Advertisement

அத்தியாயம் – 19
வானில் சூரியன் உதிக்கலாமா, வேண்டாமா என யோசிக்க, இருள் போர்த்திக் கொண்டிருந்த அதிகாலை. அதை விரட்ட முயன்று வெளிச்சத்தை சிதற வைத்து தோற்றுக் கொண்டிருந்தது காரின் ஹெட்லைட்.
ஊரே இன்னும் சோம்பல் முறித்து முழுமையாய் உணராமல் இருந்தாலும் காருக்குள் இருந்த தேவ் கிருஷ்ணாவும், ஓவியாவும் மிகவும் பிரஷ்ஷாக இருந்தனர்.
காலை ஐந்து மணிக்கே ஓவியாவை வீட்டில் சென்று அழைத்துக் கொண்டு தனது இன்னோவாவை ஆந்திராவை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் பிரம்மா. ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி இருந்தார் சிவநேசன்.
ஆந்திராவில் அவனது ஊரான நரசிங்கப்பள்ளியை அடைய குறைந்தது 14 மணி நேரம் தேவைப்படலாம்… பிளைட்டில் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து டாக்ஸி அழைத்து ஊருக்கு செல்லவே பிரம்மா பிளான் செய்திருந்தான். ஆனால் காரில் சென்றால் சிறுவயதில் கண்ட ஆந்திராவை ஒரு சுற்று வந்தது போல் இருக்குமென்று ஓவியா ஆசைப்படவே முடிவை மாற்றி காரை எடுத்திருந்தான்.
“என்ன ஓவி, யோசனையாவே இருக்க…” அமைதியாய் இருந்தவளை நோக்கிப் புன்னகைத்தபடி கேட்டான் பிரம்மா.
“ஹூம்… ஒண்ணுமில்ல தேவ்… நீ எவ்ளோதான் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு சொன்னாலும் கொஞ்சமே கொஞ்சம் பயமா இருக்கு…”
“கம்மான் ஓவி, இப்படி தள்ளி உக்கார்ந்தா அப்படி தான் யோசிக்க தோணும்… ரோடும், என் தோளும் ப்ரீயாருக்கு… அப்படியே சாஞ்சுகிட்டா, பயமெல்லாம் ஓடிப் போயிடும்…”
“போங்க தேவ்… உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்… அத்தையைப் பார்த்து பேசற வரைக்கும் நான் இப்படி தான் இருப்பேன்… நோ டச்சிங்… நோ ஒட்டிங்…”
“அடிப்பாவி… கொஞ்ச நஞ்ச தூரம்னு நினைச்சியா… பிளைட்ல போலாம்னு சொன்னவனை, டிரைவராக்கி கார்ல கூட்டிட்டு வந்துட்டு பேட்டா கொடுக்கலேன்னா எப்படி… அப்பப்ப பூஸ்ட் கொடுத்தா தான் நாங்களும் எனர்ஜி குறையாம வண்டி ஓட்ட முடியும்…”
“ஹூம்… பார்க்கலாம், பார்க்கலாம்…” என்றவளை சட்டென்று ஒரு கையால் வளைத்து அருகே இழுத்தவன் இதழை நெருங்க, அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிவதைக் கண்டு கன்னத்தில் முத்தமிட்டு விடுவித்தான்.
“நீயா கொடுத்துட்டா சைவ முத்தத்தோட போயிடும்… நானா எடுத்துகிட்டா அசைவ முத்தம் தான்… வசதி எப்படின்னு நீயே தீர்மானிச்சுக்க…”
அவனை நாணத்துடன் நோக்கியவள், “உனக்கு நீ வச்ச  பிரம்மாவை விட, பேரன்ட்ஸ் வச்ச தேவ் கிருஷ்ணாதான் மேட்ச்…” சிரித்தவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள கார் சாலையை ரன்வேயாக்கி விமானமாய் பறந்தது.
ஓவியா வரும்வரை நாட்டியப்பள்ளியை ராதிகா பார்த்துக் கொள்வதாக சொல்லி இருந்தாள். காலை, மாலை ஓப்பன் செய்யவும், குளோஸ் பண்ணவும் மட்டும் சிவநேசனிடம் சொல்லி இருந்தாள் ஓவியா.
நான்கு நாட்கள் விருப்பமுள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு பயிற்சி செய்ய வந்தால் போதுமென்று கூறியிருந்தாள்.
