Advertisement

அத்தியாயம் – 12
நிதானமாய் ஷாம்புவில் குளித்த தலைமுடியை உலர வைத்துக் கொண்டிருந்த ஓவியாவின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது.
மனதுக்குப் பிடித்த சுரிதார் உடலைத் தழுவி இருக்க, கண்ணாடி முன் நின்று தன்னை ரசனையுடன் பார்த்தவளுக்கு தனது செயல்கள் வியப்பைக் கொடுத்தாலும் சந்தோஷிக்காமல் இருக்க முடியவில்லை.
மனதின் சந்தோஷம் முகத்தின் அழகைக் கூட்டியதோ என்னவோ, எளிமையாய் அலங்கரித்துக் கொண்டாலும் அந்தக் கண்ணாடி அவளை மிக அழகாகவே காட்டுவதாய் தோன்ற சிரித்துக் கொண்டாள்.
காலையிலேயே பிரம்மாவின் அழைப்பு, “எத்தனை மணிக்கு வருவாய்…” என்று கேட்க, காலை உணவு முடிந்து கிளம்புவதாய் சொல்லி இருந்தாள்.
தன்னை ரசித்துக் கொண்டிருந்தவளின் மோன நிலையைக் கலைத்தது தந்தை சிவநேசனின் குரல்.
“அம்மு… சாப்பிட வா மா…” என்றதும் மீண்டும் ஒருமுறை தன்னை சரி பார்த்துக் கொண்டு வெளியே வந்தாள்.
தந்தையின் கை வண்ணத்தில் சூடான வெண் பொங்கல் நெய்யோடு மணத்தது. சட்னியுடன் கலந்து சாப்பிடத் தொடங்க, எப்போதும் தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு செல்லும் பொங்கல் இன்று இறங்காமல் அடம் பிடித்தது.
“என்னடா, நல்லா இல்லியா…” அவள் விருப்பமின்றி சாப்பிடுவதைக் கண்ட சிவநேசன் கேட்க, “இல்லப்பா, நல்லாருக்கு… எனக்கு தான் பசியில்லை, டாக்ஸி வந்திரும்… நான் கிளம்பறேன் ப்பா…” என்று எழுந்து கொண்டவளின் மனநிலை அவள் வயதையும், காதலையும் கடந்து வந்த தந்தைக்குப் புரியாமல் இல்லை.
“தேவ் கிட்டப் பேசணும்…” நினைத்துக் கொண்டார்.
சில நிமிடத்தில் டாக்ஸி வந்துவிட மலர்ந்த முகத்தில் ஒளிந்திருந்த வெட்கத்தோடு கிளம்பும் மகளைக் கண் நிறையப் பார்த்தவர், “கடவுளே… அம்மா இல்லாத என் பொண்ணு விருப்பம் எதுன்னாலும் நீதான் நிறைவேத்திக் கொடுக்கணும்…” என வேண்டிக் கொண்டார்.
எங்கே செல்ல வேண்டுமென்று டிரைவரிடம் சொன்னவள், அதன் பிறகு வேறு உலகத்தில் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். மனது நிலையில்லாமல் ஒரு வித குஷியோடு, சொல்ல முடியா அவஸ்தையில் படபடத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு அது பிடிக்கவே செய்தது.
என்ன மாயமோ
மந்திரமோ தெரியவில்லை…
இந்தக் காதல் மட்டும்
வந்துவிட்டால் உலகின்
சகல கள்ளத்தனமும்
சேர்ந்தே வந்து விடுகிறது…
இதழில் நிரந்தரமாய் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையும், கனவை சுமக்கும் விழிகளுமாய் மனதுக்குப் பிடித்தவனைக் காணப் போகும் ஆவலுடன் அமர்ந்திருந்தாள். இரவெல்லாம் பிரம்மாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள், “அவன் நடவடிக்கைகள் கல்யாணம் ஆனது போல் தெரியவில்லை, கண்டிப்பாய் பாச்சிலர் தான்…” என்ற முடிவுக்கு வந்த பின்னர் தான் நிம்மதியாய் உணர்ந்தாள்.
அவனுக்கு கல்யாணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் இவள் எதற்காகக் கவலைப்பட வேண்டுமென்று யோசிக்கத் தோன்றவில்லை. எத்தனை நேரம் அப்படியே தவத்தில்  அமர்ந்திருந்தாலோ டிரைவரின் குரல் கலைத்தது.
