Advertisement

அடுத்து விஷயங்கள் துரிதகதியில் நடக்க, அதற்கு முன்னரே சத்யாவுடன் பஷீரைத் தேடி வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் அவனைக் காணாமல் வீட்டை ஒரு அலசு அலசிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி இருந்தார். வீட்டில் கிடைத்த பஷீரின் புகைப்படம் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அந்த நேரத்தில் கமிஷனர் அழைத்து ரம்யா சொன்ன விவரத்தை சொல்லவும் அவர் முகத்தில் ஒரு தெளிவு வந்தது.
“சார், பஷீர் நம்மகிட்ட சிக்கிடுவோம்னு தான் தலைமறைவு ஆயிருக்கான்… அவனோட இருந்த இன்னொருத்தனைப் பிடிச்சா பஷீரையும் நிச்சயம் பிடிச்சுட முடியும்…” என்றார் கேஸில் புதிய ஒரு வெளிச்சம் பிறந்த நம்பிக்கையுடன்.
“எஸ்… உடனே அவனை பிளாக் பண்ணுங்க…” கமிஷனர் சொல்ல, “எஸ் சார்…” என்றவர் சத்யாவிடம் கூறினார்.
வேகமாய் வந்த போலீஸ் வண்டி ஒரு சின்ன பங்களாவின் கேட்டின் முன் நின்று அமைதியானது. முகப்பில் கறுப்புப் பளிங்கில் சேது மாதவன், எஞ்சினியர் என்ற பெயர் தங்க நிறத்தில் பளபளத்தது. கேட்டில் இருந்த செக்யூரிட்டி போலீஸ் என்றதும் மிரண்டு கேட்டைத் திறந்து விட்டார்.
சேது மாதவனை எங்கே என்று போலீஸ் விசாரிக்கவும், அவரது மனைவியும், பதினாறு வயது மகளும் அச்சத்துடன் என்ன விஷயம் என்று கேட்க, பதில் சொல்லாமல் அரஸ்ட் வாரண்டை நீட்ட அதிர்ந்தனர்.
“மே..மேடம்… அப்பா என்ன தப்பு பண்ணார், அவரை எதுக்கு அரஸ்ட் பண்ண வந்திருக்கீங்க…” அருகில் நின்ற பெண் போலீஸிடம் அப்பெண் தயங்கிக் கொண்டே கேட்டாள்.
அவளை வேதனையுடன் பார்த்தவர், “உன்னை விட வயசுல சின்னப் பொண்ணை பலவந்தப் படுத்தி இருக்கார்… காப்பாத்த வந்த பெரியவரையும், ஒரு செக்யூரிட்டியையும் கொலை பண்ணிருக்கார்…” அவர் சொல்ல மற்றவர்கள் வீடு முழுதும் சேது மாதவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அதைக் கேட்டு அப்பெண்ணும், அன்னையும் ஒருவரையொருவர் அதிர்ந்து பார்த்துக் கொண்டனர்.
“அம்மா, எனக்கு இப்படி ஒரு அப்பா வேண்டாம்… நீங்க எத்தனயோ தடவை சொல்லிட்டிங்க, அவர் திருந்துற போல இல்ல… நீங்க இல்லாதப்ப அவர் என் மேலே கை வைக்க மாட்டார்னு என்ன நிச்சயம்… இனியும் அமைதியா இருந்து அவரைக் காப்பாத்தக் கூடாதுமா… அவரை போலீஸ் அரஸ்ட் பண்ணட்டும்…” என்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தவருக்கு முகத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.
அனைவரும் திகைப்புடன் நோக்க ஒரு தீர்மானத்துடன் “சார், அவர் வீட்டுல இல்லை… ஆனா எங்க போயிருப்பார்னு எனக்குத் தெரியும்…” கண் கலங்க இறுக்கமான முகத்துடன் சொன்னவரிடம் வந்தார் இன்ஸ்பெக்டர். முகம் சிவந்து, அழுகையை அடக்கிக் கொண்டு தலை குனிந்து நின்றவர் வேதனையுடன் அவரை ஏறிட்டார்.
“எனக்கும் ஒரு வயசுப் பொண்ணு இருக்கு… நாளைக்கு அந்தாளு அவளையும் எதுவும் பண்ண மாட்டார்னு என்ன நிச்சயம்… ரொம்ப நாளா அவர் பண்ணிட்டு இருக்கிற கொடுமைக்கு இனியாச்சும் விடிவு காலம் கிடைக்கட்டும்…” என்றவர், “சிட்டி அவுட்டர்ல எங்களுக்கு ஒரு பண்ணை வீடு இருக்கு, அங்கதான் போயிருப்பார்… போயி அரஸ்ட் பண்ணிக்கங்க…” என்றதும் பெருமிதமாய் பார்த்தனர்.
