Advertisement

அத்தியாயம் – 15
தமிழர் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் நுழைவாயிலில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டிருந்த இரண்டு மீட்டர் உயர நந்தி சிலையை, வியப்புடன் பார்த்துக் கொண்டே தேவுடன் நடந்தாள் ஓவியா.
மாலை சூரியன் மேற்கு திசையில் அஸ்த்தமனம் நோக்கித் தயாராகிக் கொண்டிருக்க, அப்போது தான் கோவில் நடை திறந்திருந்ததால் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும்   அங்கங்கே சுற்றுலாப் பயணிகள் தென்பட்டனர்.
காலை ஒன்பது மணிக்குக் கிளம்பிய ஒவியாவும், தேவ் கிருஷ்ணாவும் வழியில் ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு தஞ்சை பெரிய கோவிலை அடைகையில் நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
“அம்மு, நீ இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கியா…”
“ம்ம்… பத்து வருஷம் முன்னாடி 2010ல இந்தக் கோவிலோட ஆயிரம் ஆண்டு நிறைவு விழா நடந்துச்சு… அப்ப வந்திருக்கேன்… தேவ், உங்க அம்மாவோட ரிலேஷன் எல்லாம் இப்பவும் இங்க இருக்காங்களா…”
“தாத்தா இறந்துட்டார்… அம்மாவோட பெரியப்பா மகன் ஒருத்தர் தான் தாத்தா வீட்டுல இப்ப இருக்காங்க… அவங்களோட பெருசா எந்தத் தொடர்பும் இல்லை…” என்றான் தேவ் அவளுடன் நடந்து கொண்டே.
“ஓ… சாமி கும்பிட்டு வரலாம் வாங்க…” இணைந்து பிரகாரத்தை நெருங்கினர். 4 மீட்டர் உயரத்தில் கம்பீரமாய் நின்ற சிவலிங்கத்தைப் பிரார்த்தித்து விட்டு 240 மீட்டர் சுற்றளவு கொண்ட வெளிப்பிரகாரத்துக்கு வந்தனர். பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடன சிற்பங்கள் வெளிச்சுவரின் மேற்பகுதியில் பதிக்கப்பட்டிருந்தன.
அவற்றை சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஓவியா, “தேவ், இதுல 108 நடன முத்திரைகள் கொண்ட சிலைகள் இருக்குன்னு எங்க குரு சொல்லிருக்காங்க… இப்படி எல்லாம் சிற்பங்களை வடிவமைக்கணும்னா எத்தனை ரசனை உள்ளவங்களா இருக்கணும்…”
“ஆமா அம்மு… இதைக் கட்டினதால ராஜராஜசோழன் அவரோட பெருமையோட, தமிழர்களோட சிற்பக் கலை திறமையையே உலகத்துக்கு அடையாளம் காட்டிருக்கார்…”
“நீங்க எந்த சிலையை ஓவியம் வரையணும்னு செலக்ட் பண்ணி வைங்க, நான் அம்மன், முருகன், விநாயகர் சந்நிதியில் மட்டும் சாமி கும்பிட்டு வந்துடறேன்…” சொன்ன ஓவியா நகர பிரம்மாவின் பார்வை நேர்த்தியுடன் செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களின் மீது விழுந்தது.
இன்றே ஓவியம் வரைய தோதான இடத்தை தேர்வு செய்து கொண்டு நாளை காலையில் ஓவியாவின் குரு ராஜஸ்ரீ வீட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வந்து ஓவியம் வரைய எண்ணி இருந்தனர். பல நடன முத்திரைகளைக் காட்டும் சிற்பங்கள் இருக்க, வரிசையாய் பார்த்துக் கொண்டே வந்தவனின் முகம் அதன் நேர்த்தியைக் கண்டு வியப்பில் மலர்ந்தது.
பிரம்மாவை கவனித்த சிலர் நின்று அவனைப் பார்த்து ஏதோ பேசினர். ஒரு பையன் பெற்றோரிடம் பிரம்மாவைக் காட்டி ஏதோ சொல்ல அவர்கள் ஆர்வத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் சாமி கும்பிட்டு ஓவியாவும் அவனிடம் வந்தாள்.
