Advertisement

“தேவ், அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா…” ஆருத்ரா கண்ணீருடன் மகனிடம் சொல்ல, “கவலைப் படாதீங்கமா, நிச்சயம் தோத்துப் போக மாட்டேன்… ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா உங்க முன்னாடி வந்து நிப்பேன்…” என்றான்.
“ம்ம்… நீயே உன் வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டயா… இதுக்கு மேல இந்த வீட்டுல வச்சு உனக்கு சோறு போட்டு வளர்த்துறதுல அர்த்தமே இல்ல… உன் இஷ்டம் போல எங்க வேணும்னா போ… ஆனா எந்த நிலமைலையும் திரும்ப வந்துடாத…” என்ற தந்தை கோபத்துடன் சொல்ல,
“என்னங்க, அவன்தான் சின்னப் பிள்ளை, யோசிக்காம சொல்லுறான்னா நீங்களும் இப்படி சொன்னா எப்படிங்க…” என்றார் ஆருத்ரா கண்ணீருடன்.
“இதுக்கு மேல அவனுக்காகப் பேசிட்டு வந்தா நான் மனுஷனா இருக்க மாட்டேன்… புகைஞ்ச கொள்ளி வெளியில… இனி அவன் இங்க இருக்கக் கூடாது…” என்றார்.
“தேவ், என்னடா…” என்று கோபமும், வருத்தமுமாய் மகனைப் பார்க்க அவனோ தெளிவான முகத்துடன், “நான் இன்னைக்கு மட்டும் இங்க இருக்க பர்மிஷன் கொடுங்கப்பா… காலைல கிளம்பிருவேன்…” என்றான் சற்றும் பிசிறில்லாமல்.
அவனை வெடுக்கென்று கோபமாய் ஒரு பார்வை பார்த்தவர், விருட்டென்று தனது அறைக்குள் சென்று விட்டார்.
அவனது அன்னையின் நிலை தான் பாவம். கண்ணீருடன் நின்றவரின் அருகில் வந்தவன், “கவலைப் படாதீங்க மா… நான் நிச்சயம் நல்லா வருவேன்னு நம்பி, வாழ்த்தி அனுப்புங்க… நான் எங்க இருந்தாலும் உங்களுக்கு போன் பண்ணுவேன்…” என்று சொல்ல கட்டிக் கொண்டு அழுதார்.
இரவு நிம்மதியாய் உறங்கியவன் காலையில் நம்பிக்கையின் விடியலுடன் எழுந்தான். தயாராய் எடுத்து வைத்திருந்த பாகை எடுத்துக் கொண்டு அன்னையிடம் வாழ்த்தை வாங்கிக் கொண்டு விடை பெற்றான். கண்ணீருடன் வாழ்த்தி விடை கொடுத்தார் ஆருத்ரா. அவனைக் காணப் பிடிக்காமல் விடியலிலேயே தந்தை எங்கோ கிளம்பி சென்றிருந்தார்.
அன்று தான் அம்முவும், தந்தையும் வந்து கொண்டிருந்த ரயிலில் இவன் ஏறியதும், பரிச்சயப்பட்டதும், மனம் தளர்ந்திருந்த அம்முவுக்கு நம்பிக்கை கொடுத்ததும்.
அவன் சொல்வதை வருத்தமும், பிரமிப்புமாய் கேட்டுக் கொண்டிருந்த ஓவியாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“என் திறமைக்கு மதிப்பில்லாத, புரிஞ்சுக்காத உறவுகளோட அவங்களுக்குப் பிடிச்ச போல பொய்யா ஒரு வாழ்க்கை வாழ எனக்குப் பிடிக்கல… நான் வீட்டை விட்டு வந்தது தப்பான்னு தெரியல… ஆனா என் முடிவால நான் தேர்ந்தெடுத்த பாதை ரொம்ப சரின்னு நம்பறேன்…” கண்ணில் நீர் மின்ன நம்பிக்கையான குரலில் சொன்னான் தேவ்.