“ஓவி… சிங்கப்பூர்ல உன்னை ஒரு புரோகிராம் பண்ண முடியுமான்னு என் நண்பர் கேட்டிருந்தாரே… யோசிச்சியா…”
“இப்ப புது புரோகிராம் எதும் யோசிக்கிற மனநிலைல நான் இல்லை தேவ்… இப்போதைக்கு உன் வீட்ல என்ன சொல்லப் போறாங்க, அவங்களுக்கு நம்ம நேசத்தை எப்படி புரிய வைக்கலாம்னு தான் மனசு யோசிச்சுட்டு இருக்கு… அதும் இல்லாம அப்பாவுக்கும் அடிக்கடி உடம்பு முடியலை… நம்ம கல்யாணம் நடந்துட்டா அவர் கொஞ்சம் நிம்மதியாகிருவார்… அப்புறம் மத்ததெல்லாம் யோசிச்சுக்கலாம்…” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தான் தேவ் கிருஷ்ணா.
“எனக்கென்னவோ, அப்பாவை விட பொண்ணுக்கு தான் கல்யாணத்துக்கு அவசரம் போலத் தெரியுதே…” நமட்டு சிரிப்புடன் சொன்னவனை முறைத்தாள்.
“ஓஹோ, உங்களுக்கு அவசரம் இல்லையா… அப்ப ரெண்டு வருஷம் கழிச்சுப் பண்ணலாம்னு அப்பாட்ட சொல்லறேன்…”
“அய்யய்யோ, வேணாம் தாயே… உனக்கு வேணும்னா அவசரம் இல்லாம இருக்கலாம்… எப்ப உன் மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சுதோ அப்ப இருந்து என் மனசும், உடம்பும் உனக்காக ரொம்பவே ஏங்குது… கல்யாணத்தை தள்ளிப்போட்டா அப்புறம் உனக்கு தான் பிரச்சனை ஆகிடும் சொல்லிட்டேன்…” என்றவனை கையில் அடித்தவள்,
“ச்சீ… சென்சார் இல்லாமப் பேசாத தேவ்… அப்புறம் வாயிலயே கடிச்சு வச்சிருவேன்…” அவசரத்தில் வார்த்தையை விட்டு அவள் முழிக்க, “வாவ்… இந்தக் கடிக்கு நான் ரெடி…” என்றவன் உதட்டைக் குவித்து அவளிடம் நெருங்க, வாயிலேயே அடித்து விலக்கினாள்.
“ச்சே… நீ இப்படி வம்பு பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா பிளைட்லயே போகலாம்னு சொல்லிருப்பேன்…” அவள் முனங்க அவன் உற்சாகமாய் சிரித்தான்.
“என்ன சிரிப்பு, அதான் நல்லா விடிஞ்சிருச்சுல்ல… ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு…” என்றவள் FM ஐ வைக்க அது, “நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தா முத்தமாக் கொடு… மொத்தமாக் கொடு…” எனவும், “ஐயையோ…” என்று வேகமாய் அதை ஆப் செய்ய பிரம்மா அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்துக் கொண்டான்.
சீண்டலும், நோண்டலுமாய் வண்டியோடு நேரமும் நகர மதிய உணவை விஜயவாடாவில் சிம்பிளாய் ஒரு ஹோட்டலில் முடித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.
ஓவியா வெளியே தெரிந்த பயணக் காட்சிகளை ரசிக்க, தேவ் அவளை ரசித்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். மாலை தேநீருடன் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.
இராசமன்றி என்ற நகரின் கோதாவரி நதியின் மீதிருந்த பாலத்தில் செல்கையில் ஆர்வத்துடன் பார்த்தாள் ஓவியா. அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் தேவின் அன்னை அலைபேசியில் வர, எடுத்துப் பேசினான்.
“தேவ்… எங்க வந்திட்டு இருக்கிங்க…”
“ராசமன்றி தாண்டிட்டோம் மா… இன்னும் ரெண்டு மணி நேரத்துல நம்ம ஊருக்கு வந்திருவோம்…”
“ம்ம்… சரி, ராத்திரி நேரம்… பார்த்து பத்திரமா வண்டி ஓட்டிட்டு வா… நான் வச்சிடறேன்…” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
ஓவியா அவனையே என்னவென்று பார்க்க, “உன் மாமியார் நாம எங்க வந்துட்டோம்னு விசாரிச்சாங்க, வேற ஒண்ணும் இல்ல…” என்றான். “ம்ம்… உங்களுக்கு டயர்டா இருக்கா தேவ்… இவ்ளோ தூரம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல…” வருத்தமாய் சொன்னவளை நோக்கி சிரித்தான்.
