Advertisement

அத்தியாயம் – 13
ஆருத்ரா வேதனையுடன் மகனைத் தழுவிக் கொண்டிருக்க, “வலிக்குதா அண்ணா…” அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுத்தபடி கேட்ட தம்பி நரேனின் கண்ணிலும் நீர் நிறைந்திருந்தது.
“இல்லடா தம்பி…” என்றவன் தம்பியின் தலையில் செல்லமாய் வருடி அன்னையிடம், “அழாதீங்கமா…” எனவும் மகனைக் கட்டிக் கொண்டு அழுதார் ஆருத்ரா.
“தன் உடல் முழுதும் புண்ணாகிய போதும் தன்னை அழ வேண்டாம் என்று சொல்லும் மகனின் நேசத்தை இவனது தந்தை புரிந்து கொள்ள மறுக்கிறாரே…” என்ற ஆதங்கம் கண்ணீரை அதிகமாய் வரவழைத்தது.
“ஏண்டா தேவ், இப்படிப் பண்ணற… உன் அப்பாக்கு தான் அது பிடிக்கலையே… அதைத் தூக்கிப் போட்டுட்டு படிச்சா என்ன… இந்த ஓவியமா நாளைக்கு உன்னைக் காப்பாத்தப் போகுது… நல்லாப் படிச்சா தானே நல்ல வேலைக்குப் போக முடியும்… உனக்கு ஏண்டா புரிய மாட்டேங்குது… இந்த வருஷம் பப்ளிக் வேற… உன் ஓவியத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு படியேன் டா…” அவர் அழுகையுடன் சொல்ல தேவ் பதில் எதுவும் சொல்லாமல் அழுத்தமாய் நின்று கொண்டிருந்தான்.
“உனக்கும் எத்தன சொன்னாலும் புரிய மாட்டேங்குது… இப்ப என் மேல சத்தியம்னு சொல்லிட்டுப் போயிருக்கார்… இனியும் நீ பண்ணறதை தான் பண்ணுவேன்னு சொன்னா நான் என்னடா பண்ணுவேன்… உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு இப்படி அவஸ்தைப் படறேன்… அந்தக் கருமத்தைத் தூக்கிப் போட்டுட்டு படிக்கற வழியைப் பாரு…” என்று அன்னையும் அவன் மனதைப் புரிந்து கொள்ளாமல் கவலையில் சொல்ல, அமைதியாய் தனது அறைக்குள் சென்று விட்டான் தேவ்.
அவனது சிவந்த உடம்பில் வரிவரியாய் சாட்டையின் தடங்கள் பதிந்து ரத்தம் கன்றியதில் வரிக்குதிரை போலத் தோன்றியது அவனுக்கு.
உடனே வரிக்குதிரை வரைய வேண்டும் போலத் தோன்ற வெறுப்புடன் கண்ணை மூடிக் கொண்டவனின் மனதுக்குள் வண்ணக் கலவைகள் விம்மலாய் எழுந்தன.
“விடு, விடுன்னு சொன்னா எதை விடுவேன்… எனக்குள் உயிராய் கலந்திருக்கும் ஓவியத்தை விடணும்னா நான் செத்துதான் போகணும்… அப்பா தான் புரிஞ்சுக்கலைன்னா அம்மாவும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க… என்னை அப்பா உடம்புல அடிச்சது தான் அவங்களுக்கு கவலை… மனசுல விழற அடியை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க…” அந்த சின்ன வயதில் இப்படிதான் அவனால் யோசிக்க முடிந்தது.
அன்னை மீது சத்தியம் என்று கூறியதால் தந்தையின் வார்த்தையை மீறி அவனால் ஓவியத்தை வரைய முடியவில்லை. பரபரக்கும் கையை சுவரில் ஓங்கிக் குத்திக் கொண்டான். பேனாவோ, பென்சிலோ கையில் எடுக்கையில் அனிச்சையாய் வரைய செல்லும் கைகளை அடக்கிக் கொள்ள படாதபாடு பட்டான். அவனால் முடியவே இல்லை. சுயம் இழந்து யாரோ ஒருவனாக படிக்கத் தொடங்கினான்.