ஆறுதலாய் அவன் தோள் தொட்டவள், “தேவ்… எப்பவும் சிரிச்சுகிட்டு, மத்தவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற உங்களுக்குப் பின்னால இத்தனை சோகம் இருக்கும்னு எனக்குத் தெரியல… உங்க குடும்பத்துல அத்தனை பிரச்சனை இருந்துமா எனக்கு நம்பிக்கை கொடுத்துப் பேசினிங்க…”
“என் எண்ணமும், செயலும் சரியா இருக்கும்போது எதுக்காக கலங்கணும்… என் பாதை ஓவியம் தான்னு முடிவு பண்ண பின்னாடி நம்பிக்கையா அதுல இறங்குறது தானே சரி… என் நம்பிக்கையும், திறமையும் பொய்த்துப் போகல…”
“ம்ம்… நீங்க சொல்லுறது சரிதான்… இருந்தாலும் இத்தன வருஷமா குடும்பத்தை விட்டு தனியா…” சொல்லும்போதே வருத்தத்தில் அவள் குரல் உடைய நிறுத்திக் கொண்டாள்.
“உண்மையா நான் வீட்டை விட்டு வெளிய வந்ததும் சந்தோஷப்பட்டேன் அம்மு… கூண்டை விட்டு பறக்கிற பறவை போல சுதந்திரமா உணர்ந்தேன்… மனசு நிறைய நம்பிக்கையும், கனவுமா தான் சென்னைக்கு ரயில் ஏறினேன்… சென்னை என்னை ஏமாத்தல, வந்த ரெண்டாவது நாளே அம்புலிமாமா ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்தேன்… அங்கிருந்து குமுதம், விகடன்னு என் பாதை நீண்டுச்சு… என் திறமையும், வேகமும் அவங்களுக்குப் பிடிச்சுது… அடுத்தடுத்த பத்திரிகையில் வேலை செய்யும்போது வருமானம் கூடுச்சு… ஒரு நாளைக்கு ஐம்பது ஓவியம் கூட வரைஞ்சிருக்கேன்… எனக்குன்னு ஒரு வீடு, சொத்து, நினைச்ச இடத்துக்கு டூர்னு என் வாழ்க்கையை என்னால அழகாக்கிக்க முடிஞ்சுது… இது எல்லாமே என் திறமைக்கான அங்கீகாரம்னு பெருமையா இருந்துச்சு… என்னால ஒரு நாள் சாப்பிடாம கூட இருக்க முடியும்… ஓவியம் வரையாம இருக்கவே முடியாது…” அவன் சொல்வதை திகைப்புடன் கேட்டிருந்தாள் ஓவியா.
“நிஜமாலுமே நீங்க சொல்லுற ஒவ்வொண்ணும் எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கு தேவ்…”
“இப்படில்லாம் என் வாழ்க்கைல நடந்து தான் நான் சாதிக்கணும்னு இருந்தா யாரால மாத்த முடியும்… இந்த வளர்ச்சிக்கு நீயும் ஒரு காரணம்னு சொல்லலாம்…”
“என்ன சொல்லறீங்க, நானா…” என்றாள் திகைப்புடன்.
“ம்ம்… ரயில்ல சோகமா இருந்த உன் முகம் மனசுல பதிஞ்சிருச்சு… அதுக்கான காரணம் எதுவா இருந்தாலும் உன்னையும் சிரிக்க வைக்கனும்னு மனசுக்குத் தோணுச்சு… நான் வரைஞ்ச ஓவியத்தைப் பார்த்து நீ சிரிச்ச சிரிப்பு, கண்டிப்பா என்னால சாதிக்க முடியும்னு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு… நான் வரையற ஓவியத்துல எல்லாம் எனக்கே தெரியாம உன் முகம் எட்டிப் பார்க்கும்… தெரியுமா…” என்றவன் புன்னகைத்தான்.
“நிஜமாலுமா தேவ்…” வியப்பில் கண்களை விரித்தாள்.
“அடிக்கடி கண்ணை இப்படி விரிச்சுப் பார்க்காத… ஹப்பா, எவ்ளோ பெரிய கண்ணு… அதுக்குள்ள விழுந்திருவேன் போலருக்கு…” அவன் சொல்ல சிறு தவிப்புடன் பார்வையை மாற்றிக் கொண்டாள் ஓவியா.
