Advertisement

அத்தியாயம் – 18
பிரம்மாவின் கார் போர்ட்டிகோவில் நின்று ஊமையாக, வண்டி சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த ராகவுடன் அமிர்தாவையும் கண்டவன் புன்னகையுடன் இறங்கினான்.
“ஹேய் வாலு… இதென்ன, நீயும் இங்க இருக்க…”
“அது, நியூஸ் பேப்பர்ல ஒரு பரபரப்பான நியூஸ் பார்த்திட்டு அப்பா எனக்கும் காட்டினாரா, அதைப் பார்த்ததுல இருந்து வீட்டுல இருப்புக் கொள்ளலை… அதான் என்ன, ஏதுன்னு தெளிவா தெரிஞ்சுக்கலாம்னு இங்க ஓடி வந்துட்டேன்…”
“ம்ம்… அப்புறம், டாப்லட் எல்லாம் சரியா எடுத்துக்கற தான… இப்ப உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே…” அன்போடு கேட்டவனிடம், “ஒரு பிரச்சனையும் இல்லண்ணா…” சொல்லிக் கொண்டே அருகில் வந்தாள்.
தேவ் கையிலிருந்த லக்கேஜை வாங்கிக் கொண்ட ராகவ், “நானும் இங்க தான் இருக்கேன்… ஏதாச்சும் கண்டுக்குறாரா…” என மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்க, “என்ன ராகவ், மூணு நாளா நான் இல்லாம ஜாலியா இருந்திருப்பியே…” எனக் குரல் கொடுத்தான் பிரம்மா.
“ஹூக்கும்… நினைப்பு தான் பொழப்பக் கெடுக்குமாம்… இவர் பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டாரு… கூப்பிடறவனுக்கு பதில் சொல்லியே என் பொழுது ஓடிருச்சு… நமக்குன்னு ஒரு லவ்விருக்கா, சைட்டிருக்கா… இதுல ஜாலியாம் ஜாலி…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே, “வேண்டாம் தெய்வமே… இந்த முரட்டு சிங்கிளோட வாயைத் தேவையில்லாம  கிளறி சாபத்தை வாங்கிக்காதீங்க…” என்றதும் சிரித்தான்.
“என்னடா, ரொம்பதான் சலிச்சுக்கற…”
“அண்ணா, இந்த ராகவ்க்கு செம பொறாமை… நீங்களும் அண்ணியும் கிளம்பினதுல இருந்து ஒரே புலம்பல்… சரி, அதை விடுங்க… போன காரியம் சக்சஸ் தானே…”
“காரியமும் சக்சஸ், காதலும் சக்சஸ்… இல்ல தெய்வமே…”
“அப்படிதான் நானும் நினைச்சேன்… இப்ப புதுசா ஊருல இருந்து ஒரு பிரச்சனை கிளம்பிருக்கு…” என்றவன் அன்னை பேசினதை சொல்ல யோசனையுடன் கேட்டிருந்தனர்.
“அம்மா எதுக்கு அண்ணிய கூட்டி வர சொல்லிருப்பாங்க, அவங்களுக்கு எப்படி அதுக்குள்ளே இந்த நியூஸ் தெரிஞ்சுது…” அமிர்தா கேட்க, “ஹூக்கும்… உலகத்துக்கே நியூஸ் தெரிஞ்சிருச்சாம்… இவங்க வீட்டுக்குத் தெரியுறது தான் கஷ்டமா…” என்றான் ராகவ்.
“சும்மாரு ராகவ்…” அவனை அதட்டியவள், “அண்ணி என்ன சொன்னாங்க அண்ணா…” என்றாள்.
“அவ என்ன சொல்லுவா… நியூஸ் பார்த்தே கொஞ்சம் பயந்தவ அம்மா அழைக்கவும் இன்னும் பயந்திட்டா… ஒவ்வொருத்தனும் வருஷக் கணக்குல எந்தப் பிரச்னையும் இல்லாம காதலிக்கிறான்… எனக்கென்னடான்னா, நேத்து காதலை சொல்லி இன்னைக்கே பிரச்சனை வந்து நிக்குது… அம்மா பேசினது எனக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கு…”
“என்ன தெய்வமே, திகிலைக் கரைக்கறிங்க… நீங்க ஒரு டெரர்… நீங்களே ஜெர்க் ஆகும்போது பாவம் அண்ணி…”
“ஹூம்… இங்க உள்ள வொர்க் எல்லாம் முடிச்சிட்டு அடுத்த வாரம் ஊருக்குக் கிளம்ப ரெடியாகனும்…”
“அதுக்கு முன்னாடி உங்களைக் கேட்டு அபீசியல் நம்பர்ல கால் பண்ணவங்க எல்லாருக்கும் பேசிருங்க…”
“ம்ம்… சரி மேன்… பேசறேன், ரொம்ப பண்ணாத…”
“அண்ணா, ஒருவேளை உங்க வீட்டுல மேரேஜ்க்கு சம்மதிக்கலேன்னா என்ன பண்ணுறது….” அமிர்தா கேட்க, “சம்மதிக்க வச்சே ஆகணும்… வேற வழியே இல்ல… ஓகே, நான் ஒரு தூக்கம் போட்டு வர்றேன்…” என்றவன் அவனது அறைக்குள் நுழைந்து குளியலை முடித்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான். அவனுக்குப் பிடித்த அறையும், கட்டிலும் எல்லாம் மறந்து உறக்கத்துக்கு அழைத்துச் செல்ல இரண்டு மணி நேரத்துக்குப் பின்னரே எழுந்தான்.