“அதுக்கான மருந்து தான் என் பக்கத்துலயே இருக்கே…” சொல்லி புருவத்தை தூக்கி சிரித்தவனின் தோளில் நாணத்துடன் சரிந்து கொண்டவள் அவன் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தமிட அவனது சோர்ந்த கண்களில் பல்பெரிந்தது.
“உங்க வீட்டுல எல்லாருக்கும் நாம வாங்கின டிரஸ் எல்லாம் பிடிக்குமான்னு தெரியல… எத்தன வருஷம் கழிச்சு வீட்டுக்குப் போறீங்க… நாம ஸ்வீட் மட்டும் தானே வாங்கிட்டு வந்தோம்… வழியில கொஞ்சம் புரூட்ஸ் வாங்கிக்கலாம் தேவ்…”
“உத்தரவு மகாராணி…” என்றவன் ஒரு புரூட் ஸ்டாலைக் கண்டதும் வண்டியை நிறுத்த இருவரும் சென்று வாங்கிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.
மாலை மயங்கி சூரியன் வானத்தில் காணாமல் போயிருக்க, இருள் சூழத் தொடங்கியிருந்தது. எட்டரையைத் தாண்ட நரசிங்கப்பள்ளி பெயர்ப்பலகை அவர்களை வரவேற்றது.
அதைப் பார்த்ததும் ஓவியாவின் முகத்தில் திகில் தெரிய அவள் கையை ஆறுதலாய் பற்றிக் கொண்டான் தேவ்.
“ஓவி… டென்ஷனாகாம கூலா இரு… நாம என்ன ஜூவுக்கா போறோம்… என் அப்பா, அம்மா ஒண்ணும் நம்மளைக் கடிச்சு தின்னுற மாட்டாங்க… எதுவா இருந்தாலும் சமாளிப்போம்…” தேவ் சொல்ல, “ம்ம்…” தலையாட்டினாள்.
மேலும் அரை மணி நேரப் பயணத்தில் அவர்களின் வீடு இருந்த தெருவுக்குள் வண்டி நுழைந்தது. இரவு நேரமாதலால் ஊர் உறங்குவதற்கான ஆயத்தத்தில் இருக்க இவர்களை யாரும் கவனிக்கவில்லை.
ஒரு பெரிய காம்பவுண்டை ஒட்டித் தெரிந்த பெரிய கேட்டின் முன் காரை நிறுத்தியவன், சற்று நேரம் தயங்கிவிட்டு இறங்கி கேட்டைத் திறந்தான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த வரவு…” என்னும் தயக்கத்தில் சற்று நின்று பார்த்துவிட்டு வண்டியை கேட்டுக்குள் நுழைத்தான். ஊரும், வீடும் எத்தனையோ மாறி இருந்தது.
வீட்டு வாசலிலேயே குடும்பத்தினர் அவர்களுக்காய் காத்து நிற்பது புரிய, தனையும் மீறிய பரவசத்தில் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தான். கார் நின்றதும் தேவ் முதலில் இறங்க, ஓடி வந்து அணைத்துக் கொண்டான் தம்பி சஞ்சய்.
“அண்ணா… எப்படி இருக்கீங்க… எங்களை வேண்டாம்னு முடிவே பண்ணிட்டியா…” குரல் தழுதழுத்தது. அதைக் காருக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஓவியாவின் கண்களும் பனித்தது.
அன்னை ஆருத்ரா மகனைக் கண்டதும் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் செல்ல, “அம்மா…” அழைத்துக் கொண்டே அவரிடம் சென்றவன், அவரது கண்ணீரைக் கண்டதும் கலங்கினான்.
“அம்மா… ப்ளீஸ், அழாதீங்க…” என்றவனின் கையைத் தட்டி விட்டவர், “போடா… உனக்கு அம்மா கூட வேண்டாதவளா போயிட்டேன்ல… நீ போன நாள்ல இருந்து அழுதுட்டே தான இருக்கேன்… இப்ப மட்டும் என்ன அக்கறை…”
“அம்மா… அப்ப என்னைத் திட்ட தான் கூப்பிட்டீங்களா…” என்றதும் முறைத்தவர், “திட்டுறதா, அடிக்க கூட செய்வேன்… பெத்தவங்க கிட்ட உனக்கு இத்தனை பிடிவாதம் ஆகாது…” என்று செல்லமாய் தனக்கு மேல் உயர்ந்து நிற்கும் மகனின் முதுகில் ரெண்டு போட்டுவிட்டே சமாதானமானார்.
