Advertisement

அத்தியாயம் – 11

 

 

“ஓ… உங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிளாஷ்பாக் இருக்கா… பெரிய கில்லாடிதான் சார் நீங்க… பார்த்த முதல் நாளே, ஒரு சின்னப் பொண்ணைக் கரக்ட் பண்ணி இருக்கீங்க…” கண்கள் விரிய பிரம்மாவைப் பார்த்து ராகவ் தலையாட்ட, அவனை முறைத்தான் பிரம்மா.

 

“அப்படில்லாம் அசிங்கமாப் பேசாத மேன்…” என்றதும்,

 

“ம்ம்… பண்ணலாம், பேசக் கூடாதோ…” என்றான்.

 

“ப்ச்… அது அப்படி இல்லடா…” என்றவனின் கண்கள் அன்றைய நினைவுக்கு செல்ல, “இருங்க இருங்க, ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க…” என்றான் ராகவ்.

 

“எதுக்கு வண்டிய நிறுத்தணும்…”

 

“ப்ச்… நிறுத்துங்க தெய்வமே…” என்றதும் பிரேக் போட்டான்.

“நீங்க இறங்குங்க, நான் டிரைவ் பண்ணறேன்… நீங்க ஏதோ ட்ரீம்க்குப் போற போல இருக்கு… அப்புறம் நாம மேலோகத்துக்கு போயிடக் கூடாதுல்ல…”

 

“என்ன சொல்லற… சரி நீயே ஓட்டு…” இறங்கினான்.

 

“ஹூக்கும், உங்களுக்கென்ன… சின்ன வயசுலயே லவ் பண்ணிருக்கீங்க…  அந்தப் பொண்ணு முகத்தை பீல் பண்ணி ஓவியமா வரைஞ்சு தள்ளிருக்கிங்க… நான் இன்னும் லைப்ல  எதுவுமே அனுபவிக்கல, உயிர் முக்கியம்ல…”

 

“ஓஹோ… இனி நான் எதுவும் சொல்லல, வண்டிய எடு…”

 

“என்ன தெய்வமே, பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டிங்க… உங்க கதை கேக்க தானே நான் டிரைவ் பண்ண வந்தேன்…”

 

“இல்ல வேணாம், உனக்கு அது புரியாது… நீ நினைக்கறது சரியில்ல…” என்று பிரம்மாவும் பிகு பண்ண வண்டியை எடுத்த ராகவின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது.

“என்ன தெய்வமே, நாம அப்படியா பழகிருக்கோம்… நான் புரிஞ்சுக்கற போல தெளிவா சொல்லுங்க…” என்றான்.

 

பிரம்மாவின் விழிகளில் அன்றைய காட்சி விரிய இதழ்களில் ஒரு மென்னகை விரிந்தது.

 

“எனக்கு அந்த உணர்வை சரியா சொல்லத் தெரியல… அம்முவோட முகத்தைப் பார்த்த உடனேயே அந்த முகம் என் மனசுல ஒட்டிகிச்சு… அழகான பெரிய கண்கள் நிறைய சோகமும், கலக்கமும்… அதைப் பார்த்ததும் என் இதயத்துல பாறாங்கல்லை வச்சது போல கனமான ஒரு உணர்வு… அவளோட கவலையைப் போக்கி எப்படியாச்சும் சிரிக்க வச்சிடணும்னு மனசுக்குத் தோணுச்சு… அதுக்காக தான் வரைஞ்சு கொடுத்தேன்… என் ஓவியத்தைப் பார்த்ததும் அவ பெரிய கண்ணு, பிரமிப்புல அப்படியே விரிஞ்சுது… அதைப் பார்க்கணுமே… சோகம் எல்லாம் போயி அப்படி ஒரு சந்தோஷம்… அந்த சந்தோஷமும், சிரிப்பும் அவ முகத்துல எப்பவும் இருக்கணும்னு மனசுக்குத் தோணுச்சு… அப்புறம் அவ சிரிக்கனும்னே நிறைய வரைஞ்சேன், பேசினேன்…”

“ஓ… முதல் பார்வைலயே லவ்வா பாஸ்…” ராகவ் கேட்கவும், சிறு வெட்க சிரிப்புடன் அவனைப் பார்த்தான் பிரம்மா.