“மேடம், நீங்க சொன்ன அட்ரஸ் வந்திருச்சு…”
ஒரு குட்டி பங்களாவின் பெரிய கேட் முன்னில் கார் நிற்க, திகைப்புடன் பார்த்தவளை, “மேடம், இதான் ஆர்டிஸ்ட் பிரம்மா சார் வீடு…” என்றார் மீண்டும் டிரைவர்.
“ம்ம்…” என்றவள் தயக்கத்துடனே இறங்கினாள்.
வீட்டைப் பார்த்தே அவளது கண்கள் மலைத்துப் போனது. அத்தனை அழகாய் ரசனையோடு கட்டப்பட்டிருந்தது. முன்னில் இருந்த செக்யூரிட்டி அவளைக் கண்டதும் புன்னகைத்து, “ஓவியா மேடமா… சார் சொல்லியிருந்தார், உள்ள போங்க…” என்றதும் தயக்கத்துடனே நடந்தாள்.
பசுமைக் கம்பளமாய் விரிந்திருந்த செயற்கைப் புல்லின் மீது நடக்கையில் சுகமான உணர்வைத் தந்தது. இரு பக்கமும் அழகாய் பராமரித்து வந்த தோட்டத்தில் பூச்செடிகளும், மரங்களும் தலை அசைத்து அவளை வரவேற்றன. விழிகளை விரித்து திகைப்புடன் நோக்கியவளுக்கு அந்த பிரமிப்பு மனதுள் சற்று பயத்தைத் தர தயக்கத்துடனே அடுத்த அடியை எடுத்து வைக்கச் செய்தது.
போர்ட்டிகோவில் இரண்டு கார் நின்றிருக்க, வீட்டை நோக்கி நடந்தவள் முன்னில் புன்னகையுடன் தோன்றிய இளவயதுப் பெண்ணைக் கண்டு திகைத்தாள்.
“எங்கள் இல்லத்துக்கு வருகை தரும் நாட்டியத் தாரகையே… உங்கள் வரவு நல்வரவாகட்டும்…” என்றவளைக் கண்டதும் இவள் முகம் குழப்பத்தில் சுருங்கியது.
“ஒருவேளை, தேவ்க்கு கல்யாணம் ஆகிருச்சோ, இது அவன் மனைவியோ…” என யோசித்து ஓவியா அமைதியாய் நிற்க,
“என்ன அப்படியே நிக்கறிங்க… நான் அமிர்தா, உங்களைப் பத்தி அண்ணா சொன்னார், வாங்க…” கை பிடித்து அழைத்துச் செல்லவும் ஓவியாவின் மனதுக்குள் உணர்ந்த நிம்மதியின் காரணத்தை அவளால் யோசிக்க முடியவில்லை.
“ஜானும்மா, ராகவ்… நம்ம கெஸ்ட் வந்தாச்சு, வாங்க…” அமிர்தா குரல் கொடுக்க புன்னகையுடன் அடுக்களையில் இருந்து வெளியே வந்தார் ஜானும்மா.
“வாம்மா, நல்லாருக்கீங்களா…” அன்பாய் விசாரித்த அந்தப் பெண்மணியைக் கண்டதும் புன்னகைத்தாள்.
“ம்ம்… இருக்கேன் மா…” என்றவள் அங்கே வந்த ராகவைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தாள்.
“மேடம்… நான் ராகவ், உங்களோட பெரிய விசிறி… உங்க புரோகிராம் நிறைய பார்த்திருக்கேன்… நேத்துப் பார்த்தப்ப சொல்ல முடியல, உக்காருங்க… சார் இப்ப வந்திருவார்…”
“ம்ம்…” சோபாவில் அமர்ந்தவள் பார்வை சுழன்றது.
ஹாலில் பேருக்குக்கூட ஒரு ஓவியத்தைக் காணவில்லை.
“ஹலோ, வெல்கம் டு அவர் ஸ்வீட் ஹோம்…” அவள் காதருகே ஒலித்த குரலில் திரும்பியவள் திகைத்தாள்.
கையில் ஜூஸ் டிரேவுடன் புன்னகைத்தான் பிரம்மா.
