Advertisement

அங்கு பிரியாணியுடன் மூக்கு முட்ட அவனைக் குடிக்க வைத்து முழு போதையில் சுய உணர்வின்றிக் கிடந்தவனை நோக்கிய சேது, “பஷீரு, இவன் நமக்கு செட்டாக மாட்டான்னு தோணுது… போலீசு கண்டிப்பா முதல்ல இவனைத் தான் தேடும்… மாட்டினா நம்ம பேரை நிச்சயம் உளறிடுவான்… இவனையும் அந்தப் பெருசு போன இடத்துக்கே அனுப்பிட்டா என்ன…”
“நானும் அதான் சார் யோசிச்சேன்… இவன்லாம் அடிதாங்க மாட்டான்… செம போதைல நினைவில்லாமக் கிடக்கான்… அப்படியே தூக்குல தொங்க விட்டு எஸ்கேப் ஆயிடலாம்…” என்ற பஷீர் அதற்கான ஏற்பாட்டில் இறங்கினான்.
உணர்வின்றிக் கிடந்தவனை அப்படியே பேனில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்டு, கை, கால் உதற அவன் உயிரை மேலோகத்துக்கு அனுப்பி விட்டு இருவரும் இரவோடு இரவாய் நல்ல பிள்ளைகளாய் தங்கள் வீட்டுக்கு கிளம்பினர்.
அவர்களிடமிருந்து தப்பிய ரம்யா வேகமாய் மெயின் ரோட்டுக்கு ஓடி வர எதிரில் அவளது அன்னை மகளைத் தேடி வண்டியில் வந்து கொண்டிருந்தாள்.
மகள் தலை தெறிக்க, தன்னைக் கூட கவனிக்காமல் ஓடுவதைக் கண்டு அதிர்ந்தவள் வண்டியைத் திருப்பிக் கொண்டு அவளுக்கு முன்னில் சென்று நிறுத்த, சட்டென்று நிமிர்ந்த ரம்யா அன்னையைக் கண்டதும் உடலில் உள்ள சக்தி முழுதும் வடிந்தவளாய் மயங்கி சரிந்தாள்.
வண்டியில் இருந்த தண்ணி பாட்டிலில் தண்ணியை எடுத்து மகள் முகத்தில் தெளிக்க மெல்ல கண்ணைத் திறந்தவள் உடல், இன்னும் பயம் மாறாமல் நடுங்கத் தொடங்கியது.
“ரம்யா, என்னாச்சுடி… ஏன் இவ்ளோ வேகமா ஓடி வந்த, எதுவும் பிரச்சனையா… எதுக்கு உடம்பெல்லாம் நடுங்குது…” அன்னை கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் கண்களில் நிறைந்த கண்ணீருடன், எங்கோ வெறித்துக் கொண்டு வேகமாய் மூச்செடுத்த மகளை அதற்கு மேலும் கேள்வி கேட்க பயந்தாள்.
“சரி, வீட்டுக்குப் போயி பேசிக்கலாம், வண்டில ஏறு…” எனவும் சாவி கொடுத்த பொம்மை போல் ஏறி அமர வீட்டுக்கு சென்றனர். இரவெல்லாம் உடம்பு அனலாய் கொதிக்க ஏதேதோ அனத்திக் கொண்டு இருந்தாள்.
“வேண்டாம் அங்கிள்… அண்ணா, என்னை ஏதும் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க… ஏய், என்னை விடு.. ச்சீ, அங்க தொடாத…” என்ற வார்த்தைகள் எதையோ உணர்த்த அச்சத்தில் தவித்துப் போனது அந்தத் தாயின் மனம். ரம்யாவின் உடம்பில் அனல் கூடிக் கொண்டே போக, அன்னை கொடுத்த கஷாயமும், மாத்திரையும் வேலை செய்யாமல் ஹை டெம்பரேச்சரில் விடியலில் பிட்ஸ் வர, பதறித் துடித்து அடுத்த வீட்டினர் உதவியுடன் ஹாஸ்பிடலுக்கு எடுத்துக் கொண்டு ஓடினர்.
அன்று காலையில் ரம்யாவின் அன்னைக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்த சேது, “நடந்த விஷயத்தைப் பற்றிக் கிளறினாலோ, போலீசிடம் சென்றாலோ மகளை உயிருடனே விட்டு வைக்க மாட்டோம்… இதை இப்படியே விட்டால் நல்லது…” என்று மிரட்டலாய் கூற பயந்து போனார்.
