Advertisement

அத்தியாயம் – 21
இரவு வெகுநேரம் வரை பெரியவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் அதைக் கண்டும் காணாமலும், கேட்டும் கேட்காமலும் அங்கொரு கண்ணும் துணையில் ஒரு கண்ணுமாய் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அண்ணன், தம்பி இருவருக்கும் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு பெரியவனுக்கு சென்னையிலும், சின்னவனுக்கு ஆந்திராவிலுமாய் ரிஷப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து சஞ்சய் பெண் வீட்டாரிடம் கேட்க அவர்களும் சந்தோஷமாய் சம்மதித்தனர்.
“ஹூம்… தெய்வமே, உங்களுக்கும், தம்பிக்கும் ஒரே நாள்ல கோவில்ல கல்யாணம் பிக்ஸ் ஆயிருச்சு… அப்படியே எங்க கல்யாணத்தையும் பேசி முடிச்சிட்டா ரெண்டுக்கு மூணு கல்யாணமா பண்ணிடலாம்ல…” ராகவ் ஆவலுடன் கேட்க பிரம்மா சிரித்தான்.
“அது வந்து மச்சான், மூணு கல்யாணத்தை ஒண்ணாப் பண்ணக் கூடாதாம்… அதனால உனக்கு தனியா மெதுவாப் பண்ணுவோம்… என்ன அமிர்தா, சரிதானே…” எனவும் நாணத்துடன் புன்னகைத்தவள்,
“நீங்க சொல்லற போலவே நடக்கட்டும் அண்ணா…” என்றதும் ராகவ் முறைத்தான்.
“அடிப்பாவி, அண்ணாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி கேளுங்கன்னு என்னை நோண்டி விட்டுட்டு இப்ப உன் நொண்ணன் சொல்லவும் ஜகா வாங்கறியா…” என அவள் காதில் கிசுகிசுத்தான்.
“அவ காதை எதுக்கு மேன் கடிக்கிற…” தேவ் கேட்கவும்,
“ஹூக்கும், உங்க தங்கச்சி காதுல போட்டிருந்த ஜிமிக்கி டிஸைன் நல்லாருந்துச்சு… அதான், எனக்கும் ஒண்ணு வாங்கலாம்னு விசாரிச்சேன்…” என்றதும் அனைவரும் சிரிக்க முறைப்புடன் திரும்பி நின்றான்.
“ஹூம்… பிள்ளப்பூச்சிக்கு எல்லாம் கல்யாணம்னு சொன்னதும் கொடுக்கு முளைச்சிருச்சு பாரேன்…” தேவ் கிண்டலாய் சொல்ல ஓவியா முறைத்தாள்.
“ப்ச், சும்மா என் தம்பியைக் கிண்டல் பண்ணாதீங்க தேவ்… உங்க தங்கச்சி வீட்டுல பேசி, நம்ம கல்யாணத்தோட அவங்க கல்யாணத்தையும் வைக்க ஏற்பாடு பண்ணிட்டா நல்லாதான இருக்கும்…” என்று அவள் சொன்னது தான் தாமதம்,
“ஆஹா, என் பாசமலரே… என் தவிப்புணர்ந்த தங்கத் தாமரையே… என் குலம் வளர்க்க வந்த குலதெய்வமே… இன்று முதல் என் ஆஸ்தான தெய்வமாய் உம்மையே வணங்கப் போகிறேன்…” இரு கை கூப்பி இடுப்பு வரை வளைந்து ராகவ் சொல்ல ஓவியா உட்பட அனைவரும் சிரித்தனர்.
“அடப்பாவி, இவ்ளோ நாள் என்னை தெய்வம்னு சொல்லிட்டு சட்டுன்னு இப்ப கட்சி மாறிட்ட…”
“ஆமா, இனி உங்களையே ஆளப் போறது என் பாசமலர் தானே… அதான் மாறிட்டேன்…”
“ஹூம்… இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்…” தேவ் சொல்ல அங்கே வந்த ஆருத்ரா,
“என்னடா தேவ் கவனிக்கப் போற, என் மருமகளை நீ கவனிக்கிறது தான் உலகத்துக்கே தெரிஞ்சு போச்சே… இனியும் என்ன கவனிக்கப் போற…” எனவும், “அப்படி சொல்லுங்க ஆன்ட்டி…” என்றான் ராகவ்.
ஓவியா நாணத்துடன் எழுந்து கொள்ள, “சும்மா பேசிட்டு இருந்தோம் மா…” என்றான் மகன்.
