Advertisement

“ஹூக்கும், நான் என்ன பண்ணேன்…”
“நீ என்ன பண்ணேன்னு என்னாலயும் சொல்ல முடியல… ஆனா, நான் நானா இல்லாத போல, மனசு ஒரு மாதிரி லேசா மிதக்கிற போலவே பீலாகுது… இதுவரை இப்படி ஒரு உணர்வை நான் உணர்ந்தது இல்ல…”
“ஹூம்… இங்க மட்டும் என்னவாம்… எத்தனை தடவ உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன் தெரியுமா… வேலையா இருப்பிங்கன்னு கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்…”
“ஹூம்… இதான் ஒரு புரிதலான பொண்டாட்டிக்கு அழகு… இப்பதான் ஓவியத்தை முடிச்சிட்டு சாப்பிட்டு வரேன்…”
“ஹாஹா… ஒரே நாள்ல காதலில இருந்து பொண்டாட்டிக்கு பிரமோஷன் கொடுத்துட்டிங்களே…”
“ம்ம்… மனசிருந்தா மார்க்கமுண்டு… எப்ப நம்ம மனசு ஒண்ணாச்சோ, அப்பவே நீ என் பொண்டாட்டி ஆகிட்ட…”
“ஹூம்… கேக்க நல்லாத்தான் இருக்கு… ஆனா அத்தை சொன்னதை நினைச்சா தான் கொஞ்சம் பயம்…”
“அம்மு… எப்பவும் பாசிடிவா யோசிச்சுப் பழகு… வாழ்க்கைல எந்த ஒரு விஷயமும் நம்ம கைல தான் இருக்கு… நாமதான் நடக்கிறதை பாசிடிவா மாத்திக்கணும்… என் வீட்ல எப்படிப் பேசி சம்மதம் வாங்குறதுன்னு எனக்குத் தெரியும்… நீ அதையே யோசிச்சு கவலைப்படாம ப்ரீயா இரு…”
“சரி தேவ்… ஓவியத்துல எனக்கும் ஒரு காப்பி வேணும்…”
“உனக்குன்னு ரெண்டு ஓவியத்தை தனியா எடுத்து வச்சிருக்கேன்… அந்த சிலைக்குப் பக்கத்துல நிக்கிற உயிர் கொண்ட சிலை எவ்ளோ அழகாருக்கு தெரியுமா…”
“ஹாஹா.. போதும் போதும், எனக்கு வெக்கமா வருது… சரி வொர்க் முடிங்க, நாளைக்குப் பேசறேன்… குட் நைட்…”
“ம்ம்… என்னடி, சட்டுன்னு குட் நைட் சொல்லற… அத்தானுக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் கொடுக்கிறது…”
“ஸ்பெஷலா தானே, கல்யாணம் முடியட்டும்… போதும் போதும்னு கதர்ற அளவுக்கு நிஜமாவே கொடுக்கிறேன்… இப்போதைக்கு என் போனை எச்சில் பண்ண எந்த ஐடியாவும் இல்லை…” நமுட்டுச் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள்.
“ஹாஹா… லவ் யூ டி செல்லம்…” என்றவன் அவனது போனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு புன்னகையுடன் எழுந்தான். சில முக்கியமானவர்களுக்கு மட்டும் போனில் அழைத்துப் பேசிவிட்டு கீழே வந்தான்.
************
அடுத்தநாள் வழக்கம் போல் நாட்டியப்பள்ளிக்கு சென்றாள் ஓவியா. அவளுக்கு முன்னே வந்திருந்த ராதிகா தோழியைக் கண்டதும் சந்தோஷத்துடன் அணைத்துக் கொண்டாள்.
“ஹேய், ராதி மெதுவா… பாப்பாவைப் போட்டு அமுக்காத…”
“ஓவி… நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா… என்னால வீட்டுல இருக்கவே முடியல… அதான், கொஞ்சம் பரவால்லன்னதும் கிளம்பி வந்துட்டேன்…”
“ம்ம்… சொன்னாக் கேக்க மாட்ட… இன்னும் கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடுத்திருக்கலாம்…” கடிந்து கொண்ட தோழியை முறைத்தவள், “போதும், போதும்… எவ்ளோ சந்தோஷமான விஷயம் எல்லாம் நடந்திருக்கு… இதை விலாவாரியா கேட்டுத் தெரிஞ்சுக்காம என்னால எப்படி வீட்ல இருக்க முடியும்…”
“ம்ம்… ப்ரீ டைம்ல டீடைலாப் பேசுவோம்… இப்ப கிளாசைக் கவனிப்போம் வா…” சொன்னவள் வெளியே வந்தாள். அவளைக் கண்டு புன்னகைத்த பத்மா, “என்ன ஓவி, ஒரே நாள்ல உலக பாமஸ் ஆகிட்ட… அது உண்மையா இருக்கணும்னு தான் எங்க ஆசையும்…” என்றாள்.