“எ..என்ன தேவ், நீங்க எதுக்கு ஜூஸ் எடுத்திட்டு வரிங்க…” கூச்சத்துடன் அவள் சொல்ல, “இன்னைக்கு எல்லாமே ஓவியம் ஸ்பெஷல் தான்… நான் பண்ணின மாதுளை ஜூஸ் எப்படி இருக்குன்னு குடிச்சிட்டு சொல்லு…” என்றதும் ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டாள்.
“ஆமாம் மா, “இன்னிக்கு சமையல் கூட தம்பி தான் பண்ணுவேன்னு சொல்லிடுச்சு… நான் ஹெல்ப் தான் பண்ணிட்டு இருக்கேன்…” என்றார் ஜானும்மா. அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள், “நீங்க சமைப்பிங்களா…” என்றாள் திகைப்புடன்.
“பார்த்து அம்மு… கண்ணு வெளிய வந்திடப் போகுது… எனக்கு ஓவியம் வரைய மட்டுமில்லை… நல்லா சமைக்கவும், சாப்பிடவும் கூட ரொம்பப் பிடிக்கும்… அதும் என் சமையல்னா இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்… ஆந்திரா ஸ்டைல்ல காரசாரமா இருக்கும்…” என்றான்.
“ஓ… சர்ப்ரைஸ்… இதெல்லாம் எப்படி கத்துகிட்டீங்க…”
“சின்ன வயசுல பாட்டி, அம்மா சமைக்கிறதைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்… அப்புறம் சென்னை வந்த பிறகு என் சமையல் தான்… பத்து வருஷமா தான் ஜானும்மா சமையல்… நேரம் கிடைக்கும்போது நானும் அவங்களோட களத்துல குதிச்சிருவேன்…” என்றான் சிரிப்புடன்.
“மேடம், ஆச்சர்யப்படாதீங்க… சார் ஒரு ஆல் இன் ஆல்  அழகுராஜான்னு போகப் போகப் புரிஞ்சுப்பீங்க…” ராகவ் சொல்லவும் அவள் சிரிக்க, “ஒய் மேன்…” என்றான் தேவ்.
“உங்க பெருமையை எடுத்து சொல்லலாமேன்னு…” என்றதும்,
வாயை பொத்திக் காட்டியவன், “புரிஞ்சுதா, போயி வேலையைப் பாரு…” என்று விரட்டினான்.
“ஹூம், நல்லது செய்தா யாருக்குப் பிடிக்குது… ஓகே, நான் போறேன்…” என்றவன், “அம்ரு… உனக்கென்ன இங்க வேலை, போயி ஜானும்மாக்கு ஹெல்ப் பண்ணு…” எனவும்,
“நான் எதுக்குப் போகணும்… நீ போ…” என விரட்டினாள் அமிர்தா.
ஜூசைக் குடித்து முடித்ததும், “கொடுங்க ஓவி…” இயல்பாய் கேட்டவளிடம் புன்னகைத்து கொடுத்தவள், “ஜூஸ் ரொம்ப நல்லாருக்கு… அமிர்தா, உங்க தங்கையா… பேரன்ட்ஸ் எல்லாம் எங்கிருக்காங்க…” என்றாள் பிரம்மாவிடம்.
“அமிர்தா எனக்குத் தங்கை மாதிரி… என் பாமிலி பத்தி சாப்பிட்டு நிதானமாப் பேசுவோம்…” என்றவன், “ஒரு நிமிஷம், வந்திடறேன்…” என்று அடுக்களைக்கு சென்றான்.
“ஜானும்மா, நான் சொன்ன போல எல்லாத்தையும் கட் பண்ணி ரெடியா வச்சிருங்க… அவங்களுக்கு வீட்டை சுத்திக் காமிச்சிட்டு வந்திடறேன்…” என்று சொல்லி வந்தான்.
“ஓவியமே, வா… உனக்குப் பிடிச்ச இடத்தைக் காட்டறேன்…” என்றவன் முன்னில் செல்ல எழுந்தவள் தொடர்ந்தாள்.
அது அவனது டிராயிங் ரூம். விதவிதமான ஓவியங்கள்  அறையெங்கும் இருக்க, இராமாயண ஓவியங்களை மிகவும் ஆவலுடன் தொட்டுப் பார்த்தாள்.
