Advertisement

அத்தியாயம் – 24
மேலும் இரண்டு நாட்கள் நகர்ந்திருக்க போலீஸ் விசாரணை அதன் பாட்டில் நடந்து கொண்டிருந்தது. தந்தையின் இழப்பில் அடிக்கடி துவண்ட ஓவியாவை பிரம்மாவின் அருகாமையும், ஓவியங்களுமே திசை திருப்ப பெரும் உதவியாய் இருந்தன.
அன்று வெள்ளிக் கிழமை.
அமிர்தா பகலில் ஓவியாவுடன் இருந்துவிட்டு மாலையில் வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அன்று அவளுக்கு மன்த்லி செக்கப் இருந்ததால் வரவில்லை. தேவ் யாரையோ பார்க்க வெளியே சென்றிருந்தான். ராகவ் யோசனையுடன் ஹால் சோபாவில் அமர்ந்திருக்க அவன் எதிரில் அமர்ந்தாள் ஓவியா.
“என்ன ராகவ், ரொம்ப யோசனையா இருக்க போலருக்கு… இன்னைக்கு உங்காளு வரலேன்னு பீலிங்கா…”
“ப்ச்… அதில்லை சிஸ்டர், இன்னைக்கு அவளுக்கு செக்கப் இருக்குல்ல, டாக்டர் என்ன சொல்லப் போறாரோன்னு யோசிச்சுட்டு இருந்தேன்…”
“ம்ம்… பயப்படாதீங்க, நிச்சயம் நல்லதா தான் சொல்லுவார்…”
“நானும் அதுக்கு தான் கடவுளை வேண்டிட்டு இருக்கேன்… அவளுக்குத் தெரியாம எத்தனை நாள் இந்தப் பிரச்னையை மறைச்சு வைக்க முடியும்… இதய சுவர்ல உள்ள ஓட்டை கொஞ்சமாச்சும் மெடிசின்ல மூடத் தொடங்கி இருந்தா அதையே கண்டின்யூ பண்ணலாம், இல்லேன்னா சர்ஜரி பண்ணித்தான் ஆகணும்னு போன முறையே டாக்டர் சொன்னதா அங்கிள் சொன்னாரு… அதான் டென்ஷனா இருக்கு…” என்றான் கவலையுடன்.
“பேசாம நீங்களும் அவங்களோட போயிருக்கலாமே… அமிர்தாவும் சந்தோஷப் பட்டிருப்பா…”
“நானும் யோசிச்சேன்… அங்கிள் தான் நார்மல் செக்கப்புன்னு சொல்லிட்டு டாக்டரைப் பார்க்க எல்லாரும் போனா அம்ருக்கு சந்தேகம் வரும்னு வேண்டாம்னு சொல்லிட்டார்…”
“ம்ம்… அதும் சரிதான்…” என்றவள் ராதிகா அலைபேசியில் வரவும் அவளுடன் பேசத் தொடங்கினாள்.
“ஓவி… இன்னும் எத்தனை நாளுக்கு தான் ஸ்கூலை குளோஸ் பண்ணுறது… நீ இப்போதைக்கு வரலேன்னாலும் நானும் பத்மாவுமாச்சும் கிளாசைக் கண்டின்யூ பண்ணலாம்… நீ என்ன நினைக்கற…”
“இல்ல ராதி, டான்ஸ் ஸ்கூல் தொடங்கறது என் கனவுன்னா அதுக்காக மெனக்கெட்டு எல்லாத்தையும் உருவாக்கிக் கொடுத்தது அப்பா தான்… அவரில்லாம, அவர் இறந்து கிடந்த ஸ்கூலை இனி என்னால கண்டின்யூ பண்ண முடியும்னு தோணலை… கொஞ்ச நாள் போகட்டும்… என்ன பண்ணறதுன்னு முடிவு பண்ணலாம்…” ஓவியா விசனத்துடன் சொல்ல அவள் மனநிலை ராதிகாவுக்குப் புரிந்தது.
“சரி ஓவி, ஒரு மாசம் போகட்டும்… அப்புறம் பார்த்துக்கலாம்… நான் எல்லார்க்கும் இன்பார்ம் பண்ண சொல்லிடறேன்… நீ உடம்பைப் பார்த்துக்க… ரிலாக்ஸா இரு, எப்பவும் பீல் பண்ணிட்டே இருக்காதே…”
“ம்ம்… சரி ராதி, நீயும் உடம்பைப் பார்த்துக்க, ரெகுலரா செக்கப் போ… அண்ணாவைக் கேட்டேன்னு சொல்லு…” அலைபேசியை வைத்தவள் தேவ் கார் போர்ட்டிகோவில் நிற்கவும் வெளியே வந்தாள்.