“தேவ், உங்க பான்ஸ் நிறைய இருப்பாங்க போலருக்கே… அங்கங்க நின்னு பார்த்துட்டு இருக்காங்க…”
“ம்ம்… அவங்க என்னைப் பார்க்கட்டும்… நாம வந்த வேலையைப் பார்ப்போம்…” என்றான்.
“எல்லாரும் இப்படிப் பார்த்தா வரைய டிஸ்டர்ப் ஆகாதா, நீங்க ஏன் இந்த சிலைகளை போட்டோ எடுத்துகிட்டு அதைப் பார்த்து வரையக் கூடாது…” என்றவளை நோக்கி கிண்டலாய் சிரித்தான் பிரம்மா.
“போட்டோ எடுக்க முடிஞ்சா, என்னை எதுக்கு வரைஞ்சு தர சொல்லப் போறாங்க… இங்கே காமெரா நாட் அலவ்டு…”
“ஹோ, அப்படி ஒண்ணு இருக்குல்ல, மறந்துட்டேன்…”
“இந்த இடத்துல வியூ அழகா இருக்கு… இங்கயே வரையலாம்…” தேவ் சொல்ல பின்னில் ஒரு குரல் கேட்டது.
“எக்ஸ்கியூஸ் மி சார்… நீங்க ஆர்டிஸ்ட் பிரம்மா தானே…” கண்ணாடிக்குள் வியந்த கண்களுடன் தெரிந்தான் ஒருவன்.
“ம்ம் எஸ்…” என்றான் பிரம்மா புன்னகையுடன்.
“உங்க ஓவியங்கள் எல்லாம் ரொம்ப அழகாருக்கும் சார்… எனக்கு ரொம்பப் பிடிக்கும்…”
“ஓ… தேங்க்ஸ்…” என்றவனின் அருகில் நின்ற ஓவியாவை ஒரு பார்வை பார்த்தவன், “நான் தினக்கதிர் பத்திரிகையோட போட்டோகிராபர்… இங்க உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோசம்…” கை நீட்டினான் அந்தக் கண்ணாடி.
கையைப் பற்றிக் குலுக்கிய தேவிடம், “இவங்க உங்க ஒயிபா சார்…” என்றதும் பிரம்மா திகைக்க, ஓவியாவின் விழிகளில் சட்டென்று ஒரு அதிர்ச்சி தோன்றி நாணமாய் மலர்ந்தது.
பிரம்மா சொல்லப் போகும் பதிலுக்காய் அந்த பத்திரிகைக்காரனோடு அவளும் பிரம்மாவை ஏறிட்டாள்.
“இவங்களை உங்களுக்குத் தெரியாதா, பிரபல பரதநாட்டிய டான்சர் ஓவியா… இங்கே உள்ள சிற்பங்களின் நடன முத்திரையை நிஜமாய் பிரதிபலிக்கும் பெண்ணோட சேர்த்து ஓவியம் வேணும்னு கேட்டிருந்தாங்க… அதை வரைய தான் இங்க வந்திருக்கோம்…” அவனது பதில் கேட்டு ஓவியாவுக்கும் சிறு ஏமாற்றம் தோன்ற, “அவன் வேறு என்ன சொல்ல வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாய்…” என்ற மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் முழித்தவள் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓ… ஒகே சார்… நீங்க கண்டின்யூ பண்ணுங்க…” என்றவன் அங்கிருந்து நகரவும், “ஓகே அம்மு… இனி கூட்டம் வரத் தொடங்கிரும்… கோவில் ஆபீசுல பேசிட்டு நாம கிளம்பலாம்…” என்றவன் நடக்க அவளும் பின்தொடர்ந்தாள்.
பிரம்மாண்டமான கோவிலைச் சுற்றிப் பார்வையை ஓட்டியபடியே வந்தவள் கீழே கவனிக்காமல் தடுமாறி விழப் போக சட்டென்று பிரம்மா பிடித்துக் கொண்டான்.