“ஹாஹா, சரி போதும்… என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும்னு தான் சொன்னேன்…”
“ம்ம்… இப்பவும் அவங்களோட தொடர்பு இல்லையா…”
“அம்மா, தம்பியோட எப்பவாச்சும் போன் பேசுவேன்… நாலு வருஷம் முன்னாடி தாத்தா இறந்தப்ப ஊருக்குப் போனேன்… ஆனா வீட்டுக்குப் போகாம வெளிய தங்கிட்டு முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்… அம்மாக்கு தான் என்னை நினைச்சு எப்பவும் கவலை…” என்றான் வருத்தத்துடன்.
“ம்ம்… உங்க அப்பாகிட்ட அப்புறம் பேசவே இல்லியா…”
“இல்ல… தோணலயா, பிடிக்கலையான்னு தெரியல… அவரும் பேசவே இல்லை… அவர் நினைச்ச ஒரு மகனா என்னால இருக்க முடியல… ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு திரை விழுந்த போல ஆயிடுச்சு… அந்த பந்தம் அப்படியே நின்னு போனாலும் புதுப்பிக்கப் பிடிக்கல…” என்றான் தேவ்.
“தேவ், என்னதான் இருந்தாலும் இத்தன வருஷமா அவங்களைப் பார்க்கப் போகாம இருக்கிறது தப்பில்லையா…”
“தப்புதான், மூளைக்குத் தெரியுது… மனசுக்குப் பிடிக்கலயே… அவர் அடிச்ச ஒவ்வொரு அடியும் என் மனசுல விழுந்தது… அந்தக் காயம் ஆறினாலும் அதோட ரணம் இப்பவும் இருக்கு…” என்றவனின் குரல் உடைந்திருந்தது.
“அம்மா… அவங்க பாவம் இல்லையா…”
“ம்ம்… அடுத்த மாசம் அப்பாவோட அறுபதாம் கல்யாணம் வருது… அதுக்கு வர்றேன்னு சொல்லிருக்கேன்… ஆனா, போகணுமான்னு இருக்கு… பார்ப்போம்…” என்றவன் நீண்ட ஒரு பெருமூச்சை வெளியேற்ற,
அதற்குமேல் அதைப் பற்றிப் பேசி அவனை வேதனைப் படுத்த விரும்பாமல், “சொல்லிட்டு மாத்தி யோசிக்கக் கூடாது, கண்டிப்பா போயி எல்லாரையும் பார்த்திட்டு வாங்க…” என்றாள் ஓவியா.
“ம்ம்… உடைஞ்ச கண்ணாடி போல தான் உறவுகளும்… பார்க்கலாம் அம்மு, என்னோட அழுகாச்சி கதையை சொல்லி ரொம்ப போரடிச்சுட்டேனா…” முகத்தை துடைத்துக் கொண்டவன் புன்னகையுடன் கேட்க அவளும் சிரித்தாள்.
“சேச்சே, அவ்ளோ போரிங்கா எல்லாம் இல்லை… கொஞ்சம் வருத்தமா இருக்கு, அவ்ளோதான்…” என்றாள் சிரிப்புடன்.
“சரி, பீல் பண்ணது போதும், நான் கூப்பிட்டதும் கொஞ்சம் பிகு பண்ணாலும், வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்….”
“உதைப்பேன் தேவ்… எனக்கே தேங்க்ஸ் சொல்லுவியா…” என்றவளை அவன் வினோதமாய் பார்க்க, அவள் சட்டென்று திரும்பிக் கொண்டாள்.
“அம்மு, உன்னோட நாட்டியத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லையே… எனக்கு ஆடிக் காட்டேன்…” அவன் கேட்க,
“ப்ச்… இப்பவா…” என்றாள் திகைப்புடன்.
“உனக்கு ஆடியன்ஸ் வேணும்னா ராகவ், ஜானும்மாவையும் கூட சேர்த்துக்கலாம்…”
“ஹாஹா… அதுக்கு சொல்லலை, சரி… முதன்முறையா நீங்க என்கிட்ட கேட்டு மறுக்கத் தோணல, ஆடறேன்…” என்றாள்.
“வாவ், சூப்பர்… எதுக்கு இவ்ளோ பெரிய ரூம்னு கேட்டியே… இப்ப யூஸ் ஆகுது பார்த்தியா…” என்றான்.
“ம்ம்…” என்றவள் மொபைலில் ஒரு பாடலைத் தேர்வு செய்ய, “அம்மு, “நாத வினோதங்கள் பாட்டுக்கு ஆடேன்… நேயர் விருப்பம், ப்ளீஸ்…” என்றான் தேவ்.