“நீ உக்காரு மா…” என்று மருமகளை அருகே அமர வைத்தவர், “அடுத்த நல்ல முகூர்த்தத்துலயே உங்க கல்யாணத்துக்கு நாள் குறிச்சு கல்யாண வேலையைத் தொடங்கிட வேண்டியது தான்… சந்தோஷம் தானே…” அவள் முகம் நோக்கிக் கேட்க நாணத்துடன் தலையாட்டினாள்.
அங்கே வந்த சிவநேசன், “மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு மா… எங்க, இவங்களோட விருப்பத்தை புரிஞ்சுக்காம நீங்க மறுத்திடுவீங்களோன்னு ஒரு பயம் இருந்துச்சு… இவங்க கல்யாண விஷயமாப் பேசணும்… கிளம்பி வாங்கன்னு நீங்க போன் பண்ணவும் தான் நிம்மதியாச்சு…”
“ஒரு முறை என் மகன் விருப்பத்தைப் புரிஞ்சுக்காத காரணத்தால தான் இத்தனை வருஷம் அவனைப் பிரிஞ்சு தண்டனையை அனுபவிச்சிட்டு இருந்தோம்… இனியும் அந்தத் தப்பை நாங்க செய்ய விரும்பலை…” அன்னை சொல்லவும் அவர் கையைப் பற்றிக் கொண்டான் தேவ்.
“ம்மா… சாரிம்மா…” என்றவனின் கையைத் தட்டிக் கொடுத்தவர், “இந்தக் காலத்துப் பசங்க எதையும் தெளிவா தான் யோசிக்கிறாங்க… பெரியவங்க தான் சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்னு அவங்கள ஒண்ணும் தெரியாதவங்களாப் பாக்குறாங்க… பெத்தவங்க தன்னோட ஆசையை சரியாப் புரிஞ்சுக்கலேன்னா தெளிவு படுத்துற கடமை பிள்ளைங்களுக்கும் இருக்கு…” என்றார் கனிவுடன்.
“ம்ம்… உண்மைதான் மா… நான் உங்களை ரொம்ப வருத்தப் பட வச்சுட்டேன்…” வருத்தத்துடன் கூறினான் மகன்.
“சரி, போனது போகட்டும்மா… இப்பதான் அண்ணா வந்துட்டாரே… இனி யார் விட்டாலும் நான் விட மாட்டேன்…” என்ற தம்பியை நெகிழ்வுடன் அணைத்துக் கொண்டான்.
“சரி, நாங்க நாளைக்கு கிளம்பறோம் சம்மந்திம்மா… எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்திட்டோம்… ராகவ், பிளைட்ல டிக்கட் புக் பண்ணிருப்பா…” என்றார் சிவநேசன்.
“அதெல்லாம் கிளம்பும்போதே நமக்கு ரிட்டர்னும் சேர்த்து தான் புக் பண்ணிருக்கேன் சார்…” என்றான் ராகவ்.
“ப்ச்… அதுக்குள்ள என்ன அவசரம், என் மகன், மருமகளைப் பார்த்து இன்னும் ஆசை அடங்கவே இல்லை, கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகலாமே… அண்ணா…”
“இல்லமா, நிறைய வேலை இருக்கு, அதான்…”
“சரி, அப்ப இவங்களாவது இருக்கட்டும்… இவங்களை ஒரு வாரம் கழிச்சு தான் விடுவேன்…” ஆருத்ரா பிடிவாதமாய் சொல்ல, “சரிம்மா… உங்க இஷ்டம்… அவங்க இருந்துட்டு வரட்டும்…” என்றார் சிவநேசன்.
“தெய்வமே, அம்மா கையில கார தோசை சாப்பிட்டு அப்படியே மயங்கிடாதிங்க, அப்பப்போ அனுப்ப வேண்டிய ஓவியங்களை வரைஞ்சு எனக்கு அனுப்பி விடுங்க… இல்லேன்னா நான் அங்க முழிக்க வேண்டிருக்கும்…”
“அதெல்லாம் பார்த்துக்கறேன் மேன்… நான் வர வரைக்கும் நீயும் சாப்பிட்டுத் தூங்கிட்டு இருக்காம பேமன்ட் எல்லாம் பாலோ பண்ணிக்க…”
“அதெல்லாம் ராகவ் பார்த்துப்பான் டா… சரி, டைம் ஆச்சு எல்லாரும் தூங்குங்க…” என்ற ஆருத்ரா நகர்ந்துவிட, “அம்ரு, நீ மாத்திரை போட்டியா மா…” கேட்டுக் கொண்டே ராகவ் அவளை அழைத்துக் கொண்டு அடுக்களைக்கு செல்ல சிவநேசனும் அவருக்கு ஒதுக்கிய அறைக்கு சென்றார்.
