Advertisement

“ம்ம்… சூப்பர்…” என்றவனின் விரல்கள் வேகமாய் செயல்பட்டுக் கொண்டிருக்க ஆறு ஓவியங்களின் அவுட்லைன் முடித்திருந்தான். முதலில் அவளை வரைந்து கொண்டு பிறகு சிற்பத்தை வரைய நினைத்தவன் ஒரு ஓவியத்திற்கு பத்து நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டான்.
“இன்னும் எவ்வளவு வரையனும் தேவ்…”
“இனி நவரச பாவங்களை மட்டும் வரைஞ்சுக்கலாம்… நீ அதுக்குத் தகுந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்துக்க…” அவன் சொல்லவும் வரிசையாய் பார்த்துக் கொண்டு வந்தவள் முகம் மலர்ந்தது.
“தேவ், ஒன்பது பாவங்களைக் காட்டும் சிற்பமும் வரிசையா தான் இருக்கு…” என்றாள் சந்தோஷத்துடன்.
“முதல்ல ஸ்ருங்காரம் (வெட்கம்)…” என்றவளின் முகத்தில் தெரிந்த பாவத்தைக் கண்டவன் பிரம்மித்து அவளையே பார்த்து நிற்க, “ப்ச்… ஓவியரே… முதல்ல வரைங்க… அப்புறம் ரசிச்சுக்கலாம்…” என்றாள் உண்மையான நாணத்துடன்.
அவன் புன்னகையுடன் வரையத் தொடங்க அடுத்த பாவங்களையும் சொல்லிக் கொண்டே அபிநயம் பிடித்தாள்.
“அடுத்து வீரம், கருணை, அற்புதம்…” என்றவளின் விழிகள் விரிந்து அபிநயத்தை வெளிப்படுத்த அவனையறியாமல் இதழ்கள், “வாவ்…” என்று முணுமுணுத்தன.
“ஹாஸ்யம்… ஹா… ஹா…” என சிரித்தவள்,
“பயானகம் (பயம்), பீபல்சம் (அருவருப்பு), ரௌத்ரம் (கோபம்), சாந்தம் (அமைதி) என்று அனைத்து பாவங்களையும் காட்ட, “ஆஹா, வொண்டர்புல்…” என பாராட்டிக் கொண்டே வரைந்து கொண்டிருந்தான் ஓவியன். அவளது முகம் வசமானதால் அடுத்தடுத்து ஓவியங்களில் இன்னும் வேகம் கூடியது.
இறுதியில் முகமெங்கும் ஒருவித அமைதியோடு நிறைவாய் நின்றவளின் அருகில் வந்து கைகளைப் பிடித்தான்.
“அம்மு, அருமையா வந்திருக்கு… ரொம்ப சந்தோசம்…”
“எங்கே நான் பார்க்கிறேன்…” என்றவள் ஆர்வத்துடன் அவன் வரைந்த ஓவியங்களை நோக்க அதில் வெறும் பென்சிலால் இடப்பட்ட கோட்டோவியம் மட்டுமே ஆனாலும் அத்தனை அழகாய் இருந்தது.
“வாவ்… இதை எப்ப முழுமையாக்குவிங்க தேவ்…”
“நீ கொஞ்சம் உக்கார்ந்து ரெஸ்ட் எடு… எனக்கு நாலஞ்சு சிற்பங்களின் அவுட்லைன் போட்டுட்டாப் போதும்… மத்தது எல்லாம் உன் பாவத்தை வைத்து வரைஞ்சுப்பேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல நடை திறந்திருவாங்க, அதுக்குள்ளே முடிக்கணும்…” அவன் சொல்லவும், “சரி, நீங்க வரைங்க… நான் அமைதியா உக்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்…” என்றவள் சலங்கைகள் ஒலிக்க நடந்து சென்றாள்.
ஆர்வத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் திரும்பி, “என்ன…” என்று அபிநயத்தில் கேட்கவும், புன்னகைத்து தலையசைத்தவன் வேலையில் மும்முரமானான். அரை மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவள் அவனையே வைத்த கண் மாற்றாமல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க புருவத்தை மேலே தூக்கி, “என்ன ஓவியமே…” என்று கேட்க புன்னகைத்தவள், “ஓவியர் மட்டும் தான் ஓவியத்தை ரசிக்கனுமா என்ன, ஓவியம் ஓவியரை ரசிக்கக் கூடாதா…” என்றதும் அழகாய் அவன் கண்ணிலும் முகத்திலும் சிறு நாணம் தெரிய வியப்புடன் பார்த்தாள்.
