Advertisement

அத்தியாயம் – 16
“ஹலோ ஓவியரே, நீங்க எதுக்கு இப்படி சிலை போல நிக்கறீங்க… சீக்கிரம் வரையத் தொடங்குங்க…”
மலர்ந்த முகமும், விரிந்த கண்களுமாய் அழகாய் அபிநயம் பிடித்து நாட்டிய உடையில் பிரகாசித்தவளைக் கண்டு கண்களை மாற்ற முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மாவிடம் சிணுங்கினாள் ஓவியா.
“ஹா, இ..இதோ… ஸ்டார்ட் பண்ணறேன்…” என்றவன் அவள் அருகே வந்து தாடையை தொட்டு சற்றே நிமிர்த்தினான்.
அவன் ஸ்பரிசத்தில் சட்டென்று சிலிர்த்தவளின் கண்கள் நாணத்தில் தன்னிச்சையாய் நிலம் நோக்க, சூரிய காந்திப் பூ ஒன்று நிமிர்வோடு, சூரியனைக் கண்டு நாணிக் கோணுவது போல் அவனுக்குத் தோன்ற அதைப் பார்த்துக் கொண்டே வரைய வேண்டிய தாளில் பென்சிலை வைத்தவன் கண்களில் தொடங்கினான்.
பென்சில் கோடுகள் அங்கங்கே தாளில் நாட்டியமாட, ஒரு உருவம் உயிர் பெற்றுக் கொண்டிருந்தது. கோவில் நடை சாத்திய நேரம் ஆதலால் அவர்களைத் தொந்தரவு செய்ய யாருமில்லை. கிடைத்த தனிமையும் சேர்ந்து பொழுதை இனிமையாக்கிக் கொண்டிருந்தது.
அவனது பார்வை வரைவதிலும் அவள் முகத்திலுமாய் மாறி மாறிப் படிய, அவள் மனதுக்குள் குறுகுறுவென்று முன்தின நினைவுகள் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.
புது இடம் காரணமாகவோ என்னவோ, இரவு உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளை  அலைபேசி சிணுங்கி பிரம்மா அழைப்பதாய் சொன்னது.
ஒரே ரிங்கில் அவள் எடுக்கவும் எதிர்ப்புறம் சிரித்தவன், “என்ன அம்மு, தூங்கலையா…” என்றான்.
“ப்ச்… புது இடம்ல, தூக்கம் வருவேனான்னு அடம் பிடிக்குது… தூங்காம தலை வலி தான் வரப் போகுது…” சலித்தாள்.
“ம்ம்… வரியா, ஒரு மூன் வாக் போயிட்டு வருவோம்…”
“என்னது, மூன் வாக்கா…”
“ம்ம்… எனக்கும் தூக்கம் வரல, சரி அப்படியே ஒரு வாக் போகலாம்னு நினைச்சு தான் உனக்கு கூப்பிட்டேன்…”
“ம்ம்… வெளிய குளிரா இருக்கே…”
“அதெல்லாம் ஒரு சால்வையைப் போட்டு மேனேஜ் பண்ணிக்கலாம்… வா அம்மு…”
“சரி…” என்றவள், எழுந்து கதவைத் திறக்க வெளியே அரைக்கால் டிரவுசர், டீஷர்ட்டில் தயாராய் நின்றான் தேவ். பரமசிவன் கழுத்தில் பாம்பைப் போல் அவன் கழுத்திலும் ஒரு சால்வை சுற்றிக் கிடந்தது.
சுரிதாரில் இருந்தவள், “இங்கயே தானே நடக்கப் போறோம்… புதிய இடத்துல வெளிய எல்லாம் போக வேணாம்…” என சொல்ல, “எனக்குப் பழைய இடம்தான்…” என்ற பிரம்மா, “நீ முதல்ல வா…” என்றதும் ரூமை லாக் பண்ணிவிட்டு அவனுடன் நடந்தாள். இரவு நேரக் குளிர் ஊசியாய் உடலைத் துளைக்க துப்பட்டாவை போர்வையாக்கிக் கொண்டாள்.
நேரம் பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, இருவரும் அடுத்தடுத்து இணைந்து நடந்தனர்.