“வாவ், ரொம்ப அழகாருக்கு… இப்படிதான் வரைவிங்களா…” என்றவள் முடிக்கப்படாமல் வெறும் கோடுகளாய் கிளிப்பில் தொங்கிக் கொண்டிருந்த மற்ற ஓவியங்களைக் கண்கள் விரியப் பார்த்தாள்.
அவளது வியப்பை ரசித்துப் பார்த்தவன், “ம்ம், சரி வா… மாடியைப் பார்த்திட்டு வரலாம்…” என்று இயல்பாய் கை பிடித்து அழைக்க, அவளும் இயல்பாகவே உடன் சென்றாள். ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்த உரிமையின் வெளிப்பாடாக அது இருக்க இருவருமே உணரவில்லை.
அவனது அறைக்கு அழைத்துச் செல்ல, “இத்தனை பெரிய அறையில் இவன் என்ன செய்வான்…” என வியப்புடன் பார்த்தவள், “எதுக்கு இவ்ளோ பெரிய அறை…” என்றாள்.
“ஹாஹா… நாளைப் பின்ன எனக்குக் கல்யாணம் ஆச்சுன்னா, பொண்டாட்டி கூட ஓடிப் பிடிச்சு விளையாடலாம்னு தான்…” அவன் கிண்டலாய் சொல்ல, “ஓ, புட்பாலே விளையாடலாம் போலருக்கு…” புன்னகைத்து தலையாட்டினாள்.
“வா…” என்றவன் மற்ற அறைகள், மாடி என்று சுற்றிக் காட்டினான். அங்கங்கே சிற்பங்கள் அலங்கரிக்க சித்திரங்கள் எங்கும் இல்லாமல் இருந்தது.
“உங்க ஓவியங்களை எங்கயும் வைக்கலையா…”
“நான் வரைஞ்ச ஓவியத்தை நானே சுவர்ல மாட்டிக்கிறதுல என்ன பெருமை… மத்தவங்க ரசிச்சாப் போதும்…” என்றான். அவனது ஓவியங்களின் ஒரிஜினல் பிரதிகளைப் பெரிய ஆல்பத்தில் வைத்திருக்க அதைப் பார்க்க சொல்லிவிட்டு சென்றவன் சீக்கிரமே சமையலை முடித்தான்.
வெஜ் புலாவ், கார சாரமான பனீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், காலிபிளவர் சில்லி… என்று வித்தியாசமாய் செய்திருந்தான். உண்மையிலேயே சமையல் அற்புதமாய் இருக்க, ஓவியாவும் ரசித்து சாப்பிட்டாள்.
“அண்ணே, உங்க சமையல் இவ்ளோ அருமையா இருக்கும்னு தெரியாது… கலக்கிட்டிங்க… நான் ரொம்ப ஹாப்பி… இவ்ளோ காரமா, நச்சுன்னு சாப்பிட்டதே இல்லை… நெக்ஸ்ட் டைம் சமைக்கும்போதும் கண்டிப்பா என்னைக் கூப்பிட மறக்காதீங்க…” என்ற அமிர்தா, கண்ணில் நீர் வர சாப்பிட்டபடி ருசித்து சொல்ல சிரித்தனர்.
அவள் வீட்டுக்கு கிளம்பவே, “ராகவ், அவளை வீட்டுல விட்டுட்டு வா…” என்றான் பிரம்மா.
அவர்கள் கிளம்பி சென்றதும், “ஜானும்மா, நீங்களும் சாப்பிடுங்க… நாங்க மாடில இருக்கோம்…” என்றவன், “வா அம்மு…” என்று சொல்ல, அவனுடன் நடந்தாள்.
இருவரும் இணைந்து செல்வதைக் கண்ட ஜானும்மாவின் உள்ளம், “ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தமா இருக்கு… அவங்க பேசிக்கிறதைப் பார்த்தா வெறும் நட்பா மட்டும் தெரியல… பிரம்மா தம்பி இத்தன வருஷம் தனியா கஷ்டப்பட்டதுக்கு இனியாச்சும் அது வாழ்க்கைல எல்லாம் நல்லதா நடக்கட்டும்…” என மனதார வாழ்த்தினார்.

Advertisement