“சபாஷ் மா…” மகளைத் தட்டிக் கொடுத்தவர், “உங்களைப் போல எல்லாப் பெண்களும் இருந்துட்டா பெண்களுக்கு எதிரா நடக்கிற நிறைய கொடுமைகளுக்கு மோட்சம் கிடைக்கும்… ரொம்ப நன்றி…” என்றவர் அவரிடம் மேலும் சில தகவலை விசாரித்துக் கொண்டு கிளம்பினார்.
பண்ணை வீட்டுக்கு சென்றவர்களுக்கு முன்னில் பெரிய பூட்டு தொங்க, ஏமாற்றமாய் நின்றவர்களுக்கு உள்ளே இருந்து ஒலித்த அலைபேசி ஒலி ஆலய மணியாய் காட்டிக் கொடுக்க, அதுவே சேதுவுக்கு அபாய மணியாய் மாறியது. வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளிருந்தவனை அழகாய் அமுக்கி போலீஸ் வண்டியில் ஏற்றினர்.
அவனை போலீசார் லேசாய் கவனிக்க வலி தாங்காமல் பஷீர் எங்கே சென்றான் என்ற விவரத்தையும் சொன்னான். சேதுவின் பேச்சைக் கேட்டு ஒரு லாட்ஜில் அறை எடுத்துப் பதுங்கி இருந்த பஷீரும் கையோடு மாட்டினான்.
இருவரையும் கூண்டில் மாட்டிய எலி போல் தூக்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தது வண்டி. அங்கே அவர்கள் கவனித்த கவனிப்பில் முழு சம்பவங்களையும் ஒன்று விடாமல் இருவரும் கக்கினர்.
இந்த சேது மாதவன் தான் ஓவியாவின் டான்ஸ் ஸ்கூல் அருகே ஒரு பெரிய பில்டிங்கைக் கட்டிக் கொண்டிருக்கும் எஞ்சினியர். புதிதாய் மலர்ந்த இளம் பெண்கள் என்றால் இவனுக்கு மிகவும் பிடிக்கும். ரம்யாவை போக, வரப் பார்க்கையில் அவளது செழுமையான இளமை கண்ணை உறுத்த சந்தர்ப்பம் பார்த்து இருந்தவனுக்கு எலக்ட்ரிஷியன் பஷீர் மூலமாய் அதற்கான வாய்ப்பு அமைய உபயோகித்துக் கொண்டான்.
எலக்ட்ரிஷியன் பஷீருக்கு சேதுவின் வீக்னஸ் தெரியும் என்பதால் இதற்கு முன்பும் சில கள்ள வேலைகளை செய்து பணம் வாங்கியிருக்கிறான். ஒருநாள் இருவரும் மாடியில் இருந்து பேசிக் கொண்டிருக்கையில் ரம்யாவைப் பார்த்து பெருமூச்சுடன் சேது தனது ஏக்கத்தை சொல்ல மனதில் வைத்துக் கொண்டான் பஷீர்.
செக்யூரிட்டி ராஜன் எதேச்சையாய் இவனை டான்ஸ் ஸ்கூலில் எலக்ட்ரிக் வேலைக்கு அழைக்க அவனிடமும் அப்படி இப்படிப் பேசி ஆசையைத் தூண்டி ஒரு ஹிட்டன் காமிராவை டான்ஸ் ஸ்கூல் டிரஸ்ஸிங் ரூமில் செட் பண்ணி வைத்தான். மற்ற மாணவியர் எல்லாம் டான்ஸ் டிரஸ்சில் வர ரம்யா மட்டும் ஸ்கூலில் இருந்து யூனிபார்முடன் நேரடியாய் ஸ்கூலுக்கு வருவதால் அங்கே உள்ள டிரஸ்ஸிங் ரூமில் தான் உடை மாற்றுவாள்.