“எதுக்குடா, இப்படி புதர் மாதிரி தாடி வளர்த்தி வச்சிருக்க…” மகனின் கன்னம் தடவி அவனை ஆவலுடன் கண்ணில் நிறைத்துக் கொண்டார்.
“அப்பா எங்க மா…” நரைத்தாலும் நிமிர்வோடு நின்ற அன்னையிடம் கேட்க, “ம்ம்… வருவார்…” என்றார்.
“அம்மா, அண்ணனைப் பார்த்ததுல அவர் கூட வந்தவங்களை மறந்துட்டிங்க பாருங்க… அவங்களைக் கூப்பிடுங்க…” என்றான் தம்பி. 
“ம்ம்… கூப்பிடுவோம், என்ன அவசரம்… முதல்ல என் பையனை கொஞ்சிக்கிறேன்…” ஆருத்ரா சொல்லவும்,   
“அச்சோ, சாரிமா… உங்களைப் பார்த்ததும் கார் லாக் பண்ணி இறங்கிட்டேன்… பாவம் ஓவி…” பதட்டமாய் சென்றான் தேவ்.
பாவமாய் காருக்குள் அமர்ந்து அவர்களின் பாசப் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் தேவ் கையிலிருந்த சாவியை அமர்த்தவும் லாக் விடுபட்டது.
“சாரி, ஓவி… கார்ல இருந்து இறங்கும்போதே சாவில லாக் பிரஸ் பண்ணிட்டேன்… வா…” அழைத்தான்.
“பரவால்ல தேவ்…” உதடுகள் சொன்னாலும் இதயத்தின் நடுக்கம் முகத்தில் தெரிந்தது. காரில் இருந்த பொருட்களை எல்லாம் தேவ் வெளியே வைக்க தம்பியும், ஓவியாவும் எடுத்துக் கொண்டனர்.
நின்ற இடத்திலிருந்தே ஒவியாவைப் பார்வையால் எடை போட்டுக் கொண்டிருந்த ஆருத்ரா, “சரி, உள்ள வாங்க…” பொதுவாய் சொல்லிவிட்டு முன்னில் நடக்க ஓவியா அவனை திகிலுடன் பார்க்க தேவ் கண்ணடித்தான்.
“இவன் வேற என் அவஸ்தை புரியாம இம்சை பண்ணுறானே…” யோசித்துக் கொண்டே வந்தவள்,
“ஒரு நிமிஷம் ஆன்ட்டி…” என்றதும் நின்றார் ஆருத்ரா.
“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க, ஆன்ட்டி…” சட்டென்று அவர் காலில் விழுந்தவளை திகைப்புடன் நோக்கியவர்,
“ஹேய்… எதுக்கு இப்ப கால்ல எல்லாம் விழுந்துட்டு…” என,
“பெரியவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கறது நல்லது தானே ஆன்ட்டி…” குனிந்தபடி சொன்னவளிடம், “ம்ம்… சரி நல்லாரு… எழுந்திரு…” என தூக்கி விட்டார்.
நடப்பதை தேவ் வியப்புடன் நோக்க தம்பி சஞ்சய் கிருஷ்ணா அண்ணனை நோக்கி,
“ம்ம்… சூப்பர், அம்மா கிளீன் போல்டு…” என கட்டை விரலைக் காட்டிக் கூற சிரித்துக் கொண்டான் தேவ்.
அண்ணன் அன்னையின் கம்பீர உருவத்தை ஒத்திருக்க, தம்பி அப்படியே தந்தையின் ஜாடையில் இருந்தாலும் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவனாய் இருந்தான்.
“இந்தாம்மா பொண்ணு, உன் பேரென்ன…” என்றார் ஆருத்ரா.
“ஓ…ஓவியா ஆன்ட்டி…”
“ம்ம்… ஆளும், பேரெல்லாம் நல்லா தான் இருக்கு…” என்றவர் ஒரு அறையைக் காட்டி, “நீ இதுல தங்கிக்க… சஞ்சு, அண்ணனை உன் ரூமுக்கு அழைச்சிட்டுப் போ… ரெண்டு பேரும் பிரஷ் ஆகிட்டு வாங்க… சாப்பிட்டு பேசிக்கலாம்…”
“அப்பாவை பார்க்கலியே மா… அவர் எங்க…” கேட்டுக் கொண்டே பார்வையை வீடெங்கும் ஓட்டினான் தேவ்.