“என்ன ஓவியரே, சீக்கிரம் திரும்பி வந்துட்டிங்க…”
“எங்க போனாலும் ஓவியருக்கு ஓவியம் நினைவாவே இருந்தா என்ன பண்ணறதாம்… அதான், சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வந்துட்டேன்…”
“ஓஹோ…” என்றவளுடன் உள்ளே வந்தவன், “அம்மு, ஜானும்மாகிட்ட பிரஷ்ஷா ஏதாவது ஜூஸ் அடிச்சு தர சொல்லு…” என்றுவிட்டு தனது அறைக்கு சென்றான்.
உடை மாற்றி ஷார்ட்ஸ், டீஷர்ட்க்கு மாறியவன் முகம் கழுவி டவலில் துடைத்துக் கொண்டிருக்க அலைபேசி அலறி அன்னையின் எண்ணை டிஸ்பிளேயில் காட்டியது.
“ஹலோ, அம்மா….”
“என்னடா தேவ், பிஸியாருக்கியா…”
“இல்லமா, இப்பதான் வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்தேன்… சொல்லுங்க…”
“ஒண்ணும் இல்லப்பா, கல்யாணத்துக்கான வேலை எல்லாம் தொடங்கணும்… இப்ப சம்மந்தி இல்லாத நிலைமைல ஓவியா கிட்ட அதைப் பத்திப் பேசவும் சங்கடமா இருக்கு… நாம முடிவு பண்ணின போல வைகாசிலயே கல்யாணத்தை வச்சுக்கலாமா… இல்ல, தள்ளி வைக்கணுமா… இதை அவகிட்ட நீயே பக்குவமா கேட்டு சொல்லுப்பா…” அவர் பேசும்போதே அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு ஜூஸ் கிளாசுடன் உள்ளே வந்தாள் ஓவியா.
“ம்ம்… சரிம்மா, மாமா ஆசையா முடிவு பண்ணின கல்யாணம்… ஆனா, அவர் இறந்து கொஞ்ச நாள்லயே வச்சுக்க முடியுமா…”
“தேவ், அதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா… ஆல்ரெடி அவர் நிச்சயம் பண்ணின கல்யாணம் தானே, அதெல்லாம் 15 முடிஞ்சு பண்ணறதுல தப்பில்லன்னு சாஸ்திரம் சொல்லுது… இனி அவளுக்கு நாம தான எல்லாமே… அவ சம்மதம் மட்டும் கேட்டு சொல்லு, வேற எதுவும் யோசிச்சு குழப்பிக்க வேண்டாம்…”
“ம்ம்… மாமா ஆசைப்பட்ட நாள்லயே கல்யாணம் வைக்க தான் என் விருப்பமும்… எதுக்கும் ஓவி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்…” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே.
“ம்ம்… அதுக்கான வேலை எல்லாம் 15 முடிஞ்சதும் தொடங்கணும், பத்திரிகை அடிக்கணும்… கல்யாணத்துக்கு ரொம்ப நெருங்கினவங்களை அழைச்சு சிம்பிளா முடிச்சுட்டு ரிஷப்ஷன்க்கு எல்லாரையும் அழைச்சுக்கலாம்…”
“சரிம்மா, நீங்க நினைக்கற போலவே பண்ணிடலாம்… நான் அம்முகிட்ட பேசிட்டுக் கூப்பிடறேன் மா…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க. அவன் பேசியதில் விஷயத்தைப் புரிந்து கொண்ட ஓவியாவின் முகம் வாடிப் போனது.
“அப்பாவுக்கு என் கல்யாணத்தைப் பார்க்க எத்தனை ஆசை இருந்தது… அதுவும் தேவ் வீட்டிலும் கல்யாணத்துக்கு சம்மதித்ததில் மிகவும் நிம்மதியாய் இருந்தார். ஒரே மகளின் கல்யாணம் என்பது ஒவ்வொரு தகப்பனின் கனவு தானே… அதைக் கூடக் காண முடியாமல் இப்படி போய் விட்டாரே…” யோசிக்கும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.
மௌனமாய் அவள் நீட்டிய ஜூஸ் கிளாஸை வாங்கிக் கொண்டவன், “நீ குடிச்சியா அம்மு…” என்றான்.
“நீங்க குடிங்க, நான் போயி குடிச்சுக்கறேன்…” என்றவளிடம் பாதி கிளாஸை காலி பண்ணிவிட்டு மீதியை அவளிடம் நீட்டியவன், “முதல்ல இதைக் குடி…” என்றான்.
“இல்ல, நீங்க குடிங்க… எனக்கு கிச்சன்ல இருக்கு…”
“ஏன், என் மீதியைக் குடிக்க மாட்டியா…” அவன் கேட்க நிமிர்ந்து அவனை முறைத்தவள், வாங்கி மளமளவென்று குடித்துவிட்டு, “இப்பப் போதுமா…” என்றாள்.