“சரிண்ணா, அண்ணி… குட் நைட்…” என்று சஞ்சய் செல்ல,
“ஓகே தேவ், நானும் குட் நைட்…” என்று எழுந்தவளை சுற்றிலும் நோக்கிவிட்டு தேவ் தன்னிடம் இழுக்க, அவன் மேல் சரிந்தவளின் இதழ்களை அவனது இதழ்கள் சரியாய் லாக் செய்ய, கண்களை இறுக மூடிக் கொண்டவளின் இதழ்கள்ளைப் பருகிவிட்டே விட்டான் அந்தக் கள்ளன்.
ஹார்மோன் ரியாக்ஷனில் தாறுமாறாய் குதித்த இதயத் துடிப்பில் முகமும், இதழும் சிவந்து கண்களில் ஒருவித மயக்கத்துடன் நின்றவளைக் காணவே பேரானந்தமாய் இருக்க அவளையே குறுகுறுவென்று நோக்கினான் தேவ்.
“ப்ச்… இருந்தாலும் நீ ரொம்ப மோசம் தேவ்…” என்றவள் அவன் தலையில் குட்டிவிட்டு தனது அறைக்கு ஓடிவிட,
“ஆ… ராட்சசி, இப்படிக் குட்டிட்டுப் போறாளே…” எனத் தலையைத் தடவ, “என்னாச்சு பாஸ்… ஓவியம் தலைல காவியம் வரைஞ்சிடுச்சோ…” ராகவ் கேட்க முறைத்தான்.
“கடுப்பேத்தாம மூடிட்டுப் போயி படு மேன்…” சொல்லிக் கொண்டே எழுந்து சென்றவனை வியப்புடன் நோக்கி,
“நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு தெய்வம் கோச்சிட்டுப் போகுது… சரி தூங்குவோம், கனவுலயாச்சும் என் அம்ருக் குட்டியோட டிஸ்டர்பன்ஸ் இல்லாம டூயட் பாடலாம்… ஆசை நூறுவகை, வாழ்வில் நூறு சுவை வா…” எனப் பாடிக் கொண்டே படுக்க சென்றான்.
அடுத்தநாள் காலையில் சிவநேசன், ராகவ், அமிர்தா சென்னைக்கு கிளம்பிவிட இவர்கள் மட்டும் இருந்தனர்.
“ஓவி, இங்க வாம்மா…” ஆருத்ரா அழைக்க அவரது அறைக்கு சென்றவளிடம் “இப்படி உக்காரு மா…” என அருகில் அமர்த்தி ஒரு பெட்டியைக் காட்டினார்.
“இதுல நம்ம குடும்ப நகை எல்லாம் இருக்கு… எனக்குப் பொண்ணு இருந்தா அவ கல்யாணத்துக்குப் போயிருக்கும்… ரெண்டும் பசங்கதானே… அதனால இதெல்லாம் என் ரெண்டு மருமகளுக்கும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றவர் அழகான ஒரு மாங்கா மாலையை எடுத்து, “இதை உன் கழுத்துல போட்டுக்க மா…” என்று சொல்ல, “அச்சோ அத்தை, இப்ப எதுக்கு… கல்யாணத்துக்குப் பிறகு பார்த்துக்கலாமே…” என்றாள் தயக்கத்துடன்.
“அப்படி சொல்லாதம்மா… இதுல ரெண்டு செட் இருக்கு… இன்னொண்ணை என் சின்ன மருமகளுக்கு கொடுத்து விடணும்… போட்டுக்க…” என்றவர் அவரே போட்டு விட்டார்.
“ம்ம்… அழகா இருக்கு…” என்று புன்னகைத்தவர், “இதுல உள்ள நகை எல்லாம் கொஞ்சம் பழைய மாடல் தான்… இந்த மாங்கா மாலை, காசு மாலை மட்டும் எந்தக் காலத்திலும் உள்ள டிஸைன்… அதைத் தவிர மத்ததை எல்லாம் உங்க விருப்பம் போல மாத்திப் பண்ணிக்கலாம்…”
“ம்ம்… சரி அத்தை…” என்றவளின் கண்கள் பனித்திருக்க, “என்னமா, ஏன் கண் கலங்கற…” என்றார் பதட்டத்துடன்.
“ப்ச்… ஒண்ணுமில்ல அத்தை… என் அம்மா இருந்தா இப்படி தான் எல்லாம் எனக்குப் போட்டு அழகு பார்ப்பாங்க… அம்மா நினைவு வந்திடுச்சு…”
“ஏன்மா, அப்படி சொல்லற… நானும் உனக்கு அம்மா தான்… இனி அம்மா இல்லேன்னு வருந்தக் கூடாது, சரியா…” அவள் கண்ணைத் துடைத்துவிட நெகிழ்ச்சியுடன் அவரை அணைத்துக் கொண்டாள் ஓவியா.

Advertisement