Advertisement

அத்தியாயம் – 27
“தேவ்… எப்பப்பா, ஊருக்கு கிளம்பி வறீங்க…” அன்னையின் கேள்விக்கு செல்லமாய் ஓவியாவை முறைத்துவிட்டு பதில் கூறினான் தேவ்.
“நாளைக்கே வரலாம்னு தான்மா பிளான் பண்ணேன்… ஆனா இந்த அம்மு தான் நாளைக்கு இண்டர்வியூ முடிச்சிட்டு நாளான்னிக்கு கிளம்பலாம்னு சொல்லிட்டா… அதெல்லாம் வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே…”
“சரி, அவ ஆசையைக் கெடுப்பானேன்… புருஷனைப் பத்தி உலகமெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு அவளுக்கும் ஆசை இருக்கும்ல… என் மருமக சொன்ன போலவே டிக்கட் புக் பண்ணிடு தேவ்… இங்க எல்லாத்தையும் தம்பியும், நானும் பார்த்துக்குவோம்… அப்பா கூட முன்னைக்கு இப்ப ரொம்பப் பரவால்லை, ஸ்டிக் வச்சு மெதுவா நடக்கத் தொடங்கிட்டார்… பேச்சும் கிளியர் ஆகிட்டு வருது… பிள்ளைங்க கல்யாணத்தை பார்க்க சந்தோஷமா தயாராகிட்டார்…”
“வாவ், ரொம்ப சந்தோஷம் மா… அப்பாவை நினைச்சு கொஞ்சம் கவலையா இருந்துச்சு… இப்ப நிம்மதியாருக்கு…”
“சரி, நம்ம அமிர்தாவோட அப்பா என்ன சொல்லுறார்… அவளுக்கும் சீக்கிரமே கல்யாணம் வச்சிருவாங்க தானே…”
“ஆமாம் மா, அமிர்தாக்கு இப்ப கொடுக்கிற டாப்லட் போதும்… நல்ல முன்னேற்றம் இருக்குன்னு டாக்டர்  சொல்லிட்டாங்க… அந்த ஹோல் கூட மூடிட்டு வருதாம்… கல்யாணமும் பிரச்சனை இல்லேன்னு சொல்லிட்டாங்க, ராகவ் செம ஹாப்பியா சுத்திட்டு இருக்கான்…”
“பாவம், அவனுக்கும் யாருமில்லை, குடும்பமா வாழணும்னு ஆசை இருக்கும் தானே… நீதான் ஒரு அண்ணனா அவனுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுக்கணும்…”
“நீங்க சொல்லணுமா அம்மா, அதெல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா… எங்க கல்யாணம் முடிஞ்சு வந்ததும் அவங்க கல்யாணம் தான்… அதுக்கான ஏற்பாடுகளை எல்லாம் அமிர்தா அப்பா பார்த்துட்டு இருக்கார்…”
“ம்ம்… ரொம்ப சந்தோஷம் தேவ்… அப்புறம் ஓவியோட டான்ஸ் ஸ்கூல் என்ன பண்ணறா, ஓபன் பண்ணற ஐடியா எதுவும் இருக்கா…”
“இல்லமா, இவளுக்கு அங்கே போனா அப்பா நினைவா இருக்கும்னு சொல்லுறா… அதனால அவளோட குரு ராஜஸ்ரீ வாரியர் பொறுப்புல விட்டுடலாம்னு இருக்கா…”
“ஓ… அப்ப இனி ஓவியா நாட்டியம் ஆட மாட்டாளா…”
“நிச்சயம் அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் மா… நமக்குப் பிடிச்ச, படிச்ச கலையை எப்பவும் மதிக்கணும்… டான்ஸ் ஸ்கூல் போகலேன்னாலும் அவ நாட்டியத்தைக் கண்டின்யூ பண்ணனும்னு தான் என் ஆசை… ஸ்டேஜ் புரோகிராம் எல்லாம் மறுக்க வேண்டாம்னு சொல்லிருக்கேன்… அவளும் சம்மதிச்சுட்டாம்மா…”
“ரொம்ப சந்தோஷம் தேவ்… சரஸ்வதி தேவியோட ஆசிர்வாதம் உள்ளவங்களுக்கு மட்டும் தான் கலை வசப்படும்… நீங்க ரெண்டு பேருமே அந்த தேவியோட ஆசி பெற்ற குழந்தைங்க… ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு உங்க திறமையை விட்டுக் கொடுக்காம சந்தோஷமா இன்னும் பெரிய இடத்தை அடையணும், அதான் என் ஆசையும்…” மனமாரக் கூறினார் ஆருத்ரா.
