Advertisement

அத்தியாயம் – 25
வெள்ளைத்தாளில் தேவ் விரல்கள் கோடுகளை இழுத்து உருவங்களைப் படைத்துக் கொண்டிருக்க, பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா.
“எப்படி தேவ், இவ்ளோ ஸ்பீடா உன்னால வரைய முடியுது… ரொம்ப அழகா உருவத்துக்கு வடிவம் கொடுக்கிற…”
அவளை நோக்கி சிரித்தவன், “சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்லுவாங்க… எதுலயும் விருப்பம் இருந்தா மட்டும் போதாது, விடாமுயற்சியும், பயிற்சியும் இருக்கணும்… சின்ன வயசுல என் பாட்டி விறகடுப்புல சமைக்கும்போது அடுக்களை சுவர்ல எல்லாம் புகை படிஞ்சு கறுப்பா இருக்கும்… நான் அந்தக் கரியைத் தொட்டு அவங்களையே படமா வரைஞ்சு காட்டுவேன்… அவங்க ரொம்ப சந்தோஷமா பாராட்டுவாங்க, அதுவே எனக்கு பெரிய உந்துதலா ஆச்சு…”
“வாவ், நிசமாலுமா…” என்றாள் உற்சாகத்துடன்.
“ம்ம்… என் வயசுப் பிள்ளைங்க எல்லாம் கைல கோலிகுண்டும், பம்பரமுமா சுத்திட்டு இருக்கும்போது நான் கரிக்கட்டையும், பென்சிலுமா பேப்பரோட எங்காவது உக்கார்ந்து அவங்க விளையாடறதை வரைஞ்சுட்டு இருப்பேன்… என்னவோ, எனக்கு இது தான் பிடிச்சிருக்கு…” சொல்லிக் கொண்டே வரைந்த ஓவியத்துக்கு பினிஷிங்கைக் கொடுத்தவன், திருப்தியாய் பார்த்தான்.
“சரியா இருக்கா…” அவளிடம் கேட்க புன்னகைத்தாள்.
“ரொம்ப அருமையா இருக்கு… உன் ஓவியத்துல பெண்கள் எல்லாம் ரொம்ப அழகு… அதும் இடுப்புல குழந்தையோட இந்த ஓவியம் ரொம்ப அழகாருக்கு…” என்றவளின் நெற்றியில் செல்லமாய் முட்டினான்.
“ஓவி, இந்த ஓவியத்தை நல்லா உத்துப் பாரேன்… நீ நம்ம குழந்தையை இடுப்புல வச்சுட்டு இருக்க போலத் தோணும்…” அவன் சொல்லவும் செல்லமாய் முறைத்தவள், “ப்ச் உங்களுக்கு எப்பவும் என்னை ஏதாச்சும் சொல்லணும்…” என சொல்லிக் கொண்டிருக்க இன்டர்காம் அலறியது. தேவ் புன்னகையுடன் அதை எடுக்க ஓவியாவின் பார்வை அந்த ஓவியத்தை உன்னிப்பாய் நோக்க உள்ளம் துள்ளியது.
“நிஜமாலுமே நம்ம முகம் போலத்தான் இருக்கோ…” யோசித்தபடி அவனை நோக்க பேசிக் கொண்டிருந்தான்.
“தம்பி, நம்ம ஓவியாம்மாவைப் பார்க்க ரம்யான்னு ஒரு சின்னப் பொண்ணு வந்திருக்கு… உள்ள விடறதுங்களா…”
“ரம்யாவா, அது யாரு…” யோசித்தவன் ஓவியாவிடம் திரும்பி, “ஓவி, உன்னைப் பார்க்க ரம்யான்னு ஒரு பொண்ணு வந்திருக்காம்… உனக்குத் தெரிஞ்ச பொண்ணா…” என்றதும் சட்டென்று மலர்ந்தாள் ஓவியா.
“ரம்யா என் டான்ஸ் ஸ்டூடன்ட், ஒருவேளை என்னைப் பார்க்க வந்திருப்பா… உள்ள விட சொல்லுங்க…” என்றவள் புன்னகையுடன் வெளியே செல்ல, வாட்ச்மேனிடம் கூறிவிட்டு பிரம்மாவும் ஹாலுக்கு வந்தான். நெற்றியில் பொடிப்பொடியாய் வியர்வை துளிர்த்திருக்க, கலைந்த தலையும், சோர்ந்த முகமுமாய் உள்ளே வந்த ரம்யாவைக் கண்டு திகைத்தாள் ஓவியா.