 

“தெரியல… ஆனா அவ என் பக்கத்துல இருந்தா மனசு ரொம்ப நிறைவா, சந்தோஷமா உணர்ந்துச்சு… எப்பவும் அவளைப் பக்கத்துல உக்கார வச்சு நிறைய வரையனும்…  அதை ரசிச்சு சந்தோஷத்துல அவ கண்ணு பிரமிச்சு விரியறதைப் பார்த்துட்டே இருக்கணும்னு தோணும்…”

 

“ம்ம்… அவங்களும் உங்களை இப்படி யோசிச்சிருப்பாங்களா…”

 

“தெரியல ராகவ், எனக்கு அப்படித் தோணி இருக்கலாம்… அந்த சமயத்துல அவ மனசுக்கு என் வார்த்தைகள் ஆறுதலா இருந்திருக்கலாம்… அப்புறம் காலப் போக்குல ஆளுக்கொரு பக்கம் ஓடிட்டு இருந்திருக்கோம்… அப்ப எனக்கு பதினஞ்சு வயசுன்னா அம்முக்கு பத்தோ, பதினொன்னோ இருக்கும்… ஆனா இப்பவும் அவ எதையும் மறக்கல, என்னை மிஸ் பண்ணான்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாருக்கு…” என்றவனின் முகம் நேசத்தில் மலர்ந்திருந்தது.

“தெய்வமே, உங்க ஓவியம் எல்லாத்தையும் அவங்க ஆல்பம் பண்ணி வைக்கிறதும், உங்க ஓவியத்துல எல்லாம் அந்த ஓவியாவின் முகம் தெரியறதும் எல்லாம் பார்த்தா, ரெண்டு பேர் மனசுலயும் ரொம்ப ஆழமா அந்த சந்திப்பு பதிஞ்சிருக்குன்னு எனக்குத் தோணுது….”

 

“ம்ம்… இருக்கலாம்…”

 

“இத்தன வருஷமா மனசு மறக்காம இருக்குதுன்னா, கண்டிப்பா இது அது தான…”

 

“எது…”

 

“அதான், லவ்… பியார், பிரேமம்…”

 

“ஹாஹா, தெரியல… அதைக் காலம் தான் சொல்லணும்… ஆனா, என் மனசுல புதைஞ்சு கிடந்த அந்த நேசம் இப்ப அவளைப் பார்த்ததும் மறுபடி துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு…” என்றவன் அதோடு அமைதியாகி விட்டான்.

 

“ம்ம்… காலம் என்ன சொல்லுறது, இதுக்குப் பேர்தான் லவ்னு நானே சொல்லுவனே… சரி, அவங்களாத் தெரிஞ்சுகிட்டும்…” என நினைத்த ராகவும், யோசனையிலிருந்த பிரம்மாவுக்குத் தனிமை கொடுத்து காரை வீட்டை நோக்கி விரட்டினான்.

 

ஓவியாவும், ராதிகாவும் நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இரவு பத்தாகி இருந்தது. ராதிகாவின் கணவன் சரத்தும் அலுவலகம் முடிந்து அங்கே வந்திருந்தான். பெற்றோருடன் வந்திருந்த மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு டாக்சியில் கிளம்பினர்.

 

“எப்படியோ நாம கஷ்டப்பட்டதுக்கு பலனா ரெண்டாவது பரிசு கிடைச்சிருச்சு… நான் ரொம்ப ஹாப்பி ஓவி…”

 

“ம்ம்… நானும் தான், பரிசு கிடைக்குதோ இல்லையோ, நம்ம நிகழ்ச்சி நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொல்லனும்னு நினைச்சேன்… பிள்ளைங்க அசத்திட்டாங்க…” என்றாள் ஓவியா சந்தோஷத்துடன்.

“ம்ம்… அப்பாவும் புரோகிராம்க்கு வந்திருக்கலாம், ஏன் அவர் வரலை…” சரத் ஓவியாவிடம் கேட்டான்.

