Advertisement

அத்தியாயம் – 2
அழகாய் கவுன் அணிந்து அமர்ந்திருந்த பத்து வயதுப் பெண்ணின் கண்ணில் தெரிந்த வலியும், கண்ணீரும் அவனை என்னவோ செய்ய முகம் வாடினான்.
“சாரி அங்கிள், நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா…”
“இல்ல தேவ்… அது என் மனைவி போட்டோ தான்… இப்ப அவங்க இல்ல… அதான், அம்மு ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்கா…” என்ற சிவநேசன்,
“அம்மு, என்னடா இது… அம்மா போட்டோவையே பார்த்து அழுதுட்டு இருந்தா எப்படி, ஒண்ணுமே சாப்பிடாம இருக்க… பிஸ்கட் ஆச்சும் சாப்பிடு…” என்றார்.
“ஹோ… சாரி, சாரி அம்மு…” என்றான் அவளிடமும். அவள் எதுவும் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள். அன்னையின் போட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே சிறிது நேரத்தில் ரயிலின் தாலாட்டில் உறங்கத் தொடங்கி இருந்தாள்.
தேவ் சற்று நேரம் கழித்து சிவநேசனிடம் கேட்டான்.
“அங்கிள், என்னாச்சு உங்க மனைவிக்கு… என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க…” என்றான் தயக்கத்துடன். பதினைந்து வயதுப் பையனாய் இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பும், மேதாவித்தனமும் தெரிந்தது. கண்டதும் இயல்பாய் பழகத் தோன்றும் தோற்றமும் இருக்க, அவனிடம் சொல்லுவதில் தப்பில்லை எனத் தோன்றவே சொல்லத் தொடங்கினார்.
“ம்ம்… அழகான எங்க குடும்பம் மேல யாரு கண்ணு பட்டுச்சோ, பொண்டாட்டியும் போயிட்டா… பொண்ணும் இப்படி அவளுக்குள்ள சுருண்டுகிட்டா… காலைல இருந்து சாப்பிடக் கூட இல்ல… அம்மா போட்டோவை வச்சுட்டு உக்கார்ந்திருக்கா…” என்றவர் சுருக்கமாய் தங்களைப் பற்றிக் கூற அவனும் வருத்தத்துடன் கேட்டிருந்தான்.
“இந்த வயசுல அம்மா இல்லாம கஷ்டம்தான்…” என்றவனின் பார்வை பரிதாபமாய் உறங்கும் அம்முவின் மீது விழுந்தது. சோக சித்திரம் போல் கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அகலமான பெரிய விழிகள், எடுப்பான அளவான மூக்கு… சின்ன உதடுகள்… கிள்ளத் தூண்டும் அழகான சிவந்த குண்டுக் கன்னங்களில் கண்ணீரின் மிச்சமிருந்தது. அழகாய் பாப் செய்யப்பட்ட முடியின் மீது ஹேர் பேன்ட்… அழுகையில் இருந்தாலும் அழகான ஓவியமாய் இருந்தாள்.
அவளை எப்படியேனும் சிரிக்க வைக்க வேண்டுமென்று அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. சிவநேசன் மனைவியின் நினைவில் கண் மூடி அமர்ந்திருக்க அம்முவின் உருவத்தை அழுத்தமாய் மனதில் பதித்துக் கொண்டான் தேவ் கிருஷ்ணா.
தனது பாகிலிருந்து ஒரு வெள்ளைத்தாளை எடுத்தவன் சடசடவென்று கோடுகளை இழுத்து, வேண்டிய இடத்தில் இணைத்து அம்முவின் உருவத்தைக் கொண்டு வந்தான். அவளது சின்ன இதழ்கள் சிரிப்பது போல் வரைந்தான். வெறும் பேனாவில் உருவம் கொண்ட ஓவியம் அவன் கைவண்ணத்தில் உயிரோடு ஜொலித்தது.
அடுத்து சமல்கோட் ஜங்க்ஷனை புகைவண்டி நெருங்கிக் கொண்டிருக்க சட்டென்று வண்டியின் வேகம் குறைந்து மற்றொரு வண்டி கிராஸ் செய்வதால் சிக்னல் கிடைக்காமல் அங்கேயே நின்றது.
சிவநேசன் கண் திறந்து, “ஏன் வண்டி நிக்குது… அடுத்த ஸ்டேஷன் வந்திருச்சா தேவ்…” எனக் கேட்க, “இல்ல அங்கிள்… சிக்னலுக்கு நிக்குது போலருக்கு…” என்றான். பேச்சு சத்தத்தில் அம்முவும் விழித்துக் கொண்டாள். கை கடிகாரத்தைப் பார்க்க மணி ஒன்றை நெருங்கி இருந்தது.