மகளுக்கு சரியாகி வீட்டுக்கு வந்த பின்னர், சிவநேசன் கொலையானதைப் பற்றி அறிந்ததும் ரம்யா நடந்ததைப் பற்றி சொல்ல வேண்டுமென்று குதிக்க, பயத்தில் தடுத்து வீட்டிலேயே காவல் வைத்து விட்டார். சேது, பஷீரை ரம்யாவுக்கு யாரென்று முன்பே தெரியாதென்பதால் அவர்களும் சற்று தைரியமாக இருந்தனர்.
கேஸ் ஹிஸ்டரியைத் தெளிவாய் எழுதி முடித்து, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டான் சத்யா.
“சமூகத்துல எஞ்சினியர்னு பொறுப்பான, வசதியான இடத்துல இருந்துட்டு இந்த மாதிரி கேவலமான வேலையைப் பண்ணிட்டு இருக்கியே… நீ எல்லாம் வாழறதுக்கே லாயக்கில்லாதவன்… அதும் உன் பொண்ணு,  நாளைக்கு அப்பா என் கிட்டயே தப்பா நடந்துக்கப் பார்ப்பான், அரஸ்ட் பண்ணுங்கன்னு சொன்ன வார்த்தைக்கு நீயெல்லாம் அப்பவே செத்திருக்கணும்… ச்சீ…” சத்யாவின் வார்த்தையில் இருவரும் தலையைக் குனிந்து கொண்டனர்.
சத்யா எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஆறுதலாய் அவன் தோளில் கை வைத்தார்.
“சத்யா, கூல்… இவனைப் போல உள்ளவங்களுக்கு முதல் தண்டனை வீட்டுல உள்ளவங்களே வெறுத்து வெளிய தள்ளுறது தான்… அந்த தண்டனையை அவனோட பொண்ணும், பொண்டாட்டியும் கொடுத்துட்டாங்க, பஷீருக்கு குடும்பமே இல்லை… இனி அமையப் போறதும் இல்லை… இவங்க காலம் சிறை வாசத்துலயே முடிஞ்சிரும்… நீ அடுத்து செய்ய வேண்டியதை கவனி, நான் கமிஷனர் கிட்ட பேசிட்டு வரேன்…” சொல்லிவிட்டு நகர்ந்தார்.
பிரம்மாவிடம் விஷயத்தை சொல்ல அவனும் ஓவியாவும் ஸ்டேஷனுக்கு வந்தனர். அடுத்து அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்து, ரம்யாவை ரகசியமாய் நீதிபதி முன் ஆஜராக்க இருப்பதாய் கூறவும் சம்மதித்தனர்.
வெளியே வந்து கண்ணீருடன் காரில் அமர்ந்திருந்த ஓவியாவை ஆறுதலுடன் அணைத்துக் கொண்டான் பிரம்மா.
“அம்மு… அப்பா எதிர்பாராம இறந்துட்டாலும் ஒரு சின்னப் பொண்ணோட வாழ்க்கையைக் காப்பாத்தி பெரிய புண்ணியம் செய்துட்டுப் போயிருக்கார்… அவரைக் கொன்ன பாவிகளையும் பிடிச்சாச்சு, இனி போலீஸ் பார்த்துப்பாங்க… இதைப் பத்தியே பீல் பண்ணிட்டு இருக்காத…” அவன் சொல்லும்போதே ஆருத்ரா அலைபேசி லைனில் வந்தார்.
“அம்மா ஓவி, நடந்ததெல்லாம் கேள்விப் பட்டேன்… வருத்தமா இருந்துச்சு,  இப்படில்லாம் நடக்கணும்னு இருந்தா யாரால மாத்த முடியும்… அண்ணன் இறந்தாலும் ஒரு சின்னப் பொண்ணை வாழ வச்சிட்டுப் போயிருக்கார்… அதை நினைச்சு பெருமையா இருக்குமா… அவரைக் கொன்ன பாவிங்களைத் தான் போலீசு பிடிச்சிருச்சே… அடுத்து  எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க… நீ இனியும் வருத்தப்பட்டுட்டு இருக்காம கல்யாணப் பொண்ணா லட்சணமா, கல்யாணத்துக்கு தயாராகப் பாரு…”
“ம்ம்… சரி அத்தை…”
“கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தான் இருக்கு, ரெண்டு பேரும் சீக்கிரமா ஊருக்கு வர வழியைப் பாருங்க சரியா…”
“ம்ம்… சரி அத்தை…” என்றவளின் பார்வை நாணத்துடன் தேவ் மீது படிய, ஸ்பீக்கரில் அன்னை பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் உற்சாகமாய் புன்னகைத்தான்.
