Advertisement

அத்தியாயம் – 26
மாலை ஏழு மணிக்கு நடனப் பள்ளியை லாக் பண்ணிவிட்டு வீட்டுக்கு சென்ற சிவநேசன் சிறிது ஓய்வுக்குப் பிறகு ஓவியாவுடன் பேசுவதற்காய் அலைபேசியைத் தேடுகையில் தான் அதை நடனப் பள்ளியிலேயே மறந்து வைத்தது நினைவுக்கு வந்தது.
“அட, போனை ஸ்கூல்லயே விட்டுட்டு வந்துட்டோம் போலவே… அம்மு வேற தினமும் ராத்திரி கூப்பிடலேன்னா கோவிச்சுப்பாளே… சரி, போயி எடுத்திட்டே வந்திடுவோம்…” என நினைத்தவர் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினார்.
ஸ்கூலை நெருங்கியவர் உள்ளே ஒரு அறையில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்கைக் கண்டதும் யோசித்தார்.
“எல்லா லைட்டும் ஆப் பண்ணிட்டு தானே போனோம்… இப்ப எப்படி லைட் எரியுது… செக்யூரிட்டியை வேற கேட்டுல காணமே…” யோசித்தவர் வண்டியை சற்றுத் தள்ளியே ஆப் ஆக்கி தள்ளிக் கொண்டு வந்தார். கேட் அருகே நின்று உள்ளே கவனிக்க சில பேச்சுக் குரல் கேட்டது. 
“செக்யூரிட்டி எங்காச்சும் தம் அடிக்கப் போயிட்டானா, உள்ளே இருக்கானா… இல்ல, திருடன் எவனாச்சும் புகுந்துட்டானோ…” யோசித்தவர் மெல்ல சத்தம் வராமல் கேட்டைத் திறந்து உள்ளே சென்றார்.
வெளிச்சம் இருந்த அறையின் ஜன்னல் சிறிது திறந்திருக்க அதன் வழியே உள்ளே கவனித்தவர் அதிர்ந்தார்.
ரம்யா நாற்காலியோடு சேர்த்து கட்டப்பட்டிருக்க, வாயில் ஒரு பிளாஸ்டரை ஒட்டி வைத்திருந்தனர். அவளுக்கு முன்னில் நின்று கொண்டிருந்த சேது மாதவன் ஒரு கையால் அவளது கன்னத்தைத் தடவ அவள் கண்ணில் வழியும் கண்ணீருடன் அருவருப்பாய் முகத்தை சுளித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகே ராஜனும், பஷீரும் இருந்தனர்.
“என்ன பஷீரு, குட்டி ரொம்ப முரண்டு பிடிக்குது… இவளைத் தேடி இவ அம்மா வந்துட்டா என்ன பண்ணறது… பேசாம வேற எங்காச்சும் கொண்டு போயிடலாமா…” சேது கேட்க தாடியை சொறிந்தான் பஷீர்.
“நானும் எத்தனை தன்மையா சொல்லிப் பார்த்தேன், கேக்க மாட்டிங்குதே… நீங்க என்னடான்னா, பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தா கிக் இருக்காதுன்னு சொல்லறீங்க… நேரம் வேற போயிட்டே இருக்கு…”
“பேசாம நம்ம பில்டிங் முன்னாடி நிக்கற என் காரை எடுத்திட்டு வா… இவளை ஏத்திகிட்டு எங்காச்சும் அவுட்டர் போயி காரியத்தை முடிச்சுக்கலாம்…” என்ற சேது மாதவனின் கை இப்போது அவளது அந்தரங்க பாகத்தைத் தொட முயல காலால் உந்தி நாற்காலியை நகர்த்திய ரம்யாவின் கண்களில் பயமும் வெறுப்பும் நிறைந்திருந்தது.
அவளை முறைத்த சேது, ஓங்கி அவள் கன்னத்திலேயே அறைய அதிர்ச்சியில் நடுங்கத் தொடங்கினாள் ரம்யா.