“ஹாஹா, அக்கா… உங்க வார்த்தை பலிக்கட்டும்…” சொன்னவள் தயாராய் நின்றிருந்த மாணவிகளை நோக்கி ஒரு சிநேகப் புன்னகை உதிர்த்துவிட்டு பயிற்சியை தொடங்க அவர்களும் அதே போல் அபிநயம் பிடித்தனர்.
“நாட்டியத்துக்கு உடல் மொழி மிகவும் முக்கியம்… முகத்தை இத்தனை உயரத்தில் நிமிர்த்தி திருப்ப வேண்டும்… கண்ணை கை சென்ற திசையில் பார்க்க வேண்டும்… கை, இந்த அளவு உயர்த்த வேண்டும், காலை இந்த அளவு மட்டுமே வளைக்க வேண்டும் என்பதெல்லாம் அளவோடு செய்தால் மட்டுமே அழகாய் இருக்கும்…” சொன்னவள் சரியாய் செய்யாத மாணவிகளின் அருகே நின்று சரியாக்கிக் கொடுத்தாள்.
“ராதி, நீ பிராக்டீஸ் கொடுக்க வேண்டாம்… கவனிச்சாப் போதும்…” என்று அவளது வகுப்பையும் ஒவியா எடுத்தாள். மதிய உணவு நேரத்தில் ஓவியாவிடம் கேள்வியால் துளைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள் ராதிகா.
“பிரம்மா அம்மா ஏன் அப்படி சொல்லிருப்பாங்க… ஒருவேளை, உங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல தான் உன்னையும் அழைச்சிட்டு வர சொன்னாங்களோ…” ராதிகா சொல்ல ஓவியாவும் அப்படி இருக்குமோ… என யோசித்தாள்.
“ராதி, நீ சொன்ன போல நடந்துச்சுன்னா உன் குழந்தைக்கு எங்க கையால தங்கத்துல செயின் போடறேன்…” சிரித்தாள்.
“பார்றா… இல்லேன்னா போட மாட்டியா… அத்தை முறைக்கு செய்ய வேண்டியதை ஒழுங்கு மரியாதையா செஞ்சுடணும் சொல்லிட்டேன்… சட்டுபுன்னுன்னு உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணைப் பெத்துகிட்டா தான, என் புள்ளைக்கு கல்யாணம் பண்ண வசதியா இருக்கும்…” என்று சொல்லவும்,
“ச்சீ போடி…” என்றவள் நாணத்துடன் சென்று விட்டாள். ராதி ஓய்வெடுக்க ஓவியா வேலைகளை முடித்தாள்.
மாலை அலுவலகம் முடிந்து சரத் மனைவியை அழைத்துச் செல்ல வரவும் ராதிகா கிளம்பினாள்.
இறுதி பாட்ச் மாணவிகள் தயாராய் இருந்தனர்.
“என்ன ரம்யா, சரியா பிராக்டீஸ் பண்ணறியா…” அவளை நோக்கி சிநேகமாய் சிரித்தவளை கேட்டுக் கொண்டே தனது இடத்துக்கு வந்து நின்றாள்.
“இன்னைக்கு சில கை முத்திரைகளை சொல்லிக் கொடுக்கிறேன்… அதை பிராக்டீஸ் பண்ணுங்க…”  
“ஓகே மேம்…” என்றனர் மாணவிகள் கோரசாக.
“முதல்ல பதாகம்… பதாகம்னா கொடி… பெருவிரலை லேசா மடிச்சு மத்த விரலோட பக்கத்தில் சேர்த்து பிடிக்கணும்…” சொல்லியபடி செய்து காண்பிக்க மாணவிகளும் முயன்றனர்.
“அடுத்து திரிப்பதாகம்… பதாகத்தில் மோதிர விரலை மடக்கினா திரிப்பதாகம்…” மாணவிகள் உற்சாகத்துடன் முயற்சி செய்தனர்.
“மேடம்…” பின்னில் செக்யூரிட்டி ராஜனின் குரல் கேட்க திரும்பினாள் ஓவியா.
“என்ன ராஜன்…”
“காபி கேட்டிங்களே… வாங்கிட்டு வந்திருக்கேன்…”
“ஓ… ஆமா, கப்புல ஊத்தி இங்க வச்சிருங்க…” என்றவள் மாணவிகளை கவனிக்க, ஒரு பீங்கான் கோப்பையை எடுத்து  வந்து காப்பியை ஊற்றியவனின் கழுகுப் பார்வை கொழுகொழு ரம்யாவின் மீதே நிலைத்திருந்தது.
“அடுத்து அர்த்தப்பதாகம், கர்த்தரீமுகம், மயூரம், அர்த்த சந்திரன்…” சொல்லிக் கொண்டே அடுத்த  முத்திரைகளையும் செய்து காண்பித்து, “இந்த ஆறு முத்திரைகளையும் பிராக்டீஸ் பண்ணுங்க…” என்றதும் மாணவிகள் முயன்றனர்.
