Advertisement

அத்தியாயம் – 22
காலையில் காதை வந்தடைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் கண்ணை சுருக்கினான் பிரம்மா.
“சார், என்ன சொல்லறீங்க…”
“ஆமாம், மிஸ்டர் பிரம்மா… நீங்க உடனே அவங்களை அழைச்சிட்டு சென்னை வாங்க… நேரடியா இந்த விஷயத்தை சொன்னா அவங்க தாங்கிக்க மாட்டாங்கன்னு தான் உங்க கிட்ட சொல்லறோம்…”
“ம்ம்… சரி சார், நாங்க சீக்கிரம் வந்திடறோம்…” என்று அழைப்பைத் துண்டித்த தேவின் இதயம் கேட்ட செய்தியில் உச்ச டெசிபலில் துடித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே… இதை எப்படி நான் ஓவிகிட்ட சொல்லுவேன்… நல்லா இருந்தவருக்கு சட்டுன்னு எப்படி ஆகிருக்கும்… ஒரே குழப்பமா இருக்கே…” யோசித்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.
தம்பி சஞ்சய் வெளியே கிளம்பிக் கொண்டிருக்க, அவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த ஆருத்ரா மூத்த மகனைக் கண்டதும் புன்னகைத்தார்.
“குட் மார்னிங் அண்ணா, டவுனுக்குப் போறேன்… வரும்போது உங்களுக்கு எதுவும் வாங்கிட்டு வரணுமா…”
கேட்ட தம்பிக்கு பதில் சொல்லாமல் “ஓவி எங்கேம்மா…” என்றவனின் முகத்தை கவனித்தவர், “என்னடா… முகமே ஒரு மாதிரி இருக்கு, அவளை எதுக்குத் தேடற…” என்றார்.
“அ..அதுவந்து… ஒரு பேட் நியூஸ் மா… ஓவி அப்பா…”
“என்னப்பா சொல்லற, அவருக்கு என்னாச்சு…” ஆருத்ரா பதட்டமாய் கேட்க, ராம் கிருஷ்ணாவுக்கு காபி கொடுத்து திரும்பிய ஓவியா அதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.
“மா…மாமா இறந்துட்டாராம் மா…” தயக்கமாய் தேவ் சொல்ல அவள் கையில் இருந்த டிரே சத்தமாய் கீழே விழுந்தது.
தேவ் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து நின்றவர்கள் பாத்திரம் விழுந்த சத்தத்தில் திரும்ப, வேகமாய் அவனிடம் ஓடி வந்த ஓவியா, “தே… தேவ்… நீ என்ன சொல்லற, ஐயோ.. அப்பா… அப்பாக்கு என்னாச்சு…” கதறத் தொடங்கினாள்.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கி நின்றவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், “இல்ல தேவ்… அப்பாக்கு எதுவும் ஆகிருக்காது… நம்ம கல்யாணம் முடிவான சந்தோஷத்துல நல்லா இருந்தாரே, அப்புறம் எப்படி… ஐயோ, அப்பா… என்னை விட்டுப் போயிட்டீங்களாப்பா…” என அழத் தொடங்கியவளை ஆருத்ரா அணைத்துக் கொண்டார்.
“அம்மாடி, தைரியமா இரும்மா…” எனத் தட்டிக் கொடுத்தவர் மகனிடம், “தேவ், என்னாச்சு… நல்லாதானே இருந்தார்…”
“ம்ம்… ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம்னு போலீஸ் சொல்லுறாங்க…”
“போலீசா… அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது…”
“அம்மா, இப்ப விவரமா பேசிட்டு இருக்க நேரமில்லை… நாங்க உடனே கிளம்பியாகணும்…” என்றான் தேவ்.
“இந்த நிலமைல எப்படிப்பா இவளை அனுப்புறது… சரி, நானும் உங்களோட வரேன்… சஞ்சய், நீ இங்கிருந்து அப்பாவைப் பார்த்துப்ப தானே…”
“ம்ம், நான் பார்த்துக்கறேன் மா… நீங்க மூணு பேரும் விசாகப்பட்டினம் போயி பிளைட்ல சென்னை போயிடுங்க…” அவன் சொல்ல தேவ் அடுத்த பிளைட்டில் மூவருக்கும் டிக்கட் புக் பண்ண கிளம்பினர். சஞ்சய், தேவ் காரில் அவர்களை விசாகப்பட்டினம் கொண்டு போய் இறக்கி விட்டான். தந்தையை நினைத்து அழுது கொண்டே இருந்த ஓவியாவைத் தேற்றும் வழியறியாமல் திகைத்தனர்.
