Advertisement

“அப்படி சொல்லாதீங்க சார், நீங்க பல தடைகளைக் கடந்து தான் இப்ப உள்ள நிலைக்கு வந்திருப்பீங்க… நம்ம புதிய தலைமுறைக்கு அதை சொன்னா அவங்களும் புரிஞ்சு முயற்சி செய்ய உபயோகமா இருக்கும்… உங்களுக்கு எந்த நாள் ஓகேன்னு சொல்லுங்க, அன்னைக்கே வச்சுக்கலாம்…”
நிகழ்ச்சி தொகுப்பாளரும் அவனை விடுவதாய் இல்லை.
“எனக்கு இதுல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல, ஓகே நீங்க இவ்ளோ தூரம் சொல்லுறதுனால சம்மதிக்கிறேன்…”
“வாவ், முதன்முறையா உங்க இண்டர்வியூ எங்க ….சானல் புரோகிராம்ல வரப்போகுது… ரொம்ப நன்றி சார்… எப்ப இன்டர்வியூ வச்சுக்கலாம்னு நீங்களே இன்பார்ம் பண்ணுங்க…” என்று மற்ற விவரங்களையும் பேசினார். ஓவியா சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பேசி முடித்ததும் கையைப் பற்றிக் குலுக்கியவள், “வாழ்த்துகள் பிரம்மா சார்… உங்க திறமையை இந்த உலகமே தெரிஞ்சுக்கப் போகுது… நான் ரொம்ப ஹாப்பி…” என்றாள் மனமார்ந்த சந்தோஷத்துடன்.
“என்னமோ போ ஓவியமே, எனக்கு இதுல எல்லாம் பெருசா விருப்பமில்லை, நீ ஓகே சொல்ல கம்பெல் பண்ணதால தான் சம்மதிச்சேன்…” என்றவனை கட்டிக் கொண்டாள்.
“உங்க வளர்ச்சி சாதாரணமா வந்ததில்லை, எத்தனை உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு அதுல அடங்கியிருக்கு… அதை இந்த உலகமும் தெரிஞ்சுகிட்டுமே…” என்றவளின் மூக்கைப் பிடித்துக் கிள்ளினான்.
“சரி, நான் போயி ராகவ் கிட்ட இதை சொல்லறேன்…” என்றவள் குழந்தை போல் துள்ளிக் கொண்டு செல்ல, புன்னகையுடன் தலையைக் குலுக்கிக் கொண்டான் தேவ்.
சட்டென்று மனம் சிவநேசனிடம் செல்ல நினைவுகள் தொடர்ந்து இன்ஸ்பெக்டரிடம் சென்றது.
“இன்னைக்கு மதியம் தானே அந்த பஷீர் தொழுகைக்கு வருவான்னு இன்ஸ்பெக்டர் சொன்னார்… ஏதாவது விவரம் கிடைச்சிருக்குமா…” யோசித்தவன் சுவர் கடிகாரத்தைப் பார்க்க நேரம் 12.30 என்றது.
“சரி, அவர் காலுக்கு வெயிட் பண்ணலாம்…” என நினைத்தவன் டிராயிங் ரூமுக்குக் கிளம்பினான்.
“சார், டைம் 12.30 ஆச்சு… நாம எதிர்பார்க்கிற பஷீர் நிச்சயம் தொழுகைக்கு வருவானா…” சத்யா கேட்க புன்னகைத்தார் இன்ஸ்பெக்டர். மசூதிக்கு எதிரில் இருந்த டீக்கடையில் மப்டியில் இருவரும் நின்றிருந்தனர்.