சில பெற்றோர்கள் இப்படித்தான்… தனது ஆசையை, இலட்சியத்தை பிள்ளைகளின் மேல் சுமத்தி அவர்களின் ஆசையைக் கொன்று விடுகிறார்கள்… அவர்களுக்குத் திறமை இருந்தும், அவர்கள் போக்கில் முன்னேற விடாமல் படிப்பு மட்டுமே வாழ்க்கையில் முக்கியம் என்ற பிடிவாதத்தில் மூர்க்கமாக நடந்து கொள்வார்கள்.
மொத்தத்தில் பிள்ளைகளின் சந்தோஷத்தை, கனவுகளை, விருப்பங்களை அழித்துவிட்டு அவர்கள் வாழ்க்கையையும் தாங்களே வாழ முயல்கிறார்கள். தேவின் தந்தையும் அப்படி ஒருவர் தான்… அவருக்கு படிப்பும் முக்கியம் என்பதை மகனுக்குப் புரிய வைக்கும் பொறுமை கூட இல்லை.
தன் சுயம் மறந்து தனக்குள் வேறோருவனாய் வாழ தேவ்க்கு மூச்சு முட்டியது. பள்ளிக்கு சென்று வந்ததும் அறைக்குள்ளேயே முடங்கிப் போனான். ஒரு மாதத்தில் அவனது வாழ்க்கையை வேறு யாரோ வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஓவியம் இல்லாத தேவ் உணர்வுகளைத் தொலைத்தவன் போலிருந்தான்.
ஓவியனின் கண்ணைப் பறித்துக் கொண்டு வரைய சொல்லுவது போல் அவன் உணர்வுகளைப் பறித்துக் கொண்டு வாழச் சொன்னார்கள். வாழ்ந்தான்… உறக்கம் வராமல் படித்துக் கொண்டு இரவுகளைத் தின்றான். பரிட்சையும் நல்லபடியாய் எழுதி முடித்தான்.
மகன் இப்போது ஓவியம் வரையாமல் புத்தகமும் கையுமாய் படித்துக் கொண்டிருப்பதில் ஆருத்ராவுக்கு சந்தோஷம்… ராம் கிருஷ்ணாவும் தான் போட்ட போட்டில் மகன் பயந்து அடங்கி விட்டான் என்று இறுமாப்புடன் இருந்தார். பரீட்சை முடிந்து பசியோடு வரும் மகனுக்கு கொடுப்பதற்காய் ஆருத்ரா ஆசையாய் அவனுக்குப் பிடித்த கார தோசைக்கு சட்னி அரைத்துக் கொண்டிருந்தார்.  
இறுதித் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவன் நேராய் தனது அறைக்கு சென்று கதவைத் தாளிட்டுக் கொள்ள, “மகன் வருவதைக் கண்டவர், “தேவ்… சாப்பிட வாடா… சூடா கார தோசை செய்து தரேன்…” என்று சொல்ல, “பசிக்கல மா… அப்புறம் வரேன்…” என்று குரல் மட்டும் வந்தது.
அத்தனை நாட்களாய் வரையாமல் கட்டிப் போட்டிருந்த கைக்கு விடுதலை கொடுத்து உற்சாகத்துடன் வரைந்து கொண்டிருந்தான். என்ன மனதில் தோன்றுகிறதோ அது அத்தனையும் உருவங்களாய் உருவெடுத்தது.  
தந்தை மகனை அடிப்பது போல் ஒரு சித்திரம், அன்னை நெஞ்சோடு மகனை அணைத்துக் கொண்டு அழுவது போல் ஒரு சித்திரம், தம்பி அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுப்பது போல் ஒரு சித்திரம் என்று மனதுக்குள் தேக்கி வைத்த அத்தனை உணர்வுகளையும் கண்ணீரோடு வரைந்து கொண்டிருந்தான். அவன் உணர்வுகளை வெளிப்படுத்துவது கூட அந்த ஓவியத்தில் தான் என்பதை வீட்டினர் ஏனோ புரிந்து கொள்ளவில்லை. கைகள் ஓய்ந்து போகும் வரை வரைந்து தள்ளிய பிறகே மனது சற்று சமாதானமானது.
மணி எட்டாகியும் மகன் சாப்பிட வராததால் ஆருத்ரா மீண்டும் அழைத்துக் கொண்டே இருக்க, வரைவதை நிறுத்தி சாப்பிட வந்தான் தேவ் கிருஷ்ணா.
