Advertisement

“செக்யூரிட்டி அசோசியேஷன்ல அவன் கொடுத்திருந்த முகவரிக்குப் போயி விசாரிச்சோம்… அங்கிருந்து ஒரு வாரம் முன்னாடி வீடு மாறி இருக்கான்… அவனோட போன் நேத்து நைட்டிருந்து சுவிட்ச் ஆப் ஆகிருக்கு… அவன்கிட்ட ஏதோ தப்பு இருக்கு… சிவநேசன் மரணத்துக்கு அவன் தான் காரணமோன்னு டவுட் அதிகமாகி இருக்கு… எனிஹவ் விசாரணை போயிட்டு இருக்கு…”
“மாமா ரொம்ப நல்ல மனுஷன் சார்… யாருக்கும் எந்த துரோகமும் நினைக்காதவர்… அவருக்கு இப்படி ஒரு மரணம் எதிர்பார்க்கவே இல்லை…” கண் கலங்கியது தேவ்க்கு.
“ம்ம்… சந்தர்ப்ப சூழ்நிலை நல்லவங்களை தான் அதிகமா தண்டிக்கும்னு சொல்லுவாங்க… ஓகே, ஓவியாகிட்ட கொஞ்சம் விவரம் கேக்கணும்… கூப்பிடுங்க, அவங்ககிட்ட பேசிட்டுப் போயிடறோம்…”
“ம்ம்… ரொம்ப அழுதுட்டே இருக்கா… கூப்பிடறேன்…” என்றவன் அவளது அறைக்கு சென்று அழைத்து வந்தான்.
கண்ணும் முகமும் சிவந்து வீங்கி வாடிய மலர் போல் நின்றவள் முதலில் அவரது கேள்விகளுக்கு கலங்கினாலும், பிறகு அவர் கேள்விகளுக்கு பதில் சொன்னாள். சிவநேசனின் ஆஸ்த்மா தொல்லை பற்றியும், அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளையும் கேட்டறிந்தவர், செக்யூரிட்டி ராஜனைப் பற்றிக் கேட்டார்.
“அவனைப் பத்தி அதிகமா தெரியாது சார்… இதுக்கு முன்னாடி பெரியசாமின்னு ஒருத்தர் தான் ஸ்கூல் ஆரம்பிச்சதுல இருந்து இருந்தார்… அவருக்கு ஜான்டிஸ் பிராப்ளம்னால வேலைக்கு வர முடியாமப் போயிருச்சு… செக்யூரிட்டி அசோசியேஷன் தான் ராஜனை அனுப்புச்சு… ராஜன் வந்து ரெண்டு மாசம் தான் ஆச்சு…”
“அவனோட குடும்பத்தைப் பத்தி எதுவும் தெரியுமா…”
“அவனுக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்கன்னு சொல்லி இருந்தான்… அவங்களுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போறதால ஊருக்கு அனுப்பிட்டு இங்கே தனியா தான் இருக்கிறதா சொல்லி இருந்தான் சார்…”
“ஓ…” என்றவர் யோசனையுடன் கேட்டுக் கொண்டார்.
“அப்பா ஒரு ஈ, எறும்புக்கு கூடத் துரோகம் நினைக்காதவர்… அவரைப் போயி யாரோ கொலை பண்ணிருப்பாங்கன்னு என்னால யோசிக்கக் கூட முடியல சார்… அவரோட உடம்பை போஸ்ட்மார்ட்டம் எல்லாம் பண்ணி, அவருக்கு இப்படி ஒரு சாவு வந்திருக்க வேண்டாம்…” என மீண்டும் ஓவியா அழத் தொடங்க, அவளை தோளோடு அணைத்து சமாதானப்படுத்தினான் தேவ்.
“சரிதான் மேடம்… ஆனாலும் அவர் மரணத்தில் எங்களுக்கு அழுத்தமான சந்தேகம் இருக்கு… ஒருவேளை, உங்க அப்பா மரணம் இயற்கையா இல்லேன்னா அதுக்குக் காரணமா இருந்தவங்களை தண்டிக்க வேண்டாமா…” என்றதும் கண்ணில் நீருடன் நிமிர்ந்தாள்.
“கண்டிப்பா சார், என் அப்பாவைக் கொன்னவன் யாரா இருந்தாலும் அவனைக் கண்டு பிடிச்சு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்…” என்றவளின் குரலில் ஒரு உறுதி தெரிந்தது. இன்ஸ்பெக்டர் அவளிடம் மேலும் சில விவரங்களைக் கேட்டுக் கொண்டு கிளம்பினார்.