“இந்த ஸ்டேஷன்ல லஞ்ச் வாங்கிட்டா சரியாருக்கும்… இனி வர்ற ஸ்டேஷன்ல மீல்ஸ் கிடைக்காது…”
“ம்ம்… ஆமா அங்கிள்…”
“நான் பாத்ரூம் போயிட்டு வரேன்…” என்றவர் எழுந்து கொண்டு, “அம்மு, அப்பா வந்திடறேன்மா…” என்றவர், “தேவ், கொஞ்சம் பார்த்துக்கப்பா…” என்றபடி சென்றார்.
“அம்மு… ஏன் எதுவுமே பேச மாட்டேங்கற… அப்பா உன்னைப் பார்த்து எவ்ளோ பீல் பண்ணறார் பார்த்தியா…”
“நீ பொம்மை மாதிரி அழகா இருக்க… உன் முகத்துக்கு சிரிச்சா இன்னும் அழகாருப்ப தெரியுமா… அதை விட்டுட்டு இப்படி உம்முன்னு உக்கார்ந்திருக்க…” என்றவனை அவள் விழிகள் வியப்புடன் ஏறிட்டது. இப்படியெல்லாம் அவளிடம் யாரும் உரிமையுடன் பேசியது இல்லை.
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டட்டுமா…” பதில் சொல்லா விட்டாலும் அவன் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“ஒரு நிமிஷம் கண்ணை மூடேன்…” அவன் சொல்லவும் கண்ணை மூடிக் கொண்டவளுக்கு அவன் வார்த்தையைத் தான் ஏன் அனுசரிக்கிறோம் என்றெல்லாம் புரியவில்லை.
தான் வரைந்து வைத்த ஓவியத்தை எடுத்து அவள் முகத்தின் முன் வைத்தவன், “இப்ப கண்ணைத் திற…” என்றதும் திறந்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன. வேகமாய் அதை வாங்கிக் கொண்டு ஆவலுடன் பார்த்தவள் சந்தோஷமாய் அவனைப் பார்த்து “நல்லாருக்கு… யாரு வரைஞ்சது…” என்று முதல் வார்த்தையை தன் கவலை மீறி உதிர்க்க அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது.
“நான்தான் வரைஞ்சேன்… ஏன் டவுட்டா இருக்கா…”
“நீங்களா… நிஜமாவா…”
“ஆமா அம்மு, நம்பிக்கை இல்லேன்னா மறுபடியும் வேற வரைஞ்சு காட்டவா…”
“வேண்டாம்… என் அம்மாவை வரைஞ்சு தரீங்களா…” என்றாள் கண்களில் ஆர்வத்துடன். “ஓகே…” அவன் சொல்லவும் அன்னையின் போட்டோவை அவனிடம் நீட்டினாள்.
உன்னிப்பாய் கவனித்தவன் பேப்பரை எடுத்து மளமளவென்று வரையத் தொடங்க அருகில் அமர்ந்து கவனித்தாள் அம்மு.
கோடுகள் எப்படி உருமாறி இறுதியில் தன் அன்னையின் வடிவாய் மாறுகிறது என்பதைப் பார்த்தவளின் கண்களில் அத்தனை வியப்பும் சந்தோஷமும் இருந்தது.
“வாவ்… சூப்பரா வரையறிங்க அண்ணா…” என்றவள் அவன் நீட்டிய ஓவியத்தை வாங்கி அன்னைக்கு முத்தமிட்டாள்.
அவள் “அண்ணா…” என்றதும் சட்டென்று அவனது இளம் நெஞ்சு எங்கோ பொசுங்கி கருகுவதன் காரணம் புரியாமல் முழித்தவன், “அம்மு… என்னை அண்ணான்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்… பேரு சொன்னா போதும்…” என்றான்.
“வயசுல மூத்தவங்களைப் பேரு சொல்லி கூப்பிடக் கூடாதுன்னு அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க…” சொல்லும் போதே மீண்டும் அவள் முகம் வாடியது.
“ஓ… ஆனா, பிரன்ட்சுக்குள்ள அந்த மரியாதை எல்லாம் வேண்டாம்… நாம பிரண்ட்ஸ் தானே…” என்றவன் கையை நீட்ட அழகாய் புன்னகைத்தவள் கை பற்றி குலுக்கினாள்.