புன்னகைத்த தேவ், “அம்மு… அம்மா பேசினதைக் கேட்ட தான…” என்றதும் வருத்தமாய் குனிந்து கொண்டாள். அவள் கை பற்றி கட்டிலில் அமர்த்தியவன் அருகே அமர்ந்தான்.
“நீ என்ன நினைக்கற அம்மு…”
“அப்பா என் கல்யாணத்தைப் பார்க்க ரொம்ப ஆசைப்பட்டார்… அவர் இறந்து கொஞ்ச நாள்க்குள்ள எப்படின்னு தான்…”
“அம்மு, உனக்கு இப்ப வேண்டாம்னு தோணினா நம்ம கல்யாணத்தைத் தள்ளி வைக்கிறதுல எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை… மனசளவுல நீ என் மனைவியாகி ரொம்ப நாளாச்சு… அதுல எந்த மாற்றமும் இல்லை… கல்யாணம் சம்பிரதாயத்துக்கு வேண்டி தான்… உன் விருப்பம் என்னவோ அப்படியே பண்ணிக்கலாம்…” அவன் சொன்ன வார்த்தைகள் மனதுக்கு இதத்தைக் கொடுக்க அவன் தோளில் கண்ணீருடன் சாய்ந்து கொண்டாள் ஓவியா.
“அப்பா சாதாரணமா சாகலை, யாரோ கொன்னிருக்காங்க… அவர் கொலைக்கு யார் காரணம்னு தெரிஞ்சுக்காம எனக்குத் தூக்கம் வர மாட்டேங்குது… நீங்க மட்டும் என் கூட இந்த நேரத்துல இல்லாமப் போயிருந்தா நான் என்னவாகி இருப்பேன்னு என்னால நினைக்கக் கூட முடியல… அத்தை பெரியவங்க, எல்லாம் தெரிஞ்சவங்க… அவங்க சொல்லுற போலவே எல்லாம் நடக்கட்டும்… நம்ம கல்யாணம் நடந்தா தான் அப்பாவோட ஆத்மா கூட சந்தோஷப்படும்… அத்தை கிட்ட நான் சரின்னு சொன்னேன்னு சொல்லிடுங்க…”
கண்ணீருடன் சொன்னவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு இதமாய் முதுகில் வருடிக் கொடுத்தான் தேவ். அந்த அணைப்பில் காமம் இருக்கவில்லை… இனி இவளுக்கு எல்லாமாய் நானிருக்க வேண்டுமென்ற தவிப்பே இருந்தது.
அப்போது இன்டர்காம் சிணுங்க அவளை விட்டு விலகியவன் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லு மேன்…”
“தெய்வமே, ….சானல்ல இருந்து கால் பண்ணாங்க, உங்க கிட்ட பேசணுமாம், லைன்ல இருக்காங்க…”
“சானல்ல இருந்தா… என்கிட்ட என்ன பேசணுமாம்…” என்றான் நெற்றியை சுளித்துக் கொண்டே.
“புதிய தலைமுறைன்னு ஒரு நிகழ்ச்சிக்கு உங்க இன்டர்வியூ வேணுமாம்… அதைப் பத்திப் பேசணும்னு சொல்லுறாங்க…”
“இண்டர்வியூ எல்லாம் எதுக்கு மேன்… வேண்டாம்னு சொல்லி நீயே கட் பண்ணிடு…”
“அப்படி சொல்லாதீங்க தெய்வமே, இதெல்லாம் பிரபலமாக இன்னும் ஒரு வாய்ப்பு… மறுக்காம அவங்க கிட்டப் பேசி ஒத்துக்கப் பாருங்க…” என்றவன் லைன் கொடுத்தான்.
“ப்ச்… இவன் வேற சொன்னாக் கேக்காம…” உதட்டுக்குள் முனங்கியவன், “ஹலோ…” என்ற குரலைக் கேட்டதும், பதில் ஹலோ சொன்னான்.
“சார்… நீங்க ஒரு சிறந்த ஓவியர்… வளரும் இளம் கலைஞர்களுக்கு உங்க அனுபவத்தைப் பகிர்ந்துகிட்டா நல்ல மோடிவேஷனா இருக்கும்… ப்ளீஸ், ஒத்துக்கங்க சார்…”
“சாரி, நான் யாருக்கும் இதுவரை இண்டர்வியூ எல்லாம் கொடுத்ததில்லை… அந்தளவுக்கு பெருசா வளர்ந்துட்டதாவும் எனக்குத் தோணல… இதெல்லாம் எதுக்கு, வேண்டாமே…” என்றவனின் கையைப் பற்றிய ஓவியா, “ஓகே சொல்லுங்க…” என்றாள் கண்ணை உருட்டி சாடையில்.

Advertisement