“ஹூம், ஓகே…” என்றவள் அந்தப் பாடலை மொபைலில் தயாராய் வைத்துக் கொண்டு ஆடத் தயாரானாள்.
அவள் பொசிஷனில் நிற்க, பாடலை ஒலிக்க விட்டான் தேவ்.
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்…
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்…
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்…
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்…
திரனன திரனன திரதிர திரதிர…
பாடல் முழுதும் முடியும் வரை அவளில் பதித்த விழிகளை மாற்றிக் கொள்ள முடியாமல் கண் சிமிட்டாமல் ரசித்திருந்தான் தேவ். பாடலுக்கேற்ப அவளது கண்களில் தெரிந்த பாவங்களும், உடலில் தெரிந்த அசைவுகளும், கைகள் பிடித்த அபிநயமும் மனதுக்குள் பதிந்து போக பாடல் முடிந்ததும் கை தட்டினான்.
“வாவ்… பென்டாஸ்டிக்… சூப்பர் அம்மு… ரொம்ப அழகா ஆடின…” அவனது பாராட்டைப் பெற்றுக் கொண்டே சிறிது மூச்சு வாங்கிக் கொண்டவள்,
“ஹாப்பியா…” என்றதும் அவள் கையைப் பற்றிக் கொண்டவன், “ரொம்ப அருமையா இருந்துச்சு அம்மு… என் ஓவியத்துக்கே உயிர் வந்து ஆடினது போல் அவ்ளோ அருமையா இருந்துச்சு…” கையைக் குலுக்கி மனதாரப் பாராட்டினான் பிரம்மா.
“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு… நான் இப்ப வந்திடறேன்…” என்றவன் சட்டென்று அங்கிருந்து செல்ல, “தேவ் எதுக்கு இவ்வளவு அவசரமா ஓடறான்…” என நினைத்துக் கொண்டே ஜன்னல் ஓரத்தில் நின்று வெளியே கண்களைப் பதித்தாள்.
அங்கிருந்து பார்க்கையில் வீட்டின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிய வரிசையாய் நின்ற தேக்கு மரங்கள், பலா, தென்னை மரங்களை அதிசயமாய் பார்த்தவள், “ஓவியருக்கு ஓவியம் மட்டும் விருப்பம் இல்லை போலருக்கு… இதை எல்லாம் யாரு பார்த்துப்பாங்க, இவ்ளோ இருக்கே…” என நினைத்தவள் மனது தேவின் குடும்பத்தைப் பற்றி யோசித்தது.
“குடும்பத்தை விட்டு தனியா வந்தாலும் சோடை போகாம தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிட்டு இப்படி ஒரு வளர்ச்சியைக் கொடுக்கிறது எத்தனை பெரிய விஷயம்… தேவ் சாதிச்சிருக்கார்… இதை அவர் குடும்பம் புரிஞ்சுகிட்டா எவ்ளோ நல்லாருக்கும்…” என நினைத்துக் கொண்டாள்.
“என்ன, ஓவியம் இங்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கு…” தேவின் குரலில் திரும்பியவள் புன்னகைத்தாள்.
“ஹூம், ஓவியர் எதை எடுக்க இவ்ளோ அவசரமா ஓடினார்னு யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றாள்.
“எடுக்க, இல்ல கொடுக்க தான் ஓடினேன்… இங்க வா…” என்றவன் கையில் எதுவோ இருக்க, “என்ன அது…” என்றாள்.
அவள் கையில் கொடுத்தவன், “பிரிச்சுப் பாரு…” என்றான். அதைப் பிரித்தவளின் கண்கள் திகைப்பில் விரிந்து, இதழ்கள் உணர்ச்சியில் குவிந்து, “வாவ்… அற்புதம்…” என்றது.
கற்பனையில் உருவானவள்
கண்ணெதிரே தோன்றிட…
கவிதையாய் நிறைந்திருந்தவள்
கண்ணுக்குள் நடனமாடினாள்…
எண்ணங்களில் ஊற்றானவள்
என் முன்னில் ஜதி பிடிக்க…
எனக்குள்ளே உருவானவள்
எனை இன்று உணர வைத்தாள்…

Advertisement