“அம்மு, கொஞ்சம் கீழயும் பார்த்து நட…” என்றவன் சட்டென்று அவள் கையைப் பற்றியபடி அழைத்துச் செல்ல, வியப்புடன் உடன் நடந்தவள் மனம் அவள் வசமில்லை.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் – என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி – நான்…
உள்ளம் பாடல் இசைத்து நடனமாகிக் கொண்டிருந்தது. அதற்குப் பின் என்ன நடந்ததென்றே புரியாத ஒரு மோன நிலையில் இருந்தவளை, அவனது குரல் உலுக்கியது.
“என்ன அம்மு, யோசிச்சிட்டு இருக்க… கிளம்பலாமா…”
“கோவில் ஆபீஸ்ல பேசணும்னு சொன்னிங்க…”
“அதான் பேசி பர்மிஷன் வாங்கிட்டனே… நாளைக்கு மதியம் கோவில் நடை சாத்தினதும் நாலு மணி வரைக்கும் கூட்டம் இருக்காது… அதான் நமக்கான டைம்…” என்றவனை வியப்புடன் பார்த்தாள் ஓவியா.
“என்ன ஓவியமே, முழிச்சுட்டு இருக்க… வா…” என்றவன் மீண்டும் அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் செல்ல அந்த நிமிடத்தை அவள் மிகவும் ரசித்தாள்.
“அம்மு, நான் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்… நீ காருல உக்காரு…” சொன்ன தேவ் கடையை நோக்கி செல்ல உள்ளே அமர்ந்தாள்.
அவளது அலைபேசியை எடுத்துப் பார்க்க சிவநேசன் இரண்டு முறை அழைத்திருந்தார்.
“அட இங்கே ரீச் ஆகிட்டோம்னு அப்பாக்கு சொல்லலையே…”
கடிந்து கொண்டவள் அலைபேசியை எடுத்து தந்தைக்கு அழைக்க, எதிர்ப்புறம் உற்சாகமாய் அவர் குரல் கேட்டது.
“அம்மு… நல்லபடியா தஞ்சாவூர் போயிட்டீங்களா டா…”
“ஆமாப்பா, இங்கே கோவில்ல இருந்தோம்… அதான் மொபைலைக் கார்ல வச்சிட்டுப் போயிட்டேன்…”
“ம்ம்… சரிம்மா, தேவ் தம்பி நல்லா பார்த்துக்குவார்னு தெரியும்… அப்பா கூட வரலேன்னு வருத்தம் இல்லையே…”
“ம்ம்… அம்மா கூட இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ, அப்படி கவனிச்சுக்கிறார் ப்பா… கிளம்பும்போது நீங்க கூட வரலியேன்னு வருத்தம் இருந்துச்சு… இப்பத் தெரியல…” மனதில் தோன்றியதை அப்படியே சொன்னாள் மகள்.
“ம்ம்… அவர் மேல அந்த நம்பிக்கை இருந்ததால தான் தைரியமா உன்னை அனுப்பினேன்… தம்பி எங்கேம்மா…”
“தண்ணி பாட்டில் வாங்கப் போனார்… இதோ வந்துட்டார்ப்பா, கொடுக்கறேன்….” என்றவள் காரைத் திறந்து உள்ளே அமர்ந்த பிரம்மாவிடம், “அப்பா லைன்ல இருக்கார்… பேசுங்க…” என்று நீட்ட புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
“ஹலோ, மாமா… தொல்லை பண்ண பொண்ணு இல்லேன்னதும் போரடிக்க ஆரம்பிச்சிருச்சா…” அவன் கேட்க, முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா.
“ஹஹா… அப்படி இல்ல தம்பி, சும்மா எங்க இருக்கீங்கன்னு தெரிய கூப்பிட்டேன்…”
“தஞ்சாவூர் வந்து கோவிலுக்கும் வந்து சிற்பங்களைப் பார்த்தாச்சு… இனி உங்க இளவரசி எங்க போகணும்னு சொல்லுறாங்களோ, அந்த இடத்துக்கு அழைச்சிட்டுப் போக இந்த அடிமை ரெடியா இருக்கேன் மாமா…”
“ஹாஹா, அவ உங்க பொறுப்பு… நீங்க என்ன முடிவு பண்ணறீங்களோ, நிச்சயம் அதுக்கு கட்டுப்படுவா… உங்க விருப்பத்தை அவ கிட்ட சொல்லிட்டீங்களா, மாப்பிள…” சட்டென்று அவரது அழைப்பு மாப்பிள்ளைக்கு மாறியதை உணர்ந்தவன் புன்னகைத்துக் கொண்டே, கதவைத் திறந்து வெளியே இறங்கினான்.