“பாப்பா, இப்படில்லாம் பண்ணினா உன் வீடியோவை உலகமே பார்த்து ரசிக்கற மாதிரி பண்ணிடுவோம்… எனக்கு இப்படி முரண்டு பிடிக்குறதெல்லாம் பிடிக்காது… அழகா ஒத்துழைச்சா ரெண்டு பக்கமும் சேதாரம் இல்லாம நல்லபடியா வீட்டுக்குப் போயிடலாம்… என்ன சொல்லற…”
“சார், நீங்க என்ன சார் அவள்ட்ட கெஞ்சிட்டு… நான் போயி காரை எடுத்தாறேன்… சாவிய குடுங்க…”
“பஷீரு, எனக்கு ரொம்ப பயமாருக்கு, வெளிய தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிரும்… பேசாம அந்தப் பொண்ணை வீட்டுக்கு அனுப்பிடலாம்…” என்றான் ராஜன் பயத்துடன்.
“அட, இவனொருத்தன் சரியான தொடை நடுங்கியா இருக்கான்… அவ்ளோ பயமாருந்தா கொஞ்சம் சரக்கை உள்ள தள்ளிக்க, எல்லாம் ஓடிப் போயிடும்… உனக்கும் சின்ன வயசுப் பொண்ணைத் தொடணும்னு ஆசை இருக்கா இல்லியா….” பஷீர் கேட்க, தலையை சொறிந்தான் ராஜன்.
“ஆசை எல்லாம் இருக்கு, ஆனாலும் மாட்டிப்பமோன்னு பயமாவும் இருக்கே….”
“யார்றா இவன்… ஆசை இருந்தா பயம் இருக்கக் கூடாது… பயம் போகணும்னா சரக்கை உள்ள தள்ளு…”
“சரி, முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்… நீ காரை எடுத்திட்டு வா…” என்று சாவியை நீட்டினான் சேது.
“ராஜன் நீ முன்னாடி கேட்டுல இரு… சார், நீங்க பொண்ணை  கவனிச்சுக்குங்க…” என்ற பஷீர் வெளியே வர அவனுடன் ராஜனும் வந்தான். அந்த நேரத்தில் பில்டிங்கின் பின் பக்கம் ஏதோ உருண்டு வீழும் சத்தம் கேட்க மூவரும் அதிர்ந்தனர்.
“ஏதோ, சத்தம் கேட்டுச்சுல்ல… யாருன்னு பாரு…” என்ற சேதுவின் முகம் திகிலைக் காட்ட ராஜனும், பஷீரும் பின் பக்கம் ஓடினர். சேதுவும் என்னவென்று தெரிய அவர்கள் பின்னிலேயே ஓடினான். அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட சிவநேசன் உள்ளே நுழைந்தார்.
அவரைக் கண்டதும் ரம்யாவின் விழிகள் சந்தோஷத்தில் மலர, வேகமாய் நாற்காலியில் பிணைத்திருந்த கட்டை விடுவித்து , “சீக்கிரம் ஓடு…” என்று அவளை எழுப்பிக் கூட்டி கேட்டை அடைவதற்குள் அவர்கள் மூன்று பேரும் திரும்பி வந்து விட்டனர்.
“ஐயோ பெரிய சாரு…” சிவநேசனைக் கண்டதும் ராஜன் நடுங்க, “இவன் ஒருத்தன்…” என்ற பஷீர் வேகமாய் அவரை எட்டிப் பிடித்தான்.
அதற்குள் ரம்யாவின் கையை விட்டிருந்தவர், “பாப்பா, நீ ஓடிரு…” என்று கத்த, மருண்ட விழிகளுடன் புலியிடம் விடுபட்ட மான்குட்டி போல் வெளியே பாய்ந்தாள் ரம்யா.
“டேய், அந்தப் பொண்ணு ஓடுறா பாரு…” சேது கத்த அவளைப் பிடிக்கத் திரும்பிய பஷீரின் கையை இறுகப் பற்றிய சிவநேசனை அவன் உதறிவிட நிலைதவறி விழுந்தவரின் தலை படிக்கட்டில் இடித்து விழுந்தார்.
“ஏய் ஓடாத… உன் வீடியோ எங்க கிட்ட இருக்கு…” என்ற சேது கையில் அந்த காமிராவைக் காட்ட, அதை ஒரு பார்வை பார்த்தாலும் நிற்காமல் ஓடினாள் ரம்யா. அதை கவனித்த சிவநேசன் சட்டென்று எழுந்து சேதுவிடம் உள்ள காமிராவைப் பறித்து கீழே போட்டு காலால் அமர்த்த அது உடைந்து நொறுங்கியது.