 

“அவருக்கு இப்ப அதிகமா எங்கயும் வர முடியறதில்லை… அடிக்கடி ஆஸ்த்துமா பிரச்சனை பண்ணுது… வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் தான் வேலையை கவனிப்பார்…”

 

“ம்ம்… வயசாச்சுன்னாலே இப்படி ஏதாச்சும் ஒண்ணு வந்திடுது… டாக்டரைப் பார்த்திங்களா…”

 

“ம்ம்… மெடிசின் எடுத்துட்டு தான் இருக்கார், அண்ணா…”

 

“ராதி, நீ ஏதோ யோசனையாவே இருக்கியே… என்னாச்சு…”

 

“ஒண்ணும் இல்லங்க…” என்றாலும் அவள் மனம் தோழி சொன்ன தேவின் கதைக்குள் சுழன்று கொண்டிருந்தது.

 

“என்னதான் இவ நானும் தேவும் பிரண்ட்ஸ்னு சொன்னாலும் அதையும் மீறி ஒரு ஆர்வம், கேரிங் கண்ணுல தெரியுதே…”

“ம்ம்… அவரும் எத்தனை உயரத்தில் இருந்தாலும் இவகிட்ட பேசும்போது எதார்த்தமா, நல்ல விதமா தான் பழகறார்… ரெண்டு பேரையும் இத்தன வருஷம் கழிச்சு மீண்டும் அந்த கடவுள் சந்திக்க வச்சது வெறும் நட்பைப் புதுப்பிக்கவா மட்டும் எனக்குத் தோணல, நிச்சயம் இதுல தெய்வத்தோட கணக்கு வேற ஏதாவது இருக்கும்… எப்படி இருந்தாலும் இந்த ஓவியமும், அந்த ஓவியரும் இணைஞ்சா எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்…” என யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

“ராதி, எவ்ளோ நேரமா கூப்பிடறேன்… அப்படி என்ன யோசனை…” அருகிலிருந்த ஓவியா கையைப் பிடித்து உலுக்கவும் திரும்பியவள்,

 

“ஒ… ஒண்ணுமில்ல ஓவி… உன் பிரம்மாவைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றதும் ஓவியாவின் முகத்தில் தெரிந்த மென்மை, ராதிகாவின் கண்ணைப் பளிச்சிடச் செய்தது.

 

“எந்த பிரம்மாவை யோசிக்கிற, கடவுளா, ஆர்ட்டிஸ்ட்டா…”

“நாங்க யோசிச்சா யாரை யோசிப்போம்… ஆர்டிஸ்ட் பிரம்மா தாங்க, இன்னைக்கு புரோகிராம்க்கு வந்திருந்தார்… நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் கிளம்பினார்…”

 

“அடடா, மிஸ் பண்ணிட்டனே…”

 

“நீங்க மிஸ் பண்ணா என்ன, அவர் இவளை மிசஸ் பண்ணாப் போதும்…” என மனதுக்குள் யோசித்துக் கொண்டே, “பிரம்மா சாருக்கு போன் பண்ணி நமக்கு பரிசு கிடைச்சதை சொன்னியா ஓவி…” என்றாள்.

 

“இல்ல, வீட்டுக்குப் போயி சொல்லிக்கறேன்…”

 

“ம்ம்… அவர் வீடு எங்கிருக்கு, நீ போயிருக்கியா…”

 

“இல்ல, பல வருஷத்துக்கு பிறகு இப்பதானே பாக்கறேன்…”

 

“ம்ம்… அவர் வீடு புல்லா ஓவியமா தான் இருக்கும்ல…”

 

“இருக்கலாம், தெரியல…”

“அவர்க்கு இன்னும் மேரேஜ் ஆகல தானே…” ராதிகாவின் கேள்வியில் திகைத்தாள் ஓவியா.

 

“நாம இது எதையும் கேட்கவே இல்லையே… ஒருவேளை அவருக்கு கல்யாணம் ஆகி இருக்குமோ…” யோசனையில் சுருங்கிய தோழியின் முகம் கண்ட ராதி, சிரிப்புடன் கணவனிடம் நிகழ்ச்சி பற்றி சொல்லிக் கொண்டு வந்தாள்.

 

“அவனுக்கு கல்யாணம் ஆனால் நமக்கென்ன…” என்று நினைக்க முடியாமல் ஒரு தவிப்பு வந்து ஒட்டிக் கொண்டது.

 

“சரி, நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடு… நாளான்னிக்குப் பார்ப்போம்…” ஓவியாவை வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர்.

