Advertisement

அத்தியாயம் – 20
உடல் மெலிந்து சோர்வுடன் கண் மூடிப் படுத்திருந்த ராம் கிருஷ்ணா கதவு திறக்கும் சத்தத்தில் கண்ணைத் திறந்தார்.
எதிரில் மனைவியுடன் நின்ற மகனைக் கண்டதும் கண்கள் சட்டென்று கண்ணீரில் நிறைய, “தே… தேவ்வ்…” குழறலாய் ஒலித்த அவர் குரலில் கலக்கத்துடன் பார்த்தான் தேவ். 
“அ…அப்பா… அப்பாக்கு என்னாச்சு மா…” அதற்குமேல் தயங்காமல் அவரிடம் ஓடிச்சென்று கையைப் பிடித்துக் கொண்டவன் மனதும் பதறியது. நடப்பதைப் பார்த்து நின்ற ஓவியாவுக்கும் ஏதோ புரிய கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வலது கையால் அவனைத் தடவியவர் கண்கள் சந்தோஷத்தில் விரிந்து கண்ணீரை வெளியேற்றியது.
“தே…வ்வ்வ்…” வழ்ந்துத்தியாப்பா…” குழறலாய் கேட்டார்.
“அ… அப்பா, உங்களுக்கு என்னாச்சு… இது என்ன கோலம்… ஏன் பேச்சு குளறுது…” படபடத்தான் மகன்.
“அப்பாக்கு ரத்த அழுத்தம் கூடி ஸ்ட்ரோக் வந்திருச்சு, தேவ்…” சொன்ன ஆருத்ராவின் கண்களும் நிறைந்தன.
“ஸ்ட்ரோக்கா…”
“ம்ம்… மூளையோட ஒரு பக்கத்துல ரத்த ஓட்டம் குறைஞ்சு இடது பக்கம் கை, கால் வராமப் போயிருச்சு… உன்னைப் பார்க்க முடியலைங்கற வருத்தத்தை வெளிய சொல்லாம மனசுக்குள்ளேயே போட்டு வச்சிருந்து பிளட் பிரஷர், சுகர், கொலஸ்ட்ரால்னு எல்லாத்தையும் வர வச்சுகிட்டார்… அவரோட அறுபதாம் பிறந்தநாளுக்கு நீ வரப்போறங்கற சந்தோஷத்துல இருந்தவர், நீ வந்தா உன் கல்யாணத்தை முடிச்சுட்டு தான் மறுபடி சென்னைக்கு அனுப்பனும்னு பொண்ணெல்லாம் பார்க்கத் தொடங்கிட்டார்…” அவர் சொல்லவும் ஓவியா திகிலுடன் தேவை நோக்க அவனது விழிகளும் அவளை நோக்கி மீண்டது.
“உனக்குப் பொருத்தமா நம்ம தூரத்து சொந்தத்திலேயே படிச்ச, அழகான பொண்ணைத் தேர்வு செய்தும் வச்சிட்டார்… உன்னைப் பத்தின விஷயம் எல்லாம் பெருமையா பொண்ணு வீட்டுக்கு சொல்லியிருந்தார்… அன்னைக்கு பேப்பர்ல வந்த விஷயத்தைப் பார்த்திட்டு அவங்க போன் பண்ணி அப்பாகிட்ட பேசவும் டென்ஷன் ஆகிட்டார்… சட்டுன்னு பிரஷர் ஏறி கை, கால் இழுத்து வாய் கோணி கீழ விழுந்துட்டார்… உடனே ஆசுபத்திரிக்கு கொண்டு போனோம்… வாய் கோணினது கொஞ்ச நேரத்துல சரியாகிடுச்சு… கை, கால் மட்டும் சுவாதீனம் இல்லாம இருக்கார்… போகப் போக மருந்துல சரி ஆகிடும்னு டாக்டர் சொன்னாங்க… இப்ப கொஞ்சம் பரவால்ல… அப்பவே உனக்கு போன் பண்ணி வர சொல்லறேன்னு சொல்லவும் அந்தப் பொண்ணையும் அழைச்சிட்டு வர சொல்லுன்னு அப்பாதான் சொன்னார்… அதான் உனக்கு போன் பண்ணி வர சொன்னேன்…”
“இத்தனை நடந்திருக்கிறதா…” என்பது போல் திகைத்துப் போய் இளையவர்கள் நோக்கி நின்றனர்.
“அ..அப்பா, உங்களுக்கு இப்படி ஆக நான்தான் காரணமா, என்னை மன்னிச்சிருங்கப்பா…” மகன் கண்ணீருடன் அவரது தளர்ந்த கையைப் பற்றிக் கொள்ள, வலது கையால் அவன் கேசம் தடவி, தழுதழுத்தார் ராம் மோகன்.