“நிச்சயமா அம்மா, உங்க வார்த்தை பலிக்கும்…”
“சரிப்பா, அங்கே முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பி வாங்க…” என்றவர் போனை வைத்துவிட அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த ஓவியாவிடம் திரும்பினான்.
“அம்மா சொன்னதைக் கேட்டல்ல, கல்யாணத்துக்கப்புறம் டான்ஸ் ஆடறது அவங்களுக்குப் பிடிக்குமோ என்னவோன்னு சொன்னியே, அவங்களே இப்ப எல்லாம் புரிஞ்சுகிட்டாங்க… இனி நீ மறுக்கக் கூடாது…” என்றதும் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டாள் ஓவியா.
“என்னமோ, அப்பா போன பின்னாடி சலங்கையைக் கட்டவே பிடிக்கல…” என்றவளின் அருகே அமர்ந்தான் தேவ்.
“ஓவி, மரணம் எல்லாருக்கும் ஒரு நாள் வரும்… அதுக்காக, இருக்கிற நாளை வெறுமனே வாழ்ந்து தீர்க்கக் கூடாது… நாம இந்த உலகத்துல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஏதாவது உபயோகமா செய்திருக்கணும்… இழப்புகள் நம்மை தளர்த்தலாம், அதுல மீண்டு சாதிக்கறது தான் நம்ம திறமை…” என்றவனைக் கண்கள் மின்னப் பார்த்தாள் அம்மு.
எதுவும் சொல்லாமல் அவன் கைகளை இறுக்கமாய் கோர்த்துக் கொண்டு தோள் சாய்ந்தவளை ஆறுதலாய், மெல்ல நெற்றியில் முத்தமிட்டான் தேவ் கிருஷ்ணா.
அந்த தனிமையைக் கலைக்க இன்டர்காம் சிணுங்கியது.
“தெய்வமே, அந்த சானல்ல இருந்து கால் பண்ணறாங்க, நாளைக்கு இண்டர்வியூக்கு நீங்க ஸ்டுடியோக்கு வரிங்களா, இல்ல, நம்ம வீட்டுலயே ஷூட் பண்ணிக்கலாமான்னு கேக்கறாங்க… நம்ம வீட்டுக்கே வர சொல்லிடுங்க பாஸ், அப்பதான் எங்களை இன்ட்ரோ பண்ண உங்களுக்கு வசதியா இருக்கும்…” என்றான் ராகவ்.
“அதெல்லாம் வேண்டாம், ஸ்டுடியோக்கு வரேன்னு சொல்லிடு…” என்றான் பிரம்மா.
“ஹூம், அதானே… உங்க வலது கை நான்னு உலகம் தெரிஞ்சுக்க விட மாட்டிங்களே…” புலம்பலுடன் வைத்தான்.
அடுத்தநாள் தேவ் கிளம்ப புன்னகையுடன் அவனுக்கு கை குலுக்கி, “ஆல் தி பெஸ்ட் ஓவியரே…” என்றாள் ஓவியா.
ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தவனை என்னவெல்லாம் கேள்வி கேட்டாங்க, என்ன பதில் சொன்னீங்க என்று ராகவ், ஓவியா இருவரும் துளைத்து எடுக்க, “புரோகிராம் டீவில வரும்போது ரெண்டு பேரும் பார்த்துக்கங்க… இப்ப ஆளை விடுங்க சாமி…” எனப் புன்னகையுடன் சொல்லி நழுவி விட்டான் பிரம்மா.
அடுத்த நாள் அனைவரும் பிளைட்டில் ஊருக்கு கிளம்பினர்.
