Advertisement

அவள் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன், “ஏய், என் மக்கு ஓவியமே… இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி கண்ணீர் விட்டுப் புலம்பற… நீ நேத்து வரலடி… எப்பவோ எனக்குள்ள வந்தவ… எவ வந்தாலும் உன்னை என்னிலிருந்து அசைக்க முடியாது…”
“ப்ச்… அப்படி பேசாத தேவ்… என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வரக் கூடாது… நான் சம்மதிக்க மாட்டேன்…”
ஓவியா சொல்ல, “அதுக்கு நான் ஒரு வழி சொல்லட்டுமா…” கதவருகே ஆருத்ராவின் குரல் கேட்டது.
“ஆ…ஆன்ட்டி…” பதறி சட்டென்று எழுந்து அவனை விட்டு சற்றுத் தள்ளி நின்றாள் ஓவியா.
மனதின் கலக்கத்தை முகத்தில் காட்டாமல் இருக்க முயன்றாலும் கண்கள் தன்னிச்சையாய் கலங்க, கீழே குனிந்தபடி, “சொல்லுங்க ஆன்ட்டி…” என்றாள்.
“பரவால்லியே, நான் ஏதும் சொல்லாமலே எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு என் பிள்ளையை விட்டுக் கொடுக்கத் தயார் ஆகிட்டியே… உன் அப்பாவோட போன் நம்பர் கொடு… அவர்கிட்ட என்ன பேசணுமோ பேசி வர சொல்லறேன்… அவர் வந்ததும் உன்னை அனுப்பி வச்சிடறேன்…” என்றவரிடம் தேவ், “அம்மா, ஓவி வந்து…” என அவன் சொல்வதற்குள், “நீ பேசாம இரு தேவ்… இதை நான் டீல் பண்ணிக்கறேன்…” கண்டிப்புடன் சொல்லி அவனிடம் கண் சிமிட்டிக் காட்டினார்.
“ஆஹா, அம்மா விளையாட்டுக்கு சொல்லப் போக இந்த ஓவி டென்ஷன் ஆகப் போறா…” நினைத்துக் கொண்டான்.
“ச..சாரி, ஆன்ட்டி… உங்களுக்கு ஏனோ என்னைப் பிடிக்கலன்னு தெரியுது… அதை அப்பாகிட்ட சொன்னா தாங்கிக்க மாட்டார், அவர் ரொம்ப ஆசைப்பட்டுட்டார்… கொஞ்சம் உடம்புக்கும் முடியல, அவரை அலைய வைக்க வேண்டாம்… நானே நாளைக்கு கிளம்பிக்கறேன்… நேர்ல அவர்கிட்ட சொல்லிக்கறேன்…” எனும்போதே கண்ணீர் சுரப்பி வேகமாய் வேலை செய்து கன்னத்தை நனைத்தது.
“டேய் தேவ், எங்கடா பிடிச்ச இப்படி ஒரு அழுமூஞ்சிப் பொண்ணை… பொசுக்குன்னு உன்னை வேண்டாம்னு சொல்லி ஊருக்குக் கிளம்ப முடிவு பண்ணிட்டா… உன் பொண்டாட்டியாகப் போறவளுக்கு உன் பிடிவாதத்துல பாதியாச்சும் இருக்க வேண்டாமா… அதும் அழுதுட்டே இருக்கா…” ஆருத்ரா சொல்லவும், “நீங்களே நல்லா கேளுங்கமா, உங்க மருமகளை…” என்றான் தேவ்.
அவர்கள் பேசுவது முதலில் புரியாமல் ரீவைன்ட் செய்து புரிந்து கொண்டவள் முகம் அழகான தாமரையாய்  மலர்ந்து பிரகாசித்தது.
“ஆ…ஆன்ட்டி… என்ன சொன்னீங்க, பொண்டாட்டியா… தேவ், நீ என்ன சொன்னே, மருமகளா…” என கண்களை விரித்தவள்,
“அ…அப்படினா, ஆன்ட்டி…” எனக் கண்ணில் நீர் மல்க சந்தோஷமாய் கேட்டவளை, “உன்னை என் மகனோட பொண்டாட்டின்னு சொன்னேன்…” அழுத்தமாய் சொன்னார்.
“ஆ…ஆன்ட்டி, தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றவள் சடாரென்று அவர் காலில் விழ, “சந்தோஷமா இரு… எழுந்திரு… இப்ப உன் அப்பா போன் நம்பர் தருவியா, இல்ல அவரை அலைய வைக்க வேண்டாம்னு வர வேண்டாம்னு சொல்லிடுவியா…” என கிண்டலாய் கேட்கவும், “ஹாஹா… போங்க ஆன்ட்டி…” என சிரித்தவளை, “வா…” என இரு கையை விரித்து அழைக்க சந்தோஷமாய் அவரை கட்டிக் கொண்டாள்.