ஆண்மையின் இலக்கணமாய் வளர்ந்து, உயர்ந்து நிற்கும் மகனைக் கண்ணில் கனிவுடன் நோக்கியவர், அவன்  கையைத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு, “தேவ்வ்… எ..எல்ன்ன மன்சிதுப்பா…” குழறலாய் சொல்லவும்,
“அச்சோ… அப்பா, என்னதான், என்னோட விருப்பத்துக்காக. லட்சியத்துக்காக ஓடினாலும், என்னைப் பெத்தவங்களைப் பார்த்துக்கறதும் ஒரு மகனோட கடமைன்னு யோசிக்க மறந்துட்டேன்… நீங்க தான் என்னை மன்னிக்கணும்…” அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவரது பார்வையோ மகன் பின்னில் பயத்துடனும், கவலையுடனும் நின்று கொண்டிருந்த பெண்ணின் மேல் நிலைக்க, அதை கவனித்தவன், “அப்பா, இதான் ஓவியா…” என்று சொல்லவும் அவளை வெளியே போகுமாறு சைகை செய்தார்.
அதைக் கண்டதும் இருண்ட முகத்துடன் அறையிலிருந்து அவள் வெளியேற, தேவ் முகம் யோசனையானது.
“அம்மா, அப்பாதான் அவளை அழைச்சிட்டு வர சொன்னதா சொன்னிங்க, இப்ப ஒரு வார்த்தை பேசாம வெளிய போக சொன்னா என்னமா அர்த்தம்…” தன்மையாகவே கேட்டான்.
“ஹூம்… நீ பண்ணிட்டிருக்கிற எதுவும் எங்களுக்குப் பிடிக்கலன்னு அர்த்தம்… இங்க என்ன நிலமைன்னு அந்தப் பொண்ணும் தெரிஞ்சுக்கணும்னு தான் கூட்டி வர சொன்னோம்னு அர்த்தம்… ஏன்டா, ஏன் இப்படி இருக்க… இத்தனை நாள் எங்க கூட இருந்து, எங்களுக்குப் பிடிச்ச போல செய்து மகன்கிற சந்தோஷத்தைத் தான் கொடுக்கல, உனக்காக பெத்தவங்களா நாங்க எதுவுமே பண்ணலைன்னு மனசு கிடந்தது தவிக்குது… உன் கல்யாணத்துல கூட எங்க விருப்பத்தை எதிர்பார்க்க மாட்டியா… உனக்குப் பிடிச்ச போல தான் அதையும் அமைச்சுக்குவியா… அப்புறம் எதுக்குடா பெத்தவங்கன்னு நாங்க இருக்கோம்…” கேட்டுக் கொண்டே அன்னை அழத் தொடங்க விக்கித்து நின்றான் தேவ்.
“அம்மா, ப்ளீஸ்… அழாதீங்க…” தந்தையிடமிருந்து எழுந்தவன் தாயின் கையைப் பற்றிக் கொள்ள, “எப்படி ஓடியாடி உழைச்சிட்டு இருந்த மனுஷன்… நீ எப்ப வீட்டை விட்டு வெளிய போனியோ, அப்பவே தளர்ந்து போயிட்டார்… இருந்தாலும் இத்தனை நாள் நீ வருவேங்கற நம்பிக்கை காத்திருக்க வச்சுது… இப்ப அவரோட உறவுக்காரங்க முன்னாடி ரெண்டாவது முறையா அசிங்கப்படுத்தி இப்படி படுக்கைல தள்ளிட்டியே…” அழுதபடி அன்னை சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதைத் துளைக்க பதில் சொல்ல முடியாமல் மௌனமாய் நின்றான் தேவ்.
அதற்குள் ராம் கையைத் தூக்கி, “ருத்தா…” அழைக்க, “என்னங்க…” என்று அவரது கையைப் பற்றிக் கொண்டார்.
“அவனை எதுவும் சொல்லாத… அப்பவும், இப்பவும் அவன் விருப்பத்தைக் கேக்காம முடிவெடுத்தது என் தப்பு… அந்தப் பொண்ணோட அப்பாவை வர சொல்ல சொல்லு…” அவர் குழறலாய் சொன்னதைப் புரிந்து கொண்டவர், “ம்ம்… சரிங்க, என்று எழுந்தார்.
“அ..அம்மா, அப்பா எதுக்கு ஓவி அப்பாவை வர சொல்லுறார்… அப்படின்னா, இ..இதுல அவருக்கு சம்மதமா…”
“சம்மதமோ, இல்லியோ, அந்தப் பொண்ணை உன்னோட சம்மந்தப்படுத்திப் பேசிட்டாங்க, அவ வாழ்க்கை பாதிக்கப் படக் கூடாதுல்ல… போயி அவகிட்ட விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வா…” என்றவரின் முகத்தில் சிறிது மலர்ச்சி தெரிய, “அ..அம்மா… நிசமாலுமா, எங்களுக்கு கல்யாணம் முடிவு பண்ணத்தான் அவளையும் அழைச்சிட்டு வர சொன்னிங்களா…” சந்தோஷத்தில் குதித்தான் தேவ்.