ஹாலில் ராகவ் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்க அமிர்தா வீட்டுக்கு கிளம்பியிருந்தாள்.
“என்ன மேன், உனக்கு சம்மந்தமில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க…” பிரம்மாவின் குரலில் நிமிர்ந்தவன்,
“அது…வந்து… இந்த அம்ரு இல்ல… அது கிளம்பும்போது ஒரு விஷயத்தை சொல்லிட்டுப் போச்சு… அதுல இருந்து மனசே சரியில்ல…” என்றான் சோகமாக.
“அம்ருவா…” என்றவன் திகைப்புடன் பார்த்து, “ஹூம், நிக் நேம் எல்லாம் பலமாருக்கு… அப்படி என்ன சொன்னா…”
“அவ..அவ வந்து, என்னை லவ் பண்ணறேன்னு சொல்லிட்டா தெய்வமே…” என்றதும் பிரம்மாவுக்கே திகைப்பாய் இருந்தது.
“அமிர்தா உன்னை லவ் பண்ணறாளா…” என்றவன் அவனை ஒரு நம்பாத பார்வை பார்க்க, “ப்ச்… நீங்க என்னை ரொம்ப டேமேஜ் பண்ணறிங்க… நான் கோபமா கிளம்பறேன்…”
“டேய், இரு… அமிர்தா என்ன சொன்னான்னு சொல்லு…”
தலை குனிந்து நகத்தை நோண்டிக் கொண்டே குழைவுடன், “ம்ம்… அம்ரு…” என்று இழுக்க முறைத்தவன், “இப்ப சொல்லப் போறியா, நான் அமிர்தா கிட்ட கேட்டுக்கவா…” என சத்தம் போட அட்டன்ஷன்க்கு வந்தான் ராகவ்.
“அவ என்கிட்ட, ராகவ்… எத்தன நாள் தான் நாமளும் சிங்கிளாவே இருக்கிறது… நம்மளும் மிங்கிள் ஆகி டபுள் ஆகிட்டா என்ன… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா தெய்வமே… நான் எதுவா இருந்தாலும் என் தெய்வத்துகிட்ட கேட்டு தான் முடிவு பண்ணுவேன்னு சொல்லி அனுப்பிட்டேன்…” என்றான்.
“என்னடா சொல்லற, அவளுக்கு ஹார்ட் பிராப்ளம் வேற இருக்கே… உனக்கு அவ மேல அப்படி எதுவும் இருக்கா…”
“ம்ம்… எப்ப அவளுக்கு ஹார்ட்ல பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சுதோ, அப்பவே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… அவளோட பேசும்போதெல்லாம் வருத்தமா இருக்கும்… அதை காட்டிக்காம இயல்பா சிரிச்சுப் பேச கஷ்டப்படுவேன்… அவ பிரச்சனை சரியாகுமா, கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கூடத் தெரியாது… ஆனா அவ முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கும்போது எனக்கும் சந்தோஷமா இருக்கும்… இந்த பூமில இருக்கிற நாள் வரை அவளை சந்தோஷமா வச்சுக்க மனசு ஏங்கும்… அது என்னையும் அறியாம அவகிட்ட வெளிப்பட்டுதோ என்னவோ, அவளும் என்னை நேசிக்க ஆரம்பிச்சிருக்கா…” என்றான் நெகிழ்ச்சியுடன்.
ராகவின் தோளில் கை வைத்த பிரம்மா, “எல்லாம் தெரிஞ்சும் அவளை நேசிக்க உன்னை விட சிறந்த ஒருத்தன் கிடைக்க மாட்டான்… நான் அவ வீட்ல பேசறேன்… டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு உனக்கு மாப்பிள்ளை பிரமோஷன் கொடுக்கிறது பத்தி முடிவு பண்ணலாம்…” என்றதும் கலங்கிய கண்களுடன் அவனை நோக்கினான்.