“ஹலோ, எக்ஸ்கியூஸ் மி லேடீஸ், இங்க நான் ஒருத்தன் இருக்கேன்… என்னை விட்டுட்டு நீங்க மட்டும் கட்டிப் பிடிச்சுக்கறீங்க…” என்று அவனும் இருவரையும் அணைத்துக் கொண்டான். சட்டென்று வீட்டிலிருந்த இறுக்கம் மாறி சந்தோஷமாய் மாறியது சூழ்நிலை.
“அத்தை, மாமாக்கு இதில் சம்மந்தமா… நிஜமா எல்லாருக்கும் என்னைப் பிடிச்சிருக்கா…” கேட்ட மருமகளை நோக்கிப் புன்னகைத்த ஆருத்ரா, “முதல்ல உன்னை மருமகள்னு சொன்னதே உன் மாமா தான்…” எனவும் சந்தோஷமானாள்.
“சரி, நீங்க பேசிட்டு இருங்க… நான் வந்துடறேன்…” ஆருத்ரா செல்ல தன்னையே குறுகுறுவென்று நோக்கி, “என்ன ஓவியமே, இப்ப உனக்கு சந்தோசம் தான… எப்படி என் அம்மா… என்னைப் போலவே அதிரடியா இருக்காங்களா…” என கண்ணை சிமிட்டி தேவ் கேட்கவும்,
“எல்லாம் தெரிஞ்சும் கூட எனக்கு பயம் காட்டிருக்கீங்க… உங்களை…” என்றவள் அவன் முதுகில் ரெண்டு போடவும்,
“ஏய் வேணாம்டி… கல்யாணத்துக்கு முன்னாடியே புருஷனா வரப் போறவனை அடிக்கிறதெல்லாம் பாவ கணக்குல சேருமாம்…” சொல்லிக் கொண்டே எழுந்து ஓடிய தேவ் கிருஷ்ணாவை துரத்திக் கொண்டே அவள் பின்னில் ஓட இருவரும் அறையை சுற்றி ஓடிப் பிடித்து விளையாடினர்.
அன்றே சிவநேசனிடம் பேசி அவரையும் தேவ் தந்தையின் அறுபதாம் கல்யாணத்துக்கு வர அழைத்தனர். அவரை பிளைட்டில் அழைத்து வரும் பொறுப்பை ராகவ், அமிர்தா ஏற்றுக் கொண்டனர். எளிமையாய் அன்றே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள முடிவானது. ராதிகாவையும் அழைக்க அவளுக்கு இப்போது வர முடியாது என்பதால் கல்யாணத்துக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டாள்.
தேவ் உறவுகளில் முக்கியமானவர்களை முன்னமே அறுபதாம் கல்யாண விசேஷத்துக்கு அழைத்திருந்ததால் அதோடு இதையும் அழைத்துக் கூறி விட்டனர். வீடே கல்யாணப் பரபரப்புக்கு மாறியது.
அடுத்தநாள் விமானத்தில் விசாகப்பட்டினம் வந்து அங்கிருந்து டாக்ஸியில் வீட்டுக்கு வந்தனர் சிவநேசன், அமிர்தா, ராகவ் மூவரும். அவர்களைக் கண்டதும் மேலும் குஷியானாள் ஓவியா.
ராம் கிருஷ்ணாவின் உடல் நிலையை விசாரித்து கவலைப் பட்ட சிவநேசன், “சென்னைல உங்க ட்ரீட்மென்ட் கண்டின்யூ பண்ணலாமே… சீக்கிரம் ரெகவர் ஆகிடும்…” என்று தனது அபிப்ராயமும் சொல்ல,
“நான் சொன்னேன் மாமா, மேரேஜ்க்கு சென்னை வரும்போது அப்படியே இருந்து ட்ரீட்மென்ட் பார்க்கறேன்னு அப்பா சொல்லிருக்கார்…” என்றான் தேவ் சந்தோஷத்துடன்.
“ஆமாப்பா… மாமாவுக்கு சரியான பின்னாடி தான் ரெண்டு பேரையும் சென்னைல இருந்து விடுவேன்… அதுவரை இவங்க எங்களோட தான் இருக்கணும்…” என்ற ஓவியா,  “என்ன அத்தை, சரிதானே…” எனவும், “ம்ம்… சரிம்மா…” தலையாட்டினார் ஆருத்ரா.
“ம்ம்… நல்ல விஷயம் மாப்பிள்ளை, இத்தனை நாள் தனியாவே இருந்த நீங்க இனியாச்சும் பெத்தவங்களோட இருந்தா அவங்களுக்கும் சந்தோஷமாருக்கும்…” என்ற சிவநேசனை தேவ் பெற்றோருக்கு மிகவும் பிடித்தது.
“அம்மா, அப்பா…” என்று கண்டதுமே ஒட்டிக் கொண்ட அமிர்தாவைப் பற்றி தேவ் முன்னமே கூறி இருந்ததால் பெண் பிள்ளை இல்லாத ஆருத்ரா மகளாகவே பார்த்தார்.