வகுப்பு மும்மரத்தில் ராஜன் வைத்துச் சென்ற காபியை மறந்திருக்க அது சில்லிடத் தொடங்கியிருந்தது. ஒரு மணி நேரம் முடிந்ததும் “ஓகே, இன்னைக்கு இது போதும்… வீட்டுக்கு கிளம்புங்க…” என்றவள் அப்போதுதான் காபியை கவனிக்க, ஆறிய காபியில் ஆடை தேங்கி அதில் ஒரு ஈ தற்கொலை செய்து கொண்டிருந்தது.
“ப்ச்… காபியை மறந்துட்டனே… சரி, வீட்டுக்குப் போயி அப்பா கையால குடிக்கலாம்…” அதைக் கீழே கொட்டி கழுவிவிட்டு, எல்லா அறைகளையும் செக் பண்ணி, பூட்டியவள் வெளியே வர ரம்யா கிளம்பாமல் ராஜனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன ரம்யா, நீ இன்னும் கிளம்பலியா, டைம் ஆச்சே… இவர்கிட்ட என்ன பேசிட்டு இருக்க…” என்றாள்.
“சும்மா, நீங்க வர்றதுக்கு தான் வெயிட் பண்ணுது மேடம்…” ராஜன் சொல்லவும்,
“ஓ… சரி வா… நான் பஸ் ஸ்டாப்புல டிராப் பண்ணிடறேன்…” சொன்னவள் அவளையும் ஏற்றிக் கொண்டு கிளம்ப ராஜனின் இதழ்களில் கோரமாய் ஒரு சிரிப்பு மின்னி மறைந்தது.
“மேம்… இந்த கை முத்திரை மொத்தம் எத்தனை இருக்கு…” பின்னிலிருந்து ரம்யா கேட்க அவளது ஆர்வம் உணர்ந்து புன்னகைத்தாள் ஓவியா.
“பரவால்லியே, ரொம்ப இன்ட்ரஸ்டா கேக்கறியே… இன்னைக்கு நான் சொல்லிக் கொடுத்தது ஒற்றைக் கை முத்திரை… அதுல மட்டும் 28 முத்திரை இருக்கு… அடுத்து ரெட்டைக் கை முத்திரைல 24 முத்திரை இருக்கு…”
“ஓ… சூப்பர் மேம்…” என்றாள் ரம்யா திகைப்புடன்.
“ரம்யா, உனக்கு நாட்டியத்துல நல்ல ஆர்வம் இருக்கு… வீட்ல டெய்லி பிராக்டீஸ் பண்ணு, ஈசியாருக்கும்…”.
“நான் வீட்டுலயும் பண்ணறேன் மேம்… எனக்கும் உங்களைப் போல பரதநாட்டிய டான்சர் ஆகணும்னு ஆசையா இருக்கு…”
“ஹாஹா, முயற்சியும், ஆர்வமும் இருந்தா என்னைப் போல என்ன, என்னை விடப் பெரிய டான்சரா கூட வர முடியும்……”
“நீங்க நல்லா சொல்லிக் கொடுக்கறீங்க மேடம்…” அவள் சொல்லும்போதே பஸ்ஸ்டாப் வந்துவிட, வண்டியை நிறுத்தினாள் ஓவியா.
பேருந்துக்காய் அங்கே இருவர் காத்திருக்க, “ஓகே ரம்யா, பார்த்து, பத்திரமா வீட்டுக்குப் போ…” என்றாள்.
“சரி மேம், ரொம்ப தேங்க்ஸ்…” என்றவள் முதுகில் பள்ளிப் பொதியுடன் பை சொல்லிக் கையசைக்க, கிளம்பியவள் வீட்டுக்கு செல்லும் சாலையில் விரையத் தொடங்கினாள்.
சட்டென்று பிரம்மா பேசியது நினைவில் வர நாணத்துடன் சிரித்துக் கொண்டாள். அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே தாடியை நீவும் பிரம்மாவின் முகம் மனதில் தெரிய வண்டியை விட வேகமாய் எண்ணங்கள் காதலின் தவிப்பில் பறந்து கொண்டிருந்தது.
“தாடி வச்ச கேடி… இப்படி இம்சை பண்ணறியே டா…” செல்லமாய் கொஞ்சிக் கொண்டே பாதையை கவனித்தாள்.
காதல் கொண்ட மனதின்
வேகம் காற்றுக்கும் இல்லை…
நொடியில் தனக்குப் பிடித்த
பாதையில் உலகெலாம் சஞ்சரிக்கிறது…
இதழ்களைக் காட்டிலும் அதிகமாய்
இதயமே பேசிக் கொள்கிறது…
நொடிப்பொழுது பிரிந்தாலும்
யுகமென சலித்துக் கொள்கிறது…
காதல் ஒரு சுகமான அவஸ்தை…

Advertisement