“தேவ்… எனக்கு எதுவும் ஸ்வீட் சாப்பிடனும் போல இருக்கு… ஏதும் ரெஸ்டாரன்ட் போகலாமா…”
“அதுக்கு எதுக்கு ரெஸ்டாரன்ட்… மகாராணி ஆசைப்பட்டா நிறைவேத்த தான் இந்த மகாராஜா இருக்கனே… என்ன வேணும்னு சொல்லு, நானே செய்து தரேன்…”
“எனக்கு ஸ்வீட் வேணும்னா அப்பா உடனே பாஸந்தி செய்து பிரிட்ஜ்ல வச்சிடுவார்… அதையே பண்ணலாமா…”
“பண்ணலாமா இல்ல, பண்ணறேன்…” என்றவன், “எவ்ளோ நாளாச்சு, நீ சாதாரணமா பேசி…” அவளை கனிவோடு நோக்கிப் புன்னகைக்க தோளில் சாய்ந்து கொண்டாள்.
வீட்டுக்கு சென்றதும், தேவ் அடுக்களைக்குள் நுழைய உதவ வந்த ஓவியாவையும், ஜானும்மாவையும் வெளியே அனுப்பி,
“நான் பாஸந்தியோட சமையலையும் செய்து முடிக்கிற வரைக்கும் யாரும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது… அதுவரை ரெஸ்ட் எடுங்க…” என்று சொல்லி விட்டான்.
வெளியே சென்றிருந்த ராகவ் வீட்டுக்குள் நுழைகையில் மூக்கை உள்ளே இழுத்துக் கொண்டே வந்தான்.
“என்ன ஓல்ட் லேடி, நீங்க இங்க இருக்கீங்க… யாரு கிச்சன்ல… செம வாசனையா இருக்கு…”
“வேற யாரு, உன் தெய்வம் தான்…” என்றாள் ஓவியா.
“வாவ்… தெய்வம் களத்துல குதிச்சிருச்சா, அப்ப இன்னைக்கு சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சுட வேண்டியது தான்…”
“ஏன், அப்ப நான் சமைக்கிறதை மட்டும் சாப்பிடாம மோந்தா பார்க்கற…” அவனை வாரினார் ஜானும்மா.
“அது பசி ருசியறியாதுன்னு சொல்லுவாங்கல்ல, அப்படி சாப்பிடறது… உங்க சமையல்ல எல்லாமே அளவா தான் இருக்கும்… பட் பாஸ் சமையல் அப்படி இல்ல, இனிப்பு, காரம்னு எது செய்தாலும் கொஞ்சம் தாராளமா எல்லாத்தையும் போட்டு டேஸ்ட் தூக்கலா இருக்கும்…”
ராகவ் சொல்லும்போதே உள்ளே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, சர்க்கரையோடு கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட்டுக் கொண்டிருந்தான் தேவ். நன்கு கொதிக்கையில் தீயைக் குறைத்து, தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டிருந்தான்.
பாலாடையையும் அப்படியே இளக்கிவிட்டு, தொடர்ந்து பால் நன்கு கெட்டியாகும் வரை கிளறி, அதை இறக்கி லேசாய் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப் பூ சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாஸந்தியை பிரிட்ஜில் குளிர வைத்தான்.
அடுத்து மதிய சமையலுக்கு வெஜ் புலாவுடன் பனீர் மசாலாவைத் தயாராக்கத் தொடங்கினான். ஹாலில் அமர்ந்து இருந்தவர்களுக்கு மூக்கை நிறைத்த வாசம் சுகமாய் பசியைக் கிளப்பி விட, ஓவியாவுக்கு தந்தையின் சமையல், நினைவு வந்தது. தனக்காக அன்போடு சமைக்கும் தந்தையைப் போலவே, தேவும் சமையலில் இறங்கியதை நினைத்து மனம் காதலில் நிறைந்தது.
இதழில் மென்னகையுடன் அமர்ந்திருந்தவள் முன்னில் சிறிது நேரத்தில் பிரசன்னமானான் தேவ் கிருஷ்ணா.
“அம்மு சாப்பிட வரலாம், எல்லாமே ரெடி…” என்றவனை நோக்கிய அவளது பார்வையில் தேங்கி நின்ற காதல் அவன் உள்ளத்தில் குளிரலையாய் உரசி சிலிர்க்க வைத்தது.
எனக்கான தேடல்கள்
எல்லாம் உனக்குள்ளே தான்
ஒளிந்து கிடக்கின்றன…
உடல் தேடும் பசியானாலும்
உயிர் தேடும் ருசியானாலும்…
எனக்கான நிறைவாய்
என்றும் நீ மட்டுமே…
உன் அருகாமை மட்டுமே
உயிர்க்கவும் உறங்கவும்
வைக்கும் காதல் மந்திரம்…

Advertisement