“அண்ணா, நீங்க அப்படியே அம்மா மாதிரி இருக்கீங்க… சஞ்சய் அண்ணா அப்பா போல இருக்கார்….” என்று சின்னவனையும் அண்ணனாக்கி அந்த வீட்டுப் பெண் போலவே உரிமை கொண்டாடி ஐக்கியமாகி விட்டாள்.
“ராகவ், சஞ்சய் பங்க்ஷனுக்கு வேண்டிய பொருள் எல்லாம் வாங்கப் போகணும் சொன்னான்… நீயும் கூடப் போயிட்டு வரியா, உனக்கொண்ணும் பிரச்சனை இல்லையே…” பிரம்மா கேட்க, “என்ன தெய்வமே, நம்ம வீட்டு பங்க்ஷன்க்கு நான் தான முன்ன நின்னு செய்யணும்…” என்றான் சந்தோஷமாய்.
“பரவால்ல தேவ், நீ எங்களோட இல்லேன்னாலும் உன்னை சுத்தி நல்ல மனுஷங்களை உறவா சேர்த்து வச்சிருக்க…” என்றார் ஆருத்ரா மகனை நோக்கி.
“ம்ம்… ராகவ் எனக்கு அசிஸ்டன்ட் மட்டும் இல்லை மா… அவனும் எனக்கு சஞ்சய் போல தான்… அத்தனை அக்கறையா கூடப் பிறந்தவன் போல நடந்துப்பான்… கூடிய சீக்கிரமே அவனுக்கு தம்பில இருந்து மச்சானா பிரமோஷன் கொடுக்க ஏற்பாடு நடந்திட்டு இருக்கு… அப்படிதானே அமிர்தா…” அமிர்தாவை நோக்கி சிரித்தபடி கேட்க, “ப்ச்… போங்கண்ணா…” சிணுங்கலுடன் ஓடி விட்டாள் அவள்.
“தேவ், அவளுக்கு இதயத்துல ஏதோ பிரச்சனை இருக்குன்னு சொன்னியேப்பா, அதனால கல்யாணத்துக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையா…” ஆருத்ரா கவலையுடன் கேட்க,
“ம்ம்… டாக்டர் கிட்ட விசாரிச்சிட்டோம் மா… அவளோட இதய வால்வுல உள்ள அடைப்பைக் கரைக்க வெளிநாட்டுல இருந்து மருந்தை வரவழைச்சு கொடுத்துட்டு இருக்காங்க… இப்ப அது கொஞ்ச கொஞ்சமா கரையத் தொடங்கிருக்காம்… இன்னும் கொஞ்ச நாள் பார்த்திட்டு, அப்புறம் வேணும்னா ஆப்பரேஷன் பண்ணிக்கலாம்… இதனால கல்யாண வாழ்க்கைக்கு எதுவும் பிரச்சனை இல்லை, கவனமா இருந்தா மட்டும் போதும்னு சொல்லிருக்காங்க… அமிர்தா அப்பாக்கும் இதுல ரொம்ப சந்தோசம்…” என்றான்.
“ஓ… நல்லதே நடக்கட்டும் தேவ்…” என்றார் அவர்.
அடுத்தநாள் அழகாய் விடிய உறவினர் கூட்டம் விசேஷத்துக்கு கூடத் தொடங்கியது. அங்கங்கே தெலுங்கும், தமிழுமாய் கலந்து இரு மாநிலமும் கலகலப்பாய் பேசி, மாட்லாடிக் கொண்டிருந்தனர்.
ராம்க்கு நடக்க முடியாத காரணத்தால் அவரை சாய்வு நாற்காலியில் அமர்த்தி இருந்தனர். ஆருத்ராவும், ராமும் புத்தாடை அணிந்து சிம்பிளாய் மாலை மாற்றி, தேவ் கொடுத்த மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து இனிப்பை பகிர்ந்து கொண்டனர்.
பட்டு சேலையில் பளிச்சென்று வலம் வந்த ஓவியாவை அழைத்த ஆருத்ரா, மகனுக்கும் அவளுக்கும் கல்யாணம் நிச்சயிப்பதாய் சொல்லி இரு மோதிரத்தைக் கொடுக்க இருவரும் ஒருவருக்கொருவர் அணிவித்துக் கொண்டனர்.
ராம் பார்த்திருந்த பெண்ணை சின்னவனுக்கு முடிவு செய்யலாமா என அந்தப் பெண் வீட்டார் கேட்கவே, சஞ்சயிடம் விருப்பத்தைக் கேட்டு இவர்கள் சந்தோஷமாய் சம்மதிக்க, இரு புதிய உறவுகளுக்கு அடித்தளமிட்டு அருமையான விருந்துடன் நிகழ்ச்சி சிறப்பாய் முடிந்தது.
ஆயிரம் அல்லி மலர்களை
அவளது முகத்தில் கண்டேன்…
அப்படியே அள்ளிக் கொள்ள
நினைத்தால் தள்ளியே நில்
என்கிறாள் ஓவியப் பெண்…
தள்ளினாலும் கிள்ளினாலும்
தஞ்சம் கொள்வது என் நெஞ்சில்
தானடி கள்ளிப் பெண்ணே…

Advertisement