Advertisement

மாடிக்கு சென்றவன், என் ரூம்லயே உக்கார்ந்து பேசலாமா, உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே…” என்று கேட்க,
“ப்ச்… அதெல்லாம் இல்லை…” என்றாள் ஓவியா. அவனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து கொண்டவன், “வா… இப்படி உக்கார்…” என்று அருகிருந்த சோபாவைக் கை காட்ட, அமர்ந்தவளின் மனதுக்கு அந்த தனிமை தவிப்பைக் கொடுக்க காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்.
ஒரு தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டவன், “நீ நிறைய தடவை என் குடும்பத்தைப் பத்திக் கேட்டுட்ட… எனக்கும் மனசுல உள்ளதை யாருகிட்டயாச்சும் சொல்லணும் போல இருக்கு… அதான் உன்னை இங்க  அழைச்சிட்டு வந்தேன்…” என்றான்.
“என்னாச்சு தேவ், ஏன் நீங்க குடும்பத்தை விட்டு இருக்கீங்க… அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை…”
“சொல்லறேன்…” அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
“நரசிங்கப்பள்ளி, ஆந்திராவில் உள்ள ஒரு சின்ன ஊரு… அங்க தான் என் குடும்பம் இருக்கு… தாத்தா ஜெயேந்திர கிருஷ்ணா, அம்மா, ஆருத்ரா, அப்பா ராம் கிருஷ்ணா, தம்பி நரேன் கிருஷ்ணான்னு என் குடும்பம் ரொம்ப அழகானது… தாத்தா சின்ன வயசுலயே அங்க போயி செட்டில் ஆனவர்… தன்னோட உழைப்பால தனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி ஒரு பெரிய பண்ணையையே உருவாக்கியவர்… என் அப்பா பிறந்து வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் அந்த ஊருல தான்… ஓரளவுக்கு வசதியான குடும்பம்… அப்பாக்கு பிறந்த இடத்து சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னு தமிழ் நாட்டுல இருந்த உறவுக்காரப் பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சாங்க… அம்மா தஞ்சாவூர்…”
“ஓ அதான் நல்லா தமிழ் பேசறீங்களா…”
“ம்ம்… நான் பிறந்து அஞ்சாவது வரைக்கும் இங்கே தமிழ் நாட்டுல தான் படிச்சேன்… அம்மாக்கு தம்பி பிறந்ததும் என்னைப் பார்த்துக்க தஞ்சாவூர் பாட்டி வீட்ல விட்டிருந்தாங்க… சின்ன வயசுல இருந்தே வரையறதுன்னா எனக்கு உயிரு… எதைப் பார்த்தாலும், எது கிடைச்சாலும் வரைஞ்சிட்டே இருப்பேன்… அதுக்கு நான் பிறந்த மண்ணும் காரணமா இருக்கலாம்… என் தாத்தாக்கு அதைப் பார்த்து ரொம்பப் பெருமை… அஞ்சு வயசுலயே என் தாத்தா, பாட்டி ஒவியம் எல்லாம் வரைஞ்சிருக்கேன்… படிப்பை விட ஓவியத்துல தான் எனக்கு ஈடுபாடு அதிகம்… அஞ்சாவது படிக்கும்போது பாட்டி உடம்பு சுகமில்லாம இறந்துட்டாங்க… தாத்தாவால தனியா என்னைப் பார்த்துக்க முடியாதுன்னு என் வீட்டுக்கே அனுப்பிட்டாங்க…” என்றவன் இடைவெளி விட்டு தொடர்ந்தான்.
“நான் வளர்ந்ததுக்கு அப்படியே மாறான சூழ்நிலை அப்பா வீட்டுல… இங்கே விவசாயம், அதை விட்டாப் படிப்பு… வேற கலைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது… என் திறமையை யாரும் பாராட்டலேன்னாலும் பரவால்ல… எப்பப் பார்த்தாலும் கிறுக்கிட்டு இருக்கேன்னு திட்டினாங்க… ஸ்கூல் நோட்டுல ஓவியம் வரைஞ்சு வச்சதுக்கு அப்பா கிட்ட நிறைய அடி கூட வாங்கிருக்கேன்…” சிரித்தான்.
“அச்சச்சோ, அம்மா எதும் சொல்ல மாட்டாங்களா…”
“அம்மாக்கு முதல்ல நான் வரையறது பிடிச்சுது… ஆனா படிக்காம, வரையறது பிடிக்கல…”
“ஓ… உங்களுக்கு படிக்க விருப்பம் இல்லையா…”
“ப்ச்… தெரியல… அப்பா என்னை வரையக் கூடாதுன்னு கன்ட்ரோல் பண்ணப் பண்ண வரைஞ்சே ஆகணும்னு செவுத்துல எல்லாம் கிறுக்கிட்டு இருப்பேன்… ஏறக்குறைய ஒரு பைத்தியம் போல…” என்றவனின் கண்கள் கலங்கியது.