“கொஞ்சம் டவுட்டுதான்… என் கணிப்பு சரின்னா அவன் இன்னைக்குத் தொழுகைக்கு வர மாட்டான்… அப்படி வரலேன்னா நிச்சயம் இந்தக் கொலைல அவனுக்கு சம்மந்தம் இருக்குன்னு முடிவுக்கு வரலாம்…”
“ஓ… அந்த பஷீரை நமக்குத் தெரியாதே, எப்படி அடையாளம் கண்டு பிடிக்கிறது சார்…”
“டீக்கடைல விசாரிச்சேன்… வீட்டுல கொஞ்சம் எலக்ட்ரிகல் வேலை இருக்கு… பஷீர்னு ஒரு எலக்ட்ரிஷியன், நல்ல வேலைக்காரனாம், இங்க தொழுகைக்கு வருவான்னு சொன்னாங்க, தெரியுமான்னு கேட்டேன்… அதுக்கு இவன், பஷீரைத் தெரியாம என்ன சார், நம்ம கடைல ஏதும் வேலைன்னா கூட அவன்தான் பார்ப்பான்… தொழுகை முடிஞ்சு கடைக்கு வந்துட்டு தான் போவான், வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிருக்கான்…”
“ஓ… சூப்பர் சார், அருமையா பிட் போட்டு வச்சிருக்கீங்க… இன்னைக்கு பஷீர் வந்தா கோழி போல அமுக்கிடுவோம்…”
“ம்ம்… ஆனா எனக்கென்னவோ, பஷீர் வர மாட்டான்னே தோணுது, நிச்சயம் இதுல அவனுக்கு எதுவும் சம்மந்தம் இருக்கும்னு மனப்பட்சி சொல்லுது… பார்ப்போம்…” அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஜூம்ஆ தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலி ஒலிக்கத் தொடங்கியது.
தொழுகை தொடங்கி, நல்லபடியாய் முடியவும் செய்தது. இன்ஸ்பெக்டர் சொன்னது போலவே பஷீர் வரவில்லை. தொழுகை முடிந்து சிறிது நேரம் நின்று கவனித்தவர்களை டீக்கடைக்காரன் அழைத்தான்.
“இன்னிக்கு அந்தப் பய வரல போல சார்… ஒவ்வொரு வெள்ளியும் தவறாம தொழுகைக்கு வந்திருவான்… இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியல… அவனோட நம்பர் என்கிட்டே இல்ல, ஆனா இந்தத் தெரு கடேசில சூர்யா எலக்ட்ரிகல்ஸ்னு ஒரு கடை இருக்கு… அங்க எதாச்சும் வேலை வந்தா பஷீரு தான் போயி பண்ணிட்டு வருவான்… அங்க அவன் நம்பர் இருக்கான்னு விசாரிச்சுப் பாருங்க…”
“அடப் பிக்காலிப் பயலே, இதை முன்னமே சொல்லி இருந்தா இப்ப பஷீர் வீட்டுக்கே போயிருப்பமே…” என நினைத்தாலும் ஏதும் சொல்லாமல், நன்றி சொல்லிக் கிளம்பினர் இருவரும்.
சூர்யா எலக்ட்ரிக்கல்ஸ் சென்று பஷீரைப் பற்றி விசாரிக்க, “எதுக்கு சார் அவன் அட்ரஸ், நம்பர்லாம் கேக்கறிங்க…” என்றான் கடைப் பையன்.
“தம்பி, போலீசு… ஒரு விசாரணைக்கு வேண்டி கேக்கறோம்… அவன் நம்பர் கொடுக்கலேன்னா நீ கூட வந்தாப் போதும்…” சத்யா சொல்ல மிரண்டவன் அழகாய் பஷீரின் விவரத்தை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிக் கொடுத்தான்.
அவனது அலைபேசி எண்ணை ராஜனின் அலைபேசிக்கு வந்த கால் ஹிஸ்டரியுடன் ஒப்பிட்டு நோக்க, சம்பவம் நடந்த அன்று மாலையில் நான்கைந்து முறை பஷீரின் எண்ணிலிருந்து ராஜனுக்கு அழைப்பு போயிருந்தது.
“ஓகே… நம்ம அடுத்த மூவ்…”
“பஷீர் வீட்டு அட்ரஸ் சார்…” என்ற சத்யா, உடனே கன்ட்ரோல் ரூமுக்கு அலை பேசி விஷயத்தை சொன்னான்.
***********************
“ரம்யா, சொன்னாக் கேளேண்டி, கொஞ்சூண்டு சாப்பிடேன்…”
“ப்ச்… எனக்கு வேண்டாம்…”
“எதுக்குடி, இப்படி அடம் பிடிக்கிற… உன் நல்லதுக்கு தானே சொல்லறேன்… அம்மா பேச்சைக் கேளு தங்கம்… இன்னும் ரெண்டே நாளு தான்… எங்க கோயம்பத்தூர் பிராஞ்சுக்கு என்னை மாத்திருவாங்க,… நாம அங்க போயிடலாம்…”
சொன்ன அன்னையை வெறுப்புடன் நோக்கிய ரம்யா, எதுவும் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள். கண்களும், உடலும் களைப்பைக் காட்ட தளர்வுடன் கட்டிலில் கிடந்தாள்.