“பேய், பிசாசு நடமாடுற நேரத்துல நடந்திட்டு இருக்கோம்…”  
“இந்த மாதிரி சென்னைல நடக்க முடியுமா… ஜாலியா வா…” அவன் சொல்வது உண்மை என்றாலும் யாருமற்ற அனாதையாய் வெறிச்சிட்ட சாலைகள் அச்சமூட்டின.
“இந்த அழகான நிலா, அமைதியான இரவு, கூட நடக்க நீ… ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கு அம்மு…” என்றான். 
“ம்ம்… எனக்கும் சந்தோஷமா தான் இருக்கு… ஆனாலும் கொஞ்சம் திகிலா, பயமா இருக்கு…” சொன்னவளிடம், தன் கையை நீட்டி “கையைப் பிடிச்சுக்க, பயம் இருக்காது…” என, “இல்ல பரவால்ல…” என்றவள் எதார்த்தமாய் மறுத்து அவனுடன் நடக்க, “எப்படியாச்சும் அம்முகிட்ட என் லவ்வை சொல்லிடனும்…” நினைத்துக் கொண்டே நடந்தான் அவன்.
சிறிது தூரம் நடந்ததில் ஒரு தியேட்டர் அருகே குல்பி வண்டி, சூடான சோளம், கடலை வண்டி நிற்க சினிமா முடிந்ததன் அறிகுறியாய் அலாரம் கிர்ர்ர்ர்ரிட்டது.
“அம்மு, ஏதும் சாப்பிடறியா… சூடா சோளம்…”
“ம்ம்… மசால் பொரி வாங்கிக் குடுங்க…” என்றாள் சிரிப்புடன்.
“அண்ணே, ஒரு மசால் பொரி, சோளம்…” வண்டிக்காரனிடம் சொன்னவன், தியேட்டரில் இருந்து ஆட்கள் பார்க்கிங் நோக்கி செல்லத் தொடங்க வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.
இருவரும் சாப்பிட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கினர்.
ரோந்துப் போலீஸ் வண்டி ஒன்று ஹாரனுடன் சாலையைக் கடக்க, “நாம ரூமுக்குப் போயிடலாமா தேவ்…” என்றாள்.
“ஏன் அம்மு, என்னோட தனியா நடக்க பயமா இருக்கா…”
“ப்ச்… அதுக்கில்ல தேவ், மழைக்காத்து வீசுது… லைட்டா தலை வலிக்கிற போல இருக்கு…” அவள் சொல்லவும் நிர்பந்திக்க மனமின்றி, “ஓகே போகலாம்…” என்றவன், திரும்பி அமைதியாய் நடக்க அவளுக்கு கஷ்டமானது.
முன்னில் நடந்தவனின் கையைப் பிடித்தவள், “நில்லு தேவ்… என் மேல கோபமா…” என்றதும் நின்று அவள் முகத்தைப் பார்த்தவனின் கண்களில் என்ன தோன்றியதோ அவள் மனது தவிப்புடன் கும்மாளமிட்டது.
“வா…” என்றவன் அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்ல விடுவிக்கும் எண்ணமின்றி உடன் நடந்தாள் ஓவியா. இதழ்கள் எதுவும் பேசாமலே இதயங்கள் தங்கள் காதலை உணர்த்திக் கொண்டிருக்க, அவனுக்குள்ளும் உணர்வுகள் போராடிக் கொண்டிருந்தது. சட்டென்று நின்றவனைப் புரியாமல் நிமிர்ந்து நோக்க, கண்களைக் குறுகுறுவென்று பார்த்த விழிகளின் வீரியம் தாங்காமல் குனிந்து கொண்டாள்.
“அ…அம்மு… எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்….” அவன் வார்த்தைகள் தவிப்புடன் வர அவளுக்குள் எதுவோ புரிய, உடலில் உள்ள ரோமங்கள் அவன் சொல்லப் போகும் வார்த்தைக்காய் சிலிர்ப்புடன் எழுந்து நின்றன.
அழகிய நிலா முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவனின் உதடுகள் உணர்ச்சியில் துடிக்க, அந்தக் கைகளுக்குள்ளேயே அமிழ்ந்து போகத் துடித்தது பெண் மனம். இருந்தாலும் அவனது வார்த்தைக்காய் படபடத்த இதயத்துடன் பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். 