 

மகளைக் கண்டதும் புன்னகைத்த சிவநேசன், “என்ன அம்மு, நிகழ்ச்சி எல்லாம் நல்லபடியா நடந்துச்சா… நம்ம டான்ஸ் எப்படி இருந்துச்சு…” ஆர்வமாய் விசாரித்தார்.

 

“சூப்பரா இருந்துச்சுப்பா… நமக்கு செகண்ட் கிடைச்சிருக்கு…”

 

“ஓ, ரொம்ப சந்தோசம் டா… உங்க உழைப்பு வீண் போகல… சரி, டயர்டா இருக்க, சீக்கிரம் குளிச்சிட்டு வா… அப்பா தோசை ஊத்தி வைக்கறேன்…” என்றவர் உள்ளே செல்ல தனது அறைக்குள் நுழைந்தவள் மனம் அப்போதும் ராதியின் கேள்வியிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

 

“ஒருவேளை, தேவ்க்கு கல்யாணம் ஆடியிருக்குமோ… அவனைப் பத்தி, குடும்பத்தைப் பத்தி எதுவுமே விசாரிக்காம இருந்திருக்கமே…” தன்னையே நொந்து கொண்டாள்.

 

“அம்மு, சீக்கிரம் சாப்பிட வா…” தந்தையின் குரல் கேட்கவும், வேகமாய் குளியலறைக்குள் நுழைந்தவள், உடை களைந்து ஷவரில் ஐந்து நிமிடம் அப்படியே நிற்க, இதமாய் இருந்தது.

 

தலையைத் துவட்டியபடி வந்த மகளைக் கண்டவர், “இந்த நேரத்துல எதுக்கு அம்மு தலைக்கு ஊத்தின…” எனவும்,

 

“தல சூடாகி, வலிக்கற போல இருந்துச்சுப்பா… அதான் தலை நனைச்சுட்டேன்…” என்றாள்.

“ம்ம்… சரி, சளி பிடிக்கப் போகுது, நல்லாத் துவட்டிக்க…” அக்கறையுடன் சொல்லிக் கொண்டே அவளுக்கு சாப்பிட எடுத்து வைத்தார்.

 

மகள் ஏதோ யோசனையுடனே சாப்பிடுவதைக் கண்டவர், “அம்மு, சாப்பிடும்போது என்ன யோசனை, சாப்பிட்டு தூங்கு…” என்றார் வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவி.

 

“ம்ம்… நீங்க சாப்பிட்டீங்களாப்பா…”

 

“சாப்டேன் மா, மருந்து போடணும்ல…”

 

“சரிப்பா, நீங்க போயி தூங்குங்க, நான் இதெல்லாம் வாஷ் பண்ணிட்டு படுக்கப் போறேன்…”

 

“நாளைக்கு லீவு தானே, காலைல பார்த்துக்கலாம் டா, போயி தூங்கு…” என்றவர் தனது அறைக்கு செல்ல, அவளும் சாப்பிட்டு தட்டை மட்டும் கழுவி வைத்து எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு படுக்கைக்கு வந்தாள்.

 

அலைபேசியை எடுத்தவள், “தேவ்க்கு கூப்பிடலாமா…” என யோசிக்கும்போதே அது சிணுங்கி தேவ் காலிங் என்றது.

 

“நூறாயுசு தேவ் உனக்கு…” யோசித்தபடியே புன்னகையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

 

“ஹலோ…”

 

“ஓவியமே, புரோகிராம் முடிஞ்சுதா… வீட்டுக்கு வந்தாச்சா…”

 

“ம்ம்… கொஞ்ச நேரம் ஆச்சு… நான் சாப்பிடலேன்னா அப்பா தூங்கப் போகாம வெயிட் பண்ணிட்டு இருப்பார்… அதான் சாப்பிட்டு கால் பண்ணலாம்னு நினைச்சேன்… நம்ம டான்சுக்கு செகண்ட் பிரைஸ் கிடைச்சிருக்கு…”

 

“ஓ… சூப்பர்… வாழ்த்துகள் ஓவியமே…”

 

“தேங்க்ஸ், நான் அழைச்சதும் மறுக்காம புரோகிராம்க்கு வந்ததுல ரொம்ப சந்தோசம்…”