தேவ்க்கு ராகவ், ராதிகா, இன்ஸ்பெக்டர் என்று போனில் மாறி மாறி அழைப்புகள் வந்து கொண்டிருக்க, அன்னை ஓவியாவுடன் இருந்ததால் சமாளித்துக் கொண்டான். ஒருவழியாய் மூவரும் சென்னைக்குப் பயணமாயினர்.
காரில் செல்லும் வழியில் ராகவ் அழைத்தான்.
“என்னடா, மாமா எதுக்கு ராத்திரி நேரத்துல டான்ஸ் ஸ்கூலுக்குப் போனார்… காலைல பேப்பர் போடற பையன் இவர் வாசல்ல செத்துக் கிடக்கறதைப் பார்த்துட்டு போலீஸ்ல விஷயம் சொல்லிருக்கான்… இவர் எதுக்கு அங்க போனார்… செக்யூரிட்டி எங்கே…” மனதில் உள்ள சந்தேகங்களை வரிசையாய் அடுக்கினான் தேவ்.
“முழுசா எல்லா விவரமும் தெரியல சார், அவர் மரணத்துல போலீசுக்கு ஏதோ சந்தேகம் இருக்குன்னு மட்டும் புரியுது… செக்யூரிட்டியைக் காணோம்… அவனைப் பத்தி விசாரிச்சுட்டு இருக்காங்க… பாடியை ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்க… போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு தான் தர முடியும்னு சொல்லுறாங்க… எப்படியும் மதியம் ஆகிடும்…” ராகவ் சொல்ல அதிர்ந்தான் தேவ்.
“என்னது போஸ்ட்மார்ட்டமா…” தேவ் குரலைக் கேட்ட ஓவியாவின் அழுகை இன்னும் அதிகமானது.
ஒருவழியாய் இவர்கள் சென்னையை அடைந்து வீட்டுக்கு செல்ல வாசலில் பந்தலிட்டு கூட்டம் கூடியிருந்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் சிவநேசனின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க கதறி அழுத ஓவியாவை ராதிகாவும், ஆருத்ராவும் ஆறுதலாய் பிடித்துக் கொண்டனர்.
அமிர்தாவும் பெற்றோருடன் ஒரு ஓரத்தில் கண்ணீருடன் அமர்ந்திருக்க, ராகவ் அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான். ஒருவழியாய் அவரது இறுதிக் காரியங்கள் முடிந்து வீடெல்லாம் கழுவி விட்டனர்.
அமைதியாய் சுடர்விட்ட தீபம் முன் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த தந்தையைக் கண்ட ஓவியாவின் கண்கள் நிரந்தரமாய் குளம் கட்டி நின்றன. அவள் ராதிகாவைக் கட்டிக் கொண்டு அழ சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள். காலையிலிருந்து சாப்பிடாமல் சோர்ந்து படுத்திருந்தவளை எப்படியோ அமர்த்தி சாப்பிடக் கொடுக்க அதைக் கண்டதும் மீண்டும் ஓவியாவின் கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.
“எனக்கு என்ன வேணும்னு என்னை விட உங்களுக்கு தானே நல்லாத் தெரியும் பா… அம்மா இல்லாத குறை தெரியாம அருமையாப் பார்த்துகிட்டிங்களே… எனக்குப் பிடிச்சதெல்லாம் பார்த்துப் பார்த்து சமைச்சு தருவிங்களே… இனி, நீங்க இல்லையேப்பா… என்னைத் தவிக்க விட்டுப் போயிட்டீங்களேப்பா… இனி நான் என்ன பண்ணுவேன்…” தேம்பலுடன் கண்ணீர் விட்டுக் கதறியவளை ராதிகா அணைத்துக் கொள்ள மற்றவர் கண்களும் கலங்கின.
“ஓவி… என்னமா இது, இப்படியே அழுதுட்டு இருந்தா அப்பாவோட ஆத்மா துடிச்சுப் போகும்… நீ தைரியமா இருந்தா தானே அவருக்கு சாந்தி கிடைக்கும்… அழாதம்மா… நாங்கல்லாம் இருக்கோம்ல… அழக் கூடாது…” சொல்லியபடி அவள் கண்ணை ஆருத்ரா துடைத்துவிட்டார்.
ராதிகாவிடம், “மாசமா இருக்கிற பொண்ணு இவ்ளோ நேரம் சாப்பிடாம இருக்கக் கூடாது… நீ வீட்டுக்குக் கிளம்பு மா… சாப்பிட்டு ரெஸ்ட் எடு… இவளை நான் பார்த்துக்கறேன்…” என்று அவளைக் கணவனுடன் வீட்டுக்கு அனுப்பினார்.