“இன்னும் இல்ல மாமா, சரியான சந்தர்ப்பம் அமையும்போது சொல்லக் காத்திருக்கேன்…” என்றவன் முகத்தில் அந்தி மாலையின் சின்னச் சிவப்பு அழகாய் பளீரிட கண்களில் சிறு நாணம் மின்னியது.
“ம்ம்… உங்க ரெண்டு பேரையும் மணக்கோலத்தில் பார்க்க, நானும் காத்திருக்கேன் மாப்பிள்ள… சரி, டைம் ஆகுது… அப்பப்ப போன் பண்ணி எங்கிருக்கோம்னு மட்டும் விவரம் சொல்லுங்க… அம்மு கிட்ட போனைக் கொடுங்க மாப்பிள்ள…”
“ம்ம்… சரி மாமா, நீங்களும் நேரத்துக்கு சாப்பிட்டு பத்திரமா இருங்க…” என்றவன், காருக்குள் வந்து அம்முவிடம் போனை நீட்டி, “பேசு…” என்றான்.
“நான் இல்லேன்னு எதுவும் சமைக்காம, சாப்பிடாம இருந்துடாதீங்கப்பா… உடம்பைப் பார்த்துக்கங்க… ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டீங்களா…”
“ம்ம்… ஆமா மா, எலக்ட்ரீஷியன் வர சொல்லி இருந்தியாம்… கொஞ்ச நேரத்துல வருவாங்கன்னு செக்யூரிட்டி போன் பண்ணினான்… ஸ்கூலுக்கு தான் போயிட்டு இருக்கேன்…”
“சரிப்பா… டிரஸ்ஸிங் ரூம், என் ஆபீஸ் ரூம் செக் பண்ண சொல்லிடுங்க… பக்கத்துல இருந்து பார்த்துக்கங்க…”
“சரிடா, நீ பத்திரமா அங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு வா… நான் வைக்கிறேன்…” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
“அப்புறம் மகாராணி, அடுத்து எங்கே செல்ல வேண்டும் எனக் கூறினால் அடியேன் வாகனத்தை எடுக்க வசதியாய் இருக்கும்…” பிரம்மா சிரித்துக் கொண்டே சொல்ல அவனை முறைத்தாள். “மேம், வீட்டுல காலைல தான் பங்க்ஷன்… கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாப் பரவால்லன்னு தோணுது…”
“சரிங்க ஓவியமே, அப்ப ரூமுக்குப் போயிடலாமா…” எனவும் “ம்ம்…” எனத் தலையாட்டினாள். ராகவ் ஆன்லைனில் சிட்டிக்கு நடுவே புக் பண்ணி இருந்த ஹோட்டல் ஞானம்  நோக்கி வண்டியைத் திருப்பினான் பிரம்மா.
ரிஷப்சனில் விவரம் சொல்லி இரண்டு அறைகளுக்கான சாவியை வாங்கிக் கொண்டு லிப்டில் உயர, அவர்களின் லக்கேஜை ரூம் சர்வீஸ் பணியாளர் எடுத்துக் கொண்டார்.
பளிச்சென்று சுத்தமான விசாலமான அறை அவர்களை வரவேற்க, அதைக் கண்டதும் திருப்தியாய் உணர்ந்தனர்.
“அம்மு, நீ குளிச்சு பிரஷ் ஆகிட்டு வா… கீழ ரெஸ்டாரன்ட் இருக்கு… எதுவும் சாப்பிட்டு வந்திடலாம்…”
“ம்ம்…” என்றவள் அவள் அறைக்கு செல்ல பின்னிலேயே வந்தவன், “ஒரு நிமிஷம் இரு…” என்று தனது ஐபோனில்  HCDAPP செயலியை திறந்து அறை, பாத்ரூம் சுவர்களை வெறுமனே போட்டோ எடுக்க ஓவியா திகைத்தாள்.
