Advertisement

“அத்தை… இந்த நகை எல்லாத்தையும் விட உங்க அன்பு தான் ரொம்பப் பெருசு… அதை எனக்குக் கொடுத்திருக்கீங்க… எனக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் வேணும்… அனுமதி கொடுப்பீங்களா…” கண்ணீருடன் ஏறிட்டவளைப் புரியாமல் பார்த்தவர், “என்னமா, என்ன வேணும்…” என்றார்.
“தேவ் அம்மா எனக்கும் அம்மா தான், உங்களை அம்மான்னு கூப்பிட அனுமதிப்பீங்களா அத்தை…” அவள் மனதில் பூரணமாகாமல் தொலைந்திருந்த அன்னையின் நேசத்தை அவரில் தேடிக் கொண்டிருந்தாள் ஓவியா.
“ஹேய், என்ன கேள்வி மா இது… என் பிள்ளைக்கு மனைவியா வந்தா மருமகளா தான் இருக்கனுமா என்ன… நீயும் எனக்கு மகள் போலத்தான்… அம்மான்னே கூப்பிடு…” என்றதும் கேவலுடன் அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
எந்தப் பெண்ணின் மனதும் கணவனின் அன்னையில் தனது அன்னையையே முதலில் தேடுகிறது. அது கிடைக்காமல் போகும் நிலையில் தான் விலகத் தொடங்குகிறது…
“அம்மா…” அடி மனதிலிருந்து வந்த அழைப்பு அவள் அன்னையின் மீதிருந்த அன்பை சொல்ல, நெகிழ்வுடன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஆருத்ரா.
அவர்களுக்குப் பின்னில் நின்று இருவரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவ் கண்களும் அந்தப் பாசப் பிணைப்பில் நெகிழ்ந்தது.
ராம் கிருஷ்ணாவும் மகனின் வரவில் சற்றுத் தெளிந்து உற்சாகமாய் இருந்தார். சஞ்சய் வழக்கம் போல் ரைஸ் மில் வேலைகளைப் பார்த்துக் கொண்டு நேரம் கிடைக்கையில் அண்ணனுடன் அரட்டை அடிப்பான். இத்தனை நாள் உறங்கிக் கிடந்த வீடு இப்போது தான் உணர்ந்து கலகலப்புக்கு மாறி இருந்தது.
சென்னை சென்ற சிவநேசன் அடுத்த நாளே இருவரின் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டி பொருத்தம் பார்க்க, பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருப்பதாகக் கூறியவர் கல்யாணத்தை இந்த வைகாசியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்… இல்லாவிட்டால் இரண்டு வருடத்திற்குப் பிறகே ஓவியாவுக்கு கல்யாண யோகம் வருகிறது என்று விட, வைகாசியிலேயே கல்யாணத்தை முடிவு செய்தனர்.
அழகாய் இரண்டு நாட்கள் நகர ஓவியாவும் அந்த வீட்டில் ஒருத்தியாய் அழகாய் பொருந்தி இருந்தாள். மகன்களை விட மகளை அதிகமாய் தேடத் தொடங்கியது அன்னை மனது. மகனின் தேர்வு கல்யாண விஷயத்திலும் தப்பாகவில்லை என்று கணவரிடம் சொல்லி சந்தோஷப்பட, “ஆமா ருத்ரா…” அவரும் ஆமோதிப்பாய் தலையாட்டினார்.
“ஓவி… தேவ்க்கு வேலை இருக்குன்னு சொன்னான்… பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன்… கொடுத்துடறியா…” இரவு உணவு முடிந்து ராதிகாவிடம் போன் பேசிவிட்டு வந்த ஓவியாவிடம் ஆருத்ரா சொல்ல வாங்கிக் கொண்டாள்.
“ம்ம்… எந்தப் பத்திரிகைக்கோ ஓவியம் வரைஞ்சு முடிச்சு அனுப்பனும்னு சொல்லிட்டு இருந்தார்…”
“ஆமாம்மா, இதைக் கொடுத்துட்டு நீ போயித் தூங்கு…” என்றவர் கணவனுக்கான பாலை எடுத்துக் கொண்டு அவரது அறைக்கு செல்ல ஓவியா தேவின் அறைக்கு வந்தாள்.