 

“ஓவியனை, ஓவியமே அழைக்கும்போது எப்படி மறுக்க…”

 

“வேற யாராவது அழைச்சா வந்திருக்க மாட்டிங்களோ…”

 

“எஸ்… அது அழைக்கும் ஆளைப் பொறுத்தது…”

 

“ஓஹோ, இன்னும் தூங்கலையா…”

 

“தூக்கத்துல பேசுற வியாதி எல்லாம் இல்ல ஓவியமே… நாளைக்கு ஓவியங்களை முடிச்சு அனுப்பியாகணும்…”

 

“நைட்ல தூங்காம வரைஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகறது, பகல்ல வரைய வேண்டியது தானே…”

 

“வரையலாம்… அதென்னவோ, ராத்திரி வரைய ரொம்பப் பிடிக்கும்…” என்றான் அவன்.

 

மனசுக்குள் அந்தக் கேள்வியைக் கேட்டு விடலாமா என்று தோன்றிக் கொண்டே இருக்க, “உங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா…” என்றாள் மெதுவாக.

“ஓவியம் என் தொழில், யார் என்ன சொல்ல முடியும்…” என்றதும் திகைத்தாள்.

 

“சரி, பேசி உங்க டைமை வேஸ்ட் பண்ணல, நீங்க பாருங்க…”

 

“ஏன், உனக்கு தூக்கம் வருதா அம்மு…”

 

“இல்ல, உங்களுக்கு டிஸ்டர்ப் ஆக வேண்டாமேன்னு தான்…”

 

“நான் வரைஞ்சுட்டு தான் பேசிட்டு இருக்கேன்…”

 

“ஓ…” என்றவள் அவனைப் பற்றி கேட்கத் துடித்த மனதை அடக்கி எப்படிக் கேட்பது எனத் தயங்கி முழித்தாள்.

 

“நாளைக்கு ப்ரீயா…” அவன் கேட்க,

 

“ம்ம்… எஸ், ரெஸ்ட்தான்…” என்றாள்.

 

“அப்பாவைக் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வாயேன்…” அவன் எதார்த்தமாய் சொல்ல அவளுக்குள் பல்பு எரிந்தது.

“உங்க வீட்டுக்கா… நானா…”

 

“ஏன்… என் வீடென்ன, உகாண்டாலயா இருக்கு… இதே ஊருல தான இருக்கேன்…”

 

“அ… அதுக்கில்ல, அப்பாக்கு நேத்திருந்து ஆஸ்த்மா பிராப்ளம்… இன்னொரு நாள் வரோமே…”

 

“ஓ… சரி, அங்கிள் ரெஸ்ட் எடுக்கட்டும்… நீ வரலாமே…”

 

“ந..நான்… எப்படி உங்க…”

 

“ஹலோ, வர விருப்பம் இல்லேன்னா சொன்னாப் போதும்… இப்படி ஓவரா தயங்க வேண்டாம்…” என்றவன் பட்டென்று போனை வைத்துவிட அதிர்ந்து போனாள் ஓவியா.

 

“என்ன இது, பேசப் பேச பட்டென்று போனை வைக்கிறான்… சரியான முசுடனா இருப்பானோ… அப்படி என்ன கோபம்…” என நினைத்தவள் அவன் எண்ணுக்கு அழைக்க, அழைப்பு துண்டிக்கப்பட்டது.

“Say… Yes or No…”  என்ற குறுந்தகவல் அவள் அலைபேசியில் மின்ன, “சரியான கேடி…” என புன்னகைத்தவள்,

 

“எஸ்…”  என பதில் மெசேஜ் அனுப்ப, உடனே ரிங்கானது.

 

“ம்ம்… இது அம்முக் குட்டிக்கு அழகு…”

 

“ஹூக்கும், இவ்ளோ பிடிவாதம் ஆகாது தேவ்… அதென்ன, பேசப் பேச கட் பண்ணுறது…”

 

“ச.சாரி, நான் இப்படி கிடையாது… என்னவோ, நீ ரொம்பத் தயங்கவும் சட்டுன்னு டென்ஷன் ஆகிடுச்சு…”

 

“ம்ம்… இது நல்லதுக்கில்ல ஓவியரே…”

 

“ஓகே, கூல்… காலைல வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா…”

 

“இல்ல, அட்ரஸ் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க… நான் டாக்ஸில வந்திடறேன்…” என்றாள் ஓவியா.