“அட, ஓவியர்க்கு கூட வெட்கப்படத் தெரியுமா…”
“ஏன்… அதென்ன, ஓவியத்துக்கு மட்டுமே குத்தகைக்கு கொடுத்ததா… இது மனசுல இருந்து வருது ஓவியமே…” சொல்லிக் கொண்டே எல்லாம் எடுத்து வைத்தான்.
“சரி அம்மு, கிளம்பலாம்… இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு நடை திறக்க…” என்றதும் எழுந்தாள். மேலே ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அவனுடன் நடந்தாள்.
அவர்கள் அலுவலக அறைக்குள் நுழைய நடை திறந்து மற்றவர்கள் உள்ளே வரத் தொடங்கினர். நன்றி கூறிவிட்டு காருக்கு செல்ல இருவரையும் கவனித்த ஒரு பெண் தோழியிடம் ஏதோ சொல்லி, பிரம்மாவிடம் வந்தாள்.
“பிரம்மா சார்… ஒரு நிமிஷம்…” என்றதும் திரும்ப, “வணக்கம் சார், உங்க ஓவியங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்… சமீபத்துல பத்திரிகைல வந்த ராமாயண ஓவியங்கள் ரொம்ப அழகா இருந்துச்சு…” என்றவளின் பார்வை ஓவியாவின் மீது பதிந்துவிட்டு மீண்டும் அவனிடம் தாவியது.
“சார், உங்க ஓவியங்கள்ல எல்லாம் பெண்களை ரொம்ப அழகா வரையறீங்க, எப்படி சார்… மாடலா யாராச்சும் ஹெல்ப் பண்ணறாங்களா…” என்றவளின் பார்வை மீண்டும் அழுத்தமாய் ஓவியாவின் மீது படிந்து மீண்டது.
ஓவியாவுக்கு கண்ணைக் காட்டி கார் உள்ளே அமரும்படி கூறியவன், “ரொம்ப தேங்க்ஸ்… என்னைப் பொறுத்தவரை பெண்கள்னாலே அழகு தான்… பிறந்த குழந்தையானாலும், வயசான பாட்டியான்னாலும் எல்லார் கிட்டயுமே ஒரு அழகு இருக்கும்… அதை நான் அழகா வரையறதுல அதிசயம் எதுவும் இல்லை… ரசிச்சிட்டு கேக்கறிங்களே, இதை அதுக்கான கிரெடிட்டா எடுத்துக்கறேன்…” சொல்லி சிரித்தான்.
“ஹாஹா… உங்க ஓவியம் மட்டும் இல்லை சார்… உங்க பேச்சும், நீங்களும் கூட அழகா இருக்கீங்க… ஆட்டோகிராப் வாங்க நோட்டு எதுவும் எடுக்கலை இதுல போடுங்க ப்ளீஸ்…” என்றவள் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்ட,
“சாரி, தப்பா நினைக்க வேண்டாம்… இதுல ரிசர்வ் வங்கி கவர்னர் மட்டும் தான் சைன் பண்ணலாம்… நான் பண்ணக் கூடாது…” என்றவன் தன்னுடைய குறிப்பேட்டில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்து அவனது கையெழுத்தைப் போட்டு நீட்ட, அப்பெண்ணின் முகம் மலர்ந்தது.
“ரியல்லி யூ ஆர் வொண்டர்புல் சார்… தேங்க்ஸ்…” என்ற பெண் தோழியுடன் நகர காருக்குள் அமர்ந்தான் தேவ்.
“ஹூம்… ரசிகர்களை விட ரசிகைகள் தான் பிரம்மாவுக்கு அதிகம் போலருக்கு…” என்ற ஓவியாவின் கன்னத்தில் செல்லமாய் தட்டிவிட்டு,
“எத்தனை பேர் என் ஓவியத்தை ரசித்தாலும் நான் ரசிக்கிற ஒரே ஒரு ஓவியம் நீதான்…” அவன் சொல்லவும் சிவந்த முகத்தைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் வெளியே திருப்பிக் கொண்டாள் ஓவியா.
ஏதேதோ பேச்சுகளை உதடுகள் பேசினாலும் உள்ளத்தில் எதுவும் பதியாத பரவசத்திலேயே இருவரும் இருந்தனர்.
அறைக்கு வந்து உடை மாற்றி மீண்டும் ஒரு குளியல் போட்டு சிறிது உறங்கி எழுந்தாள் ஓவியா. இரவு உணவுக்கு ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தனர்.
“நாளைக்கு எப்ப கிளம்பறோம் தேவ்…” அவன் தோளில் சாய்ந்து கொண்டே கேட்டவளின் கைகளைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டு, “போகணுமா…” என்றதும் சிரித்தாள்.