“என்னடா, ரூமுக்குள்ள போயி என்ன பண்ணிட்டு இருக்க, எவ்ளோ நேரமா கூப்பிடறேன்… ஏன் பசிக்கல, வா…” என்று கேள்விகளை அடுக்கிவிட்டு ஒரு பதில் கூட அவன் சொல்லாமல் நிற்பதைக் கண்டு கொள்ளாமல் அடுக்களைக்கு சென்றவர் கார தோசை, கெட்டி சட்னியுடன் வந்தார்.
“சாப்பிடுப்பா… பரிட்சை நல்லா எழுதுனியா…”
“ம்ம்…”
“நல்லவேளை, அப்பா சொன்ன பிறகும் கேக்காம, ஓவியம் வரையறேன்னு கண்டதையும் கிறுக்காம, படிச்சு பரீட்சை எழுதுனியே, அம்மாக்கு ரொம்ப சந்தோஷம்…” சொல்லிக் கொண்டே அடுத்த தோசையைக் கொடுக்க அமைதியாய் சாப்பிட்டவன் அருகில் வந்து நின்றான் நரேன்.
“அண்ணா, இது நான் தான…” கையில் உள்ள காகிதத்தை நீட்டிக் கேட்க, அதில் அண்ணனின் டிரவுசரைப் பிடித்துக் கொண்டு தம்பி நிற்கும் ஓவியம் இருந்தது.
அதைப் பார்த்த ஆருத்ரா, “என்னடா இது, இவ்ளோ நேரமா இதைத் தான் பண்ணிட்டு இருந்தியா… உனக்கு எவ்ளோ சொன்னாலும் புத்தியே வராதா…” என்று கோபப்பட தேவ் எதுவும் சொல்லவில்லை.
“நீ திருந்திட்டேன்னு நினைச்சா, உருப்படற வழியே தெரியலையே… ஏண்டா இப்படி இருக்க… இதை உங்கப்பா பார்த்தா என்ன பண்ணுவாரோ…”
“அம்மா, நான் சென்னைக்குப் போறேன்…”
“சென்னைக்கா, அங்க எதுக்கு…”
“என் திறமையை உலகத்துக்குத் தெரிய வைக்கிறதுக்கு… வரையாம என்னால இருக்க முடியாது, என் எதிர்காலம் இதுதான்னு நான் முடிவு பண்ணிட்டேன்…”
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே ராம் கிருஷ்ணா வர ஆருத்ரா பயத்துடன் வாயை மூடிக் கொண்டார்.
“என்னடா சொன்ன, வரையாம இருக்க முடியாதா… கை இருந்தா தானே வரைவ… அதை உடைச்சுப் போட்டுட்டா என்ன பண்ணுவ… மனசுல பெரிய இவன்னு நினைப்பு…”
“ஆமாப்பா… நான் பெரிய இவன் தான்… அது உங்களுக்குப் புரியாது… புரிய வைக்க தான் வீட்டை விட்டுப் போறேன்னு சொல்லறேன்…”
“ஓ… இங்கிருந்து போறளவுக்கு யோசிச்சுட்டியா… அந்தளவுக்குப் பெரிய மனுஷன் ஆகிட்ட… இந்த வீட்டை விட்டு வெளிய போனா அடுத்த வேளை சோத்துக்கு பிச்சை தான்டா எடுக்கணும்… உன் ஓவியம் சோறு போடாது…”
“போடும்ப்பா… என் ஓவியம் நிச்சயம் சோறு போடும்…”
“டேய் தேவ், வேண்டாம்டா அமைதியா இரு… எதையாச்சும் உளறிட்டு இருக்காத…” என்றார் ஆருத்ரா கவலையுடன்.
“இல்லமா, ஓவியம் தான் என் எதிர்காலம்…”
“நீ யாருடா, அதை முடிவு பண்ண…”
“என் வாழ்க்கையை நான் தான்ப்பா முடிவு பண்ணனும்… தயவு செய்து என்னைத் தடுக்காதீங்க…”
“டேய் தேவ், என்னடா சொல்லற…”
“ஆமாம் மா… சென்னைக்குப் போக முடிவு பண்ணிட்டேன்…”
“ஓ, முடிவே பண்ணியாச்சா, போனா அப்படியே போயிடு… மறுபடி வீட்டுக்கு வந்தா காலை உடைச்சிருவேன்…”
“வர மாட்டேன்ப்பா… என் திறமைக்கு மரியாதை இல்லாத இடத்துல மூச்சு முட்டி வாழறதை விட என் ஓவியத்தோட சந்தோஷமா, சுதந்திரமா வாழுவேன்…”

Advertisement