ஓவியா கவலையுடன் அவனைப் பார்க்க, “என்னால வரையாம இருக்க முடியல அம்மு… என் விருப்பத்தை யாரும் மதிக்கலைன்னு ஒரு இயலாமை, கோபம், அப்பா மேல வெறுப்பை வளர வச்சது… அந்தப் பிடிவாதம் கூட என்னைப் படிக்க கூடாதுன்னு வீம்பு பிடிக்க வச்சிருக்கலாம்… பத்தாவது படிக்கும்போது எனக்கு மார்க் கம்மியா இருக்குன்னு ஸ்கூல்ல அப்பாவை வர சொன்னாங்க…”
ஒவியா கலக்கத்துடன் பார்க்க அவன் விழிகள் மெல்ல சிவந்து அன்றைய நினைவுக்கு சென்றது.
“சார், நாங்களும் எத்தனயோ முறை வார்ன் பண்ணிட்டோம்… உங்க பையன் படிக்கிறதா இல்லை… அவன் நல்லா வரையறான் தான், அதுக்காக பரிட்சைல படம் வரைஞ்சு பாஸ் பண்ண முடியாதே… அடுத்த மாசம் பப்ளிக் எக்ஸாம் தொடங்குது, இவன் இப்படியே பண்ணிட்டு இருந்தா பரீட்சை எழுத் அனுமதிக்கலாமா, வேண்டாமான்னு நாங்க யோசிக்க வேண்டி வரும்…” ஸ்கூல் பிரின்சிபல் தெலுங்கில் மாட்லாட கவலையும் கோபமுமாய் கேட்டு நின்றார் ராம் கிருஷ்ணா.
“மேடம், அப்படில்லாம் பண்ணிடாதீங்க… இனி என் பையன் வரையவே மாட்டான்… அதுக்கு நான் கியாரண்டி… அவனை எப்படி வழிக்குக் கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்… ப்ளீஸ் மேடம்…” ஒரு தந்தையாய் கெஞ்சிக் கேட்டவரின் வார்த்தையை மதித்து, “ஓகே… இந்த ஒரு மாசத்துல படிச்சாக் கூட உங்க பையன் பாஸ் பண்ணிட முடியும்… சொல்லிப் புரிய வைங்க…” என்று சம்மதித்தார்.
அப்போது அவருக்குப் புரியவில்லை. உயிரைக் கொன்றாலும் உணர்வை அழிக்க முடியாது… பழக்கத்தை மாற்றினாலும் சுபாவத்தை விட முடியாது என்று… மகனின் உதிரத்தில் ஓவியம் ஒரு உணர்வாய், அவனது சுபாவம் போல் ஒன்றாய்க் கலந்திருந்தது… அதை ஆராதித்துத் பாராட்டா விட்டாலும், அதற்கான முன்னேற்றத்துக்கு வழி வகுக்கா விட்டாலும் முட்டுக் கட்டை போட்டது அவனைப் பின்னில் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கும் என்று யோசிக்காமல் விட்டுவிட்டார்.
அன்பாய் புரிய வைத்து படிப்பும் முக்கியம் என்று சொல்லிக் கொடுக்காமல் தனது அடக்கு முறையை அவனிடம் உபயோகித்து விட்டார். ஆத்திரத்துடன் வீட்டுக்கு வந்தவர், மகனின் வரவுக்காய் காத்திருந்தார்.
இது எதையும் அறியாமல் பள்ளியில் இருந்து வந்த தேவ், “அம்மா, பசிக்குது, சாப்பிட எடுத்து வைங்க…” என்று குரல் கொடுத்துக் கொண்டே உடை மாற்ற சென்றான்.
“வரும்போதே பசின்னு கத்திட்டு வர்ற… மதியம் கொண்டு போன சாப்பாடை வேற யாருக்கும் கொடுக்கறியா…” என்றபடி தட்டில் சாதத்துடன் குழம்பு ஊற்றினார் அன்னை.
உடை மாற்றி, கை கால் அலம்பி நெற்றியில் ஒரு பட்டையைப் போட்டுக் கொண்டு பசியோடு அமர்ந்தவன், வேகமாய் ஒரு உருளையை எடுத்து வாய்க்கு கொண்டு செல்ல, பின்னிலிருந்து முதுகில் யாரோ காலால் எத்த, குப்புற விழுந்ததில் சாப்பாட்டுத் தட்டு சிதறியது.