டான்ஸ் ஸ்கூல் சிவநேசனின் மரணத்தால் பூட்டிக் கிடந்தது. மாணவிகளின் பெற்றோர் சிலர் வீட்டுக்கு வந்து ஓவியாவை துக்கம் விசாரித்து சென்றனர். போலீஸ் விசாரணை ராஜனைத் தேடி நீங்கியது. அவனது அலைபேசி இறுதியாய் அணைந்து போன இடத்தை டிராக் செய்து அந்த ஏரியாவுக்கு சென்று விசாரிக்கத் தொடங்கினர்.
அலைபேசியின் கால் ஹிஸ்டரியை சப் இன்ஸ்பெக்டர் சத்யா, இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கவும் மேலோட்டமாய் ஆராய்ந்தவர், “சத்யா… இதுல எந்த நம்பருக்கு ரெகுலரா பேசி இருக்கான்னு நோட் பண்ணுங்க… அப்புறம் சுவிட்ச் ஆப் ஆகறதுக்கு முன்னாடி எந்த நம்பர்ல இருந்து கால் வந்திருக்குன்னு பாருங்க…” என்றார்.
“சார்… ஒரு நம்பருக்கு தினமும் ரொம்ப நேரம் பேசி இருக்கான்… போன் சுவிட்ச் ஆப் ஆகறதுக்கு முன்னாடி புதுசா ஏதோ நம்பர்ல இருந்து தான் கால் வந்திருக்கு…” என்றார் சத்யா.
“ம்ம்… அந்த நம்பர்ஸ் யாரோடதுன்னு பாருங்க…”
“சரி சார், ஒரு சஜசன் சார்… இந்த ராஜன் ஒரு வாரம் முன்னாடி வீடு மாத்தி இருந்தா கண்டிப்பா வண்டி ஏதாச்சும் கூப்ப்பிட்டிருப்பான்… ஒருவாரம் முன்னாடி உள்ள கால் லிஸ்ட் செக் பண்ணா, ஒருவேளை டிரைவர் நம்பர் கிடைக்க வாய்ப்பு இருக்கு சார்…” சத்யா சொல்ல மலர்ந்தார்.
“குட் சஜசன், சத்யா… டிரை பண்ணுங்க… எனக்கு கோர்ட்ல வொர்க் இருக்கு… முடிச்சிட்டு வந்திடறேன்… நீங்க இந்த டீடைல்ஸ் எல்லாம் கலக்ட் பண்ணி வைங்க…”
“ஷ்யூர் சார்…” அவர் கிளம்ப விறைப்பாய் ஒரு சல்யூட்டைக் கொடுத்துவிட்டு இயல்பானான் சத்யா.
போலீஸ் அவர்கள் தரப்பில் விசாரணையை முடுக்கிவிட அழுது புலம்பிக் கொண்டிருந்த ஓவியாவைத் தேற்ற ஆருத்ரா போராடிக் கொண்டிருந்தார்.
“அப்பா பாவம்மா, இறுதி நிமிஷத்துல மூச்சு கிடைக்காம எவ்ளோ துடிச்சிருப்பார்… தேவ் வீட்டுக்கு வந்தா ரொம்ப சந்தோஷப்படுவார்… நிற்காம எதையாச்சும் புதுசு புதுசா சமைச்சு எடுத்துட்டு ஓடிவருவார்… என்னோட விருப்பம் எதுக்குமே இதுவரை மறுத்ததே இல்லை… தனக்குன்னு எந்த விருப்பமும் வச்சுகிட்டதுமில்லை… என் மனசு என்ன நினைக்குது, எனக்கு என்ன தேவைன்னு எனக்குத் தெரியற முன்னாடி அப்பா புரிஞ்சுகிட்டு அதை செய்து முடிச்சிருவார்… இனி அவரைப் பார்க்க முடியாதேம்மா… கல்யாணம் முடிஞ்சு நான் சந்தோஷமா வாழணும்னு சொல்லிட்டே இருப்பாரே… அந்தக் கல்யாணத்தைப் பார்க்க அப்பா இல்லியே.. எனக்கு சந்தோஷம் வந்தா பகிரவும், துக்கம் வந்தா அழவும் அப்பா மட்டும் தானே இருந்தார்… இந்த வீட்டுல எப்பவும் நிறைஞ்சிருப்பார்… அவரில்லாத வீடு வெறுமையா இருக்கு…”
புலம்பி அழுது கொண்டே இருந்தாள் ஓவியா.
“இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி ஓவிம்மா… இங்க இருந்தா உனக்கு அப்பா நினைவாவே இருக்கும்… பேசாம தேவ் வீட்டுக்குப் போயிடலாம்…” ஆருத்ரா சொல்லவும் மறுத்து தலை ஆட்டினாள்.
“இல்லம்மா, காரியம் முடியுற வரைக்கும் இங்கயே இருக்கலாம்… உங்களை வேற இங்க கூட்டி வந்து கஷ்டப்படுத்தறேன்… அங்கே மாமாவும், சஞ்சயும் நீங்க இல்லாம ரொம்ப சிரமப்படுவாங்க…”
“அதெல்லாம் பரவால்லை… நீ அழாம இருந்தாப் போதும்…”
“ம்ம்…” என்றவள் அமைதியாக, “நான் சமையலை முடிச்சிட்டு வரேன்…” என்றவர் அடுக்களைக்கு சென்றார்.
“அம்மு…” தந்தையின் போட்டோவை வைத்துக் கொண்டு கண்ணில் நீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்தவள் தேவின் அழைப்பில் நிமிர்ந்தாள்.
இரண்டு காபிக் கோப்பையுடன் உள்ளே வந்தவன், “இந்தா, இதைக் குடி… அம்மா கொடுக்க சொன்னாங்க…” என்று ஒரு கப்பை நீட்ட வாங்கிக் கொண்டாள். ஓவியாவின் மனநிலையை சற்று மாற்றவே மகனை அனுப்பி வைத்திருந்தார் ஆருத்ரா.
அவள் அருகே அமர்ந்தவன் அமைதியாய் எதுவும் பேசாமல் காபியைக் குடிக்க அவளும் குடித்து முடித்ததும் காலிக் கப்பை வாங்கிக் கொண்டான்.
“தேவ்… உங்களுக்கு நிறைய வொர்க் இருக்கும்… நீங்க வேணும்னா முடிச்சிட்டு வாங்க…” என்றதும் முறைத்தான்.
“என்ன அம்மு பேசற… இப்ப என் வொர்க் முடிக்கிறது தான் முக்கியமா… பார்த்துக்கலாம்…”
“தேவ், அப்பா…” என மீண்டும் கலங்கத் தொடங்கியவளை இதமாய் தோளில் சாய்த்துக் கொண்டவன், “அதையே நினைச்சிட்டு இருக்காம கொஞ்சம் தூங்கு மா…” என்று  தன் மடியில் சாய்த்துக் கொண்டான்.
குழந்தை போல் அவன் வயிற்றில் முகத்தை ஒட்ட வைத்துக் கிடந்தவளின் கண்ணீர் அவன் சட்டையை நனைக்க குலுங்கிய முதுகில் இதமாய் தட்டிக் கொடுத்தான். அப்படியே கிடந்தவள் மெல்ல உறங்கத் தொடங்க நன்றாய் உறங்கியபின்பு மெல்ல எழுந்தவன் அவள் தலைக்கு ஒரு தலையணையை வைத்துவிட்டு அன்னையிடம் வந்தான்.
“என்னப்பா, ஓவி என்ன பண்ணுறா….”
“தூங்கிட்டா மா… பாவம், அவளால தாங்கிக்கவே முடியல…” வருத்தத்துடன் பெருமூச்சு விட்டான் தேவ்.
“நீ தான் இந்தப் பெரிய துக்கத்துல இருந்து அவளை மீட்டுக் கொண்டு வரணும் தேவ்… பார்த்துக்க…”
“ம்ம்… சரிம்மா… மூணாவது நாளே காரியம் வச்சிடலாம்… இங்க இருந்தா அழுதுட்டே இருப்பா… நம்ம வீட்டுக்கு அவளை அழைச்சிட்டுப் போயிடலாம்…”
“ம்ம்… அப்படியே செய்யலாம்…” என்றார் ஆருத்ரா. நேரம் நகர, மாலையில் வந்த இன்ஸ்பெக்டரின் அழைப்பு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு வந்தது.
அன்னையும் உன்னில்
உண்டென்று உன் அன்பின்
வடிவில் கண்டிருந்தேன்…
நீரின்றி இயங்கா உலகம் போல்
நீயில்லா என் உலகம் ஆயிடுமோ
நீயிருக்கும் வரை
நீரறியா என் கண்கள் இனி
நீயின்றி வாழ்ந்திடுமா அப்பா…

Advertisement