… எத்தனை விஷயம் ஏற்றுமதி பண்ணிருக்கோம்… எதனை புதுசாத் தெரிஞ்சுகிட்டோம்னு, இது வருது, இதைத்தான் பிசினஸா பண்ணப் போறோம், அப்புறம் முழு மூச்சா இறங்கிட வேண்டியது தானேன்னு நினைச்சுப்பேன்…”
“ஓவியத்தை எப்படி, எந்த நேரத்துல முடிக்கணும்னு ஏதாச்சும் திட்டம் வச்சுப்பீங்களா…”
“எதையும் திட்டமிட்டு தான் செய்யணும்னு அவசியமில்லை, நம்முடைய வேலையை சரியா செய்தா எல்லாமே சரியா நடக்கும்னு நம்பறேன்… வரையறது என் வேலை, அதை சரியா செய்தாலே போதும்…”
“வருங்கால இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க…”
“உங்களோட பாதைன்னு ஒண்ணைத் தேர்ந்தெடுத்துட்டா அதுல இருந்து எந்த சூழ்நிலைலயும் பின்வாங்காதீங்க… எந்த விஷயமும், திறமையும் சரியான முயற்சி இல்லாம வெற்றி அடையறது கிடையாது… நம்ம பாதையில் நமக்கான முயற்சியை விதைச்சுட்டே வந்தா வெற்றி நிச்சயம்…”
“ரொம்ப அருமையா சொன்னிங்க சார், உங்களோட இன்ஸ்பிரேஷன்னு யாரை சொல்லுவீங்க…” இதைக் கேட்டதும் பிரம்மாவின் கண்களில் புன்னகை தெரிகிறது.
“அம்மாவை இழந்து கலங்கி நின்ன ஒரு சின்னப் பொண்ணோட கண்ணுல என் ஓவியத்தைப் பார்த்ததும் ஒரு திகைப்பு, பிரமிப்பு, ஆர்வம் தெரிஞ்சது… அவளோட கவலைகளை மறக்க வைக்கக் கூடிய சக்தி என் ஓவியத்துக்கு இருக்குன்னு அப்பதான் புரிஞ்சுகிட்டேன்… அதுவரை ஓவியத்தை விருப்பமா நினைச்சவன் அதுக்குப் பிறகு வெறியோட நேசிக்கத் தொடங்கினேன்…”
“ஓ… அப்ப இந்த பிரம்மனைத் தூண்டி விட்ட தூரிகை அந்த சின்னப் பொண்ணு தான்னு சொல்லுங்க…”
“ம்ம்… எஸ், அவள் தான் இந்த பிரம்மனின் தூரிகை… என் கனவுகளுக்கு வண்ணம் கொடுக்க வந்த தேவதை…” என்றவனின் கண்களில் காதல் வழிந்தது.
“வாவ்… அருமை பிரம்மா சார், கடைசியா ஒரே ஒரு கேள்வி… கண்ணை மூடிட்டு உங்களால வரைய முடியுமா…”
“கண்ணை மூடிட்டு, இதுவரை டிரை பண்ணதில்லை, பண்ணிப் பார்க்கலாம்…” என்றான் புன்னகையுடன்.
“ஒரு கணவன் மனைவி பூங்காவுல அமர்ந்திருக்க போல ஒரு படம் வரைஞ்சு காமிங்க பிரம்மா சார்…”
“ம்ம்… எப்படி வரும்னு தெரியல, இட்ஸ் ஓகே, பார்க்கலாம்…”
அடுத்த நிமிடம் அவன் கையில் ஒரு பேப்பரும், பேனாவும் கொடுக்கப் பட, முதலில் அதைப் பார்த்துக் கொண்டதும் கண்கள் கட்டப்பட்டது.
அவனது விரல் பேப்பரைத் தடவி ஒரு இடத்தில் நிலைத்து கோடுகளை இழுக்கத் தொடங்கியது. ஐந்தே நிமிடத்தில் ஒரு பெண்ணின் உருவம் உருவாகிக் கொண்டிருக்க, அதிலிருந்தே எதிர்ப்பக்கத்தில் மற்றொரு ஆணின் உருவம்.
“எப்படி வருது, சரியா இருக்கா…” கண்ணைக் கட்டிக் கொண்டு கேட்டவனிடம், “அருமை சார், சரியா வருது… அப்படியே பினிஷ் பண்ணிடுங்க…” என்றான்.
பின்னில் மரங்கள் இருப்பது போல் அப்படியே பென்சிலால் இழுத்து விட்டு முடித்துக் கொண்டான்.
அவன் கையில் இருந்த ஓவியத்தை வாங்கியவன், “சும்மா சொல்லக் கூடாது சார், பாக்ரவுண்டு எல்லாம் பர்பக்டா வரலேன்னாலும் ஆண், பெண் உருவம் சரியா வந்திருக்கு…”
அவன் சொல்லவும் கண் கட்டைத் திறந்து பார்க்க அதிலும் ஓவியாவின் முகமே பிரதிபலிக்க, புன்னகைத்தான்.
“உங்களைப் போல திறமைசாலிகள் இன்னும் உருவாகணும், அதுக்கான நோக்கத்தில் தான் இந்த நிகழ்ச்சி… எங்களுக்கு உங்களைப் பற்றி சொல்ல வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி…” என்று தொகுப்பாளன் முடித்துக் கொள்ள, பிரம்மாவும் நன்றி, வணக்கம் கூறினான்.
நிகழ்ச்சியில் இருந்து கண்ணெடுக்காமல் அமர்ந்திருந்த ஓவியா வேகமாய் கணவனைத் தேடி ஓடினாள்.
“தேவ்… என் தேவ்…” கட்டிக் கொண்டு முகமெல்லாம் முத்தமிட்டவள் மனதைப் புரிந்து கொண்டவன் அமைதியாய் அணைத்துக் கொண்டான்.
“அம்மு…” அவனது அழைப்பில் குழைந்து நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள் தூரிகையானவள். என்றும் இருவரும் பிரியாமல் பயணிக்க வாழ்த்தி விடை பெறுவோம்.
உன் இதழ் தூரிகைக்கு
முத்தங்கள் ஓவியமாக
என் வெட்கங்கள்
தீட்டாதோ வர்ணங்கள்…
என் விரல் தேடும் விடையாக
என் மனம் தேடும் வண்ணமாய்
என் வாழ்வில் ஏற்றம் தர
ஏற்றி வைத்த தீபம் நீயடி…

Advertisement