“ஏன், அவர்கிட்ட உன் வளர்ச்சியைக் காட்டனும்னு மனசு துடிக்குதோ, சாப்பிட்டு அப்பாவைப் பார்க்கலாம்.. குளிச்சிட்டு வாங்க…” என்றவர் மேலே பேசாமல் நகர்ந்தார்.
“சஞ்சு, அப்பா எங்கடா… என்னைப் பார்க்க விரும்பாம ரூமுக்குள்ளயே இருக்காரா… இல்ல, நான் வந்ததே பிடிக்கலயா…” யோசனையுடன் கேட்ட அண்ணனிடம்,
“அப்படிலாம் எதுவும் இல்லைண்ணா, முதல்ல அம்மா சொன்னபடி செய்ங்க…” தம்பி சொல்லிக் கொண்டிருக்க,
“சஞ்சு, இங்க வா…” அடுக்களைக்கு அழைத்தார் ஆருத்ரா.
“என்னாச்சு… அப்பா வீட்டுல உள்ள போலத் தோணலியே… எங்க போயிட்டார்… ஒருவேளை நான் வரேன்னு கோச்சுட்டு கிளம்பிட்டாரா… அம்மா பேசினப்ப அப்பா வர சொல்லுறார்னு தானே சொன்னாங்க…” யோசித்தபடி குளித்து வந்தான்.
தனி அறையில் விடப்பட்ட ஓவியாவின் மனதும் ஆருத்ராவின் ஒட்டாத பேச்சிலும், தன்னை விலக்கி நிறுத்திய பார்வையிலும் திகில் கொண்டிருக்க கலக்கத்துடன் குளித்து முடித்து சுரிதாரில் இருந்து சேலைக்கு மாறியவள் தேவ் அலைபேசியில் அழைக்கவும் ஆர்வமாய் எடுத்தாள்.
“தேவ்… எ..எனக்கு கொஞ்சம் பயமாருக்கு… அத்தைக்கு என்னைப் பிடிக்கல போலருக்கு…”
                                        
“ஏன், அப்படி நினைக்கிற அம்மு…”
“அவங்க பேசுறதுல எனக்கு அப்படி தான் தோணுச்சு…” அழுதிடும் குரலில் சொன்னவளிடம் ஆறுதலாய் பேசினான்.
“அப்படி எல்லாம் இல்லடா, அம்மாவோட இயல்பு அப்படி… அவ்ளோ சீக்கிரம் யாருகிட்டயும் ஒட்ட மாட்டாங்க… ஈசியா எல்லாரோடவும் பழக மாட்டாங்க… ஆனா மனசுக்குப் பிடிச்சுட்டா ரொம்ப நேசிப்பாங்க…” என்றான் தேவ்.
“ம்ம்… எனக்கு எங்க காலேஜ் பிரின்சி ஜெயந்தி மேமைப் பார்த்த போலவே இருக்கு… ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசரா…”
“அம்மா முதல் பார்வைக்கு ஸ்ட்ரிக்ட் தான், பழகிட்டா ரொம்ப பிரண்ட்லி…” என்றான் தேவ்.
“ம்ம்… சரி வாங்க, காணோம்னு நினைக்கப் போறாங்க…”
“ம்ம்… நீ இயல்பா இரு, உன்னை நிச்சயம் அவங்களுக்குப் பிடிக்காம இருக்காது… என் அம்மாவைக் கண்டே மிரண்டு போனா அப்பாவைப் பார்த்தா என்ன சொல்லுவியோ…”
“உங்க அப்பா இன்னும் டெரரா தேவ்…” பயத்துடன் கேட்டாள்.
“ம்ம்… பார்க்கத் தானே போறோம்… சரி வெளிய வா… நான் கட் பண்ணறேன்…” என்றவனை அழைப்பைத் துண்டித்து டிரவுசர், டீசர்ட் அணிந்து வெளியே வந்தான்.
“ஆன்ட்டி, நான் எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா…” ஓவியா ஆருத்ராவிடம் கேட்க, “வீட்டுக்கு வந்த  விருந்தாளியை வேலை வாங்கக் கூடாது… நீ உக்காருமா…” என அவர் மறுக்க ஓவியாவின் முகம் சுருங்கிப் போனது.