“அம்மு, இதுக்கு மேலயும் என்னால சொல்லாம இருக்க முடியாது… தனிமை ரொம்ப போரடிக்குது… அதை உன்னோட அருகாமையால விரட்டனும்னு ஆசையா இருக்கு… உன்னோடான என் பயணம் நம்ம நட்பைத் தாண்டி என் ஆயுளுக்கும் நீளனும்னு தோணுது… நான் இழந்த நேசத்தை எல்லாம் உன் அன்புதான் ஈடு கட்ட முடியும்னு நினைக்கிறேன்… உனக்கு என்னை நண்பனா மட்டும் தான் பிடிச்சிருக்கா…” என்றான் கேள்வியுடன்.
அந்தப் பார்வையில் நிறைந்து வழிந்த காதலையும் மீறி, அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்ற கேள்வியும் தொக்கி நிற்க, அவள் திகைத்து நின்றாள்.
இயல்பாய் அவர்களுக்குள் உருவான நேசத்துக்கு முன்னோடியாய் சிறுவயது நட்பு, பரிச்சயம் இருந்தாலும், அதையும் தாண்டி ஒரு பிணைப்பு உருவாகி இருந்ததை அவளும் உணர்ந்திருந்தாள். ஒருவேளை, தனக்குத் தோன்றியது அவனுக்குத் தோன்றாமல் போனால் நட்புக்கே பங்கம் வந்திடுமோ என்ற எண்ணமே மேலே யோசிக்காமல் எண்ணங்களுக்குத் தடை போட்டு வைத்திருந்தது.
இப்போது அவனே கேட்கவும் சட்டென்று உணர்ச்சியில் கண்கள் நிறைய, உதடுகள் துடிக்க எதுவும் பேச முடியாமல் முகம் சிவந்து போனவள், “தே…தேவ்…” என்று அழுகையுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளது கண்ணில் கண்ணீரைக் கண்டவன் முதலில் விருப்பமில்லையோ எனத் திகைக்க அவளது அணைப்பு அது ஆனந்தக் கண்ணீர் என்று உணர்த்த மனது கும்மாளமிட்டது.
“அ…அம்மு… என்னடா, பிடிச்சிருக்கு தானே…”  அவன் கேட்க மேலும் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டவளை நெற்றியில் முத்தமிட்டு, அவனும் இறுக்கிக் கொண்டான்.
“தே… தேங்க்ஸ் தேவ்… சின்ன வயசுல உன்னைப் பார்த்தப்ப இருந்தே உன் அருகாமையை என் மனம் ரொம்ப விரும்புச்சு… என்னோட இழப்புகளை எல்லாம் ஈடு கட்டக் கூடிய சக்தியை உன் அருகாமைல உணர்ந்தேன்… மறுபடி நாம சந்திப்போம்னு மனசுக்கு சொல்லிட்டே இருப்பேன்… என் உணர்வுலயும், மனசுலயும் நீ எப்பவும் கலந்திருக்க… உன்னோட நட்பே எனக்கு பொக்கிஷம் மாதிரிதான்… உன் காதலை என் இதயத்துல வச்சு பூஜிப்பேன்… உனக்கு எல்லாமா நிச்சயம் நான் இருப்பேன்…” புலம்பலாய் அவன் இதயத்திடம் தன் மனதை உரைத்துக் கொண்டிருந்தவளைப் புன்னகையுடன் அணைத்துக் கொண்டான் தேவ்.
“என் அம்மு… இந்த ஓவியத்தை ஓவியனுக்குன்னு எப்பவோ அந்த பிரம்மனும் முடிவு பண்ணிட்டான்…” என்றவனின் இதழ்கள் அவள் நெற்றியில் முத்தமிட சிலிர்த்தாள்.
அதற்குப் பின் கோர்க்கப்பட்ட கரங்கள் பிரியாமலே தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர, இதழ்கள் மட்டும் மௌனத்தைக் கடை பிடிக்க, இதயங்கள் யுத்தமிட்டுக் கொண்டிருந்தன.