மகனைக் கண்டதும் கை நீட்டி அருகே அழைத்த தந்தையை கட்டிக்கொண்ட மகனின் கண்களும் கலங்கியது. ராம் கிருஷ்ணாவும் இப்போது நன்றாகவே தேறி இருந்தார். ஓவியாவின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.
இரண்டு நாள் கல்யாணப் பரபரப்பிலேயே கழிய நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து கோவிலில் சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் எளிமையாய் முடிந்தது. இரு ஜோடிகளும் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினர். மாலையே தம்பி சஞ்சய் கிருஷ்ணாவின் ரிஷப்ஷனில் கலந்து கொண்டு வீடு திரும்ப, இரு ஜோடிகளுக்கும் மாடியில் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் தனது இணைக்காக ஆவலுடன் காத்திருந்த தேவ் கிருஷ்ணாவின் முன் ஓவியமே உயிர் கொண்ட போல் மிதமான ஒப்பனையில்  கையில் பால் சொம்புடன் உதயமானது அவனது ஓவியம்.
நாணத்துடன் அவனை அடிக்கண்ணால் பார்த்தவளை புன்னகையுடன் அருகே அழைத்து வந்து அமர்த்தினான்.
“அம்மு…” இதமான குரலில் ஒலித்த அவனது அழைப்பில் மெல்ல நிமிர்ந்தவளை நோக்கிப் புன்னகைத்தவன்,
“இன்னைக்கு நீ எவ்ளோ அழகாருக்க, தெரியுமா…” என்றவனின் பார்வை அவள் முகத்திலேயே நிலைத்தது.
“ஓஹோ… அப்ப, இதுக்கு முன்னாடி இல்லையா…”
“இன்னைக்குப் புதுசா உன் முகத்துல ஒரு வெக்கம் தெரியுது, அது இன்னும் உன்னை அழகாக் காட்டுது…” அவன் சொல்லும்போதே மேலும் முகம் சிவந்தது அவளுக்கு.
“உன்னை இப்பவே அப்படியே…” என்றதும் அவள் தேகம் பரபரக்க படபடப்புடன் தலை குனிந்து கொண்டவள் அவன் தீண்டலுக்காய் காத்திருக்க அவனோ எழுந்து சென்று எதையோ எடுத்து வந்தான்.
“ஓவி, அஞ்சே நிமிஷம், அப்படியே இருக்கியா… உன்னை வரைஞ்சுக்கறேன்…” என்றவனை அதிசயப்பிறவி போல் பார்த்தவள் அவனது ஓவிய ஈடுபாட்டை அறிந்தவள் ஆதலால் புன்னகைத்து தலையசைத்தாள்.
வரைந்து முடித்தவன், “வாவ்…” என்றவன் அந்தப் பேப்பரை முத்தமிட அவளுக்கு சிலிர்த்தது.
“அம்மு, நீ ஓவியம் இல்லடி… இந்த பிரம்மாவோட தூரிகை… பாரேன், எவ்ளோ அழகாருக்கன்னு…” என்று காட்ட, அவள் கண்களும் வியப்பில் மலர்ந்தது.
வெறும் கோடுகளில் கூட அவள் நாணத்தைப் பிரதிபலித்து அத்தனை அழகாய் வரைந்திருந்தான்.
“ரொம்ப அழகாருக்கு தேவ்…” அவள் சொல்ல “சரி, நீ டயர்டா இருப்ப… படுத்து தூங்கு… காலைல நாம சென்னைக்கு கிளம்பணும், ரெஸ்ட் எடுத்துக்க…” என்றவன் அதை எடுத்து வைத்துவிட்டு அமைதியாய் லைட்டை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்துக் கொள்ள ஏமாற்றமாய் உணர்ந்தாள்.
“கல்யாணத்துக்கு முன்பு கொடுக்கும் சிறு அணைப்பும், முத்தமும் கூடத் தராமல் இதென்ன தூங்க சொல்லி இப்படிப் படுத்துக் கொண்டான்…” என கடுப்பாய் வந்தது அம்முவுக்கு.