“அப்படி டிரஸ் மாத்துற வீடியோவை ரம்யாகிட்ட காட்டி மிரட்டினோம்… எல்லாரும் கிளம்பும்போது வீட்டுக்குப் போற போல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ஸ்கூலுக்கு திரும்ப வரணும்… இல்லேன்னா இந்த வீடியோவை நெட்டுல எல்லாரும் பார்க்கப் போட்டிடுவோம்னு சொன்னதும் அந்தப் பொண்ணு பயந்திருச்சு… அதைப் பார்த்தா எங்கம்மா உசுரோடவே இருக்காது, அப்படி எதுவும் பண்ணிடாதீங்கன்னு அழுதுச்சு… அப்படின்னா நாங்க சொல்லுற போல எல்லாரும் கிளம்பி கொஞ்ச நேரத்துல திரும்ப வரணும்னு சொல்லவும் சம்மதிச்சிருச்சு…”
“ஸ்கூலை தான் எல்லாரும் கிளம்பினதும் பூட்டிட்டுப் போயிட்டாரே, அப்புறம் எப்படி சாவி கிடைச்சது…”
“ராஜன் அதுக்கு ஒரு மாத்து சாவி ரெடி பண்ணி வச்சிருந்தான்…” அவன் சொன்னதைக் கேட்டு கோபமாய் எழுந்த சத்யா, பஷீரின் முகத்திலேயே ஓங்கி அறைந்தான்.
“எப்படிடா, சின்னப் பொண்ணை உங்களால வேற கண்ணோட்டத்துல பார்க்க முடியுது… அப்படி என்ன அரிப்பு…” என்றவன் அவன் மர்ம தேசத்தில் பூட்ஸ் காலால் ஒரு உதை கொடுக்க வலியில் பொத்திக் கொண்டு கதறினான்.
பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சேது மாதவனிடம் வந்தவன், “எப்படி, உனக்கு இளசா, புதுசா வயசுக்கு வந்த பொண்ணுங்க தான் பிடிக்குமா… வீட்டுல உனக்கும் ஒரு பொண்ணு இருக்கான்னு யோசிக்கத் தோணலியா…” என்றவன் அவனது மர்ம பிரதேசத்திலும் காலால் எத்த, வலி தாங்காமல் அலறியவனின் வாயிலேயே அடித்தான்.
“வீட்டை விட்டு வெளிய வந்து ஏதாச்சும் சாதிக்கணும்னு நினைக்கிற எத்தனையோ பெண் குழந்தைங்க இருக்காங்க, அவங்களோட கனவெல்லாம் உங்களை மாதிரி காமவெறி பிடிச்சவங்களால இல்லாமப் போகுது… பெண் குழந்தைகளை வெளிய அனுப்பவே பெத்தவங்க பயப்படறாங்க… எத்தனை போராட்டங்களை அவங்க கடந்து வர வேண்டியிருக்கு…” சொன்னவனின் கண்கள் வேதனையில் மின்னியது.
சத்யாவின் பெரியம்மா பெண் ஒருத்தி அடுத்த வீட்டு நபரால் பாலியல் கொடுமையில் சிக்கி உயிரை விட்டிருந்தாள். அந்த சம்பவத்தில் இருந்த ஆத்திரமும், வேதனையும் இந்த விஷயத்திலும் சத்யாவுக்கு வெளிப்பட்டது.
“ம்ம்… மேல சொல்லு…” இன்ஸ்பெக்டர் கையில் லத்தியை உருட்டிக் கொண்டே கேட்க தொடர்ந்தான்.
“கொஞ்ச நேரத்துல சேது சாரும் வந்துட்டாரு… ராஜன் கொஞ்சம் பயந்துட்டே இருந்தான்… நான்தான் தைரியம் சொல்லி சம்மதிக்க வச்சேன்… அந்தப் பொண்ணு வந்ததும் மயக்க மருந்தை கூல் டிரிங்க்ஸ்ல கலந்து கொடுக்க எல்லாம் ரெடி பண்ணி வச்சோம்… சொன்ன போலவே அதுவும் வந்துச்சு… ரொம்ப அழுது, காலைப் பிடிச்சு கெஞ்சுச்சு… அந்தக் காமிராவுல உள்ள வீடியோவைக் காட்டி மிரட்டி சிரிச்சுட்டு இருந்தோம்… அப்ப தான் அந்தப் பெரியவர் சாயந்திரம் பூட்ட வந்தப்ப, போனை மறந்து வச்சுட்டு எடுக்கறதுக்காக வந்தார்…” என்றவன் மேலே சொல்ல கேட்டு நின்றவர்களுக்கு கண்ணில் அந்தக் காட்சி விரிந்தது.
ஓநாய்களின் சதியில்
புள்ளி மான்களின் ஓலம்…
சதியை வெல்லுமோ
பெண்ணின் மதி…
காம வெறியன்களின்
வேட்டை வெறியில்
சிக்குவதோ பாவம்
பெண் மான்கள்…
பெண்ணாய் பிறப்பதே
பாவமென்று ஆகுமோ…

Advertisement