“என்ன தேவ், எதுக்கு இதெல்லாம் போட்டோ எடுக்கறீங்க…”
“அம்மு, இந்த ஆப் ல போட்டோ எடுத்தா எங்காச்சும் ஸ்பை காமெரா இருந்தா காட்டிக் கொடுத்திடும்…”
“ஓ… சூப்பர்…” என்றவள் அவனை மெச்சுதலாய் நோக்க, அவனோ மொபைலைப் பார்த்துக் கொண்டே, “சரி, ரூம் லாக் பண்ணிக்க… ஏதாவது வேணும்னா கூப்பிடு…” என்று கதவு வரை சென்றுவிட்டு, “அம்மு, தனியா இருக்க பயம் ஒண்ணும் இல்லையே…” என்றதும் புன்னகைத்தாள் ஓவியா.
“பக்கத்து ரூம்லயே நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்… நீங்களும் போயி பிரஷ் ஆகுங்க…”
“ம்ம்…” என்றவன் அவனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டு கட்டிலில் மல்லாந்து சோம்பல் முறித்தான்.
மனதுக்குள் ரீவைன்டாய் காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் வரிசையில் அணிவகுக்க, புன்னகைத்தான்.
அவனது யோசனைக்குத் தடையிட்டு கதவு தட்டப்பட்டது.
“ரூம் சர்வீசா இருக்குமோ…” யோசித்தபடி எழுத்து கதவைத் திறக்க ஓவியம் நின்றிருந்தது.
“தேவ்… என்னோட சோப், பேஸ்ட், பிரஷ், ஷாம்பூன்னு எல்லாத்தையும் ஒரு தனிக் கவர்ல போட்டு வச்சிருந்தேன்… இப்பப் பார்த்தா கவரையே காணோம்… ப்ச்… எடுக்க மறந்துட்டேன் போலருக்கு…” முகத்தை சுளித்தபடி அவள் வருத்தமாய் சொல்ல,
“ஹேய் அவ்ளோ தான, இதுக்குப் போயி வொர்ரி பண்ணிட்டு… இரு… என்னோடதைத் தர்றேன்…” என்றான்.
“ப்ச்… நான் யூஸ் பண்ணினா, நீங்க என்ன பண்ணுவீங்க… வேற வாங்கிக்கலாம்…” என்றாள் வருத்தத்துடன்.
“அதெல்லாம் பரவால்ல, நானும் அதையே யூஸ் பண்ணிப்பேன்…”
“என்ன தேவ் சொல்லறீங்க, அதெப்படி நான் யூஸ் பண்ணதை…” சொல்லிக் கொண்டே அவன் முகத்தைப் பார்த்தவள் அவனது பார்வை குறுகுறுவென்று ஆழமாய் தன் கண்களைத் துளைப்பதை உணர்ந்து தவிப்புடன் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
“இ..இப்ப எதுக்கு இந்த லுக்கு…” என்றவளின் குரல் குழைந்து தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டது. அவளது அவஸ்தையைப் புரிந்து கொண்டு அமைதியாய் தனது பாகைத் திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்தான். ஷேவிங் கிரீமில் இருந்து எல்லாமே அதற்குள் இருந்தது.
“இதுல, சோப், பேஸ்ட், ஷாம்பூ எல்லாமே இருக்கு… உனக்கு வேண்டியதை எடுத்திட்டு உன் ரூம்லயே வச்சிடு… நானும் அங்கயே வந்து குளிச்சுக்கறேன்…” என்றதும் திகைப்புடன் நோக்கியவள் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.
அவள் அரை மனதுடனே வாங்கிக் கொண்டு நகர, பிரம்மா உற்சாகமாய் விசில் அடித்தான்.