அமைதியாய் படுத்தவளுக்கு மனதில் தேங்கி நின்ற ஆசையும், மோகமும் உறங்க விடுவேனா என்றது. கண்ணைத் திறந்து கணவனை நோக்க அவனது மார்புக் கூடு சீராய் மேலெழுந்து இறங்கிக் கொண்டிருக்க சீரான சுவாசத்துடன் உறங்கத் தொடங்கியிருந்தான்.
“ச்சே… சரியான லூசு, ஓவியம் வரையறதுல உள்ள இன்ட்ரஸ்ட்ல கொஞ்சமாச்சும் இந்த ஓவியா மேல காட்டுறானா… பர்ஸ்ட் நைட்டுல, பக்கத்துல லவ் பண்ண பொண்டாட்டியை வச்சுட்டு எப்படி இப்படித் தூங்க முடியுதோ…” எரிச்சலுடன் பார்த்தவள், திரும்பித் திரும்பிப் படுத்தாலும் தூக்கம் வர மறுத்தது.
“டேய் தேவ், லைட்டை அணைக்கத் தெரிஞ்ச உனக்கு என்னை அணைக்கத் தோணலியா… டயர்டாகி ரெஸ்ட் எடுக்க, நான் என்ன காலைல இருந்து கல்லு உடைக்கவா போயிருந்தேன்… அப்படியே என்னையும் அணைச்சுட்டுப் படுத்திருந்தா நானும் தூங்கிருப்பேன்ல…” தவித்தாள்.
அவனைத் தானாய் நெருங்கவும் பெண்மை தடுத்தது.
“சரி பரவால்ல, என் புருஷன் தானே… ஒட்டிப் படுத்தா தப்பில்ல…” மெல்ல நெருங்கி அவனை ஒட்டிப் படுக்க, அவனது கை அவளை வளைத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டது. மெல்ல கண்ணைத் திறந்தவன் புன்னகையுடன் அவளைப் பார்க்க அவள் தவிப்பும், நாணமுமாய் முகத்தைத் தாழ்த்தி, “தூக்கம் வரல தேவ்…” எனவும் சிரித்தான். 
“சரி, பக்கத்துல படுத்தா என் கை சும்மாருக்காதே, உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு பார்த்தேன்…”
“யாரு இப்ப கையை சும்மா வச்சுக்க சொன்னாங்களாம்…” என்றதும் உற்சாகமானவன், அவளை அருகே இழுக்க, நாணத்துடன் அவன் நெஞ்சில் சங்கமித்தாள்.
அடுத்தநாள் அனைவரும் விமானத்தில் சென்னைக்குப் பயணிக்க, ராகவிடம் தேவ் காரை சென்னைக்கு கொண்டு வர சொல்லவும் நொந்து கொண்டான்.
“நான் மட்டும் அவ்ளோ தூரம் தனியா எப்படி தெய்வமே…”
“அண்ணா, நானும் அவரோட கார்ல வரட்டுமா…” அமிர்தா கேட்க ராகவின் கண்களில் பல்பெரிந்தது. அவர்களின் பயணம் இனிதே தொடர மற்றவர்கள் முன்பே சென்னையை அடைந்தனர். அன்று ஓய்வெடுத்து அடுத்த நாள் தேவ், ஓவியாவின் ரிஷப்ஷனுக்குத் தயாராயினர்.
பத்திரிகைத் துறையில் முக்கியப் பிரமுகர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். ஜெகஜோதியாய் மின்னிக் கொண்டிருந்த ரிஷப்ஷன் ஹாலில் அழகான, அளவான அலங்காரத்துடன் பொருத்தமான தம்பதியராய் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.
“ஹலோ, பிரம்மா… இனிய மணநாள் வாழ்த்துகள்…” பூங்கொத்தை நீட்டிய அசோகன் சாரைக் கண்டு சிரித்தான்.
“அண்ணா, வாங்க… அண்ணியை அழைச்சிட்டு வரலியா… ஓவி, இதான் பாக்கெட் நாவல் அசோகன் சார்…” என்றதும் அவளும் வணங்கினாள்.