 

“சூப்பர், அம்முக்குட்டி… ரொம்ப சந்தோஷம்…”

 

“தேவ், என்னை அம்மிக்குட்டி, ஆட்டுரல்னு எல்லாம் கூப்பிட வேண்டாம்… பேரே சொல்லுங்க…”

 

“ஹாஹா, சரிங்க ஓவியமே… அப்ப நாளைக்குப் பார்க்கலாம்… வச்சிடறேன், குட் நைட்…”

 

“ம்ம்… குட் நைட்…” என்றவள் அழைப்பு கட்டானதும் அடுத்த நிமிடம் மெசேஜ் வர புன்னகைத்துக் கொண்டாள்.

 

“ம்ம்… சரி, தேவ் பத்தி வீட்டுக்குப் போயே தெரிஞ்சுக்கலாம்…” என யோசித்தவள் கண்ணை மூடிக் கொள்ள உறக்கம் தான் வருவேனா என்றது. மெல்ல உறங்கத் தொடங்கியவள் அரைத்தூக்கத்தில் ஏதேதோ யோசித்துப் புரண்டாள்.

 

பிரம்மா அவளை ஓவியமாய் வரைவது போலவும், அவளும் போஸ் கொடுத்து நிற்பது போலவும் மனதுக்குள் கனவுகள் விரிய இதழில் உறைந்த புன்னகையுடன் உறங்கினாள்.

 

காலையில் நேரமே எழுந்து வந்த மகளை அதிசயமாய் பார்த்தார் நாளிதழைப் படித்துக் கொண்டிருந்த சிவநேசன்.

 

“என்ன அம்மு, சீக்கிரமே எழுந்துட்ட… இன்னைக்கு லீவு தானே, மெதுவா எழுந்துக்கலாம்ல…”

 

“இல்லப்பா, அ..அது வந்து… தேவ் வீட்டுக்கு வர சொல்லி இருந்தார்… நீங்களும் வரீங்களா, போயிட்டு வரலாம்…”

 

“என்னமா, எதுவும் விசேஷமா… எதுக்கு கூப்பிட்டார்…”

 

“இல்லப்பா, நம்ம வீட்டுக்கு அவர் வந்தார்ல, அதான் பதிலுக்கு கூப்பிடுவார் போல… வீட்ல நிறைய ஓவியம் இருக்கும்ல, அதைப் பார்க்க்கவுமா இருக்கலாம்…”

 

“ம்ம்…” என்றவர் ஏதோ யோசித்துவிட்டு, “தேவ் தம்பி கூப்பிட்டு எப்படி மறுக்கிறது, நீ போயிட்டு வா… அப்பா இன்னைக்கு வீட்ல ரெஸ்ட் எடுக்கறேன்… இன்னொரு நாள் நானும் வரேன்…” என்றார்.

 

“ம்ம்… சரிப்பா, தேங்க்ஸ் அப்பா…” என்றவள் சந்தோஷத்துடன் அவர் கன்னத்தைக் கிள்ளிவிட்டு செல்ல, தந்தையாய் அவரது யோசனை இன்னும் பெரிதானது.

 

“தேவ் தம்பி நம்பிக்கையானவர் தான்… ஆனா, அம்முவோட முகத்துல தெரியுற சந்தோஷமும், ஆர்வமும் பார்க்கும்போது அவர் மேல ஒரு ஈடுபாடு உள்ள போல தோணுதே… அவருக்கும் அப்படி தானோ…” என யோசித்தவர்,

 

“கடவுளே, எனக்குத் தோணினது, சரியா தப்பான்னு தெரியல… எதுன்னாலும் நீதான் நல்லதா நடத்திக் கொடுக்கணும்…” என வேண்டிக் கொண்டார்.

 

மனதின் உணர்வுகளை

மொழிகள் தான் பேசிடுமா…

இதயத்தின் தேடல்களை

இதழ்கள் தான் சொல்லிடுமா…

தூரிகையும் மொழி பேசும்

தனக்கானவளை உணரும்போது…

Advertisement