“ம்ம்… ஓகே…” என்றவள், அவனுடன் இயல்பாய் பேசத் தொடங்க திரும்பி வந்த சிவநேசனுக்கு வியப்பு. அதற்குள் ஹாரனுடன் புறப்பட்ட புகைவண்டி மீண்டும் ஸ்டேஷனை நோக்கி செல்லத் தொடங்கியது.
“அம்மு, அண்ணாவோட பிரண்டாகிட்டியா… பரவால்லியே…” என்ற தந்தையை நோக்கிப் புன்னகைத்தவள்,
“அப்பா, இவரு ரொம்ப அழகா வரையறாங்கப்பா… இங்க பாருங்க…” என்று தன்னையும், அன்னையையும் அவன் வரைந்ததைக் காட்ட அவரது கண்களும் ஆச்சர்யமானது.
“ரொம்ப அருமையா இருக்கு தம்பி… நீ இவ்ளோ நல்லா வரைவியா…” என்றார் அதிசயத்துடன்.
“ம்ம்… சின்னதுல இருந்தே எதைப் பார்த்தாலும் அப்படியே வரைஞ்சு பார்ப்பேன்… வரைய வந்துச்சு… பிடிச்சிருந்துச்சு… அதையே என் எதிர்காலமா முடிவு பண்ணிட்டேன்… இப்ப சென்னை போறது கூட அதுக்கான ஒரு முயற்சி தான்…”
“ஓ… ரொம்ப சந்தோஷம் தேவ்… உனக்குள்ள இப்படி ஒரு கலை இருக்குன்னு எனக்குத் தோணல, ஏதோ சின்னப் பையனா இருந்தாலும் பக்குவமா பேசறேன்னு தான் நினைச்சேன்… உன் விரல்ல சரஸ்வதி குடியிருக்காப்பா… ரொம்ப தத்ரூபமா வரையற…” மனதாரக் கூறினார்.
“நன்றி அங்கிள்… நமக்கு எது வருதோ, எது பிடிச்சிருக்கோ அதுல யோசிக்காம இறங்கிடணும்… மத்தவங்களுக்காக நம்மை மாத்திக்க முயற்சி பண்ணினா நாளைக்கு என் வாழ்க்கையை இன்னொருத்தர் வாழ்ந்த போல ஆகிடும்… இதுல நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன்…”
“ம்ம்… அருமையா சொன்ன, அம்முவுக்கு கூட டான்ஸ் நல்லா வரும்… அவ அம்மா தான் கத்துக் கொடுத்திட்டு இருந்தா, அவ ஒரு டான்ஸ் டீச்சர்… அவ போனபிறகு அம்மு டான்ஸ் ஆடறதும் இல்ல…” அவர் சொல்லவும் அம்முவிடம் திரும்பினான் தேவ்.
“அம்மு, உனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்கும் தானே…”
“ம்ம்…” என்றவளின் குரல் சோகத்துடன் வந்தது.
“டான்ஸ்…”
“அதும் பிடிக்கும்…”
“அம்மாக்குப் பிடிச்ச, உனக்குப் பிடிச்ச டான்சுல உன் மனசைத் திருப்பி அதுல சாதிச்சுக் காட்டினா அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க தானே…” அவன் சொல்வதை அமைதியாய் கேட்டவளின் மனம், அன்னை தனக்கு சொல்லித் தந்த நாட்டிய முத்திரைகளை மனதில் கண்டது.
“அம்மு, நமக்கான பாதை எதுன்னு தெரியாதவரை தான் பயணம் தொடங்காம இருக்கும்… ஆனா நாம செல்ல வேண்டிய பாதை இதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டா அதுல எந்தத் தடை வந்தாலும் தாண்டி போயிட்டே இருக்கணும்… உனக்கான பாதை நாட்டியம்னா அதுல உன் மனசைத் திருப்பு… இப்படி அழுதுட்டு இருந்தா உன் அப்பா மட்டுமில்ல, உன் எதிர்காலத்தைப் பத்தி பல கனவுகளை வச்சிருந்த அம்மாவுக்கும் வருத்தமா தான் இருக்கும்…” அவன் சொல்ல சொல்ல சிவநேசனின் மனதுக்குள் வளர்ந்து கொண்டே போனான் தேவ் கிருஷ்ணா.
“வயதில் சின்னவனாய் இருந்தாலும் இந்தப் பையனின் வாக்கிலும், எண்ணத்திலும் எத்தனை தெளிவு…” என பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்டேஷனில் வண்டி நிற்க, “சாப்பாடு வாங்கிட்டு வரேன்… உனக்கும் வாங்கட்டுமா தேவ்…” என்றார் வாத்சல்யத்துடன்.
“எனக்கும் வாங்குங்கப்பா…” என்றாள் அம்மு தெளிவுடன்.