“வா ரம்யா, யாரோட வந்த அம்மா வெளிய இருக்காங்களா…”
“இ..இல்ல மேம், ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லணும்…” என்றவள் பிரம்மாவை அச்சத்துடன் நோக்க,
“என்னமா, ஏன் பதட்டமா இருக்க… அப்படி என்ன முக்கியமான விஷயம், எதுவும் பிரச்சனை இல்லையே… முதல்ல உக்காரு…” அவளை சோபாவில் அமர வைத்தாள்.
“மே..மேம்… வெளிய ஆட்டோக்காரர் வெயிட் பண்ணிட்டு இருக்கார்… நான் காசு ஏதும் எடுத்துட்டு வரல, அவருக்கு பணம் கொடுத்து அனுப்ப முடியுமா…” ரம்யா கேட்க திகைப்புடனே பிரம்மாவை நோக்கினாள் ஓவியா.
“பார்த்துக்கறேன்…” என்றவன் வாட்ச்மேனிடம் கூறினான்.
வாட்ச்மேன் பணத்தை வாங்கி சென்று கொடுத்து வந்தார்.
“என்ன ரம்யா, டான்ஸ் ஸ்கூல் இல்லேன்னு என்னைப் பார்க்க இங்கயே வந்துட்டியா… ஏன் ரொம்ப டல்லா இருக்க…”
“அதுவந்து மேம்… எ..எனக்கு காய்ச்சல் வந்துச்சு, அதான்…”
“ஓ… இப்ப சரியாகிடுச்சா, என்ன சாப்பிடற…” எனவும், “இல்ல எதுவும் வேண்டாம்…” மறுத்தாள் ரம்யா.
“இப்ப வேண்டாம்னா ஓகே, ஆனா, கிளம்பும்போது எதுவும் சாப்பிட்டு தான் போகணும் சரியா… சரி, அம்மா இல்லாம தனியா என்னைப் பார்க்க இவ்ளோ தூரம் வந்திருக்க, என்ன விஷயம் ரம்யா…” என்றாள் அன்புடன்.
“அ…அது வந்து, மேடம்…” என்றவள் முகம் சிவக்க சொல்ல முடியாமல் தவித்தாள்.
“ஓவி, நீ உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போயி பேசு…” தேவ் சொல்லவும், “சரி, மாடிக்குப் போகலாம் வா…” என்றவள் ரம்யாவை அழைத்து சென்றாள்.
அறைக்கு சென்றும் எப்படி சொல்லுவதென்று புரியாமல் திணறி நின்றவளை யோசிக்க விட்டு அமைதியாய் பார்த்தவள், “நீ முதல்ல உக்காரு, இந்த தண்ணியைக் குடி…” என்று மேசை மீதிருந்த பாட்டிலை நீட்ட, வாங்கியவள் அரை பாட்டிலுக்கும் அதிகமாய் குடித்துவிட்டு மூச்சு வாங்கினாள்.
“சரி இப்ப சொல்லு, நீ எப்படி என்னைத் தேடி இங்க வந்த…”
“அ…அது, முதல்ல உங்க வீட்டுக்கு தான் போனேன் மேடம்… நீங்க பிரம்மா சார் வீட்டுக்குப் போயிட்டதா பக்கத்துல உள்ளவங்க சொன்னாங்க… பிரம்மா சார் வீடு எந்த ஏரியால இருக்குன்னும் சொன்னாங்க, ஆட்டோக்கார அண்ணாகிட்ட சொன்னேன்… அவர் இங்க வந்து ஒருத்தரை விசாரிச்சப்ப வீட்டைக் காட்டினாங்க…” என்றாள் சற்று நிதானமாக.
“ஓ… இவ்ளோ கஷ்டப்பட்டு என்னைப் பார்க்க தனியா வரணுமா… எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமே…” ஓவியா கேட்க அப்போதுதான் அதை யோசிப்பது போல முழித்தாள் அந்த இரண்டும் கெட்டான் வயதுக்காரி.
“சரி போகட்டும்… என்கிட்ட அப்படி என்ன முக்கியமான விஷயம் சொல்ல வந்த…”
சட்டென்று கண்கள் சிவக்க கலங்கி நின்றவள், “மே…மேடம், உ…உங்க அப்பா இறக்க யாரு காரணம்னு எனக்குத் தெரியும்…” என்றதும் அதிர்ந்தாள் ஓவியா.
“எ..என்ன சொல்லற ரம்யா… உனக்குத் தெரியுமா…”
“ம்ம்… அவரு பாவம், என்னைக் காப்பாத்த வந்து தான் அந்தப் பாவிங்க கிட்ட மாட்டிகிட்டார்…” சொல்லும்போதே அழத் தொடங்கினாள்.