அமைதியாய் விலகி நின்றவளை, “வா, சாப்பிடலாம்… தேவ், சஞ்சய் உக்காருங்க…” சொல்லிக் கொண்டே மேசையில் வைக்க ஓவியா அமரவும், “நீ இன்னும் சாப்பிடலியா…” தம்பியிடம் கேட்டுக் கொண்டே அமர்ந்தான் தேவ்.
“நான் மட்டுமா, அம்மா கூடதான் சாப்பிடல… நீங்க வர்றதுக்கு வெயிட்டிங்…” என்றான்.
“ஏன்மா, சாப்பிட்டிருக்கலாம்ல..” மகன் கேட்க, “ஆன்ட்டி, நீங்க உக்காருங்க… நான் பரிமாறுறேன்…” என்றாள் ஓவியா.
“நீங்க எல்லாம் சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிடறேன்…” என்றவரிடம் மறுக்க முடியாமல் அமைதியானாள். சப்பாத்தியுடன் சிக்கன் கிரேவி, மட்டன் குருமா என அருமையாய், காரசாரமாய் இருந்தாலும் ஓவியாவுக்கு தான் ஒரு ஒட்டாத தன்மையில் தொண்டைக்குள் இறங்குவேனா என சண்டித்தனம் பிடித்தது.
“எவ்ளோ வருஷமாச்சு, என் சமையலை நீ சாப்பிட்டு…” மகனின் தட்டில் வைத்தவரிடம், “உங்க கார தோசையை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் மா…” என்றான் மகன்.
“ம்ம்… காரதோசை மிஸ் பண்ணிருக்க, ஆனா, அம்மாவை மிஸ் பண்ணினேன்னு தோணலைல…” கலங்கினார்.
“அம்மா, ப்ளீஸ்… பீல் பண்ணாதிங்க… எதுவும் இப்படில்லாம் நடக்கணும்னு யோசிச்சு செய்ததில்லை… சந்தர்ப்பமும், விதியும் எல்லாத்தையும் தீர்மானிச்சிருச்சு… நடந்த எதையும் மாத்த முடியாது, இனி வர்றதை சந்தோஷமா மாத்திக்க முயற்சி பண்ணுவோம்…” என்றான் பிரம்மா.
“ம்ம்… தத்துவமெல்லாம் சொல்லுற அளவுக்கு என் பிள்ளை வளர்ந்துட்டான்னு எனக்குத் தெரியாமப் போயிருச்சு… சரி சாப்பிடு…” என்றவர், “நீயும் சாப்பிடு ஓவியா..” என்றார்.
“அம்மா, நீங்களும் உக்காருங்க, எல்லாம் மேசைல தானே இருக்கு, வேணும்னா எடுத்துக்கலாம்…” தேவ் சொல்ல அவரும் அமர்ந்தார். அமைதியாய் சாப்பிடத் தொடங்கினர்.
சாப்பிட்டு எழுந்ததும் எல்லாம் ஒதுக்கி வைத்தவரிடம், “அப்பா வீட்டுல இல்லியாம்மா… நான் வந்தது அவருக்குப் பிடிக்கலியா…” மனதின் உறுத்தலை தாயிடம் கேட்டான் பிள்ளை. அவனது கேள்வியில் திகைத்தவர், “வா, அப்பாவைப் பார்க்கலாம்…” அழைத்துச் சென்றார்.
“ஒருவேளை, அப்பா வீட்டில் இருந்தும் என்னைப் பார்க்க மாட்டேன்னு முரண்டு பிடிக்கிறாரோ…” தேவ் யோசிக்க, ஓவியா பயத்துடன் ஒன்றும் புரியாமல் தொடர்ந்தாள்.
ஆருத்ரா அறைக்கதவைத் திறக்க, ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் நிறைந்திருந்தது. சுவரில் லைட்டுக்கான சுவிட்சைத் தேய்த்ததும் அறை பளீரென்று வெளிச்சத்தில் குளிக்க,  கட்டிலில் படுத்திருந்த தந்தை ராம் கிருஷ்ணா பார்வைக்குக் கிடைக்க, திகைப்புடன் பார்த்தான் தேவ் கிருஷ்ணா.
தோல்வி என்பது
ஒரு செயலின் முடிவல்ல…
அதை நாம் எப்படி
ஏற்றுக் கொள்கிறோம்
என்னும் மனநிலையே…
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும்
ஓராயிரம் தோல்விகள் நிச்சயம்
உறங்கிக் கொண்டிருக்கும்…

Advertisement