வரைபலகையில் மும்முரமாய் குனிந்திருந்தவன் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்தான். ஓவியாவைக் கண்டதும் சோர்ந்திருந்த கண்கள் உடனடி பிரகாசத்துக்கு செல்ல இதழ்கள் புன்னகையை சிந்தின.
“வா ஓவி… இது நல்லாருக்கா பாரு…” ஒரு ஓவியத்தைக் காட்ட, கண்டவளின் கண்கள் நாணத்தில் தாழ்ந்தது.
“ச்சீ… ரொம்ப கவர்ச்சியா வரைஞ்சிருக்கீங்க…”
“கதைக்கு அப்படிப்பட்ட ஓவியம் தானே கேட்டாங்க… கவர்ச்சியைப் பார்க்காதே, நல்லாருக்கான்னு சொல்லு…”
“ஓவியம்லாம் நல்லாத்தான் இருக்கு… என்ன பார்த்ததும் பத்திக்கிற அளவுக்கு அப்பட்டமா இருக்கு…” என்றவளின் விழிகள் மீண்டும் அந்த ஓவியத்தை நோக்க, வீரமங்கை ஒருத்தி சின்ன இடையும், மயங்கிய விழிகளுமாய் நிலத்தில் கிடக்க, அவளது ஒரு கை கூர்த்த கத்தியைப் பற்றியிருக்க, மறுகையோ தன்மேல் படர்ந்திருந்த வீரன் ஒருவனின் கழுத்தை வளைத்துப் பிடித்திருந்தது. அவ்வீரனின் இதழ்கள் அவள் இதழை நெருங்கியிருக்க, அவன் கையிலும் குறுவாள் ஒன்று பளீரிட்டது. வரலாற்றுப் புதினத்திற்காய் வரையப்பட்ட அப்பெண்ணின் உடைகளில் கஞ்சத்தனம் மிகுந்திருக்க உடலின் நெளிவு, சுளிவுகள் மேலே மறைத்திருந்த மார்புக் கச்சைக்குக் கீழே அப்பட்டமாய் கண்ணை அறைந்தன. பார்க்கும் யாரையும் நாணம் கொள்ளச் செய்யும் கவர்ச்சியை அள்ளித் தெறித்திருந்தான் ஓவியத்தில்.
“சரி, சீக்கிரம் வரைஞ்சு முடிச்சிட்டு தூங்குங்க… நான் போறேன்…” அவள் நழுவினாள்.
“ப்ச்… அதுக்குள்ள என் ஓவியத்துக்கு என்ன அவசரமாம்… கொஞ்ச நேரம் இரேன்…” என்றவனின் கைகள் தூரிகையை விடுத்து பெண்ணவளின் கையைப் பற்றியிருந்தது.
“ம்ஹூம்… சூழ்நிலை சரியா இல்லை, நான் போறேன்…” என்றவள் அவன் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல, அவளைத் தன்னிடம் இழுத்தான்.
“ரொம்ப தான் பிகு பண்ணாம மாமனுக்கு அந்த காப்பியை கப்புல ஊத்திக் கொடு…” சொன்னவனின் இதழ்கள் அவள் பின் கழுத்தில் கிசுகிசுக்க தாடியின் தீண்டலில் சிலிர்த்த அவள் உடல் ரோமங்கள் குத்திட்டு நிற்க நெளிந்தாள்.
“சரி, முதல்ல என்னை விடுங்க…” என்றதும், அவளை விடுவிக்க அவள் கதவை நோக்கி செல்வதை உணர்ந்தவன் சட்டென்று எழுந்து கதவில் சாய்ந்து நிற்க திகைத்தாள்.
“என்ன தேவ், விளையாடிட்டு… நான் இருந்தா நீங்க வொர்க் முடிக்க மாட்டிங்க… அதை முடிங்க…” சிணுங்கினாள்.
“அதெல்லாம் முடிச்சுக்கலாம்… முதல்ல நீ கிட்ட வா…”
“ம்ஹூம், மாட்டேன்… நீ ரொம்ப மோசம்…”
“நீயா வந்தா கொஞ்சம் தான் மோசமா நடந்துப்பேன்… நானா வந்தா என்னாகும் தெரியுமா…” புருவம் உயர்த்திக் கேட்டபடி அவளை நெருங்க திகிலாய் நோக்கியவள், “வேணாம் தேவ்… எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகுதான்… சொன்னாக் கேளு…” சொல்லிக் கொண்டே பின்னில் நகர,
“கல்யாணத்துக்குப் பின்னாடி உன் பர்மிஷன் யாருக்கு வேணும்… எனக்கு இப்ப இந்த நிமிஷம் நீ வேணும்…” சொல்லிக் கொண்டே சுவரில் தட்டி நின்றவளின் முகம் நோக்கி செல்ல, “வேணாம் தேவ், சொன்னாக் கேளு…” வார்த்தையில் மறுத்தாலும் சிறு எதிர்பார்ப்புடன் கண்ணை இறுக்கமாய் மூடிக் கொண்டவளைக் கண்டு புன்னகைத்தான்.