“ஏய், கிழவா, என்ன பண்ணற…” சேது கத்துவதைக் கேட்டு திரும்பிய பஷீரின் முகம் ஆத்திரத்தில் மின்னியது. ராஜன் எதுவும் செய்யாமல் பயந்து ஓரமாய் நின்றான்.
“யோவ் கிழவா… போட்டு வச்ச பிளான் எல்லாத்தையும் சொதப்பினதும் இல்லாம காமிராவையே உடைச்சுட்டியா…” என்றவன் அவரைக் கீழே தள்ளி மேலே ஏறி அமர்ந்து கழுத்தை அமர்த்தினான்.
“ச்சே… எல்லாம் நாசமாப் போச்சு… யாருக்கும் தெரியாம பிளான் பண்ணியும் இந்தாளு வந்து எல்லாம் சொதப்பிட்டான்…” சேது கோபத்துடன் சொன்னான்.
“ஏய், என்..னை விடு..டா…” மூச்சுத் திணற சிவநேசன் கண்ணில் மின்னிய கண்ணீருடன் கேட்க, “விட்டா, எங்களுக்கு அவார்டு வாங்கிக் கொடுக்கப் போறியா… நேரா போலீஸ் ஸ்டேஷன் தான போவ… நீ போக வேண்டிய இடம் அதில்ல…” என்றவன் கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து அவர் முகத்தோடு வச்சு அமர்த்த மூச்சு கிடைக்காமல் கை கால்கள் இழுத்துக் கொள்ள அவர் துடிக்கத் தொடங்கினார்.
“செத்துத் தொலையட்டும்… தேவை இல்லாம உசுரை விடனும்னே வந்திருக்கான்…” என்றான் சேது.
“ஐயோ பஷீரு, அவரை விட்டிரு… கொலை எல்லாம் வேண்டாம்…” ராஜன் பஷீரைத் தடுக்க வர அவன் கையைத் தட்டி விட்டவன் அவரது மூச்சு நின்ற பின்னரே விட்டான்.
“நம்ம பொருள் எல்லாத்தையும் எடுத்துக்க, நாம வந்த அடையாளமே இருக்கக் கூடாது…” சேது சொல்ல, வேகமாய் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.
“ஐயோ, நான் என்ன பண்ணுவேன்…” ராஜன் புலம்ப,
“நீயும் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்க… நான் கார் எடுத்திட்டு வரேன்… முதல்ல கிளம்புவோம்… உனக்கு என்ன பண்ணனும்னு சார் பார்த்துப்பார்…” என்றவன் வேகமாய் சென்று காரை எடுத்து வந்தான். மூவரும் கிளம்ப வழி எல்லாம் ராஜனின் புலம்பல் தொடர்ந்தது.
“நான்தான இங்க செக்யூரிட்டி… என்னைக் காணோம்னாலும்  போலீஸ் தேடும்… இதுக்குதான் கொல்ல வேண்டாம்னு சொன்னேன்… போலீஸ் அடி எல்லாம் எனக்குத் தாங்காது… மாட்டினா அவ்ளோதான், எல்லாம் உளறிடுவேன்…” சொன்னவனை முறைத்தான் சேது.
“இங்க பாரு… உனக்கு வேண்டிய பணத்தைத் தரேன்… வேற எந்த ஊருக்காச்சும் போயி பொழைச்சுக்க… அப்படியே மாட்டினாலும் எக்காரணத்தை கொண்டும் என் பேரு வெளிய வந்துடக் கூடாது சொல்லிட்டேன்… இங்க நடந்ததை இதோட மறந்திடு…”
“எப்படி சார் மறக்க… அந்த ரம்யா வீட்டுல போயி சொல்லாமலா இருக்கும்…”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்… உன் வீட்டுக்குப் போயி சரக்கை போட்டு தூங்கு… காலைல பஷீர் உன்னை வேற ஊருல கொண்டு போயி விட்டுருவான்…” சேது சொன்னாலும் ராஜன் புலம்பலை நிறுத்தவில்லை.
போகும் வழியில் பஷீர் இறங்கி மேலும் பிரியாணி, சரக்கு வாங்கிக் கொள்ள மூவரும் ராஜன் வீட்டுக்கு சென்றனர்.

Advertisement