“என்ன, அப்பா உன்னைக் காப்பாத்த வந்தாரா, எனக்கு ஒண்ணும் புரியல… கொஞ்சம் விளக்கமா சொல்லேன்…” பதறத் தொடங்கியது அவளுக்கு.
“நான் முதல்ல இருந்து நடந்ததை சொன்னாத்தான் உங்களுக்குப் புரியும்…” என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு பெரிதாய் மூச்செடுத்துக் கொண்டாள். நடந்ததை சொல்லத் தொடங்க கேட்டுக் கொண்டிருந்த ஓவியாவின் முகத்தில் அதிர்ச்சியும், கோபமும் மாறி மாறித் தெரிந்தது.
சொல்லி முடித்த ரம்யா அழத் தொடங்க, அதிர்ச்சியிலும், தந்தையை அநியாயமாய் கொலைக்கு கொடுத்த துக்கத்திலும் ஓவியாவின் கண்கள் அருவியாய் கொட்டியது.
“சாரி மேடம், அந்த அதிர்ச்சில வீட்டுக்குப் போனதும் எனக்கு குளிர் காய்ச்சல்ல விடியக் காலைல பிட்ஸ் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க… பீவர் அதிகமா இருந்ததால மூணு நாள் ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டியதாப் போயிருச்சு… வீட்டுக்கு வந்ததும் தான் சார் இறந்துட்டார்னு எனக்குத் தெரிஞ்சது… எப்படியாச்சும் உங்ககிட்ட இதை சொல்லி அவர் இறக்கக் காரணமா இருந்த பாவிங்களைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கணும்னு தோணுச்சு, ஆனா, அம்மாவுக்கு யாரோ போன் பண்ணி மிரட்டினதால என்னை சொல்லக் கூடாதுன்னு ரூம்ல அடைச்சு வச்சிட்டாங்க…” என்றவள் கேவினாள்.
அவளை ஆறுதலாய் அணைத்தவள் கோபத்துடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“பரவால்ல, இப்பவாச்சும் இதெல்லாம் சொன்னியே, அவனுங்களை சும்மா விடக்கூடாது… உனக்கு எதுவும் ஆகாம நாங்க பார்த்துக்கறோம்…” என்றவள், “தேவ்… இங்க வாங்களேன்….” என்று குரல் கொடுக்க, ஓடி வந்தவனிடம் விஷயத்தை சொல்ல அவனும் அதிர்ந்தான்.
“மாமாவோட இறப்புக்குப் பின்னாடி இத்தனை விஷயம் இருக்கா… உடனே கமிஷனர் கிட்ட சொல்லி ஆக்ஷன் எடுக்க சொல்லுவோம்…” என்றவன் அலைபேசியுடன் வெளியே வர, கேட் அருகே ஒரு பெண்மணி ஆட்டோவிலிருந்து இறங்கி வாட்ச்மேனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
பிரம்மாவைக் கண்டதும், “சார், ரம்யாவோட அம்மான்னு சொல்லுறாங்க…” என்றதும் உள்ளே அனுப்பக் கூறினான்.
கண்ணீரும் பதட்டமுமாய் அவனிடம் வந்தார்.
“சார், என் பொண்ணு எங்கே… வாழ வேண்டிய வயசுல இப்படி எல்லாம் அவ வாழ்க்கைல நடக்கணுமா, நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம உண்மையை சொல்லியே ஆகணும்னு ஓடி வந்திருக்கா…” எனக் கதறியபடி கூறினார்.
“பயப்படாதீங்கம்மா, உங்க பொண்ணைப் பத்தி எந்த விவரமும் வெளிய வரக் கூடாதுன்னு போலீசுல சொல்லிடறோம்… உள்ள வாங்க…” என்றவன் ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்ல, ஓவியாவைக் கண்டவர் கண்ணீருடன் கையைப் பற்றிக் கொண்டார்.
“என்னை மன்னிச்சிரும்மா, மறைச்சு வைக்கனும்னு நினைக்கல, ஆனா அந்தப் பாவிங்க என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிடுவாங்களோன்னு பயந்து தான் சொல்ல வேண்டாம்னு தடுத்தேன்…” கண்ணீர் விட்டார்.
“ஒரு அம்மாவா உங்க பொண்ணு வாழ்க்கையைப் பாதுகாக்க நினைக்கிற உங்க மனநிலை புரியுது… கவலைப்படாதீங்க, அவளுக்கு எந்த பிரச்சனையும் வராமப் பார்த்துக்கலாம்…” அவருக்கு தைரியம் சொல்லி, கமிஷனர் ரம்யாவை அழைத்து வரும்படி கூறியதால் அவளுடன் கிளம்பினர்.

Advertisement