அவளை நோக்கி இருவரும் புன்னகைக்க, “நானும் வரட்டுமா அங்கிள்…” என்றான் சந்தோஷத்துடன்.
“இல்லப்பா, நீ அம்முவோட பேசிட்டு இரு… நான் வாங்கி வர்றேன்…” என்றவர் எழுந்து சென்றார்.
அதற்குப் பிறகு அம்முவிடம் என்ன பிடிக்கும், பிடிக்காது என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான் தேவ்.
“எனக்கு உலகத்துலயே ரொம்பப் பிடிச்சது அம்மா தான்… அப்புறம் அப்பா, இப்ப என் அம்மாவை அழகா வரைஞ்சு கொடுத்த உங்களையும் பிடிக்கும்…”
“எப்பவும் சிரிச்சுட்டே இருக்கணும் அம்மு… நமக்கான கடமைகளை செய்துட்டே இருந்தா அதற்கான பலனை காலம் நமக்குத் தரும். இனி எப்பவும் நீ அழக் கூடாது சரியா… எங்க ஸ்மைல் பண்ணு…” அவன் சொல்ல சிரித்தவளின் முகத்தில் நாணம் ஒளிந்திருந்தது. அந்தி வான நிலாவின் வெளிச்சத்தை அவள் சிரிப்பில் உணர்ந்தான்.
உணவுக்குப் பிறகு அவள் கேட்ட யானை, பூனை, விமானம் எல்லாவற்றையும் வரைந்து கொடுத்தான் தேவ் கிருஷ்ணா. ஒவ்வொரு ஓவியமும் அவள் குழந்தை மனதில் அவன் மீதிருந்த பிம்பத்தை உயர்த்திக் கொண்டே போனது. இறுதியில் வரைந்த படத்தைக் கண்டு சந்தோஷத்தில் குதித்தாள் அம்மு.
அது இரண்டு தேவதைகளின் படம். அன்னையும் மகளும்.  அன்னை மகளின் நெற்றியில் முத்தமிடுவது போல் மிகவும் அழகாய் வரைந்திருந்தான். அதில் தன் முகத்தையும், அன்னையின் முகத்தையும் கண்ட அம்மு சந்தோஷத்தில் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“அப்பா, அம்மாவும் நானும்ப்பா…” என்று தந்தையிடம் கலங்கிய கண்களுடன் காட்டியவள்,
“இதை பிரேம் போட்டு வச்சுக்கலாம் பா… ரொம்ப அழகாருக்கு…” என்றாள்.
“சரி டா, பண்ணிடுவோம்…” என்ற சிவநேசன் நன்றியுடன் அவனைப் பார்த்தார்.
“உன்னோட திறமையும், நம்பிக்கையும் உன்னை ரொம்பப் பெரிய உயரத்துக்கு கொண்டு வரும் தம்பி… நீ நல்லா வருவ…” மனதாரக் கூறினார் சிவநேசன்.
அதற்குப் பிறகும் அம்முவுக்குத் தனிமை கொடுக்காமல் அவளை உற்சாகப் படுத்தி பேசிக் கொண்டே வந்தான் தேவ். அவனுக்கு ஏனோ ஓவியம் போலிருந்த அந்த குட்டிப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது.
மாலை தொடங்கி எங்கும் இருள் கவியத் தொடங்க புகைவண்டிக்குள் வெளிச்சம் பரவியது.
“நாம மூணு பேரும் உள்ள மாதிரி ஒண்ணு வரைஞ்சு தரீங்களா… ப்ளீஸ்…” தலையை சாய்த்து கண்ணில் கெஞ்சலுடன் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தவன், அடுத்த ஓவியத்தில் மூவரின் உருவத்தையும் கொண்டு வந்திருந்தான். சிவநேசன் அமர்ந்திருக்க இரு பக்கத்திலும் தேவ், அம்மு நின்று கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் அவளுக்கு குஷியாகிவிட்டது.
“ஏன்ப்பா, இவருக்குத் தாடி வச்சு நடுவுல நிக்க வச்சா ஜீசஸ் போல இருப்பாங்கல்ல…” அவள் கிண்டலாய் சொல்லவும் சிரித்தான்.
“தாடி எனக்கு நல்லாருக்காதுன்னு சொல்லற, அப்படித்தான…”
“இல்ல… தாடி உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னேன்…” அழகாய் சிரித்தாள்.
நேரம் கடந்து செல்ல சென்னை நெருங்கிக் கொண்டிருந்தது.