மகனுக்கு தண்ணி எடுக்க சென்ற ஆருத்ரா சத்தம் கேட்டு ஓடி வர, ருத்ரமூர்த்தியாய் பெரும் சினத்துடன் நின்று கொண்டிருந்தார் அவரது கணவர் ராம் கிருஷ்ணா.
சற்றுத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்த தேவின் தம்பி நரேன் பயத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க கண்ணில் கண்ணீரும், வாயில் சாதமும், முன்னில் சிதறிய சோறுமாய் பயத்துடன் தந்தையை ஏறிட்டான் தேவ் கிருஷ்ணா.
“எ..என்னங்க, என்னாச்சு…” ஓடிவந்து மகனை எழுப்பப் போன மனைவியைத் தள்ளி விட்டு மகனைத் தரதரவென்று இழுத்துச் சென்றவர் கையில் இருந்த சாட்டையை எடுத்து விளாசத் தொடங்க, “ஆ…ஆ… அப்பா, வலிக்குதுப்பா… அடிக்காதீங்கப்பா…” கதறத் தொடங்கினான்.
கண்ணீருடன் நின்ற ஆருத்ரா, “ஐயோ, என்னாச்சுங்க, எதுக்கு இப்படி பிள்ளையை அடிக்கறிங்க… விடுங்க…” என்று நடுவில் வர அவரைத் தள்ளிவிட்டு மாட்டைப் போல் மகனை வெறியோடு அடித்துக் கொண்டிருக்க பயந்து கதறினார்.
“ஐயோ அவனை விடுங்க… என்னடா தேவ் பண்ண, அச்சோ, விடுங்க, என் பிள்ளையைக் கொன்னுடாதீங்க…” என்று கணவனின் காலைப் பிடித்துக் கதற மனைவியை உதறியவர், “ஓவியமா வரையற… நான் அத்தன தடவ சொல்லியும் நீ கேக்க மாட்டல்ல… உனக்காக ஸ்கூல்ல கண்ட பொம்பளைங்க கிட்ட என்னைக் கெஞ்ச வைப்பியா, அப்படி என்ன உனக்கு வரைஞ்சே ஆகணும்னு பிடிவாதம்…” சொல்லிக் கொண்டே மீண்டும் அடிக்கத் தொடங்க அலறிக் கொண்டிருந்தவன், ஒரு ஸ்டேஜில் மரத்துப் போய் அமைதியாய் வாங்கிக் கொண்டான்.
“என்னடா முறைக்கிற… நான் இவ்ளோ சொல்லறேன், இனி வரைய மாட்டேன்னு ஒரு வார்த்தை வாயில வருதா…” என்றவர் அவன் முகத்தில் அறைய, கதறிக் கொண்டே நடுவில் புகுந்தார் ஆருத்ரா.
“போதுங்க, அவனை அடிச்சது… மாட்டைப் போல அடிக்கவா என் புள்ளையைப் பார்த்துப் பார்த்து வளர்த்துறேன்…”
“இங்க பாருடி, பையன்னு உருகுறயேன்னு கடைசித் தடவையா சொல்லறேன்… கொஞ்சம் கூட பெத்தவங்க சொல் பேச்சுக் கேக்காம என்ன புள்ள வளர்த்து வச்சிருக்க… படிக்காம எப்பப் பார்த்தாலும் எதையாச்சும் கிறுக்கிட்டுத் திரியுறான்… இனி செய்யாதன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான்… டேய், இந்த எக்ஸாம் முடியுற வரைக்கும் நீ எதையும் வரையக் கூடாது… இது உன் அம்மா மேல சத்தியம்… அவ மேல உண்மையான அன்பிருந்தா படிச்சு பாசாகிக் காட்டு… இதை மீறி படம் வரைஞ்சு பெயில் மட்டும் ஆகிட்டே, உன்னோட அவளையும் சேர்த்துத் தலை முழுகிருவேன்…” என்றவர் உறுமிக் கொண்டே கையிலிருந்த சாட்டையை எறிந்துவிட்டு வெளியே கிளம்பினார்.
“ஐயோ, உடம்பெல்லாம் இப்படிப் புண்ணாக்கி வச்சிருக்காரே இந்த மனுஷன்… அவர் தான் அந்தக் கருமத்தை வரைய வேண்டாம்னு சொல்லுறாரே… கேட்டுத் தொலைய வேண்டியது தான… நீயும் ஏண்டா இப்படிப் பண்ணற…” அழுது கொண்டே மகனை அணைத்துக் கண்ணீர் விட்ட அன்னைக்கு பதிலேதும் சொல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான் தேவ்.
வருவதை விட்டு
பறப்பதைப் பிடி என்றால்
முளைத்திடுமோ சிறகும்…
எத்தனை தடுத்தாலும்
மூடி வைத்துக் காத்தாலும்
முளைத்திடாதோ சிறு விதையும்…

Advertisement