அறைக்கு முன் நின்றவள், “சரி தூங்கலாமா…” எனக் கேட்க அவள் கைகளின் ரேகைகளை எண்ணிக் கொண்டு நின்றவன், “தூங்கணுமா அம்மு…” என்றான் காதலுடன்.
“ம்ம்… தூங்கினா தானே கனவுல வர முடியும்…” என்றவளை அவனது பார்வை துளைக்க, “ப்ச்… இப்படிப் பார்க்காதீங்க… ஒரு மாதிரி இருக்கு…” சிணுங்கியது பெண்மை.
“சரி தூங்கு…” என்றவன் மனமில்லாமல் அவள் கையை விட, எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் சட்டென்று தனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொள்ள திகைத்தான். உற்சாகத்துடன் தனது அறைக்கு சென்றவனை அலைபேசி சிணுங்கி ஓவியம் காலிங் என்று சொல்ல, அதுவரை காத்த மௌனத்தை இரவு வெகு நேரம் வரை பேசிக் கலைத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
விடியலில் சிறிது நேரம் உறங்கியவர்களை அலாரம் அலறி அடித்து எழும்ப வைக்க குளித்து புறப்பட்டு பங்க்ஷனுக்கு கிளம்பினர். இளநீலத்தில் பிங்க் வண்ண பார்டர் பளிச்சிட அழகு ஓவியமாய் புறப்பட்டு வந்தவளைக் கண்டு ஓவியனின் கண்கள் அகல மறுக்க நாணத்தில் குழைந்தாள்.
ஜோடியாய் வந்து நின்றவர்களைக் கண்ட அவளது குருவுக்கு சிஷ்யையின் கண்ணில் புதிதாய் ஒளிந்து கொண்டிருந்த நாணமும், சிரிப்பும் எதையோ புரிய வைக்க, இருவரையும் சந்தோஷத்துடன் மனமார வாழ்த்தினார்.
“நீங்களும் விசேஷத்துக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம் மிஸ்டர் பிரம்மா… நான் கூட உங்க ஓவியத்துக்கு ரசிகை தான்… ஆனாலும் ஒவியாவைப் போல யாரும் ரசிச்சிருக்க முடியாது… ரெண்டு பேரும் சாப்பிட்டு தான் போகணும்…” அர்த்தத்துடன் சொல்லி ராஜஸ்ரீ புன்னகைக்க, இளங்காலை சூரியனின் நாணச் சிவப்புடன் குனிந்து கொண்ட ஓவியாவை கண்களுக்குள் பதித்துக் கொண்டான் பிரம்மா.
இருவரும் ஏதோ கிசுகிசுத்து சிரித்துக் கொண்டே சாப்பிட, அவர்களைக் கண்டு வியப்புடன் விரிந்த இரு விழிகள் காமிராவில் இருவரையும் பதித்துக் கொண்டன. அதை அறியாமல் சாப்பிட்டு இருவரும் கிளம்பினர்.
அறைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வென்ற பேரில் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க சிவநேசன் தன்னிடம் கேட்டதைப் பற்றி தேவ் சொல்ல ஓவியாவுக்கு வியப்பாய் இருந்தது.
“ச்ச்சே… இவ்வளவு அப்பட்டமா எல்லார்க்கும் தெரியுற போலவா இருந்திருக்கோம்… ராதி கூட கேட்டா…”
“ம்ம்… இங்க மட்டும் என்ன… ராகவ், அமிர்தா, ஜானும்மா எல்லாம் அபீஷியலா நம்ம காதலைப் பத்தி தெரிஞ்சுக்க காத்திட்டு இருக்காங்க, மத்தபடி அவங்களே முடிவு பண்ணிட்டாங்க…” என்று சொல்லி சிரித்தான் பிரம்மா. மேலும் ஏதேதோ பேசிவிட்டு கிளம்பி மதிய உணவை வழியில் முடித்துக் கொண்டு கோவிலுக்கு வந்தனர்.
“அம்மு, கொஞ்சம் சிரிச்சபடி தலையை சரிச்சுப் பாரு…” பிரம்மா சொல்ல அபிநயம் பிடித்து நின்ற ஓவியாவின் தலை மெல்ல சரிந்து சிரிப்பை வழிய விட்டது.

Advertisement