“ம்ம்… இது முக்கியமா அப்பாவோட விருப்பம்… உன்னோட ஒரு விருப்பத்தை தான் எங்களால நிறைவேத்த முடியல… இந்த விருப்பத்தையாச்சும் நிறைவேத்த நினைக்கறார்…”
“அ…ப்பா…” கண் கலங்க அவர் கையைப் பற்றிக் கொண்டவனை ஒரு கையால் அருகில் இழுத்து நெற்றியில் முத்தமிட்டார் ராம் மோகன்.
“இனியும் என் பிள்ளையை இழக்க நான் தயாரில்லை… அவனோட விருப்பங்கள் எப்பவும் சரியா தான் இருக்கும்னு காலம் எனக்கு உணர்த்திடுச்சு…” அவர் குழறலாய் சொன்னதை கஷ்டப்பட்டுப் புரிந்து கொண்டான் தேவ்.
“லவ் யூ ப்பா… ஓவியா ரொம்ப பயந்துட்டு இருக்கா… அவளுக்கு சொல்லி கூட்டிட்டு வந்துடறேன்…” என்றவன்,
“தேங்க்ஸ்மா…” என்று அன்னையின் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு வெளியே செல்ல, சந்தோஷத்தில் துளிர்த்த கணவனின் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டார் ஆருத்ரா.
தேவ், ஓவியாவை இணைத்து புகைப்படத்துடன் வந்த செய்தியைக் கண்டு ராம் கிருஷ்ணா முதலில் அதிர்ந்து போனாலும், அவர்தான் யோசித்து இந்த முடிவை மனைவியிடம் கூறியிருந்தார். மகனின் செயலால் கணவனுக்கு இப்படி ஆகிவிட்ட கலக்கத்தில் இருந்தவர், அவரே இப்படி சொல்லவும் சமாதானமானார்.
எத்தனை பலமானவரையும், தைரியமானவரையும் அசைத்துப் பார்க்கும் சக்தி முதுமைக்கும், நோய்க்கும் உண்டு. ராம் கிருஷ்ணாவின் நிலையும் அப்படி தான்… தான் செய்தது, சொல்வது, நினைப்பது மட்டுமே சரியென்று இருந்ததால் சிறுவயதிலேயே இழந்த மகனை நிரந்தரமாய் இழக்க வேண்டி வருமோ என்ற சிந்தனையுடன், அவரது உடலுக்கு முடியாமையும் சேர்ந்து கொள்ள அவன் விருப்பத்தை நிறைவேற்றியாவது மகனைத் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ளும் தகப்பனின் ஆசை.
இத்தனை காலம் தங்களைத் திரும்பிப் பார்க்காமல் இருந்த மகனுக்கு கொஞ்சமாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்றே ஓவியாவை ஒதுக்கி நிறுத்துவது போல இருவரும் காட்டிக் கொண்டனர்.
“ஓவி… அம்மு…” தேவ் அழைத்துக் கொண்டே அவளைத் தேடி அறைக்கு செல்ல, ஜன்னல் ஓரத்தில் நின்று இருட்டை வெறித்துக் கொண்டிருந்த ஓவியாவின் முகமும் மேகம் மூடியை நிலவைப் போல் இருண்டிருந்தது.
“ஓவி…” கதவைத் திறந்து தேவ் வருவதைக் கண்டும் அமைதியாய் திரும்பி விட்டதைத் தொடர்ந்தாள்.
“ஓவி, இருட்டுல என்ன பார்க்கற…”
“தெரியல, வெளிச்சம் கிடைக்காதான்னு மனசு ஏங்குது…” சொன்னவளின் பின்னிலிருந்து கழுத்து வளைவில் தேவ் தாடியைத் தேய்க்க கூச்சத்தில் நெளிந்தாள் ஓவியா.
“ப்ச்… இருக்கற டென்ஷன்ல என்ன பண்ணறீங்க, தேவ்…”
“இப்ப உனக்கு என்ன டென்ஷன்…”
“ஓ… உங்களுக்கு எதுவும் இல்லையா… அங்கிள் உங்களுக்கு உறவுக்காரப் பொண்ணு யாரையோ கல்யாணத்துக்கு பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னாரே… அவளோட தான் உங்க கல்யாணம் நடக்கப் போகுது… நான் எதுக்கு இடைஞ்சலா, நாளைக்கே ஊருக்கு கிளம்பறேன்…” சொல்லும்போதே தொண்டை அடைத்து கண்ணீர் நிறைந்தது.
“அவங்க சொன்னா, நான் கட்டிக்குவேனா… எனக்குப் பிடிக்க வேண்டாமா…” சொல்லிக் கொண்டே அவளைக் கட்டிலில் அமர்த்தி தானும் அருகே அமர்ந்தான்.
“கட்டிக்காம, எனக்காக சண்ட போட்டு மறுபடி குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு இருக்கிறதுக்கா… அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்… இத்தன வருஷம் எல்லாரையும் பிரிஞ்சு நீங்க அனாதையா வாழ்ந்தது போதும்… இனி குடும்பத்தோட சந்தோஷமா இருங்க… நா…ன் நேத்து வந்தவ, அப்படியே வந்த போல போயிடறேன்…” கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.

Advertisement