“ம்ம்… என்ன பண்ணுறது, போயிதானே ஆகணும்…”
சொன்னவளின் விழிகளுக்குள் தன் விழியைப் பதித்தவன், “இந்த ரெண்டு நாளை மறக்கவே முடியாது அம்மு…”
“எனக்கும் தான் தேவ்… சரி, எப்ப இந்த ஓவியம் எல்லாம் அனுப்பனும்…” அவள் கேட்க,
“இன்னும் ரெண்டு நாள்ல கலரிங் எல்லாம் முடிச்சு சிங்கப்பூர் அனுப்பியாகனும்…”
“ம்ம்… தேவ்… உங்க வீட்டுல என்னை ஏத்துப்பாங்களா…” அவள் கேட்கவும் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன், “சொல்லிப் பார்ப்போம்… ஏத்துகிட்டா சந்தோசம்… இல்லன்னா நீ என்னை வேண்டாம்னு சொல்லிடுவியா…”
“ப்ச்… அதுக்கு கேட்கல, அவங்க சம்மதமும் இருந்தா நல்லாருக்குமேன்னு கேட்டேன்…”
“கேட்பது என் கடமை… அப்புறம் அவங்க விருப்பம்… சரி, நீ தூங்கு… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… காலைல ஏழு மணிக்கு கிளம்பிருவோம்…” என்றவன் எழுந்து சிறிது நேரம் கட்டிலில் புரண்டு கொண்டிருந்த ஓவியா வண்ணக் கனவுகளின் தாக்கத்தில் உறங்கத் தொடங்கினாள்.
காலையில் நேரமே ரூமைக் காலி செய்து கிளம்பினர்.
எட்டு மணிக்கு சிவநேசனின் அழைப்பு வர, “கிளம்பிட்டோம் அப்பா, லஞ்சுக்கு வந்திருவோம்…” என்று மகள் சொல்லவும்,
“அம்மு, அப்புறம்…” என்று ஏதோ சொல்ல வந்தவர் சட்டென்று நிறுத்திவிட்டு, “சரி, லஞ்சுக்கு நம்ம வீட்டுக்கு வந்திடுங்க… வழியில் எங்கயும் நிறுத்த வேண்டாம்…” என,
“என்னப்பா, ஏதோ சொல்ல வந்திங்க…” என்றாள் மகள்.
“நேர்ல பேசிக்கலாம் மா… தம்பிகிட்ட சொல்லிடு…” என்று வைத்துவிட, குழப்பத்துடன் தேவிடம் சொன்னாள் ஓவியா.
“அப்பா, என்னவோ சொல்ல வந்து நிறுத்திட்டார் தேவ்… என்னவா இருக்கும்…”
“எதுவா இருந்தாலும் போனதும் தெரிஞ்சுக்கலாம்… இப்ப என் தோள் ப்ரீயா தான் இருக்கு… அப்படியே சாஞ்சுகிட்டா உனக்கு தூங்க வசதியா இருக்கும்…” என்றான் அவன்.
“அதுக்கு எனக்கு தூக்கம் வரலியே…” அவள் சிணுங்க,
“எனக்கு தூக்கம் வராம இருக்க தான் சொன்னேன்…” என்றவன் அவனே அவளை அருகே இழுத்துக் கொண்டான்.
“சரியான தாடி வச்ச கேடி தேவ் நீ…”
“ஏன் கேடியோட நிறுத்திட்ட, தீவிரவாதியும் சேர்த்து சொல்லு…” என்றவனின் கைகள் அவள் இடுப்பில் சில்மிஷம் செய்ய கூச்சத்தில் நெளிந்தவள் தட்டி விட்டாள்.
“ப்ச்… ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டுங்க… இப்படி பண்ணினா அப்புறம் டைரக்ட் மேலோகம் தான்…”
“ப்ச்… எந்நேரமும் என் கைகள் ஓவியத்தில் பிஸியாவே இருந்து பழகிருச்சு… இப்ப பக்கத்துல ஓவியத்தை வச்சிட்டு சும்மா பார்த்திட்டு மட்டும் இருக்க முடியுமா…”
“ம்ம், அதுக்கெல்லாம் நேரம் காலம் வரும், பார்த்துக்கலாம்…” இருவரும் சின்னச் சின்ன சீண்டல்களுடன் சென்னையை அடைய அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
பேசாத கவிதை தான்
ஓவியம் என்பான் கவிஞன்…
பேசும் கவிதையே ஓவியம்
என்பான் ஓவியன்…
உயிர் கொண்ட ஓவியமும்
இன்று சிலையானது…
உணர்வுகளின் வெளிப்பாடே
என்றும் பேச்சாகிறது…

Advertisement