“தேவ், நான் இங்கே சென்ட்ரல் ஸ்டேஷன்ல தான் இருப்பேன்… டைம் கிடைக்கும்போது வா… பேசுவோம்…” என்று விடை பெற்றுக் கொண்டனர். கண்களில் தெளிவு வந்திருந்தாலும் அவனைப் பிரியும் வருத்தத்தோடு தந்தையுடன் நடந்தாள் அம்மு.
ரயில் சிநேகமாய் அந்த சந்திப்பு முடிந்து போனாலும் அழகான கல்வெட்டாய் மனதுக்குள் பதிந்திருந்தது.
அன்னையின் போட்டோவுக்கு மாலையிட்டு, தீபம் ஏற்றி கை கூப்பி வணங்கினாள் அம்மு. பூஜையறையில் தேவ் வரைந்த சாருமதியின் ஓவியத்தை பிரேம் செய்து வைத்திருந்தனர். ஹாலில் அழகாய் அம்மு, அன்னையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் ஓவியமும், தேவதை உடையில் இருக்கும் ஓவியமும் அலங்கரித்துக் கொண்டிருந்தது.
“அம்மு… இன்னும் கிளம்பலியா டா… டைம் ஆச்சே…” தந்தையின் குரல் கேட்டு கண்ணைத் திறந்தவள் சின்னதாய் நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.
“நான் ரெடிப்பா… இதோ கிளம்பிட்டேன்…” சொன்னவள் ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு, “வர்றேன்ப்பா…” என,
“பார்த்து பத்திரமாப் போயிட்டு வாடா…” என்றவர் அவரும் வேலைக்கு கிளம்பினார்.
சென்னையின் டிராபிக்கில் மெதுவாய் ஊர்ந்து தனது இடத்துக்கு வந்து சேர்ந்தாள்.
“ஓவியா நாட்டியப்பள்ளி” என்ற பெரிய பேனரைத் தாங்கி நின்ற காம்பவுண்டுக்குள் வண்டியை நுழைத்து நிறுத்தினாள்.
முன்னமே சில வண்டிகள் அங்கே நின்றிருக்க இறங்கி சிறிய கட்டிடத்துக்குள் நுழைந்தாள்.
“தீம் தீம் தீம் ததநித
உதநித தனதரனா…”
அழகான பெண் குரலில் மிதந்து வந்த ஸ்வரங்கள் நாட்டியமாடிக் கொண்டிருக்க அதற்கு ஏற்ப நான்கு பெண்கள் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டே வந்தவளை தலையசைத்து நடுவில் வணக்கம் தெரிவித்து, தொடர்ந்து கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் நின்று பார்த்தவள், “ஒரு நிமிஷம் பத்மா…” என்று சொல்ல பாட்டு நின்றது.
ஓரமாய் நின்ற பெண்ணிடம் சென்றவள், “சுவாதி, உன்னோட கை முத்திரை சரியா வரலை… நான் செய்யறேன் கவனி…” என்றவள் சட்டென்று அதற்குத் தயாராகி நின்று, “பத்மா, ஸ்வரம்…” என்றதும் மீண்டும் பத்மாவின் குரல் வழிந்தது.
அழகாய் கை முத்திரை எடுத்து, கண்களை அதன் வழி கொண்டு செல்ல, மனதில் உள்ள உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது போல் இருந்தது.
“சுவாதி, கை முத்திரை ரொம்ப முக்கியம்… நம்ம பாட்டோட பொருளை கை முத்திரை காட்டணும்… கை முத்திரை வழி கண் செல்லும்… கண்கள் செல்லும் வழி மனம் செல்லும்… மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு, பாவங்களை சொல்லனும்… இதைத் தான் கம்பர்,
“கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர…”
இப்படி குறிப்பிட்டிருக்கார்… இதை எப்பவும் மனசுல வச்சுக்க… அடுத்த முறை கை முத்திரை பிடிக்கும்போது அதற்குத் தகுந்த பாவம் வெளிப்படனும்…”
“ஓகே மேம்…” என்ற சுவாதி அவள் சொன்னது போல் முயற்சி செய்ய, “ம்ம்… குட்… நீங்க கண்டின்யூ பண்ணுங்க…” என்றவள் சுவாதியின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு தனது அறைக்கு நகர்ந்தாள்.
ஓவியமோ, நாட்டியமோ
அன்பை வெளிப்படுத்தும்
வழிதான் கலை…
இரண்டும் ஒருபோதும்
பிரிக்க இயலாதவை…
ஆன்மாவில் மிளிரும்
முடிவற்ற அழகின்
கலையே அவர்களின் நேசம்
காட்சியே அன்பின் வெளிப்பாடு…

Advertisement