நிமிடங்கள் ஆகியும் அவன் ஸ்பரிசம் உணராததால் ஓவியா மெல்ல கண்ணைத் திறக்க, அவள் இரு பக்கமும் சுவரில் கை பதித்து அவளையே பார்த்துக் கொண்டு நின்றவன் சட்டென்று அவள் நெற்றியில் முத்தமிட்டு, கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட உடலெங்கும் பாய்ந்த ரத்தத்தின் புது வேகத்தில் தவித்துப் போய் கண் மூடி நின்றாள் ஓவியா.
படபடத்த இதயமும், பரபரத்த தேகமுமாய் புதுவிதக் கிளர்ச்சியில் சிலையாய் நின்றவளை விடுவித்தவன், “இப்ப நீ போகலாம் ஓவியமே…” என்று அனுமதி கொடுக்க, தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள் ஓவியா.
அவளது சிவந்த முகத்தையும், படபடக்கும் விழிகளையும் ரசனையுடன் நோக்கிக் கொண்டே புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்தவன் மீண்டும் தனது ஓவியத்தில் பார்வையைப் பதிக்க, அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன ஓவியமே, தூங்கப் போகலையா…” என்று கேட்க, “ப்ச்…” என்றவள் அவனுக்குத் தொந்தரவு இல்லாமல் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.
அவனது கவனம் ஓவியத்தில் பதிய, கைகள் வேகமாய் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தது. பார்த்தபடி இருந்தவள் அப்படியே சரிந்து மெல்ல உறங்கத் தொடங்கினாள்.
அதை கவனித்தவன் அவளை சரியாய் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான். நடுவில் பபிள் கம்முக்கு பதில் காப்பியை சுவை பார்த்தன இதழ்கள். விடியலுக்கு சிறிது நேரம் முன்பு உறக்கம் கலைந்து எழுந்த ஓவியா எதிரில் இருந்த சோபாவில் காலைக் குறுக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த பிரம்மாவைக் கண்டதும் திகைத்தாள்.
“அச்சோ, ராத்திரி இங்கயே தூங்கிட்டேன் போலருக்கே… அச்சோ, அவ்ளோ பெரிய காலை மடக்க முடியாம மடக்கி கஷ்டப்பட்டு தூங்கிட்டு இருக்காரே…” எனத் தன்னைத் தானே கடிந்து கொண்டு அவனிடம் சென்றாள்.
“கண்ணைத் திறந்திருக்கும்போது தான் வீராவேசம் எல்லாம்… பச்சப்புள்ள மாதிரி காலை மடக்கி தூங்குறதைப் பாரு…”
மனதுக்குள் கொஞ்சிக் கொண்டே அவனை எழுப்பினாள்.
“தேவ்… எழுந்து கட்டில்ல படுங்க…” அவள் சொல்லியும் அசையாமல் அப்படியே படுத்திருக்க, “பாவம்… நல்ல தூக்கம் போலருக்கு…” என்றவள் ஒரு ஸ்டூலை எடுத்து அவன் தொங்கிய காலை அதன் மீது வைத்துவிட்டு சென்றாள்.
தனது அறைக்கு சென்று படுத்தவளுக்கு உறக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்ய சூரியனுக்காய் காத்திருந்தவளுக்கு அதிர்ச்சிச் செய்தியை சுமந்து கொண்டு விடியல் வந்தது.
மனதின் மயக்கமெல்லாம்
மங்கையவள் விழிகளில்…
மகுடிக்கு மயங்கிய சர்ப்பமென
மயங்கியே தொலைகிறது…
ஓவியனின் வித்தையெல்லாம்
ஓவியப்பாவை முன்னே
ஓயாமல் வீறு கொண்டு
ஓங்காரம் செய்கிறது…

Advertisement