தோழியை விட்டு செல்ல மனமில்லா விட்டாலும் மசக்கையின் அவஸ்தையில் அங்கே தங்க முடியாமல் ராதிகா கிளம்பினாள். அடுத்துள்ள வீட்டினரும் கிளம்ப இவர்கள் மட்டுமே அங்கே இருந்தனர்.
ஓவியாவை மிரட்டி சாப்பிட வைத்த ஆருத்ரா கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவளின் அருகில் அமர்ந்து ஆறுதலாய் தலையை வருடிக் கொடுக்க, “அம்மா… எனக்கு இவ்ளோ நாள் அம்மாவும், அப்பாவுமா இருந்தாரே… இப்ப நீங்க எனக்கு அம்மாவா கிடைச்சதும் அவர் போயிட்டாரே…” என்று தேம்ப சற்றுத் தள்ளி நின்று ராகவுடன் பேசிக் கொண்டிருந்த தேவ் கிருஷ்ணாவின் கண்களும் கலங்கின.
“ராகவ், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எப்ப கிடைக்கும்னு சொன்னாங்களா…”
“நாளைக்கு கிடைச்சிரும் பாஸ்… போலீஸ் சொல்லுறமாதிரி இதுல ஏதோ ஒரு விவகாரம் இருக்குன்னு தோணுது… அந்த செக்யூரிட்டி எங்க போனான்னு தெரியல… அசோசியேஷன்ல கேட்டு முகவரி வாங்கியிருக்கார்… நாளைக்கு அவன் வீட்டு முகவரிக்குப் போய் விசாரிக்கப் போறோம்னு இன்ஸ்பெக்டர் சொன்னார்… எப்பவும் சாயந்திரமே ஸ்கூலுக்குப் போயி செக் பண்ணி பூட்டிட்டு வர்ற அங்கிள் ராத்திரி அங்க என்ன பண்ணிட்டு இருந்தார்னு தெரியல…”
“ம்ம்… பாவம் ஓவி, மாமாவோட இழப்பை எப்படித் தாங்கிக்கப் போறாளோ… சரி, நீ வீட்டுக்குப் போ… எதுவும் வேணும்னா கால் பண்ணறேன்…”
“ம்ம்… இனி நீங்க தான் அவங்களை எல்லாமா இருந்து பார்த்துக்கணும்… அங்கிள் அந்த நம்பிக்கைல தான் கண்ணை மூடிருப்பார்… சரி, அம்மாட்ட சொல்லிடுங்க, கிளம்பறேன்…” என்றவன், வண்டியில் கிளம்பினான்.
அழுதழுது ஒருவித மயக்கத்தில் ஓவியா உறங்கத் தொடங்க ஆருத்ரா அவள் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டார். பிரம்மாவுக்கும் ஓவியாவுக்கும் கல்யாணம் நிச்சயமானதை சிவநேசன் அருகில் இருப்பவரிடம் சொல்லியிருந்ததால் அவர்களும் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை இவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
காலையில் குளித்து சோக சித்திரமாய் அமர்ந்திருந்தவளை காண இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்.
“வாங்க சார், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சா…”
“ம்ம்… நான் நினைச்ச போலவே அவர் மரணத்தில் ஏதோ சிக்கல் இருக்கு… மூச்சு முட்டி சுவாசம் கிடைக்காம இறுதி நேரத்தில் மைல்டு அட்டாக் வந்திருக்கு…”
“ஓ… மாமா ஒரு ஆஸ்த்துமா பேஷன்ட், அதனால கூட மூச்சுவிட கஷ்டப்பட்டிருக்கலாமே சார்…”
“கரக்ட் தான்… இது அவரோட வீட்டுல நடந்திருந்தா அப்படி நினைக்க வாய்ப்பு இருக்கு… ஆனா, சம்பவம் நடந்தது டான்ஸ் ஸ்கூல்ல… எப்பவும் சாயந்திரமே பூட்டிட்டு கிளம்பறவர் ராத்திரி அங்க எதுக்குப் போனார்… அதும் மூச்சுத் திணறல் இருக்கும்போது அவர் போக வாய்ப்பு கம்மிதான்… இது ஆஸ்த்மாவால வந்த மூச்சுத் திணறல் கிடையாது… யாரோ அவர் முகத்தை அமுத்தி மூச்சு முட்ட வச்சிருக்காங்க… என் சந்தேகத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு, செக்யூரிட்டி ராஜன்…”
“ம்ம்… அவனைப் பத்தி எதுவும் விவரம் தெரிஞ்சுதா சார்…”

Advertisement