“நைஸ், உங்க ஓவியத்துல வர்ற பெண்ணைப் போலவே ஒரு மனைவியைத் தேடிப் பிடிச்சுட்ட போல, பிரம்மா… மாட்சிங் அருமையா இருக்கு… சரி, நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் எங்கே…”
“ஆர்கே சார், மணியம் செல்வன் அண்ணா, நம்ம பத்திரிகைத் துறை நண்பர்கள் எல்லாம்  முன்னமே வந்தாச்சு, நீங்க தான் ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க அண்ணா…” செல்லமாய் கோபித்தவன், “அங்கே இருக்காங்க, பாருங்க…” என்று அவர்களிடம் அனுப்பி வைத்தான்.
அசோகன் சாரும் அவர்களுடன் கலந்து கொள்ள பப்பே முறையில் உணவுமாய் ரிசப்ஷன் களை கட்டியது. ஒவ்வொரு முக்கியப் பிரமுகர்களையும் பெற்றோருக்கும் அறிமுகப்படுத்த, பிரம்மாவைப் பற்றி அவர்கள் புகழ்ந்து கூறிய வார்த்தைகள் அவர்களை பெருமை கொள்ள செய்தன.
“இத்தனை சின்ன வயசுல உங்க பிள்ளை ஓவியத்துறைல எவ்ளோ வளர்ந்துட்டார்… எங்க எல்லாருக்குமே பிரம்மா எங்க வீட்டு செல்லப் பிள்ளை போலத்தான்…” பாக்கியம் ராமசாமி சார் சொல்லிவிட்டு அவனை நெகிழ்வுடன் அணைத்துக் கொள்ள அவனது கண்களும் பனித்தது.
“ஆமா, நாங்க எல்லாம் வயசுல சீனியரா இருந்தாலும் எங்க எல்லாரையுமே தூக்கி சாப்பிடற அளவுக்கு டாலன்ட் நிறைந்த பெரிய ஜாம்பவான் உங்க பையன்…” ம. செ சாரும் சர்டிபிகேட் கொடுக்க அவர்களின் பெயர்களை மட்டுமே அதுவரை தெரிந்து வைத்திருந்த ராம் கிருஷ்ணாவும், ஆருத்ராவும் மகனை மெச்சுதலாய் பார்த்துக் கொண்டனர்.
“இப்படி ஒரு பையன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… ஒவ்வொரு நாளும் ஓவியத்துல எத்தனையோ அப்டேட்ஸ், அது எல்லாமே விரல் நுனில வச்சிருப்பான் பிரம்மா… அவன் படைக்காத ஓவியங்களே இல்லைன்னு சொல்லலாம்… ரொம்ப பொருத்தமான பெயரைத் தான் வச்சிருக்கான்…”
பெருமையுடன் ஓவியர் ஜெ. பாராட்ட, “அண்ணா, போதும்… ரொம்பப் புகழாதீங்க… உங்களுக்கு இன்னொரு ஐஸ்க்ரீம் கொடுக்க சொல்லறேன்…” என்று வாரியவனை செல்லமாய் முதுகில் அடித்தவர் கண்களில் அத்தனை அன்பு தெரிந்தது.
எல்லாருக்கும் பிடித்தமானவனாய், பெருமை கொள்பவனாய், மனதில் நிறைந்து நிற்கும் பிரம்மாவின் வளர்ச்சி அப்போது தான் பெற்றவர்களுக்கும் புரிந்தது. கண்கள் பனிக்க மகனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராம் கிருஷ்ணாவின் கண்களில் குற்றவுணர்வு தெரிய ஆறுதலாய் தந்தையின் கையைப் பற்றித் தட்டிக் கொடுத்தான் தேவ் கிருஷ்ணா. நிகழ்ச்சி நன்றாய் முடிய திருப்தியுடன் வீடு திரும்பினர்.
ஒரு வாரம், நண்பர்கள் வீட்டில் விருந்துக்கு சென்றே கழிய ராதிகாவின் வீட்டுக்கும் ஒருநாள் சென்று வந்தனர். அவளுக்கும் டான்ஸ் ஸ்கூலுக்கு வர முடியாதென்பதால் ஓவியாவின் குருவே தனது சிஷ்யை ஒருத்தி மூலமாக நடனப்பள்ளியை பார்த்துக் கொண்டார்.

Advertisement