அவனது அலைபேசி ஒளிர்ந்து ராகவின் பெயரைக் காட்ட எடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ, சொல்லு மேன்…”
“என்ன தெய்வமே, அங்கே ரீச் ஆனதும் போன் பண்ணுவீங்கன்னு பார்த்தா, ஒண்ணையும் காணோம்… நல்லபடியா போயிட்டீங்க தானே… இப்ப எங்க இருக்கீங்க…”
“ரூம்ல இருக்கோம்…”
“ம்ம்… ரூம் கம்பர்டபிளா இருக்கா…”
“எஸ்… நல்ல அட்மாஸ்பியர், கிளீன், ரொம்பப் பிடிச்சிருக்கு…”
“ரூம் மட்டும் தான் பிடிச்சிருக்கா…”
“இல்ல, ஓவியத்தையும் பிடிச்சிருக்கு… போதுமா, நான்  அதை சொல்லணும்னு தான நீ எதிர்பார்க்கிற…” என்றவன் சிரிக்க ராகவ் உற்சாகமானான்.
“தெய்வமே, சூப்பர்… கலக்கிட்டீங்க… அண்ணி கிட்ட சொல்லிட்டீங்களா…”
“என்னது அண்ணியா… ஹாஹா, அதுக்குள்ளே பிரமோஷன் கொடுத்துட்டியா…”
“உங்களை அண்ணன்னு கூப்பிடலேன்னாலும் நீங்க எனக்கு அப்படி தான் தெய்வமே… உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சு பார்க்கணும்னு தான் என்னோட ஆசை…” என்றவனின் குரல் தழுதழுக்க பிரம்மா திகைத்தான்.
“ஹேய், சொல்லலேன்னாலும் நீயும் எனக்கு தம்பி தான்டா… நான் இன்னும் அவகிட்ட சொல்லலை… ஆனா, அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு தான் மனப்பட்சி சொல்லுது…”
“மனப்பட்சி சொல்லுறது இருக்கட்டும்… உங்களை தான் அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்குமே… அந்தப் பிடித்தமா இருந்திடப் போகுது… எதுக்கும் மனசுக்குள்ளயே வச்சுட்டு இருக்காம, சொல்லிடுங்க…” என்றான் ராகவ்.
“ம்ம்… சொல்லனும்னு தான் நினைக்கறேன், அதென்னவோ தயக்கமாவே இருக்கு… ஓகே நாளைக்கே சந்தர்ப்பம் பார்த்து சொல்லிடறேன்…” என்றான் பிரம்மா.
“ம்ம்… அங்கிருந்து வரும்போது ரெண்டு பேரும் காதலர்களா தான் வரணும், சொல்லிட்டேன்… சரி, நாளைக்கு கூப்பிடறேன்…” என்ற ராகவ், அழைப்பைத் துண்டிக்க பிரம்மாவின் மனது ஓவியாவிடம் எப்படி சொல்வது… எனத் தவித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அப்படியே படுத்துக் கிடந்தவனை அலைபேசி சிணுங்கி அழைக்க ஓவியாவின் எண்ணைக் கண்டவன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.
“அம்மு, என்னடா… போன் பண்ணிருக்க, என்னாச்சு…” பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே அவனது அறைக் கதவைத் திறந்து அவளது அறை முன் நின்றிருந்தான்.
கதவைத் தட்ட, “நான் குளிச்சுட்டேன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்…” போனில் சொன்னவள் முன்னில் நின்று கொண்டிருந்தவனை நோக்கிப் புன்னகைத்தாள்.
“ஹோ, அவ்ளோ தானா, எதுவும் பிரச்சனையோன்னு பயந்துட்டேன்…” என்றவன் அவளது கட்டிலில் தொப்பென்று அமர, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் உள்ளுக்குள் பனிக்கூலாய் உருகியது உள்ளம்.
“தேவ், போயி குளிச்சிட்டு வாங்க, ஒரு காபி குடிக்கணும் போலருக்கு…” அவள் சொல்ல, “இதோ…” என்றவன், தனது டவலுடன் குளிக்க சென்றான். அவனுக்குப் பிடித்த ஷாம்பூவின் சுகந்தம் இன்னும் மிச்சமிருக்க, சந்தோஷமாய் குளியலைத் துடங்கினான்.
பேசிய வார்த்தைகள்
மனதுக்குள் வேராக
பேசாத வார்த்தைகள்
மலருக்குள் தேனாக
இனிக்கும் மாயமென்ன…
காதலின் சுகந்தத்தில்
காத்தலும் சுகமானது…

Advertisement