“எப்படியாச்சும் அம்ருவை குணப்படுத்தி என்கிட்ட கொடுக்க சொல்லுங்க சார்… நான் அவளை குழந்தை போல பார்த்துக்கறேன்…” என்றவனை வியப்புடன் நோக்கியவன், “ராகவ்… ரியல்லி யூ ஆர் கிரேட்… உன் காதலுக்கு சக்தி இருந்தா கண்டிப்பா நல்லதே நடக்கும்…” என்றான். அப்போது ராகவின் அலைபேசி சிணுங்க, “அம்ரு தான் கால் பண்ணறா…” என்றான் பிரம்மாவிடம்.
“ம்ம்… இப்போதைக்கு மறுக்காம, பொதுவா மட்டும் பேசு… நாளைக்கு அவ அப்பா, டாக்டர் கிட்ட நான் பேசறேன்…” என்றவன் டிராயிங் அறைக்குள் நுழைந்தான். தீர்க்கப்பட வேண்டிய வேலைகளும், ஓவியங்களும் நிறைய இருக்க, மேசை வலிப்பைத் திறந்து பபிள் கம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான்.
“அட, ஒவியம் கூட இருந்த மூணு நாளும் பபிள்கம் சாப்பிட தோணவே இல்லையே…” என யோசிக்கையில் இதயத்தில் ஓவியத்தின் முகமும், இதழில் புன்னகையும் விரிந்தது.
நிறைவு செய்ய வேண்டிய ஓவியங்களை எடுத்து வைத்தவன் மளமளவென்று வேலையில் இறங்கினான். கறுப்பு வெள்ளை ஓவியங்கள், அவனது கைவண்ணத்தில் வர்ணத்தைப் பூசிக் கொண்டு ஜொலிக்கத் தொடங்கின. பத்து மணிக்கு ஓவியங்களை நிறைவாக்கி நிமிர்கையில் வயிறு கபகபத்தது. நடுவே ஒரு காபி மட்டும் குடித்திருக்க, வேலை மும்முரத்தில் பசியை மறந்து போயிருந்தவன் முடித்த பிறகே பசியை உணர்ந்தான். கைகளில் அங்கங்கே தீற்றிக் கொண்டிருந்த வண்ணங்களை ஒரு துணியில் துடைத்துக் கொண்டே வெளியே வந்தான்.
“ராகவ், பார்த்துக்க…” என்று மீதிப் பொறுப்பை அவனிடம் கொடுக்க, “சார்… குங்குமம் ஆசிரியர் கூப்பிட்டார்… ஏதோ புது ஓவியம் பத்திப் பேசணும்னு சொன்னார்… நீங்க பிசியா இருக்கீங்க, கூப்பிட சொல்லறேன்னு சொல்லிருக்கேன்… பேசிடுங்க…” என்றவன் டிராயிங் அறைக்குள் நுழைந்தான்.
பிரம்மாவுக்காய் காத்திருந்த ஜானும்மா, “சாப்பிட எடுத்து வைக்கட்டுமா தம்பி…” எனவும், “ஆமா ஜானும்மா, செம பசி… வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்…” என்றவன் நகர்ந்தான்.
சூடான சப்பாத்தி குருமாவை உள்ளுக்குள் தள்ளிவிட்டு எழவும் அலைபேசி சிணுங்கியது.
டிஸ்ப்ளேயில் தெரிந்த “ஓவியம் காலிங்…” இதழில் புன்னகையைக் கொடுக்க, எடுத்து ஹலோவிக் கொண்டே தனது அறைக்கு நகர்ந்தான்.
“என்ன ஓவியமே, இந்த நேரத்துல… அத்தானை நினைச்சு தூக்கம் வர மாட்டிங்குதா…”
“ஹூக்கும் நினைப்புதான்… தூக்கம் வரலதான், ஆனா அத்தானை நினைச்சு இல்ல… அத்தையை நினைச்சு…”
“ஹேய், நீ இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா…”
“என்ன பண்ணுறது ஓவியரே… உங்களைப் போல ஸ்ட்ராங்கான இதயம் எனக்கில்லையே… என்னோட இதயம் ரொம்ப மென்மையானது…”
“ஓஹோ, இதை நான் எப்படி நம்புறது… இதயத்தை தொட்டுப் பார்த்தா தான் தெரியும்…” அவன் சிரிப்புடன் சொல்ல, அதன் அர்த்தத்தை உணர்ந்தவள் நாணத்துடன் நெளிந்தாள்.
“ச்சீ… நீ ரொம்ப பேட் பாய் தேவ்…”
“ஓஹோ, அப்படி என்ன பேடா பண்ணிட்டாங்களாம்…” அவன் கட்டிலில் உருண்டு கொண்டே பேச அவள் சிணுங்கினாள்.
“ப்ச்… இப்படில்லாம் பேசினா எனக்கு ஒரு மாதிரி இருக்கு…”
“ஹாஹா, எந்த மாதிரி இருக்கு… கள்ளி, நீ என்னை என்னவோ பண்ணிட்ட டி…” என்றான் நெகிழ்ச்சியுடன்.

Advertisement