“ஆம்பளைத் துணை இல்லாம ஒவ்வொரு நிமிஷமும் நெஞ்சுல நெருப்பைக் கட்டிட்டு இருக்கிற அம்மாவோட வேதனை உனக்கு எங்க புரியப் போகுது… உனக்கு உன் நியாயம் சரின்னா, எனக்கு என் நியாயம் தான் சரி… சாப்பிட்டா சாப்பிடு… இல்லன்னாப் போ… எனக்கு ஆபீசுக்கு டைமாச்சு…” கண்ணீருடன் சொல்லிவிட்டு வெளியேறியவள் மறக்காமல் அறைக் கதவை வெளியே தாளிட்டுச் சென்றாள்.
கதவைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் கொடுத்தவள், கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு கைப்பையுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி விரைந்தாள். மனம் சொல்லவொணா வேதனையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒருவாரமாய் சரியாய் உறங்காத கண்கள் களைப்படைந்திருந்தது.
“பெத்தவ எப்பவும் நல்லதுக்கு தான் சொல்லுவான்னு புரிஞ்சுக்காம இந்தப் புள்ளை இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாளே… கடைசில பெத்த பொண்ணையே சொந்த வீட்டுல கைதி போல அடைச்சு வச்சிட்டு வரவேண்டியதாப் போயிருச்சே… காய்ச்சல் வந்த உடம்புக்கு நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்தாம இப்படிப் பண்ணறாளே…” வருத்தத்துடன் நடந்து கொண்டிருக்க மகள் ரம்யாவின் மனமோ கோபத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
“இந்த அம்மா ஏன் இப்படி சுயநலமா யோசிக்கிறாங்க… இனியும் நான் லேட் பண்ணக் கூடாது, எப்படியாச்சும் இங்கிருந்து தப்பிச்சுப் போயிடணும்… என்ன பண்ணலாம்…” அவளது சின்ன மூளை சுறுசுறுப்பாய் யோசிக்கத் தொடங்க பளிச்சென்று ஒரு ஐடியா தோன்றியது. அதை செயல் படுத்துவதற்காய் மதியம் வரை காத்திருக்கத் தொடங்கினாள்.
மதியம் வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டதும் தயாரானவள் கையில் தயாராய் வைத்திருந்த பேஸ்ட்டை வாய்க்குள் விட்டு குதப்பிக் கொண்டாள்.
“ரம்யாக் கண்ணு… என்னடா, பண்ணற… சாப்பாடு தரட்டுமா…” கேட்டுக் கொண்டே அறைக் கதவைத் திறந்தவர், நிலத்தில் வாயில் நுரை தள்ள, கை கால்கள் வெட்டிக் கொண்டு விழுந்து கிடந்தவளைக் கண்டதும் அதிர்ந்தார்.
“அய்யய்யோ, புள்ளைக்கு மறுபடியும் வலிப்பு வந்திருச்சு போல…” பதட்டத்துடன் அவள் அருகே அமர்ந்தவர், மருமகளை அழைப்பதற்காய் தனது வீட்டுக்கு ஓடினார். அவர் சென்றதும் தனது நடிப்பை நிறுத்தியவள் சடுதியில் எழுந்து வீட்டுக்கு வெளியே ஓடினாள்.
வீட்டுக்குள் சென்று மருமகளுடன் வந்த பாட்டி, தன்னைக் கடந்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்த ரம்யாவைக் கண்டதும் திகைத்து, “அடக் கடவுளே, இந்தப் புள்ள வெளிய போக வேண்டி சும்மா நடிச்சிருக்கா… இவ அம்மா வந்து கேட்டா இனி நான் என்ன சொல்லுவேன்…” எனக் கவலையுடன் யோசித்துக் கொண்டே, மருமகளின் போனை வாங்கியவர் ரம்யாவின் அன்னைக்கு அழைத்து விவரத்தைக் கூறினார்.
நஞ்சென்று சொன்னால்
பிஞ்சு மனம் நம்பிடுமோ…
தீ சுடுமென்று சொன்னாலும்
சுட்டால்தான் புரிகிறது…
அன்னையின் அசைவுகள்
என்றும் அவளுக்காய் இருக்க,
கட்டுப்பாடுகளைக் கசப்பாய்
காணும் பிள்ளை மனம்…
குடித்தால் தான் புரிகிறது…
பாலைப் போல் கள்ளும்
வெண்மை தான் என்று…

Advertisement